தந்தை பெரியார் 143-ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

தந்தை பெரியார் 143-ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்

பேராசிரியர் .காளிமுத்து எம்.., பிஎச்.டி

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் நம் கைகளில் மலர்ந்து மணம் பரப்புவது மகிழ்ச்சிக்குரியதாகும், உலகில் எந்தத் தலைவருக்கும் எந்த இயக்கமும் அவரது பிறந்த நாளன்று ஆண்டு தோறும் மலர் வெளியிடுவது என்பது காணவியலாக் காட்சியாகும். தந்தை பெரியார் ஒருவருக்குத்தான் ஆண்டுதோறும் பிறந்த நாளன்றே மலர் வெளியிடப்படுகிறது, அந்த மலர் ஒரு வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்வது மேலும் சிறப்புக்குரியதாகும்.

உலகம் ஊரடங்கில் திணறிக் கொண்டிருக்கிறது, ஆனால் திராவிடர் கழகம் ஓய்வறியாமல் தன் தொண்டறப் பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது, திராவிடர் கழகத்தின் தலைவரும் துணைத் தலைவரும் களப்பணியாளர்களோடும் மக்களோடும் காணொலிக் காட்சி வாயிலாக இடையறாது உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் பிறந்தநான் மலர் வழக்கம் போல் பல வண்ணங்களில் வெளிவந்து நம் கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தளித்துக் கொண்டிருக்கிறது.

மலரைத் திறந்தவுடன்சமூக நீதி நாள்’ (செப் - 17) உறுதி மொழி பளிச்சிடுகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், சமூகநீதி, மனிதாபிமானம்' என்னும் சொற்களை உயர்ந்த நிலையிலுள்ள பார்ப்பனர்களும் கூட உச்சரிக்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழ்நிலையை உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் அறிவு நுட்பத்தையும் நெஞ்சுரத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும், திராவிடம் வெல்லும்! தொடர்ந்து முதலமைச்சரின் பேரவை உரை இடம்பெற்றுள்ளது.

நான் மகான் அல்ல!

தந்தை பெரியார் எப்படிப்பட் தலைவர்! மண்டைச் சுரப்பை உலகு தொழும் பெற்றியர்! அப்பேர்ப்பட்ட தலைவர் தன்னைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள்!

"சகோதரர்களே! நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள் தாம், என்று சொல்வதோடு நான் ஒரு சாதாரண மனிதன் தான்! நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். (1941).... நான் ஓர் அதிசயமான மனிதன், மகான், அப்படி இப்படி என்றெல்லாம் கூறுபவன் அல்லன். ஆனால் துணிவு உடையவன், கண்டதை ஆராய்ந்து அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன்... (1960)

தந்தை பெரியாரின் தன்னடக்கம் யாருக்கு வரும்! இப்படி தந்தை பெரியார் உரைத்த பொன் மொழிகள் ஏராளமாக மலரில் இடம் பெற்றுள்ளன.

வாழ்த்துரைகள்

மலரில் இடம்பெற்றுள்ள வாழ்த்துரைகள் தனிச்சிறப்புடையன வாய்த் திகழ்கின்றன, அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வரை 15 அமைச்சர்கள், பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், காங்கிரசுக் கட்சித் தலைவர்  கே.எஸ்.அழகிரி அவர்கள், மலேசியா, சிங்கப்பூர் திராவிடர் கழகத் தோழர்கள், மனிதநேய  மக்கள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை (சிற்பி), பல்வேறு நகர்மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள் என்று மலரில் இடம் பெற்றுள்ள வாழ்த்துச் செய்திகளை நோக்குங்கால் தந்தை பெரியார் எங்கெல்லாம் ஒளிபரப்பி நிற்கிறார் என்பது தெளிவாகின்றது.

அதே வேளையில் ஜோதிபா பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய மூவரும் ஒரே குரலில் ஒலிப்பதைப் பார்க்கும் போது பார்ப்பனரல்லாத மக்களின் தலைவர்கள் கருத்தொற்றுமை தெற்றெனப் புலனாகிறது.

ஆசிரியர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னுரை. இயக்க வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றை நமக்கு எடுத்துக் காட்டுகிறது, “பெரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப் புரட்சி சுலபத்தில் நிற்கப் போவதில்லை.... இலக்கைத் தொட்டுத் தான்தீரும்“ - எனும் அண்ணாவின் கருத்தை எடுத்துக் காட்டி நம் முன் உள்ள பணிகளைச் செவ்வனே செய்து முடிக்க ஆசிரியர் வழிகாட்டுகிறார். 1925 - முதல் இன்றுவரை நடந்த நிகழ்வுகளை நிரல்பட எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

என்னருந் தோழர்காள்!

பக்குவப் பட்டுச் சூளுரைக்கும்

சுயமரியாதைச் சிங்கக் குட்டிகளே!

எங்கள் மீது உள்ள இழிவு - உங்கள் மீதும்

தொடர வேண்டுமா? எண்ணிப் பாருங்கள்

என்று தமிழர் தலைவர் கேட்கும் கேள்வி பொருள் பொதிந்தது, நம்மைச் சிந்திக்க வைப்பது,

REVOLT என்றால் என்ன?

Revoltஎன்ற வார்த்தைக்கு நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல்என்பது. அதாவது மனித தர்மத்துக்கும் மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி, ஆண் இயலிலானாலும் சரி மற்றும் எவைகளிலுமானாலும் சரி, அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனச்சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம்“ - என்று ஒரு நீதிபதியின் முன்னிலையில் அன்னை நாகம்மையார் விளக்கம் கொடுத்திருக்கிறார்’ - ‘Revoltஎன்ற சொல்லுக்கு இப்படிப்பட்ட அரிய விளக்கத்தை இதுவரை எவரும் கொடுத்ததில்லை!

