மெய்யுரை
காங்கிரஸ் ஆட்சியில், ஒன்பதே ஆண்டுகள் காமராஜர் தமிழகத்தை ஆண்டார்; இருபத்தியொன்று ஆண்டுகள் திமுக ஆட்சியில் அண்ணா (இரண்டு ஆண்டுகள்) கலைஞர் ஆண்டனர். இவர்கள் இறுவேறு ஆட்சியிலுமே அனைவருக்கும் கல்வி அளிக்கவேண்டும் என்ற முழக்கத்தைக் கையில் எடுத்துத் தலையாயப் பொறுப்பாகக் கொண்டு செயல்பட்டாலும் காமராஜர் ஆற்றிய பணிதான் பரவலாக அனைவராலும் பேசப்படுகிறது.” கல்விக்கண் திறந்த காமராஜர்” என்று காமராஜர் அனைவராலும் போற்றிப் புகழப்படுகிறார். அவ்வாறு எனின் திமுக ஆட்சியில் தரமான கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காக என்னதான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனச் சிந்தித்ததன் விளைவே இக்கட்டுரை- அல்ல இது - மெய்யுரை.
வெயிலின் கொடுமை
கடுமையான வெயிலில் நடந்து, நிழலுக்குச் செல்லும்போதுதான் நிழலின் அருமையை உணர்ந்து மகிழ்ந்து பாராட்டுகிறோம். அப்படித்தான் 1950-1952இல் மூதறிஞர் இராஜாஜி முதலமைச்சராய்த் தமிழ்நாட்டில் இருந்தபோது “உள்ளூர்த் தேவைக்கேற்பப் பள்ளியில் குழந்தைகள் ஏதேனும் ஒரு தொழிலைக் கற்கட்டும், அரை நேரம் பள்ளி - அரை நேரம் அப்பன் செய்யும் தொழிலுக்குத் துணையாக இருந்து தொழில் பழக்கட்டும்;” எனக் குலக்கல்வியைப் புகுத்தும் வகையில் குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்க எண்ணி, ஏழை எளிய மக்களின் கல்வியை மறுக்கும் மக்கள் விரோதப்போக்கில் இறங்கியபோது கொடும் வெயிலில் இட்ட புழுவாக மக்கள் வருத்தம் உற்றிருந்தனர்.
நிழலின் அருமை
கொடுமையான இக்காலக்கட்டத்தில் தான் 1954இல் பெருந் தலைவர் காமராஜர் முதலமைச்சராய்ப் பொறுப்பேற்கிறார். இராஜாஜியும் இவரும் ஒரே காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஆயினும் இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைக் காமராஜர் ஒழிக்கிறார்; எண்ணற்றப் புதிய பள்ளிகளைத் திறக்க ஆணையிடுகிறார். ஏழை எளிய குழந்தைகளும் படிக்கவேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தைக் கடும் நிதி நெருக்கடிக் காலத்திலும் கொண்டுவருகிறார். ஏழை பணக்காரன் ஜாதிப் பாகுபாடு குழந்தைகள் மனதில் குடியேறி விடக்கூடாது எனச் சீருடைத்திட்டம் கொண்டுவருகிறார். இவருக்குப் பின் இதே இயக்கத்தைச் சார்ந்த எம். பக்தவச்சலம் 1963 முதல் 67 வரை பள்ளிகளில் இந்தி மொழியைத் திணிக்க மக்களின் வெறுப்புக்கு ஆளாகிறார். எனவேதான் இராஜாஜி, பக்தவச்சலம் ஆட்சி என்கிற கடும் வெயிலின் கொடுமையை அனுபவித்த மக்களுக்குக் காமராஜர் ஆட்சி குளிர் தரு நிழல் எனச் சுகம் தந்ததால் இன்றுவரை அவர் கல்விக்கண் திறந்த காமராஜர் போற்றப்படுகிறார்.
கல்வி அடித்தளம் முதல் மாளிகையாய் வளர்ச்சி
கல்வி அனைவருக்கும் சென்று சேர அடித்தளம் இட்டவர் காமராஜர் என்றால் அவ்வடித்தளத்தில் மாபெரும் மாளிகையாய்க் கல்வியைத் தமிழ்நாட்டில் கொண்டு சேர்க்கக் காரணமாய் இருந்தவர் கலைஞர் எனில் அதை யாராலும் மறுக்கமுடியாது.
ஆட்சிப்பொறுப்பு ஏற்ற அடுத்த இரு ஆண்டுகளிலேயே தமிழ்நாடு பெயர் மாற்றம் இருமொழிக்கொள்கை சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு எனத் தொடக்கமே பேரறிஞர் அண்ணாவின் கல்வி வளர்ச்சிக்கானப் பாதைகளாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.
அதற்குப் பின் பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள் தன் ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி அனைவருக்கும் சென்று சேர எடுத்த முயற்சிகளும் நடவடிக்கைகளும் அளவிடற்கு அரியவை.
