வீர வணக்கம்! வீர வணக்கம்!! அய்யோ, எங்கள் கொள்கைச் சிங்கம் மறைந்ததே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

வீர வணக்கம்! வீர வணக்கம்!! அய்யோ, எங்கள் கொள்கைச் சிங்கம் மறைந்ததே!

இழக்கக் கூடாதவரை இந்த இயக்கம் இழந்ததே!!

எப்படி நாங்கள் ஆறுதல், தேறுதல் பெறுவது?

திராவிடர் கழகத்தின் காப்பாளர்களில் முதன்மையானவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், கழகத்தின் மேனாள் செயலவைத் தலைவரும், பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நிர்வாகக் குழு (டிரஸ்டிகளின்) துணைத் தலைவராக பல்லாண்டு தொண்டு செய்து வந்தவருமான கொள்கைச் சிங்கம், எங்கள் பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவரான மானமிகு அய்யா ராசகிரி கோ.தங்கராசு (வயது 97) அவர்கள் இன்று (5.10.2021) இரவு 7.30 மணியளவில் காலமானார் என்ற செய்தி கேட்டு, அளவற்ற துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளானோம்.

இயக்கத்தின் இராணுவக் கட்டுப்பாட்டின் இலக்கணம் அவர்; இம்மியும் நழுவாமல், வழுவாமல், கண்டிப்புடனும்,  கறாரான அணுகுமுறையுடனும் கழகக் கடமைகளை ஆற்றி வரலாறு படைத்த கொள்கை மாவீரர் அவர்!

நம் அறிவு ஆசான் காலத்திலும், அதன் பின் நம்மை தலைமை தாங்கி வழிநடத்திய அன்னையார் .வெ.ரா.மணியம்மை அவர் கள் தலைமைக் காலத்திலும், அதன் பிறகு எம்மைப் போன்ற இளையோர் இந்தப் பொறுப்பை ஏற்று நடத்தும் இந்தக் காலத் திலும் (வயதிலும், அனுபவத்திலும், ஆற்ற லிலும், அறிவில் மூத்தவரும், முதிர்ந்தவரு மான) அவர், தன்னை ஓர் எளிய தொண் டனாகவே கருதி, அடக்கத்துடன் கடமை யாற்றிய பாங்கும் இயக்கத்தவருக்கு வழி காட்டும் பாடம் ஆகும்!

சட்ட எரிப்புப் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற சீலர்!

எங்கே சிக்கல், பிரச்சினை என்றாலும், நாம் அவரையே அனுப்பித் தீர்த்து வைக்கக் கேட்டுக்கொள்வோம்; துலாக்கோல் பிடித்த தீர்ப்பு - தீர்வு அவரிடமிருந்து கிடைக்கும் - அனைத்துத் தரப்பினருக்கும்!

எந்தப் பொறுப்பை ஒப்படைத்தாலும், அதனை முனைப்போடும், முழுமனத் தோடும் செவ்வனே செய்து முடித்த செயற்கரிய செம்மல் அவர்!

அவரது பண்பும், அன்பும், பாசமும் எம்மால், எமது கொள்கைக் குடும்பத்தால் என்றும் மறக்கவியலாததாகும்!

என்ன செய்வது! எது தவிர்க்க இயலா ததோ, அதை ஏற்றுத்தானே தீரவேண்டும்; அதுதானே இயற்கையின் நீதி; எனவே, ஒரே ஆறுதல், அவர் நம் அறிவு ஆசான் வாழ்ந்த 95 வயதையும் தாண்டி, வாழ்ந்து, வாழ்ந்த நாள்களை சமூகத் தொண்டுக்கு அர்ப் பணித்து, சரித்திரம் படைத்தார் என்பதே!

சிறிது காலமாகவே அவர் உடல்நலம் மிகவும் தளர்ந்தது. நடமாட்டம் இல்லை. கடைசி சில வாரங்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி, சில நாள்கள் மயக்கமான நிலையில் இருந்தார். கடந்த 3.10.2021 அன்று ராசகிரிக்குச் சென்று, அவரது இல்லத்தில் பார்த்து மரி யாதை செய்தபோது, ‘ஆசிரியர் வந்திருக் கிறார், பாருங்கள்' என்று அவரது மகன் பூவா னந்தமும், மருமகளும் உரக்கச் சொல்கி றார்கள்; அதுவரை கண் திறந்து பார்க்காதவர், சற்று கண் திறந்து பார்த்து, ஒரு லேசான புன்னகை பூத்தார்!

‘‘நான் சென்று வருகிறேன் என்று எம் மிடம் விடைபெற்றுக் கொள்ளத்தான் அந்தப் புன்னகையோ'' என்று இன்று உள்ளம் அழுதுகொண்டே கேட்கிறது!

நிறைவாழ்வு வாழ்ந்தவர் - வயதில் மட்டுமல்ல - கொள்கையிலும்கூட!

அவரை நன்கு கவனித்து உபசரித்து வந்த அவரது மகனும்,  பாபநாசம் ஒன்றியக் கழகத் தலைவருமான பூவானந்தம் அவர்களுக்கும், அருகில் இருந்து நன்கு கவனித்த  மருமகள் மதுரவல்லி அவர்களுக்கும், அவரது மூத்த மகன் பாண்டியன் அவர்களுக்கும், இரு மகள்களான மலர்க்கொடி - கோபாலகிருஷ் ணன், திலகவதி - ஞானசேகரன் ஆகியோ ருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் நமது நன்றி கலந்த ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவ்வட்டாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்ட மாமனிதர் அவர்.

அவர் என்றும் நம் நெஞ்சில் நிறைந்த வராவார் - மறைந்தவர் அல்ல!

அய்யா ராசகிரியாருக்கு நமது

வீர வணக்கம்! வீர வணக்கம்!!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

5.10.2021


குறிப்பு: மறைவு செய்தி அறிந்ததும், அவரது மகன் பூவானந்தம் அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

அய்யா ராசகிரியாரின் விழிகள் அரிமா சங்கம்மூலமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப் பட்டன.

இன்று (6.10.2021) நடைபெறும் இறுதி நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திருமதி மோகனா வீரமணி, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர்  தலைமைக் கழகத்தின் சார்பில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்துவர்.

No comments:

Post a Comment