நாடா - காடா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

நாடா - காடா?

 உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா விகாஸ் மார்க்கெட்டில் இர்பான் என்பவர் 'சிறீநாத்' என்ற பெயரில் உணவு விடுதி நடத்தி வருகிறார். ஒரு முஸ்லிம் இந்து பெயரில் எப்படி உணவகம் நடத்தலாம்? எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

 இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி இந்த உணவு விடுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், உணவு விடுதிக்கு 'சிறீநாத்' என்று ஏன் பெயரிடப்பட்டது என்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் 'சிறீநாத்' என்ற பெயர் கொண்ட உணவு விடுதியின் பதாகைகளைக் கிழித்து எறிந்தும், மேசைகளைத் தூக்கி எறிந்தும், அடித்து நொறுக்கியும் வன்முறை வேட்டையாடித் தீர்த்தனர்.

மேலும், 'சிறீநாத்' என்று பெயரிடப்பட்டுள்ளதால், உணவு விடுதிக்கு இந்துக்கள் சாப்பிட வருவார்கள். இது பொருளாதார ஜிஹாத் - எனவே மதுரா விகாஸ் மார்க்கெட்டில் இனிமேல் உணவகம் நடத்தக்கூடாது என்று மிரட்டலும் விடுத்துச் சென்றனர். இந்த கும்பலை வழி நடத்திய தேவராஜ் பண்டிட் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், 'இவரை(இர்பான்) போன்றவர்களால் இந்துக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. சனாதன தர்மத்தின் உதவியை நாடும் இத்தகைய விற்பனையாளர்களுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் என்றும் இது பொருளாதார ஜிஹாத் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மதுராவின் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக உணவு விடுதியின் உரிமையாளர் இர்பான் கூறியதாவது:-

நாங்கள் கடந்த அய்ந்து ஆண்டுகளாக இந்த உணவு விடுதியை நடத்தி வருகிறோம். இதுவரையிலும் பெயரில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு பெயரால் இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று நாங்கள் கற்பனை கூட செய்யவில்லை. உணவகத்துக்கு வந்த கும்பல் வன்முறைகளில் ஈடுபட்டு முஸ்லிம் மக்கள் இந்து பெயருடன் ஒரு கடையை நடத்த முடியாது என்று அச்சுறுத்தினார்கள். இந்த பெயரில்தான் அவர்களுக்கு பிரச்சினையே உள்ளது என்று இர்பான் கூறினார். முஸ்லிம் உணவகத்தை சூறையாடிய சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று மத்தியப் பிரதேசத்திலும் லாரியில்  காலை கட்டி சாலையில்  இழுத்து சென்று  பழங்குடியின இளைஞரைக் கொலை செய்துள்ளனர் இந்துத்துவ அமைப்பினர். 

வடமாநிலங்களில் சமீப காலமாக குழு வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குழுவாக சேர்ந்து ஒருவரை போட்டு அடிப்பது, சிறிய தவறுக்காக ஒரு நபரை மொத்தமாக பலர் சேர்ந்து அடித்துக் கொலை செய்வது என்று வடஇந்தியாவில் குழு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. அப்படி ஒரு சம்பவம்தான் மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் நடந்துள்ளது.

அந்த பகுதியில் சாலை ஓரத்தில் கன்ஹையாலால் பீல் என்ற ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த நபர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்.  அவர் கீழே விழுந்ததில் பால் கொட்டி விட்டது.

பால் கொட்டிய கோபத்தில் சம்பந்தமே இல்லாமல் அங்கே  நின்று கொண்டிருந்த ஆதிவாசி இளைஞர் கன்ஹையாலாலை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.   உள்ளூர் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த அவர் தனது அமைப்பைச் சேர்ந்தவர்களை அலைபேசியில் பேசி வரவழைத்து இருக்கிறார்.

 இதனை அடுத்து அந்த அமைப்பில் உள்ள 7 பேர் அந்த பகுதிக்கு  வந்துள்ளனர். எல்லோரும் சேர்ந்து கன்ஹையாலாலை மாற்றி மாற்றி தாக்கி உள்ளனர்.

அதோடு விடாமல் அவரை அந்த வழியாக வந்த லாரியில் கட்டி வைத்து அடித்து உள்ளனர். பின்னர் லாரியின் பின் பக்கத்தில் கயிறு ஒன்றை கட்டி அதன் இன்னொரு முனையை கன்ஹையாலாலின் காலில் கட்டி உள்ளனர். பின்னர் அந்த லாரியை வேகமாக சாலையில் ஓட்டி சென்றுள்ளனர். லாரியின் பின் பக்கத்தில் கட்டப்பட்டிருந்த கன்ஹையாலால் சாலையிலேயே தரதரவென இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 உடல் முழுக்க காயம் அடைந்த கன்ஹையாலாலை சாலையிலேயே வீசி எறிந்துவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் கிளம்பி சென்றுள்ளது. சுற்றி நின்ற மக்கள் கூட்டம் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்து இருக்கிறது. அவரின் உடலில் கயிறை கட்டி இழுக்கும் போது அதை வீடியோ எடுத்த கும்பல் இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள். அங்கிருந்த மக்கள் பலரும் அதை வீடியோவாக எடுத்துள்ளனர். ஆனால் யாரும் இந்த கும்பல் வன்முறையை தடுப்பதற்காக முன்வரவில்லை.

இக்கொடூர நிகழ்வு  சில மணி நேரங்களில் சமூக வலைத் தளங்களில் வைரலானதன் மூலம்  தகவல் சென்று காயம் அடைந்த கன்ஹையாலாலை காவல்துறையினர் கண்டுபிடித்து மீட்டனர். அவரின் உடல் முழுக்க கடுமையான காயங்கள் இருந்துள்ளன. உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார். முதுகில் மோசமான காயம், பல இடங்களில் எலும்பு முறிவு, பின் மண்டையில் காயம் ஏற்பட்ட நிலையில் கன்ஹையாலால் சிகிச்சை பலனின்றிப் பலியானார்.

இந்த நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? பா... ஆளும் மாநிலங்கள் காவி வெறியர்களின் வேட்டைக்காடாகி விட்டன. ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? கொடிய மிருகங்கள் தாண்டவமாடும் காட்டில் வாழ்கிறோமா? இவர்களுக்குப்பாடம் கற்பிக்க வேண்டாமா? சிந்திப்பீர்.

No comments:

Post a Comment