காணொலியில் கழகத் தலைவர்: “அறிவை விரிவு செய் - அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு வையத்தை!”- புரட்சிக் கவிஞர்

கவிஞர் கலி.பூங்குன்றன்

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், மும்பை இலெமுரியா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழாவை இம்மாதம் (ஏப்ரல்) 20 தொடங்கி அவரின் பிறந்தநாளான நேற்று வரை (29.4.2021) 10 நாட்கள் ஒவ்வொரு நாளும் மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை காணொலி மூலம் கருத்தரங்கை நடத்தி வந்தனர். நிறைவுநாளான நேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

மும்பை குமணராசன் தலைமை வகித்தார். கவிஞர் கீதா வரவேற்புரையாற்றினார். கருநாடக மாநில திராவிடர் கழகச் செயலாளர் முல்லைக்கோ நன்றி கூறினார்.

நிறைவுரையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதாவது:

கவிச் சக்கரவர்த்திகளும், மகா கவிகளும் நாட்டில் உருவாகலாம் - வரலாம்; ஆனால் புரட்சிக் கவிஞர் என்பவர் ஒரே ஒருவர் தான்- அவர்தான் பாரதிதாசன்.

நான் விடுக்கும் வேண்டுகோள் பாவேந்தர் என்று குறிப்பிடுவதை விட புரட்சிக் கவிஞர் என்று கூறுவதை ஒரு முக்கிய கருத்தாகக் கொள்ள வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன்.

நான் பேருரையாற்றப் போவதாகக் குறிப்பிட்டார்கள். நான் அப்படிக் கருதவில்லை. மாறாக புரட்சிக் கவிஞர் பற்றிப் பேசக் கிடைத்த பேறு ஆகிய உரையை நிகழ்த்துகிறேன்.

பெரியார் என்ற பேராயுதம் - போராயுதப் பகுத்தறிவுக் கிடங்கில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் தான் அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் போன்ற பெருமக்கள்.

புரட்சிக் கவிஞரைப் பற்றி பலர் வாசிக்கிறார்கள். சிலர் நேசிக்கிறார்கள். சிலர் சுவாசிக்கின்றார்கள்.

எங்களைப் போன்றவர்கள் புரட்சிக் கவிஞரைப் பார்த்தோம் - பழகினோம் - ஒன்றாக இருந்தோம் - பயணம் செய்தோம்.

இளைஞனாக இருந்த காலக் கட்டத்திலேயே எனக்கு அந்தப் பேறு கிடைத்தது. சிம்மமாக அவர் கர்ச்சிக்கும் உரையைப் பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.

எப்பொழுதுமே பெரியார் கொள்கையில், சுயமரியாதைக் கொள்கையில்,  பகுத்தறிவுக் கொள்கையில் அவரிடத்தில் சமரசம் காண முடியவே முடியாது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த தோழர் குமணராசன் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கூறினார்.

(கொல்கத்தாவில் தேசிய கவி பாரதியாருக்குச் சிலை நிறுவிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல் அமைச்சர் ஜோதிபாசு அவர்களை நேரில் சந்தித்து அங்கேயுள்ள தமிழ் அமைப்புகள் மனு ஒன்றினைக் கொடுத்தனர். அதைப் படித்து பார்த்த முதல் அமைச்சர் ஜோதி பாசு சீறி எழுந்தார். யார் தேசியக் கவி? இந்தியாவில் உள்ள ஒரே ஒரு தேசியக் கவி - இரவீந்திரநாத் தாகூர் தான் என்று கூறியதாக தோழர் குமணராசன் தன் தலைமை உரையில் குறிப்பிட்டு இருந்தார்)

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாநிலப் பற்று மிக்கவர்கள். மொழிப் பற்று மிகுந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டில்  அந்த உணர்வைக் காண முடிகிறதா?

வங்கமொழியில் எழுதப்பட்ட தாகூரின்கீதாஞ்சலிநூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால் அந்நூலுக்குநோபல் பரிசுகிடைத்தது. புரட்சிக்கவிஞரின் படைப்புகளை நாமும் ஆங்கிலத்திலோ, பிரெஞ்சு மொழியிலோ மொழி பெயர்த்து அனுப்பி இருந்தால், கண்டிப்பாக புரட்சிக் கவிஞருக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கும். இதை நாம் செய்யத் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

அதே போல தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ந்திருந்தாலும் உலகம் முழுவதும் சென்று அடைந்திருக்கும் அந்தப் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம். எல்லாவற்றையும் கடந்து தந்தை பெரியார் இன்று உலகளவில் பேசப்பட்டு வருகிறார்.

இன்றைக்கு நிலை என்ன? புரட்சிக்கவிஞர் என்று சொன்னாலே நடுங்குகிறார்கள். தந்தை பெரியார் சிலையைக் கண்டே அஞ்சுகிறார்கள்.

வேறு வழியில்லாமல் புகழ்வது போலவே இகழ்கிறார்கள்.

