“இருபால் இளைஞர்களே, நீங்கள் சமூக புரட்சி இயக்கத்தின் பேராயுதங்கள்!” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 31, 2021

“இருபால் இளைஞர்களே, நீங்கள் சமூக புரட்சி இயக்கத்தின் பேராயுதங்கள்!”

காணொலியில் கழகத் தலைவர்

திராவிடர் கழக இளைஞரணி மற்றும் தஞ்சை .பூபதி நினைவு பெரியார் படிப்பகம் சார்பில் மூன்றாம் ஆண்டாக 25 மாணவர்கள்  25 நாள்கள் என்ற வகையில் பெரியாரியல் பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நேற்று (30.5.2021) ஞாயிறன்று முற்பகல் 10:30 மணிக்குக் காணொலி மூலம்  நடைபெற்றது.

மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன் தலைமை வகிக்க, கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநிலக் கழக அமைப்பாளர் இரா.குணசேகரன், தஞ்சை மண்டலக் கழகத் தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்டக் கழக செயலாளர் .அருணகிரி, பெரியாரியல் பயிற்றுநர் பேராசிரியர் சு.இராசேந்திரன், தஞ்சை மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் ரெ.சுப்பிரமணியன், அமைப்பாளர் .விஜயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தஞ்சை மண்டலக் கழக இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்கவுரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் இணைப்புரை வழங்கினார். பெரியாரியல் பயிற்றுநர் பேராசிரியர் முனைவர் .எழிலரசன் அறிமுகவுரையாற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தஞ்சை மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன் நன்றி கூறினார்.

நிறைவுரையை, சிறப்புரையை கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிகழ்த்தினார். பயிற்சி மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கும் விடையளித்தார்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகத் தொய்வில்லாமல் ஆக்கப்பூர்வமாக நடத்தப்பட்ட இந்தப் பெரியார் பயிற்சிப் பட்டறையை நடத்திய கழகப் பொறுப்பாளர்களைக் கழகத் தலைவர் மிகவும் வியந்து பாராட்டினார். குறிப்பாக இதற்குப் பொறுப்பேற்று நடத்திய -  பணியாற்றிய பேராசிரியர் பெருமக்கள் எழிலரசன், இராசேந்திரன் ஆகியோரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று பாராட்டினார் தமிழர் தலைவர்.

கழகத் தலைவர் பாராட்டியதற்கு நியாயமான அத்தனைக் காரணங்களும் உண்டு. பொதுவாக ஒன்றைத் தொடங்கும் போது ஆர்வத்துடன் பலரும் கூடுவார்கள் - ஆர்வக் கரங்கள் நீட்டுவார்கள்; ஆனால், அடுத்தடுத்து தொடர்ந்து தொய்வின்றி இலக்கை நோக்கி சிறப்பாகக் கொண்டு செல்லுவது என்பது நம் சமூக அமைப்பில் அரிதினும் அரிதே!

ஆனால், இவர்களே கடந்த மூன்றாண்டுக் காலமாக ஆக்க ரீதியான இந்த அரும்பணியை, தொடக்கத்தில் எந்த அளவு ஆர்வப் பெருக்கு இருந்ததோ, அதில் துளியளவும் குறையாமல் - இன்னும் சொல்லப்போனால், மேலும் மேலும் மெருகேற்றி, உற்சாகமாக நடத்திச் செல்வது என்பது எளிதான ஒன்றல்ல - இணையிலாச் சாதனை என்பதில் அய்யமில்லை. கூட்டு முயற்சியில் இணைந்து செயல்பட்டால் கழகக் காரியங்களில் வெற்றிக் கொடி விவேகமாகப் பறக்கும் என்பதற்குத் தஞ்சைத் தோழர்களின் இந்த உன்னத செயற்பாடு ஓர் எடுத்துக்காட்டே!

இதனைத்தஞ்சை மாடல்என்ற சொல்லாக்கத்தைத் தமிழர் தலைவர் வழங்கி, தோழர்களை உற்சாகப்படுத்தினார்.

