தனித்து விடப்பட்ட இலங்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 19, 2021

தனித்து விடப்பட்ட இலங்கை

சீனாவுடனான அதீத நெருக்கம் காரணமாக இலங்கை  இன்று தனித்துவிடப்பட்ட ஒரு தீவாக மாறியுள்ளது.

பன்னாட்டு  அழுத்தங்கள் அதிகரித்துள்ள அதே வேளையில் இலங்கை மீதான பன்னாட்டு மற்றும் உலக அமைப்புகளுக்கும்  இதை சந்தேகக் கண்களுடம் பார்க்கிறது  என்பதற்கு ஏற்ப நிறைய நிகழ்வுகள்  அரசியல் அரங்கில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக இலங்கையுடன்  நீண்ட கால உறவை கொண்டிருந்த இந்தியா இன்று தீவு நாட்டுடனான உறவில்  மீள் பரிசீலனை செய்து வருகிறது.

அதேபோல், இலங்கைக்கு  சீனாவை விட அதிக உதவிகளை செய்து வந்த பல நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் இன்று அதன் உறவிலிருந்து மெல்ல மெல்ல விலகும் விலகி வருகிறது.

உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கோவிட் நெருக்கடிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சீனா தன்னுடைய நிகழ்ச்சி நிரலை சுதந்திரமாக செய்துகொண்டிருக்கிறது.

 குறிப்பாக இலங்கையைப்  பொறுத்தவரை கரோனாவுக்கு  முன்பு இலங்கையோடு நெருக்கத்தை மிகவும் கவனமாக கையாண்ட சீனா  கரோனா நெருக்கடி காலத்தில் இலங்கையை நன்கு பயன்படுத்திக் கொண்டது.

இந்தியப்பெருங்கடல் தீவு நாடுகளில்  இதே போன்று தான்  அமைதியான  முறையில் தன்னுடைய ஆக்டோபஸ் கரத்தை கொண்டு வளைத்து வருகிறது.

நிலைமை இவ்வாறிருக்க, இலங்கைக்குப்  பெரும் அதிர்ச்சியாக அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானம் அமைந்திருந்தது.

ஏற்கனவே கடன் சுமையாலும், பொருளாதார நெருக்கடியாலும்  தள்ளாடிக்கொண்டிருக்கும் ராஜபக்சே அரசாங்கத்துக்கு இந்த தீர்மானம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜபக்சே ஆட்சியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற காரணங்களால் கடந்த ஆட்சிக்காலத்திலும் அதாவது 2010-2015 காலப்பகுதியிலும் இவ்வாறான நெருக்குதல்களை இலங்கை எதிர்கொண்டிருந்தது என்பது வரலாறு. அதன் பின்னர் ஆட்சிப்பீடம் ஏறிய மைத்திரி-ரணில் அரசாங்கம் காலில் விழாத குறையாக சர்வதேசத்திடம் அணுகி இழந்த பல விடயங்களை மீட்டிருந்தது.

 இந்நிலையில் மீண்டும் 2019 இல் ஆட்சிப்பீடம் ஏறிய ராஜபக்சே தரப்பு மீண்டும் உலக நாடுகளையும் பன்னாட்டு  அமைப்புகளையும் வெறுப்பேற்றும்  செயற்பாடுகளை கையிலெடுத்திருக்கிறது. அதன் ஒரு விளைவு தான் அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த தீர்மானம் ஆகும்

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டமானது பல்வேறு குறைபாடுகள் கொண்டது.  எந்தவித விசாரணைகளுமின்றி சமூக பணியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தவர்கள் என ஏராளமானோர் ஆட்சியாளர்களின் அரசியல் நலனுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்படாமல் தடுத்து வைத்திருப்பதனை அய்ரோப்பிய நாடாளுமன்றம் கண்டித்துள்ளதுடன், எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி அய்ரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதுடன், இறுதி முயற்சியாக இலங்கைக்கான  ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக விலக்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராயுமாறும்அந்த தீர்மானம் கோரிக்கை விடுத்திருந்தது.

உண்மையில் இலங்கை இன்று எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி நிறைந்த காலகட்டத்தில் இந்த தீர்மானம் ஒருவேளை செயல்வடிவம் பெற்றுவிடுமானால் அது நாட்டிற்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.