கல்விக்கு அடித்தளமிட்ட காமராஜரின் பிறந்த நாளைக் கல்வி நாளாகக் கொண்டாட ஆணையிட்டதிலிருந்தும், உயிரோடு இருக்கும்போதே காமராஜருக்குச் சிலை எடுத்துச் சிறப்பித்தலில் இருந்தும் கல்வி வளர்ச்சி ஒன்றே கவின்பெறு சமுதாயத்தை உருவாக்க இயலும் என்பதில் எவ்வளவு நம்பிக்கையைக் கொண்டிருந்தார் கலைஞர் என்பதை உணரலாம்.
மதிய உணவையே சத்தாகக் கொடுக்க வேண்டுமென்று உள்ளங்கொண்டு வாரத்தின் அனைத்து நாட்களிலும் முட்டையும் வாழைப்பழமும் வழங்கக் கலைஞர் ஆணையிட, பள்ளிக்கு வருகை தந்த மாணவர் எண்ணிக்கையும் வளர்ந்த உண்மை கலைஞர் ஆட்சியில்தான்.
பள்ளிக்கு வரும் ஏழைப்பிள்ளைகளின் பயணக் கட்டணச்சுமையை அரசே ஏற்கும் வகையில் இலவசப் பேருந்துக் கட்டணப் பயணச்சலுகை அட்டை வழங்கியது கலைஞர் அரசுதானே!
கல்விக்கூடங்களைத் திறந்தால் போதுமா? கற்பிக்க ஆசிரியர்கள்? ஒரே ஆண்டில் 49087 ஆசிரியர்களை நியமித்து அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வி கற்க ஆணையிட்ட கருணை கலைஞருக்குத்தானே சொந்தம்?
தொழிற்கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கட்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த அரசு கலைஞர் அரசுதானே!
பாடநூல் வாங்கக் காசு இல்லை என்று எந்தக் குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என முதன்முதலாக இலவசமாகப் பாடப்புத்தகங்கள் வழங்கியது கல்வி வளர்ச்சிக்காகக் கலைஞர் கொண்டுவந்த திட்டம்தானே!
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் நியமிக்கப் போதுமான ஆசிரியர்கள் இல்லை என அறிந்ததும் மாவட்டந்தோறும் ஆசிரியர்ப் பயிற்சி நிறுவனத்தில் 50 கூடுதலான தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்க்க ஆணையிட்ட அரசும் கலைஞர் அரசுதான்!
பட்டதாரி இல்லாக் குடும்பங்களிலிருந்து வரும் முதல் 10 பேருக்கு முதுகலைப்பட்டம் வரை இலவசக் கல்வி அளிக்க முன்வந்ததும் கலைஞர் ஆட்சியில்தான்!
மாநிலத்தில் மட்டும் அல்ல, மாவட்டந்தோறும் முதல் மூன்று தகுதி பெறும் மாணவச்செல்வங்களுக்கு அவர்கள் தொடரும் எந்த மேற்படிப்பும் முடியும் வரை அவர்கட்காகக் கல்விக்கட்டணம் செலுத்தியதும் கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்; மாணவர் உடல் நலத்தையும் உளநலத்தையும் பேணும் வகையில் “வாழ்வொளித் திட்டம் “ கண்ட அரசு கலைஞர் அரசு!
உயர்கல்விக்குச் செல்லும் மாணவர் உதவித்தொகை பெற பணியில் சேர ஜாதி வாழ்விட வருமானச் சான்றுக்காக அலையாய் அலையும் மாணவர்கட்கு எந்த சிரமும் இன்றிப் பள்ளியிலேயே வழங்க வகுத்தது கலைஞர் ஆட்சியில் தானே!
அய்ந்தாம் வகுப்புவரை தமிழகத்தில் நடைபெறும் எந்தவகைப் பள்ளியானாலும் தாய்மொழியே பயிற்று மொழி என அறிவித்தது கலைஞரின் ஆட்சியில்தான்.
2006-2007இல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் என அறிவித்து 2015-2016இல் பத்தாம் வகுப்பில் அனைவரும் தமிழை ஒரு பாடமாகத் தேர்வு எழுத ஆணை பிறப்பித்த அரசு கலைஞர் அரசு
ஆசிரியர்கள் கற்பிக்கும் தெய்வங்கள், அவர்கள் வறுமை கொடிதினும் கொடிது என நினைந்து பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு நிர்ணயித்த சம்பளம்; பேராசிரியர்களுக்குப் பல்கலைக் கழக மான்யக்குழு வரையறுத்த சம்பளம் வழங்கிய ஒரே அரசு கலைஞர் அரசு!
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களில் பலர் சிறந்தவர்களாயினும் ஒரு சிலருக்கே இவ்விருது வழங்கும் வாய்ப்பு உள்ளது.எனவே, ஏனையவர்கள் கெட்ட ஆசிரியர்களா எனச் சிந்தித்த கலைஞர் இவ்விருதின் பெயரை டாக்டர் இராதாகிருட்டிணன் விருது எனப் பெயர் மாற்றம் செய்தார். கலைஞரின் சிந்தனை கல்வியாளர்களால் வரவேற்கப்பட்டது.
பத்தாவது வகுப்பு வரை படித்திருந்தால் மகளிருக்கு திருமணத்தின்போது ரூபாய் 25000 வழங்க மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் மகளிர் திருமணத் திட்டம் மூலம் ஆணையிட்டு, பெண்கள் 10 வது வரையிலுமாவது படிப்பதற்கான பெண்கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது கலைஞர் அரசல்லாமல் யார் அரசாக இருக்க முடியும்?
பள்ளிகளில் தாயுள்ளத்தோடு கற்பிக்கப் பெண் ஆசிரியர்களையே இரண்டாவது வகுப்பு வரை நியமித்த அரசு கலைஞர் தலைமையிலான அரசே.
பள்ளிக்கல்வியை பயனில்லாக் கல்வி ஆக்கிப் பாழ்படுத்தி உயிர்களைக் கொள்ளை வாங்கும் நுழைவுத்தேர்வை அறவே ஒழித்த அரசு கலைஞர் அரசல்லவா? சுயநிதிப்பள்ளிகளில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு ஏழைக்குழந்தைகளின் கல்வியில் கைவைக்கும் போக்கைத்தடுக்க கல்விக்கட்டண நிர்ணயக்குழுவை நியமித்தது கலைஞரின் அரசுதான்!
சமச்சீர்க்கல்வி
எல்லாவற்றிற்கும் மேலாக ஏற்றத் தாழ்வின்றி அனைவருக்கும் சமமான சீரானச் சமச்சீர்க் கல்வி முறைமையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது முத்தமிழ்க் கலைஞர் அரசு!
கல்விக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்பதற்காக முதன் முதலில் உயர்கல்விக்கெனத் தனி அமைச்சகம் தோற்றுவித்த அரசு கலைஞர் அரசுதானே!
ஏழை மகளிரும் படிக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் கிராமங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கிய அரசு கலைஞர் அரசு அல்லவா?
ஈ.வே.ரா.மணியம்மையார் ஏழை மகளிர் இலவசப் படிப்புதவித் திட்டம் மூலமாக மகளிருக்கு முதுகலைப் படிப்பு வரை இலவசக் கல்வி தந்தது கலைஞர் ஆட்சியில்தானே!
பல்கலைக் கழகங்கள் மல்கிப் பெருகக் காரணமாயிருந்த வித்தகன் கலைஞர் என்றால் மிகையில்லை; மணோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சேலம் பெரியார்ப் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக் கழகம், நாட்டிலேயே முதன் முதலாகக் கோவையில் விவசாயப் பல்கலைக் கழகம், திருச்சி, மதுரை கோவை திருநெல்வேலியிலும் அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் இணையப் பல்கலைக் கழகம், திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகம் எனப் பல்கலைக் கழகங்களைத் தொடர்ந்து உருவாக்கிய அரசு கலைஞர் அரசு அல்லவா?
நெல்லையில் சட்டக்கல்லூரி தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், திருவாரூர், தர்மபுரி, சிவக ங்கை பெரம்பலூர் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் மருத்துவக்கல்லூரிகள் என உருவாக்கப்பட்ட காலம் கலைஞர் ஆட்சிக்காலம்தானே?அரசுப் பொறியியல் கல்லூரிகள் ஆங்காங்கே உருவாகக் காரணமாயிருந்தவரும் கலைஞர் பெருமான்தான்!
கல்விக்கண் திறந்தவரும் கல்வி உயிர் தந்தவரும்
கல்விக்கண் திறந்தவர் காமராஜர்தான்; யாராலும் மறுக்கவோ மறைக்கவோஎந்நாளிலும் இயலாது ; கல்விக்கண்ணோடு காது, மூக்கு, வாய் எனக் கல்விக்கு மெய் என்ற உருவம் தந்து அதற்கு உயிரும் கொடுத்துக் கல்வி வளர்ச்சியில் கரை கண்டார் கலைஞர் எனலாம். தொடங்கி வைத்ததை முடக்கி வைக்காமல் கல்வி அனைவருக்கும் சென்று சேர நடக்க வைத்து, ஓட வைத்துக் கலைஞர் நல்லாட்சி செய்ததன் விளைவே 2035 ல் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 50 விழுக்காடு ஆக இருக்க விழையும் இந்திய நாட்டில் தமிழ்நாடு 2020 லேயே எட்டிப்பிடிக்கக் காரணமாயிற்று எனலாம்.
கல்விக்குக் கண் திறந்தார் காமராஜர்; கல்விக்கு உயிர் தந்தார் கலைஞர்.

No comments:
Post a Comment