பாரதி என்றால் தேசிய கவி, பாரதிதாசன் குறுகிய பார்வை கொண்டவர் என்பார்கள்.

திரிபுவாதம் செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள்; காலப் பிழையோடு கருத்துகளை வெளியிடுவார்கள்.

1909 முதல் 1918 வரை பாரதியாரின் உறவில் இருந்தார். அந்தத் தாக்கம் அவரிடம் இருந்தது. அடுத்த பத்தாண்டுகள் அவருடைய போக்கு பழைய பழக்கங்களின் அடிப்படையில் பாடல்களைப் பாடி வந்தார். மயிலம் சுப்பிரமணியன் பற்றி பாடி இருந்தார்.

1928 முதல் தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை ஏற்றுக் கொண்டு - சிந்தனையில் மறுமலர்ச்சி பெற்று  கவிதைகளை எழுதத் தொடங்கினார். கடைசி வரை அதில் தொய்வு இல்லை, மாற்றமில்லை; அவர் புரட்சிக் கவிஞர் ஆனது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை ஏற்ற நிலையில் தான்.

மயிலம் சுப்பிரமணிய துதி பாடியவர் பாரதிதாசன் என்று காலத்தை மாற்றிக் கூறினால், எழுதினால், வருங்காலத்தில் வருபவர்கள் என்ன நினைப்பார்கள்? பாரதிதாசன் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று தானே கருதுவார்கள்.

பேராசிரியர் ..ஞானசம்பந்தன் போன்றவர்களே பாரதிதாசனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று சொல்ல ஆரம்பிக்கவில்லையா?

அதனைத் தொடர்ந்து முருகு சுந்தரம் போன்றவர்கள் எழுதவில்லையா? காரைக்குடி பாவலர்பழம் நீஅவர்கள் எடுத்துக் காட்டுடன் மறுப்புக் கூறி எழுதியுள்ளார்.

புரட்சிக் கவிஞர் அவர்கள் சென்னை பொது மருத்துவமனையில் இருந்த போது, திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், வடபழனி முருகன் கோயிலில் இருந்து திருநீற்றைக் கொண்டு வந்து ஒருவர் அவர் நெற்றியில் பூசி விட்டார். அந்த நிலையிலும் கூடஎன்ன இதுஎன்று கூறி உடனே அழித்து விட்டார்.

கடவுள் இல்லை என்பான் யாரடா?’ 'தில்லை கண்டு பாரடா!' என்று தண்டபாணி தேசிகர் பாடிய போதுஇல்லை என்பேன் நானடா, அத்தில்லை கண்டு தானடாஎன்று பதிலடி கொடுத்து எழுதினார் நமது புரட்சிக் கவிஞர்.

தந்தை பெரியார் கருத்தானாலும், புரட்சிக் கவிஞர் படைப்பானாலும் திரிபுவாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது.

புரட்சிக் கவிஞரைப் பற்றி முழு அளவில் சுவையும் பொருளும் மாறாமல் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவற்றை ஒருவரிடம்தான் பெற முடியும். அவர்தான் கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும், காரைக்குடி, தமிழ்க் கல்லூரியிலும் முதல்வராக இருந்து ஓய்வுக்குப்பின் சென்னையில், பெரியார் திடலில் எங்களோடு தங்கி இருந்து - பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியை நடத்தி வந்த பெரும் புலவர் .இராமநாதன்தான் அவர்.

இராவணனைப் பற்றிப் பாடிய புரட்சிக் கவிஞர்,

அய்யிரண்டு திசை முகத்தும்

தன் புகழை வைத்தோன்என்று பாடியிருக்கிறார்.

திசைகள் எட்டுதானே - அய்யிரண்டு திசை முகத்தும் என்றால் பத்து திசை ஆகிறதே - அது எப்படி என்று புலவர் இராமநாதன் அவர்களைக் கேட்டேன். “பத்து திசை என்பது பத்து துறைகளை, பண்புகளைச் சார்ந்தது. எட்டு திசைகளோடு மேல் கீழ் என்ற இரு திசைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்என்று விளக்கம் கொடுத்தார்.

புரட்சிக்கவிஞர் அவர்களைப் பொறுத்தவரை தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை, கொள்கைகளை இலக்கியத்தேனில் குழைத்துக் கொடுத்தவர்.

அவரைப் போய் குறுகிய பார்வை உள்ளவர் என்று சொல்கிறார்களே, அவர்கள்தான் குறுகிய புத்தி கொண்டவர்கள்.

பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம் - உலகம் என்பது தந்தை பெரியாரின் கோட்பாடு.

இனிவரும் உலகத்தைப் பற்றி எல்லாம் பேசியவர் தந்தை பெரியார். அதே போல புரட்சிக் கவிஞர் உலக மானுடத்தை நோக்கினார்,  பாடினார்.

அறிவை விரிவு செய்

அகண்டமாக்கு

விசாலப் பார்வையால்

விழுங்கு இந்த வையத்தைஎன்று பாடியவர் புரட்சிக்கவிஞர்.