2010 தொடக்கம் 2015 வரை ஆட்சி செய்த ராஜபக்சே தரப்பு ஒத்துழைப்பு வழங்காமையினால் அக்காலப்பகுதியில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டிருந்தது.அதன் காரணமாக அடுத்து ஆட்சி ஏறிய நல்லாட்சி அரசாங்கம் இதன் விளைவை பெரியளவில் சந்தித்திருந்தது.அதற்கேற்றவாறு  ஊழலை ஒழிப்பதற்கும், மனித உரிமைகளை பேணுவதற்கும், நீதியின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கும் மேலும் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி கவனம் செலுத்துவதற்கும் சிறப்பு  கவனம் செலுத்தி அய்ரோப்பிய நாடுகளின் கவனத்தை திருப்பியதுடன்,இலங்கையில் சமாதானம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கில் மக்களாட்சியை மீண்டும் அமைத்தல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டோரை விடுதலை செய்தல் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம், மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது.

சற்று மென்மையான போக்கை கடைப்பிடித்ததனால் பறிபோன ஜி.எஸ்.பி.ப்ளஸ் வரிச்சலுகை கடந்த 2017இல் மீண்டும் இலங்கைக்கு கிடைத்திருந்தது.

அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளிலிருந்து அந்நாட்டின் பொருளாதாரம், நல்லாட்சி, நிலைபேறான நாட்டின் வளர்ச்சியைக்  கருத்திற்கொண்டு, அய்ரோப்பிய ஒன்றியத்தினால் வரி விலக்களிப்பு வழங்கப்படும்.

 அந்த அடிப்படையில்,ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்கும் நாடுகளில், மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி போன்றவை கருத்தில் கொள்ளப்படுவது பொதுவானதாகும்.

அதற்கேற்ப  கடந்த அரசாங்க காலத்தில் அது மீண்டும் கிடைத்தது. ஆனால் ராஜபக்சே தரப்பு 2019 இற்கு பின்னர் மேற்படி விடயங்களிலிருந்து மிக தொலைவுக்கு சென்றிருப்பதுடன்,நாட்டில் மீண்டும் சிறுபான்மையினருக்கு எதிரான கைதுகள், மிரட்டல்கள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை கட்டவிழ்த்து விட்டிருப்பதுடன், சிறுபான்மையினரை நசுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இதன் காரணமாக மீண்டும் பன்னாட்டு அமைப்புகள்  இலங்கைவைப் பகைத்துக்கொள்ளும் நிலைமை ஒன்றை ராஜபக்சே அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது.

ஆனால் கீழே வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதைப்போன்று எவ்வளவு நெருக்கடி இருந்தாலும், அய்ரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் தொடர்பில்  அமைச்சர்கள் சிலர்  முட்டாள்தனமாக பேசி வருகிறார்கள்.

இவர்களுடைய இவ்வாறான பேச்சுக்கள் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை என்பது இவர்களுக்கு தெரியும். இதனுடைய பாதிப்பு இந்த நாட்டையும் குடிமக்களையும் எதிர்கால சந்ததிகளையும் தான் பாதிக்கப்போகிறது என்பதும் அவர்களுக்கு தெரியாமல் இருக்கமுடியாது.

 5ஆண்டுகளுக்கும்  சுருட்ட முடிந்ததை சுருட்  டிக்கொண்டு போகும் செயற்பாடுகளில் ஈடுபடும் அரசியல் வாதிகளுக்கு அதனுடைய வலி தெரியப்போவதில்லை.  நாட்டின் வளர்ச்சி தொடர்பில்  நாட்டு மக்கள் தான் சிந்திக்கவேண்டும். அரசியல்வாதிகள் எதை பேசினாலும், எதனை செய்தாலும் வாய் மூடி கேட்டுக்கொண்டிருக்கும் கலாச்சாரத்திலிருந்து சிறீலங்கா மக்கள் விடுபட வேண்டும்.

 குறிப்பாக சிங்கள மக்கள் நாட்டை வெளிநாட்டவருக்கு விற்றாலும் பரவாயில்லை, நாட்டு வளங்களை எவர் சூறையாடினாலும் பரவாயில்லை என்று ஒதுங்கியிருக்கும் அரசியல் கலாச்சாரத்திலிருந்து ஒட்டுமொத்த மக்களும் விடுபட்டு ஒரு பொதுவெளிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயமாக்கும்.

அதற்கான சுமூகமான காலநிலை  இடம்பெறுவது தற்போதைய தேவையாகும். இதுமட்டும் நடக்காவிட்டால்  தீவின் குடிமக்கள் அடிப்படைத் தேவைகள் முதல்  உண்ணும் உணவு வரை வெளியாரிடம் கையேந்தும் ஒரு காலம் விரைவில் வரும் என்பதை  இலங்கைமீது நல்லெண்ணம் கொண்ட அரசியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment