"இன்று கனம் டாக்டர் ராஜன் அய்யங்கார் தேவஸ்தான இலாகா மந்திரியாயிருக்கிறார். அவர் ஆதீனத்தில்தான் இந்நாட்டுக் கோவில்களின் தலையெழுத்து பூராவும் இருக்கின்றன. சட்டசபையும் கனம் டாக்டர் ராஜன் காலாட்டினால் மற்றவர்கள் தலையை ஆட்டும்படியான மெஜாரிட்டியாய் இருக்கிறது. சர்க்காரோ காங்கிரசே சர்க்கார் - சர்க்காரே காங்கிரஸ் என்று கனம் ராஜனே சொல்லிக் கொள்ளும்படியான நிலைமையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த கோவில்களுக்கெல்லாம் பார்ப்பானே மணி அடிக்க வேண்டும். பார்ப்பானே சோறு பொங்க வேண்டும். பார்ப்பானே வேதம் ஓத வேண்டும் என்பவை ஆன பார்ப்பானே செய்ய வேண்டும் என்கின்ற காரியங்களை மாற்றி, வகுப்புவாதம் புரிகின்ற ஜஸ்டிஸ் கட்சியார் உள்பட தனித் தொகுதி கேட்பதும் இந்து மதத்தை விட்டுப் போவதும், ஆபத்து என்று கூறி தடுக்கப்படும் ஷெட்யூல் வகுப்பார் வரை உள்ள எல்லா இந்துக்களும் செய்யலாம் என்று ஒரு சட்டமோ உத்தரவோ செய்து வகுப்புவாத ஆதிக்கத்தை ஒழிப்பாரா? என்று வணக்கமாய் கேட்கின்றோம்.
இதாவது நாளைக்குச் செய்யட்டும். இன்றைக்கு எல்லா இந்துக்களும் வகுப்பு ஜாதி என்கின்ற வித்தியாச முறை இல்லாமல் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சர்வதயாபரமும் உள்ளவரான பகவானைத் தரிசிக்க சர்வ சுதந்திரமாய் அனுமதிக்கப்படும் என்று உத்தரவு போடட்டுமே என்றுதான் கேட்கிறோம். "
('குடிஅரசு' - தலையங்கம் - 08.08.1937)

No comments:
Post a Comment