ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: டாக்டர் ராதாகிருட்டிணன் பிறந்தநாளை (செப்டம்பர் - 5) ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவதை விடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக, உரிமைக்காக அரும்பாடுபட்ட சாவித்திரி பாய் பூலே அவர்களின் பிறந்தநாளை (ஜனவரி - 3) ஆசிரியர் தினமாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டுமா?

- இல.சீதாபதிமேற்கு தாம்பரம்.

பதில்: பார்ப்பன செல்வாக்கினால் அந்த வாய்ப்பு (ஆசிரியர் தினம்) ஏற்பட்டது.

இது மட்டுமல்ல; திருத்தணி ஆந்திர பார்ப்பனர், குடியரசுத் தலைவர் வரை ருசி பார்த்து விட்டார்! (அவர் பற்றி அவரது மகன் டாக்டர் கோபால் எழுதிய சுயசரிதம் காண்க)

அதை மாற்றாவிட்டாலும், பெண் கல்வி, ஆதிதிராவிட ஒடுக்கப்பட்ட பெண்களுக்குக் கல்வி தந்த முன்னோடி சாவித்திரி பாய் பூலே பெயரில்ஆசிரியைகள் தினம்என்ற ஒன்றை தமிழ்நாடு திமுக அரசு உருவாக்கி துவக்கப் பள்ளிக் கல்வி வரை ஆண்டுதோறும் சிறந்தவர்களுக்குத் தனிப்பரிசு - விருது தருவது பற்றி யோசித்தால் நல்லது.

கேள்வி 2: விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தராததால், வாழ்த்து தெரிவித்து அட்டைகளை அனுப்புகிறார்களாமே! தமிழ்நாட்டு முதல்வருக்கு மட்டும் தானா?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: ஒன்றிய அரசுக்கு வருவாய் இல்லாததால் அரசு உடைமைகளை விற்றும், குத்தகைக்குவிட்டும் பா... அரசின் நிதிநிலையைச் சரிப்படுத்தி உதவ இப்படி கார்டுகளை வாங்கி உதவும் திட்டம் போலும் இது! போராட்டம் நடத்தக்கூட விநாயகர் தானே மூலதனம்! அட அறிவுக்கொழுந்துகளே!

கேள்வி 3: பெரியார் உலகம் தொடர்பாக இப்போதே சர்ச்சைகளைச் சிலர் கிளப்புகிறார்களே?

- வி.பாண்டி, அனுப்பானடி, மதுரை

பதில்: பெரியார் என்றால் சர்ச்சையில் துவங்கி, இறுதியில் வெற்றி பெறும் எதிர் நீச்சல்காரர் என்ற வரலாறு இதிலும் தொடருவது நல்லதே! விளம்பரம் கிடைக்கட்டும்! நன்றி!

கேள்வி 4: செட்டிநாட்டுப் பகுதியில் நகரத்தார் கோவில்களில் பண்டார முறை இருந்த நிலை மாறி, பார்ப்பனர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். அதற்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது

. ஏன் இன்னும் இந்த அடிமை மனநிலை?

- திருமயம் தமிழன், துபாய்

பதில்: நகரத்தார் இளைஞர்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டார்கள். இதனை மீட்டுருவாக்கம் செய்ய நிச்சயம்இயக்கம்‘  (Campaign)  நடத்துவார்கள்.

கேள்வி 5: தஞ்சையில் தமிழ்நாடு அரசால் திருமலை சமுத்திரத்தில் 5 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படும் மரம் வளர்ப்பிற்குவிருட்ச வனம்என்று வட மொழிப் பெயரிட்டிருப்பதாக அறிய முடிகின்றது. திமுக ஆட்சிக்கு வந்தபின்னும் இந்நிலையா?

- சிவகுமார் சண்முகம், பஹ்ரைன்

பதில்: தமிழில் சொற்களே கிடைக்கவில்லையோ? பஞ்சமா? நல்ல தமிழில் மாற்றப்பட முயற்சி எடுப்போம்! 

கேள்வி 6: சில நாட்களுக்கு முன்னர் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாண்பமை நீதியரசர் சேகர் குமார் யாதவ்பசு மரியாதைக்குரிய வகையில் நடத்தப்பட்டால்தான் நாடு முன்னேறும். பசு தேசிய மிருகமாக அறிவிக்கப்பட வேண்டும்என்று அரிய கருத்தை வெளியிட்டுள்ளாரே? இது பற்றி தங்கள் கருத்து என்ன

- .செல்வம், நாகப்பட்டினம்

பதில்: இந்த இனம் எப்படி - ஏன்பிற்படுத்தப்பட்ட’ (பின்தங்கிய அல்ல) சமூகமாயிற்று என்பது இதிலிருந் தாவது புரிகிறதா? அட, விபீஷண குஞ்சுகளே! உங் களுக்கு மானமும் அறிவும் தர .பி.யில் பெரியார்மேளா மற்றொரு முறை கொண்டாட வேண்டுமோ?

கேள்வி 7: எதிர்க்கட்சியில் அமர்ந்த பின்னும் கூட அதிமுக இன்னும் பா... பிடியில் இருந்து மீண்டதாகத் தெரியவில்லையே?

- மு.வெ.வேதவள்ளி, திருப்பூர்

பதில்: ‘கரையினில் நெருப்பு - நதியினில் வெள்ளம்‘ - என்பதால் - எப்படி தப்பிப்பது என்றமண் குதிரைசவாரி இது! கடைசியில் தெரியும் இவர்களின் கதி!

கேள்வி 8: தமிழ்நாடு முதலமைச்சரால் தந்தை பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்ட அன்று தங்கள் மனநிலை என்ன?

- கு.ராஜாஹரி, வேலூர்

பதில்: வார்த்தைகள் வராது, உணர்ச்சியால் மெய்மறந்த அன்பிலும் நன்றியிலும் முதலமைச்சரை எப்போதும் பாராட்டிக் கொண்டே இருக்கும் மன நிலை! ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்வரலாறு படைத்தார்.  நன்றிஒரு சாதாரண சொல் - புதிய சொல் தேடுகிறோம்!

கேள்வி 9: தந்தை பெரியார் பிறந்த நாளில் சிலைக்கு மாலை போடுவது சரியா?

- விஜய், சோழங்குறிச்சி

பதில்: பிரச்சார உத்தி; மகிழ்ச்சியின் வெளிப்பாடு. இல்லையானால் அதனை வெளிப்படுத்துவது எளிதாகாது - மக்கள் கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சி வெளிப்பாடு தானே!

100க்கு 100 பகுத்தறிவோடு வாழும் நிலை ஏற்பட்டால் இவை தானே நின்றுவிடும்.

கேள்வி 10: பிற்படுத்தப்பட்டோரில் குடும்பத் தில் முதல் பட்டதாரிக்கு உதவித் தொகை என்ற நிலையை மாற்றி, முதல் தலைமுறையில் படிக்கும் அனைவருக்கும் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது பெரும் மாற்றம் அல்லவா?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: அதிலென்ன அட்டி? சமூகநீதியில் வரலாற்றுச் சாதனை அனைவருக்கும் அனைத்தும் - இதுதான்!!

No comments:

Post a Comment