தஞ்சையைப் பின்பற்றி அனைத்து மாவட்டங்களிலும் கழகப் பொறுப்பாளர்கள் (சம்பந்தப்பட்ட பொதுச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், காப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், பகுத்தறிவாளர் கழகத்தினர் மற்றும் ஆசிரியர் அணியினர்) இதற்கான திட்டத்தை உடனடியாகத் தீட்டிவிடுதலையில் வெளியாகும் வண்ணம் ஒரு வாரகால அவகாசத்தில் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கழகத் தலைவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

இதில் கழகத்தின் அனைத்து அணியினரும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அளிக்க வேண்டியது அவசியமும் கட்டாயமும் ஆகும்.

எந்த ஒரு நெருக்கடியான சூழலும் கழகத்தின் பணிக்கு முட்டுக் கட்டையாக இருந்திட அனுமதிக்கக் கூடாது. கருஞ்சட்டைக்காரன் முனைந்தால் மாமலையும் ஒரு கடுகாம் என்ற திடத்தோடு, திண்டோள் தூக்கி எழுவீர்களாக! என்ற உணர்வைத் தஞ்சை நிகழ்ச்சி ஊட்டுகிறது!

கரோனா காலக் கட்டத்திலும் மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளை மத வியாபாரிகள், பக்தி இடைத் தரகர்கள் தங்கு தடையின்றி நடத்திக் கொண்டு இருப்பதை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும் காணொலியில் குறிப்பிட்டது கவனிக்கத்தக்காகும்.

மாட்டு மூத்திரத்தைக் குடி, சாணியை உடம்பு முழுவதும் பூசிக் கொள்!, ராம நாமத்தை ஜெபி, யாகம் நடத்து என்பதெல்லாம் அறிவியலுக்குப் புறம்பானவை மட்டுமல்ல - கரோனா என்னும் உயிர்க் கொல்லி நோய்க்கு மக்கள் எளிதில் பலியாகும் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் படு பாதகமான குற்றச் செயலாகும்.

மக்கள் நல அரசாக இருக்குமானால், இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும்  (51 Ah) கூறும் பகுதியை நாணயமாகக் கடைப்பிடிக்கும் யோக்கியப் பொறுப்புள்ள அரசாக இருந்தால், இவற்றையெல்லாம் தடை செய்திருக்க வேண்டாமா? சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளியிருக்க வேண்டாமா?

உண்மையைச் சொல்லப் போனால் மகத்தான மக்கள் நலத் தொண்டை மன்பதையில் ஆற்றி வரும் இயக்கம் திராவிடர் கழகமே! -  அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பகுதியைச் சிரமேற்கொண்டு கடமையாற்றுவதும் கண்ணியத்துக்குரிய நமது கழகமே!

இதற்காக மத்திய அரசாங்கம் கழகத்தின்பால் மிகுந்த மரியாதையுடன் கூடிய அங்கீகாரத்தையல்லவா கொடுக்க வேண்டும்! அத்தகு மூடநம்பிக்கைகள் எல்லாம் தமிழ் மண்ணில் கட்டுப்பட்டு இருப்பதற்குக் காரணம், நமது திராவிடர் கழகமும், திமுக ஆட்சியுமாகும்.

இப்பொழுது மட்டுமல்ல, 90 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மண்ணில் பகுத்தறிவுப் பிரச்சாரம், பருவ மழையைப் போல் பொய்க்காது பொழிந்து தள்ளியவர் தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமுமே!