தி. மு. கழகத்தில், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தந்தை பெரியார் அரும்பாடு பட்டதை நாம் அறிவோம், அதைப் போலவே நாவலரையும், கலைஞரையும் ஒன்று சேர்த்து வைக்க அன்னை மணியம்மையார் எடுத்த முயற்சிகளையும் அவருடைய வேண்டுகோளையும் அறிந்து படிக்கும் போது நம்முடைய தலைவர்கள் எப்பேர்ப்பட்ட தலைவர்கள் என்பதை எண்ணி உள்ளம் மகிழ்கிறது, “ஒரு தமிழர் நல இயக்கத்தை அழித்த பழியை ஏற்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்என்னும் வரிகளைப் படிக்கும் போது அன்னை மணியம்மையாரின் திராவிடர் இயக்க உணர்வின் ஆழத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

முப்பெரும் தலைவர்களின் முழக்கம்.

பார்ப்பனர்கள் எப்படிப் பட்டவர்கள்? இதற்கு அறிஞர் அண்ணா விளக்கம் தருகிறார். ‘ஆகமத்தைப் பற்றிப் பேசுவதானாலும் அணுகுண்டைப் பற்றிப் பேசுவதானாலும் எப்படியாவது வகுப்புரிமையைப் பற்றிப்பேசியே தீருவர். பிரம்ம ஞான சங்கத்தின் பேரால் கூடினாலும் சரி, பிராமண சேவா சங்கத்தின் பேரால் கூடினாலும் சரியே, வகுப்புவாரி முறை ஒழிய வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிச்சயமாக நிறைவேற்றுவர்... என்ன பாடு பட்டாகிலும் வகுப்புவாரி முறையை ஒழித்தாக வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறார்கள்’. பார்ப்பனரின் உள்ளக் கிடக்கையை அண்ணா 1949-லேயே தெளிவாக எடுத்துக்காட்டியுள்ள செய்தி அய்யாவின் பிறந்த நாள் மலரை அழகு செய்கிறது,

பெரியாருக்குப் பின் யார்? திராவிடர் கழகம் அவ்வளவு தான்என்று பார்ப்பனர்கள் உள்ளம் மகிழ்ந்திருந்த காலம் ஒன்று உண்டு. முத்தமிழறிஞர் கலைஞர், ஆசிரியர் அவர்களின் ஆட்சித்திறனைப் பற்றிக் கூறுவதைக் காண்போம்.

நாங்கள் பெரியார் கட்சிக்குக் காரணகர்த்தாக்கள் என்றால் பெரியாருடைய மாட்சிக்குக் காரண கர்த்தாவாக இன்றைக்கு விளங்குபவர் என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது, பெரியாருக்குப் பிறகு, அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி, கட்டிவைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கைகள் வீரமிக்க அறை கூவல்கள் இத்தனையையும் கட்டிக்காக்க யாருளர் என்று நமக்கெல்லாம் எழுந்த அய்யப்பாட்டை இதோ நானிருக்கிறேன் என்று எடுத்துக்காட்டி, ஏறுபோல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல், பெரியாரின் பெருந் தொண்டர், சுயமரியாதைச் சுடர், தன்மான முரசு வீரமணியார் - என் கண்ணிலும் அவர் கண்ணிலும் நீர் துளிர்க்க - அது ஆனந்தப் பன்னீராக  ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டோம். அறிவுப்பணி அதற்குத் தேவையான அமைப்புப் பணி அதிலும் ஓர் கட்டுப்பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை காக்க கண்மணியாம் வீரமணியாரின் நிர்வாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பலமுறை எனக்குக் கிட்ட வேண்டும் எனப்பேராவலுடன் விடை பெற்றுக் கொண்டேன்’,

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பற்றிய கலைஞரின் இந்த எழுத்தோவியத்தைக் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுக்களாக நாம் பொறித்து வைக்க வேண்டும்,

தந்தை பெரியாரின் பிறந்த நாளைச்சமூக நீதிநாள்என்று அறிவித்துஉறுதி மொழிஎடுக்க வைத்த முதலமைச்சார் மாண்புமிகு தளபதி அவர்கள் முழங்குகிறார்.

தந்தை பெரியார் மறைந்தாலும் அவர் ஊட்டிய சமுக நீதி - சுயமரியாதை - பகுத்தறிவு உணர்வு ஒருபோதும் மறையாது. மங்காது. திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம் அந்தச் சுடரொளியை உயர்த்திப் பிடிக்கும்.

இது தந்தை பெரியாருக்கு இந்த எளியவனின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தந்துள்ள பிறந்த நாள் பரிசு, சமூக நீதிப் பயணத்தில் இன்னும் பல பரிசுகளைத் தந்தை பெரியாருக்கு வழங்கிட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

இந்த முழக்கம் ஒரு புலியின் பாய்ச்சலைப் போல் அல்லவா காட்சி அளிக்கிறது. முதலமைச்சர் ஆவதற்கு முன்பே தளபதியார் குரல் எப்படி ஒலித்தது! இதோ..

தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் இந்தப் பேரியக்கத்தின் செயல் தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான், எந்தச் சூழலிலும் திராவிட இயக்கத்தின் முழு மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும், எவரையும் எதிர் கொள்வேன் திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்த கொம்பனாலும் எந்தத் தருணத்திலும் முடியவே முடியாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு

புறநானூற்றுப் போர்க்களத்தில் எடுக்கப்பட்ட வஞ்சன உறுதிமொழியல்லவா இது!

(தொடரும்)

No comments:

Post a Comment