சட்டமன்றத்தில் இன்று... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

சட்டமன்றத்தில் இன்று...

வழக்கத்தில் இல்லாத பழைமையான சட்டங்களை நீக்கரவு செய்யப்படும்

சட்டமன்றத்தில் அமைச்சர் எஸ்.இரகுபதி தகவல்

சென்னை,செப்.1- சட்டமன்றம் இன்று கூடியவுடன் சட்டமன்ற பேரவையின் மறைவுற்ற மேனாள் உறுப்பினர்கள் திண்டுக்கல் இரா.மணிமாறன், மதுராந் தகம் ..வெங்கடேசன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து பேரவைத்தலைவர் மு.அப்பாவு இரங்கல் குறிப்பை வாசித்தார்.

இதையடுத்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்துநின்று 2 மணித்துளிகள் அமைதிகாத்து மரியாதை செலுத்தினர்.

அரசினர் சட்ட முன்வடிவு அறிமுகம்

சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி அவர்கள் இன்று சட்டமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கரவு செய்தல் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்து வைத்தார். அதில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாடு மாநில சட்ட ஆணைய மானது, பல்வேறு இயற்றுச்சட்டங்கள் மிகவும் பழைமையானதாக மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற சட்டங்களை நீக்கரவு செய்வதற்கு தன்னுடைய பல்வேறு அறிக்கைகளில் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இந்திய அரசின் சட்டமியற்றும் துறை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் மற்றவர்களிடையே 1858ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டாய தொழிலாளர் சட்டத்தை (மய்யச்சட்டம்- 1/1858) நீக்கரவு செய்வதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு கோரியுள்ளது. மாநில சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் இந்திய அரசின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு மிகவும் பழைமையான மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற சட்டங்களை நீக்கரவு செய்வதற்கு அரசானது முடிவு செய்துள்ளது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் விண்ணப்பித்த அனைவருக்கும் உதவி, உபகரணங்கள் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு உறுதி

அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான மானியக் கோரிக்கையை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் அவர்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அதில் அவர் தெரிவித்திருப்ப தாவது, பராமரிப்பு உதவித் தொகையை மாற்றுத்திறனாளிகள் வேண்டி விண்ணப் பித்து காத்திரப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் உதவித் தொகை வழங்கும் பொருட்டு 2021-2022ஆம் ஆண் டிற்கான நிதி ஒதுக்கீடாக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவி, உபகரணங்கள் வழங்கும் பொருட்டு  2021-2022ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடாக ரூ.62.50 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

உஜ்ஜவாலா திட்டம்: பெண்கள் மற்றும் குழந்தைகள் வணிக ரீதியான பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவது மனித உரிமைகளுக்கு எதிரான குற்றமாகும். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் முறையான மறுவாழ்வை உறுதி செய்வதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் (உஜ்ஜவாலா) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வணிக ரீதியான பாலியல் சுரண்டலைத் தடுக்கவும், கடத்தப்பட்ட வர்களை மீட்டு மறுவாழ்வு அளித்து சமூகத்துடன் ஒருங்கிணைக்கவும் வழிவகை செய்வதற்குமான ஒரு விரைவான திட்டமாகும். தமிழ்நாட்டில் அய்ந்து தன் னார்வத் தொண்டு நிறுவனங்கள்மூலம் இத்திட்டம் செயல்பட்டுவருகிறது. 2020-2021ஆம் ஆண்டில் 243 பெண்கள் இத்திட்டத்தின்மூலம் பயனடைந்துள்ளனர். 2021-2022ஆம் ஆண்டு திருத்த வரைவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.111.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்

அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

சட்டமன்றதில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் இத்துறைக்கான மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தினை ரூ.4,647.50 கோடி (715 மில்லியன் அமெரிக்க டாலர்) திட்ட மதிப்பீட்டில் உலக வங்கியின் கடனுதவி  ரூ.3,347.50 கோடியுடன் (500 மில்லியன் அமெரிக்க டாலர்) செயல்படுத்த முன்மொழிவுகள் உலக வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் கட்டி முடிக்கப்பட்டு, தெற்கு நோக்கி செல்லும் வழித்தடங்கள் 2022 மார்ச் முதல் இயக்கப்படும். குத்தம்பாக்கத்தில் ரூ.336கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் கட்டி முடிக்கப்பட்டு மேற்கு நோக்கி செல்லும் வழித்தடங்கள் 2022 அக்டோபர் முதல் இயக்கப்படும்.

இந்த நிதியாண்டில் சுமார் 25ஆயிரம் பயனாளிகளுக்கு குடியிருப்பு, மனைகள்

குடிசை பகுதி மாற்று வாரியத்துக்கான மானியக் கோரிக்கையை

தாக்கல் செய்து அமைச்சர் தாமோ.அன்பரசு தகவல்

ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசு அவர்கள் குடிசை பகுதி மாற்று வாரியத்துக்கான மானியக் கோரிக்கையை இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ள திட்டப்பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள், மனைகளில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப் பட்டுவருகிறது. இதுவரை 42,842 மேம்படுத்தப்பட்ட மனை களுக்கான விற்பனைப்பத்திரங்களும் 26,842 குடியிருப்பு களுக்கான விற்பனைப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

2021-2022ஆம் ஆண்டில் குடியிருப்புகள், மனைகளில் வசித்துவரும் சுமார் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு பயனாளி களின் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் விற்பனைப் பத்திரங்கள் இந்த நிதியாண்டில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment