கரோனா ஒழிப்பில் 24 நாள்களில் முதலமைச்சரின் 24 மணிநேரமும் உழைப்பு! எதிர்க்கட்சிக்காரர்களே மவுனமாகிவிட்ட நிலையில், - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 31, 2021

கரோனா ஒழிப்பில் 24 நாள்களில் முதலமைச்சரின் 24 மணிநேரமும் உழைப்பு! எதிர்க்கட்சிக்காரர்களே மவுனமாகிவிட்ட நிலையில்,

 கோவை காமாலைக் கண் காவிகளின் தோல்வி எரிச்சலால்

முதலமைச்சரைதிரும்பிப் போ!' என்பதா? விட்டில் பூச்சிகள் விரட்டப்படுவர்!

ஆட்சிப் பொறுப்பு ஏற்று 24 நாள்களில் தமிழக தி.மு.. அரசு முதலமைச்சர் முதல் அரசு இயந்திரங் கள்வரை 24 மணிநேரமும் அதிவேகமாகச் சுழலும் நிலையில், தேர்தலில் படுதோல்வி அடைந்த காவிகள் - கோவைக் காவிகள் - முதலமைச்சரைத்திரும்பிப் போ!'  என்று சொல்வதா? மனசாட்சி என்று ஒன்றுதான் இருக்கிறதா? இந்த அரசியல் விட்டில் பூச்சிகளை மக்களே விரட்டுவார்கள் - திராவிடம் வெல்லும் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தி.மு.. வெற்றி பெற்று முதலமைச்சராக மு..ஸ்டாலின் அவர்களும் (மே 7 ஆம் தேதி), அவரது அமைச்சரவையினரும் பதவியேற்று  மூன்று வாரங்களே முடிந்துள்ள நிலையில்,

கரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலையின் வேக வீச்சால், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் முதல் வரிசையில் உள்ள மாநிலம் என்ற நிலையை உணர்ந்து, பதவியேற்கும் முன்பிருந்தே முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் தனது கரோனா ஒழிப்புக்கான பணிகளைத் தீவிரமாக போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டார்!

அயராத கடமை உணர்வோடு...

ஓய்வறியாது தனது அரசு இயந்திரத்தை அதி வேகமாக சுழலவிட்டு, நோயாளிகளைக் காப்பாற்றிட - படுக்கை பற்றாக்குறைகள், ஆக்சிஜன் என்ற உயிர்க் காற்றுப் போதாமை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து கள் கிடைப்பதில் தட்டுப்பாடு - இவற்றையெல்லாம் சரிப்படுத்த போர் அறை (War Room) ஏற்பாடு செய்த தோடு, அங்கும்கூடஅகால நேரத்தில்கூட' அயராத கடமை உணர்வோடு சென்று ஆய்வு செய்து நேரிடை யாக குறை தீர்த்த செய்தி ஏடுகளில் வந்தன; குறை சொன்னவர்களும் முதலமைச்சரைப் பாராட்டி செய்தி வெளியிட்டனர்!

கட்சி வேறுபாடு,அரசியல் மாச்சரியங்களுக்கு இடம்தராது...

தனது அமைச்சரவையினரை ஒவ்வொரு மாவட் டத்திலும் நோய் தொற்றுத் தடுப்பு, சிகிச்சை, நிவாரணம் ஆகியவை சரிவர கிடைக்க கண்காணிப்பாளர்களை அனுப்பியும், கட்சி வேறுபாடு, அரசியல் மாச்சரியங் களுக்கு இடம்தராது - ஒரே குறி - கரோனாவை விரட்டுதல் என்பதுதான் - என்பதற்காக அனைத்துக் கட்சிக் குழு, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை, அறிவுரை - வணிகர்கள், அதிகாரிகளுடன் கலந்து, தளர்வுடன் கூடிய ஊரடங்கு - அது சரிவர பலனளிக்கத் தவறிய நிலையில், தளர்வற்ற ஊரடங்கு - இக்கால கட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு  கரோனா நிவாரணத் தொகை - குடும்பத்திற்கு 2000 ரூபாய் - இரண்டு தவணைகளில் (மொத்தம் ரூ.4,000), குடும்பத்த வர்களுக்கு இலவச பல சரக்கு சாமான்கள் அன்பளிப்பு, மருத்துவமனையில் நோயாளிகளின் பசி தீர்க்க அன்ன தான திட்டம், அம்மா உணவகம்மூலம் பசிப் பிணி போக்கும் - மக்களைக் காக்கும் மகத்தான பணி - மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை, உயிரைத் துச்சமெனக் கருதி உழைக்கும் களப் பணியாற்றிடும் மருத்துவர், செவிலியர், உதவி யாளர்கள், களப் பணியாற்றும் ஊடகப் பணித் தோழர்கள் எல்லோருக்கும் ஊக்கத் தொகை அறிவிப்பு,

24 நாள்களில் 24 மணிநேர உழைப்புடன்...

ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க செறிவூட்டி களை ஏராளம் பெற்று, படுக்கைகளுடன் இணைந்த புதிய ஏற்பாடு, ஆக்சிஜன் குழாய்களை சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலிருந்து அவசரமாக வரவழைத்தல், மத்திய கூட்டரசிடம் - பிரதமர் முதல் மத்திய அமைச் சர்களிடம் தொலைபேசியில் பேசியும், கடிதம்மூலமும் கூடுதலாக ஆக்சிஜன், தடுப்பூசிகள் பெற்று தடுப்பூசி போடும் திட்டத்தை நாளும் பெருக்குதல், கூடுதலாக ஆக்சிஜன்களைத் தயாரிக்கத் திருச்சிபெல்' தொழிற் சாலை, செங்கற்பட்டில் 6 ஆண்டுகளாக பெரிய முதலீடு செய்து  இயங்காத மத்திய அரசின் தொழிற்சாலையை குத்தகைக்குத் தர வேண்டுகோள், தென்மாவட்டங்களில் மதுரை வரையில் சென்று  ஆய்வு - மேற்கு மாவட்டங் களில் தொற்றுப் பரவல் அதிகம் உள்ள பகுதியில் இரண்டு முறை நேரில் ஆய்வு; இதற்கிடையில் தூத் துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை நியமனங்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானவர்களுக்கு இழப்பீடு, ஆறுதல் தொகை அளித்தல், கூடுதலாக 2000-த்துக்கும் மேல் மருத்து வர்களும், செவிலியர்களும் நியமனம் செய்யும் ஆணை பிறப்பித்து, மருத்துவ அடிக்கட்டுமானத் தேவைகளை பலப்படுத்திட ஏற்பாடுகள், தடுப்பூசிகளை வெளிநாடு களிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்ய பன்னாட்டு ஒப்பந்தம் கோரி, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக முனைப்பு, கோவையில் கரோனா தொற்று நோயாளி களுக்குத் தன்னலம் கருதாது ஆறுதல் அளிக்க கவச உடையுடன் சென்று நேரில் ஆறுதல் - இவ்வளவு பணிகள் - அப்பப்பா.... வியக்கத்தக்க அதிர்ச்சி தரும் அடுக்கடுக்காக மூச்சுவிட முடியாத இடைவெளியில்  நிகழ்த்திடும் அவருடன் உழைக்கும் அரசு இயந்திரமே வேகத்தில் திணறும் நிலை -  செயல்பாட்டின் புயலாக மாறி, புதுவகை ஆட்சி செய்கிறார் - 24 நாள்களில் 24 மணிநேர உழைப்புடன்!

கோவை காவிகளின் காமாலைக் கண்கள்

எவரையும் குறை கூறாது, இன்னா செய்தாரை நாண வைக்கும் வகையிலே அவர்களுக்கும் நல்லதை அளித்து, ஒப்பாரிலாத ஓய்வு அறியா முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் - பொதுவானவர்களின் மதிப்பீடு இது! எதிர்த்தவர்கள் பலர் மவுனமாகிவிட்ட நிலையில், கோவை காவிகளின் காமாலைக் கண்களுக்கு மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்மீது காழ்ப்புணர்வு - அது வேறு ஒன்றுமில்லை - தங்களது அடிமை ஆட்சி இல்லையே - சாதனைகளில் தங்களை அலற வைக்கும் ஆட்சி அல்லும் பகலும் ராக்கெட் வேகத்தில் நடைபெறுகிறதே - என்ன செய்தாலும் தம்மால் இனித் தலைதூக்க முடியாது என்பதால், சலசலப்புக் காட்டுகின்றனர்போலும்!

அவர் அதைப் பொருட்படுத்தாது - தனது கடமை யையே கண்ணாகக் கருதி உழைத்துக் கொண்டுள்ளார்!

எதிர்க்கும் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், இப்படி திரும்பிப் போகச் சொல்வீர்களா? அவர் தனி விமானத்தில் பறந்து வந்ததே உங்களைக் காப்பாற்ற அல்லவா? அதுகூட இந்த மூட மதி யாளர்களுக்குப் புரியாமல், இதன் எதிரொலி - அரசியல் கண்ணோட்டம்தான்! அரசாங்க நடவடிக்கைகளைத் தரக்குறைவாக விமர்சிக்கும் காவிகளுக்கு, அதன் நிரந்தர அடிமைகளான சில ‘‘மாஜி''களும் உளறுவாயர் களாக மாறி, உங்களையும் தாழ்த்திக் கொள்ளாதீர்!

உங்கள் கட்சியை அறவே துடைத்தெறிய தமிழ்நாட்டு திராவிட வீரர்களை வற்புறுத்துவீர்களானால், அதன் விளைவுபூமராங்' ஆக மாறுவது உறுதி!

விளைவறியாது விளையாடாதீர்கள், எச்சரிக்கை!

‘‘கண்ணாடி வீட்டிலிருந்து கற்கோட்டைமீது கல்லெறி யும்'' கயமைத்தனத்தை விட்டுவிடுங்கள்.

திராவிடம் அதன் அறிவாயுதம்மூலம், பிரச்சாரக் களத்தின்மூலம் - இந்த சலசலப்புவிட்டில் பூச்சிகளை' விரட்டுவார்கள்!

விளக்கை நோக்கும் விட்டில்களே, விளைவறியாது விளையாடாதீர்கள்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

31.5.2021           

No comments:

Post a Comment