இந்த இயக்கத்தின் கருத்துகள் உலகெங்கும் எதிரொலித்தன. இங்கிலாந்தில் ஆர்.பி. (ரேஷனலிஸ்ட் பிரஸ் அசோசியேஷன்) என்னும் அமைப்பு - பகுத்தறிவு வெளியீட்டுக் கழகம் - ‘லிட்டரரி கைட்’ (அறிவு விளக்கம்) என்னும் திங்களிதழை நடத்தி வந்தது. இந்தியாவின்அறிவு இயக்கம்என்னும் தலைப்பில் அந்த இதழ் எழுதியது கவனிக்கத்தக்கதாகும் (1931)

இந்திய வரலாற்றில் வியக்கத்தக்கபடி, சென்ற அய்ந்தாண்டு காலத்தில் ஒரு பெரிய புத்துணர்ச்சி வெள்ளம் இருகரையும் புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

அதாவது, சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் சென்ற அய்ந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டு, மக்களால் நெடுங்காலமாக மரியாதை செய்யப்பட்டு வந்த கருத்துகளுக்கும், நம்பிக்கைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், அடிப்படையிலேயே ஆட்டம் ஏற்படும்படிச் செய்து விட்டது.” என்று  இங்கிலாந்தில் இருந்து வெளிவந்த ஏடு இன்றைக்கு 90 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்ததை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

உலகப் பகுத்தறிவாளர்கள், சிந்தனையாளர்கள், முற்போக்காளர்களின் பெயர் தமிழ்நாட்டில் சூட்டப்பட்டது தொடர்கிறது என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியாரே என்று குறிப்பிட்டவிடுதலைஆசிரியர் அவர்கள் அதற்குப் பல எடுத்துக்காட்டுகளையும் கூறினார். வால்டேர் (லால்குடி மாவட்டக் கழகத் தலைவரின் பெயர்), இங்கர்சால் (பெண்களுக்குக் கூட இந்தப் பெயர் - மறைந்த நமது அருமைத் தோழர், காரைக்குடி பெரியார் பெருங் குடும்பத்தைச் சேர்ந்த பெரியார் சாக்ரட்டீசு அவர்களின் வாழ்விணையர் (ஆசிரியர்) பெயர் இங்கர்சால்), சமதர்மம், பிராட்லா (அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்), ரஸல், பெர்னாட்சா, ரூசோ (நர்த்தனமங்கலம் வி.கே.இராமு என்ற கழகப் பிரச்சாரப் பாடகர், சட்ட எரிப்புப் போராட்ட வீரர் தன் மகன்களுக்குச் சூட்டிய பெயர்கள்), லெனின் (மறைந்த மாயவரம் நடராசன் அவர்களின் மகன் -ஆடிட்டர் லெனின்), ருசியா (குத்தூசி குருசாமி அவர்களின் மகள் டாக்டர் ருசியா), இன்றைய தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின்,   ஸ்டாலின் (மறைந்த கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் பெயரன்), மாஸ்கோ (மறைந்த சுயமரியாதைச் சுடரொளி புகைப்பட நிபுணர் மா.குருசாமி அவர்களின் வாழ்விணையர்) இவையெல்லாம் எடுத்துக்காட்டுக்காக ஒன்றிரண்டு.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே இத்தகு முற்போக்குக் சிந்தனைகளின் வெளிப்பாடான விளைச்சலைக் கண்டதுண்டா?

அதே போல இங்கர்சாலின்கடவுள்’, பெட்ரண்ட் ரசலின்நான் ஏன் கிறிஸ்துவனல்ல’, ஜீன்மெஸ்லியரின் மரண சாசனம், மதம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை (டி கோர்காம்), மதப் புரட்சி (ஜோசப் மெக்கேபி), இங்கர்சால் வாழ்க்கை வரலாறு (ஆர்.இராமநாதன்) இவை போன்ற நூல்களை வெளியிட்ட இயக்கம் எது? பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் வழி இத்தகு நூல்கள் வெளியிடப்பட்டன - பரப்பப்பட்டன.

நான் ஏன் நாத்திகன்?’ என்ற பகத்சிங் நூலை (.ஜீவா மொழிபெயர்ப்பு) வெளியிட்டது நமது இயக்கம்தானே!

அதன் காரணமாக நமது இயக்கம் சோதனைக்கும், தண்டனைக்கும் உட்படுத்தப்பட்டது குறித்தும் கழகத் தலைவர் விளக்கினார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய பகுத்தறிவு சமதர்மவாதிகள் வெள்ளைய அரசால் தூக்கிலிடப்பட்ட போது (1931 மார்ச்சு 23) ‘குடிஅரசுஇதழில் தந்தை பெரியார் தீட்டியது என்ன?

