‘‘தமிழ்நாடு'' என்று அரசு ரீதியாக நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 அய் சிறப்பாகக் கொண்டாடுவது பொருத்தமாகும்!
அண்ணா ‘தமிழ்நாடு' என்று நிறைவேற்றிய நாளை தி.மு.க. ஆட்சி அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடும் என்பதில் அய்யமில்லை!
நவம்பர் முதல் தேதி என்பது சென்னை மாநிலத்திலிருந்து சில பகுதிகள் பிரிந்து சென்ற நாளாகும். ஜூலை 18 (1967) என்பதே தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்ட திருநாளாகும். அதனைத் தமிழ்நாடு அரசு, அரசு ரீதியாகக் கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
ஆச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநில பிரதமராக இருந்தபோது இந்தித் திணிப்புக் குறித்து வாய் திறந்த நாள் 10.8.1937 - இந்தி அதிகாரப்பூர்வமாகப் புகுத்தப்பட்ட நாள் 21.4.1938.
இந்தி எதிர்ப்பு என்னும் எரிமலை வெடித்தது!
இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற எரிமலை வெடித்து அனல் குழம்புகளை வாரி இறைத்த நாள் 3.6.1938.
இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர் பெரும் படை திருச்சி உறையூரில், அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்களை படைச் சேனாதிபதியாகக் கொண்டு புறப்பட்ட நாள் 1.8.1938.
புறப்பட்டது - தமிழர் பெரும்படை!
நூறு இளைஞர்கள் போர்ச் சங்கு ஊதிப் புறப்பட்டனர். 42 நாள்கள் நடந்தனர். கடந்து வந்த தூரமோ 577 மைல்கள் - 234 கிராமங்கள். வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் இந்தி எதிர்ப்புப் போர் முரசம்.
படை, தலைநகரமாம் சென்னையில் புகுந்தது - செப்டம்பர் 11. ஆம் நாள் அன்று மாலை சென்னை கடற்கரையில் 15,000 தமிழர்கள் திரண்டு வாழ்த்துகளை வானிடிந்து வீழ்ந்ததோ என்று முழக்கமிட்டு வரவேற் றனர்.
மாலை 5 மணிக்குத் தொடங்கப்பட்ட வரவேற்புப் பொதுக்கூட்டம் இரவு ஒரு மணிவரை நீண்டது.
உரை வீச்சுகள் அல்ல அவை - உணர்வின் பிளிறல் - கத்தும் கடலை வாயடைத்த போர்க்குரல்!
‘‘தமிழ்நாடு தமிழருக்கே'' என்ற முதல் முழக்கம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த எழுச்சிமிகு பொதுக் கூட்டத்தில் முழங்கப்பட்ட முதல் குரல்தான் ‘‘தமிழ்நாடு தமிழருக்கே!'' என்பதாகும்.
அந்தக் குரல் வேறு யார் குரலாக இருக்க முடியும் - தந்தை பெரியார் குரலைத் தவிர!
ஆச்சாரியாரின் இந்தித் திணிப்பு - தமிழ் மண்ணில் மொழி உணர்வையும், இன உணர்வையும் தட்டி எழுப்பியது.
அன்றைக்குப் பெயர் சென்னை மாநிலம்தான். அதற்கு அதிகாரப்பூர்வமாக ‘‘தமிழ்நாடு'' என்ற பெயர் சூட்டப்பட்ட நாள் 18.7.1967.
தியாகி சங்கரலிங்கனார்
தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டவேண்டும் என்று 1955 அக்டோபரில் தந்தை பெரியார் கோரிக்கை விடுத்தார். மொழி வழி மாநிலம் 1956 நவம்பர் முதல் தேதியன்று உருவானது; அப்போது வந்தது ‘சென்னை ராஜ்ஜியமே' - மதராஸ் ஸ்டேட் (Madras State) என்ற நிலைதான். 1956 அக்டோபரில் தியாகி சங்கரலிங்கனார் பட்டினிப் போர் நடத்தி, அதற்காகவே உயிர் துறந்தார்.
அதுபற்றி ‘விடுதலை'யில் தொடர்ந்து தந்தை பெரியார் அறிக்கைகள், தலையங்கங்கள்மூலம் வற்புறுத் தியே வந்தார்.
1961 இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பூபேஷ் குப்தா அவர்கள் ‘தமிழ்நாடு' என்றே பெயரிட்டு, அம்மாநிலத்தை அழைக்க தனி நபர் மசோதா (Private Member Bill) தாக்கல் செய்தார்.
மாநிலங்களவைக்குச் சென்ற அறிஞர் அண்ணா, அங்கே எழுப்பிய முதல் முழக்கம் ‘‘Call my State TAMIL NADU'' என்பதாகும். அத்தலைப்பில் விரிவானதோர் முழக்கத்தின்மூலம் கோரிக்கை வைத்தார். எனது மாநிலத்தை ‘‘தமிழ்நாடு'' என்றே அழையுங்கள் என்றார் அண்ணா.
அதன் பிறகு ‘‘திராவிட ஆட்சி'' அண்ணா தலை மையில் அமைந்ததின் விளைவாகவே 18.7.1967 இல் முதலமைச்சர் அண்ணாவே தனி மசோதா கொண்டு வந்து, அதை சட்டமாக்கினார் - ஒருமனதாக அச்சட்டம் நிறைவேறியது.
‘‘தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்பட்ட அந்நாள் (18.7.1967) வரலாற்றில் போற்றத்தகுந்த பொன்னாளாகும்.
‘‘தமிழ்நாடு'' - என்று முதலமைச்சர் அண்ணா முன் மொழிய, உறுப்பினர்கள் அனைவரும் ‘‘வாழ்க'' என்று மும்முறை வாழ்த்தொலியை எழுப்பினர்.
ஜூலை 18 அய் கொண்டாடுவோம்!
‘‘தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 அய் திருவிழா நாளாகக் கொண்டாடுவதுதான் வரலாற்று ரீதியாக பொருத்தமானதாக இருக்க முடியும்.
நவம்பர் முதல் தேதி என்பது சென்னை மாநிலத் திலிருந்து சில பகுதிகள் பிரிந்து சென்ற நாளாகும்; அது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள்தான் என்றாலும், சென்னை மாநிலமாக இருந்ததை ‘‘தமிழ்நாடு'' என்று ஆட்சி ரீதியாகப் பெயர் சூட்டப்பட்ட நாள்தான் - நாம் மகிழ்ந்து கொண்டாடுவதற்குரிய வரலாற்றுத் திருநாளாக இருக்க முடியும்.
இதில் நமக்குள் கருத்து வேறுபாடு - மாறுபாடுகள் கொள்ளவேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாடு அரசே ‘‘தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்பட்ட நாளினை அதிகாரப்பூர்வமாக கொண் டாடவேண்டும் என்று அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம் - வலியுறுத்துவோம்!
தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை - நாம் வலியுறுத்தித்தான் இதனைச் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை.
தி.மு.க. ஆட்சியில் அண்ணா முதலமைச்சராக இருந்து நிறைவேற்றிய ஒன்றை கொண்டாடுவது என்பது தி.மு.க. ஆட்சியின் இயல்பான எண்ணமாகவும், எழுச்சியாகவும் இருக்க முடியும் - இருக்கும்!
இதிலும் தன்னுடைய வரலாற்று முத்திரையைப் பொறிப்பார்
‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இதிலும் தன்னுடைய வரலாற்று முத்திரையைப் பொறிப்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது - இதனை உறுதியாக நம்புவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.10.2021
No comments:
Post a Comment