இந்தியாவிற்குப் பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். அதுவே உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையுமாகும். நாம் பகத்சிங்கை உண்மையான மனிதர் என்று சொல்லுவோம். சாதாரணத்தில் வேறு எவரும் அடைய முடியாத பெரும் பேறு என்று கூறி பகத்சிங்கை மனமார வாயார, கையாரப் பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்!!” என்றுகுடிஅரசுதலையங்கத்தில் குறிப்பிட்டார் தந்தைபெரியார்.

(அதே நேரத்தில் பகத்சிங் உயிரை மீட்பதற்காக காந்தியார் எந்த ஒரு சிறு முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் இந்த இடத்தில் நோக்கத்தக்கது)

1935 டிசம்பர் 12 அன்று பஞ்சாப் லாகூரில் நடைபெறவிருந்த  ஜாத்பட் தோடக் மாநாட்டுத் தலைமையுரையை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் மாநாட்டுக் குழுவினருக்கு எழுதி அனுப்பியிருந்தார்.

அந்த உரை இந்து மதத்திற்கு எதிராக பலக் கருத்துகளைக் கொண்டிருந்ததால், அதில் திருத்தம் கோரினர் மாநாட்டுக் குழுவினர். அண்ணல் அம்பேத்கர் அத்தகைய சமரசத்திற்கு உடன்படவில்லை. இதனை அறிந்த தந்தை பெரியார் அவர்கள் அந்த உரையை அண்ணல் அம்பேத்கர் அவர்களிடமிருந்து பெற்று முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். அந்தநூல்தான்ஜாதியை ஒழிக்கும் வழிஎன்பதாகும். பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.

தந்தை பெரியாரின் போராட்டப் புரட்சிகர வரலாற்றையும், இயக்கத்தின் கடந்த காலப் போராட்டங்களையும் இந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற இளைஞர்களாகிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டவை சிறிதே. மேலும் இதனை நீங்கள் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். நமது இயக்க வெளியீடுகளைப் படிக்க வேண்டும்.

நாங்கள் எல்லாம் மாணவர் பருவத்தில் உங்களைப் போலவே, ஈராட்டில் கோடை விடுமுறையில் தந்தை பெரியார் நடத்திய பயிற்சிப் பட்டறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்தாம்.

எங்களைப் பட்டைத் தீட்டியவர்கள் எங்கள் ஆசிரியர்களே. எனது ஆசிரியர் .திராவிடமணி, உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் (சுயமரியாதைக் கொள்கையைப் பரப்பியதால் கொலை செய்யப்பட்டவர்), தமிழ் மறவர் பொன்னம்பலனார், புலவர் .மு.மாணிக்கம், பேராசிரியர் சி.வெள்ளையன், பெரியார் பேருரையாளர்கள் .இராமநாதன், மா.நன்னன், இறையன் மற்றும் முருகு சடாட்சரம் (மணப்பாறை), திருச்செந்தூர் ஆழ்வார், குற்றாலம் நீலகண்டன், ஈரோடு .காளிமுத்து, நம்.சீனிவாசன், நாச்சிமுத்து (பழனி), மு.நீ.சிவராசன் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

இங்கு எனக்கோர் மகிழ்ச்சி. மாணவர்களைவிட மாணவிகள் மூன்றில் இரண்டு பங்கு என்கிற அளவுக்குக் கலந்து கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

தஞ்சை வழி காட்டுகிறது, மற்ற மற்ற மாவட்டங்களிலும் தொடர வேண்டும் - கழகப் பொறுப்பாளர்கள் முயற்சி எடுத்துச் செய்ய வேண்டும்.

இருபால் மாணவர்களைத் தேர்வு செய்து இணைக்க வேண்டும் - பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் இவை எல்லாம் நடந்து முடிய வேண்டும் என்று கூறினார் கழகத் தலைவர்.

இருபால் மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கும் விரிவாக விடையளித்தார்.


No comments:

Post a Comment