உலகப்பன் பாட்டு ஒன்று போதாதா?

ஓடப்பராயிருக்கும்

ஏழையப்பர்

உதையப்பர் ஆகி விட்டால்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆகி விடுவார்

உணரப்பா நீ

என்று உலகப்பனைப் பார்த்து விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கியவர் புரட்சிக் கவிஞர்.

இன்று கரோனா காலத்தில் ஒரு நாட்டில் பாதிப்பு ஏற்படும் நிலையில் இன்னொரு நாடு உதவிக்கரம் நீட்டுவதைப் பார்க்க முடிகிறது.

புரட்சிக்கவிஞர் பாடுகிறார்,

இமய மலைச்சாரலில் ஒருவன் இருமினால்

குமரிச்சாரலில் வாழ்பவன்

மருந்து கொண்டு வருவான்என்று எழுதினார் புரட்சிக் கவிஞர்.

திருமணம் கிரிமினல் குற்றம் என்றார் - அப்படியொரு காலம் வரும் என்று கூறியவர் தந்தை பெரியார். அதனைக் கவிதையாகத் தந்தவரும் புரட்சிக்கவிஞரே!

ஒருத்திக்கும் ஒருவனுக்கும்

திருமணம் எனும் உடன்பாடு

ஒழிதல் வேண்டும்,

தெரிந்தவர்கள் கூடி அன்புப் புரிவதால்

தோன்று மக்கள்

பொதுமக்கள் ஆதல் வேண்டும்என்று பாடியதுண்டே!

இந்தியாவில் கர்ப்பத் தடையைப்பற்றிப் பேசிய முதல் தலைவர் தந்தை பெரியார். ‘கர்ப்ப ஆட்சிஎனும் நூலையே வெளியிட்டார்.

தந்தை பெரியாரின் அந்தக் கருத்தை அழகிய வரிகளால் சித்திரமாய்த் தீட்டினார் புரட்சிக் கவிஞர்.

காதலுக்கு வழி வைத்துக்

கருப்பாதை சாத்தக்

கதவொன்று கண்டறிவோம்

இதிலென்ன குற்றம்?’

என்று பாடினாரே - இப்படி குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பாடிய இன்னொரு கவிஞனைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

பெண்ணுரிமை பற்றி தந்தை பெரியார் கூறிய புரட்சிக் கருத்துகளைத் தாண்டிச் சொன்னவர்கள் யார்? அந்தக் கருத்துகளை எல்லாம் உள்வாங்கி புரட்சிக்கவிஞர் காவியம் படைத்திருக்கிறார்.

தொட்டிலை ஆட்டும் கை

தொல்லுலகை ஆளும் கைஎன்றார்

பெண்ணடிமை தீருமட்டும்

பேசு திருநாட்டில்

மண்ணடிமை தீருவது

முயற்கொம்பேஎன்றார்

மண்ணுக்கும் கேடாய்

மதித்தீரா பெண்ணினத்தை

என்று கேள்வி எழுப்பியவர் புரட்சிக்கவிஞர்

இனிவரும் உலகில் எத்தனை விஞ்ஞான மாற்றங்கள் வரும் என்பது குறித்து தந்தை பெரியார் கூறினார் என்றால் புரட்சிக் கவிஞரும் தொலைநோக்கோடு அறியவில் குறித்தெல்லாம் பாடல் எழுதியுள்ளார்.

நிலவில் பெண்ணொருத்தி இறங்குவாள் என்றார். வானொலியின் செயல்பாடுகள் குறித்து எல்லாம் கவி பாடியிருக்கிறார்.

தமிழைப் பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் பாடினார் என்றால் அவை எப்படி குறுகிய பார்வையாகும்?

நீ யார், எங்கே இருக்கிறாய் என்ற அடையாளம் முதலில் வேண்டாமா? என்னை யார் என்று ஒருவர் கேட்டால் என் பெயர் வீரமணி, நான் வசிப்பது சென்னை அடையாறு    என்று சொன்னால் அது குறுகிய கருத்தா?

தமிழ் என்பதும், தமிழர் என்பதும், திராவிடம் என்பதும் நமது அடையாளங்கள். இவற்றுக்கு ஓர் ஊறு என்றால் கிளர்ந்தெழச் செய்வது, சொல்லுவது குறுகிய பார்வையா? அப்படி விமர்சிப்பவர்களுக்கு ஓர் உள்நோக்கம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

உண்மையைச் சொல்லப் போனால் அப்படி சொல்லு பவர்களின் உள்ளத்தில்தான் இக்குறுகிய பார்வை இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது!

புரட்சிக்கவிஞர் என்றும் வாழ்வார் - மருந்துகள் எப்பொழுதும் தேவை! மருந்தைக் கண்டுபிடித்தவர்கள் எப்பொழுதும் வாழ்வார்கள்என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.

காணொலியில் தமிழ்நாடு, பிற மாநிலங்கள், பிறநாடு களிலிருந்து 220க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நான் ஒரு நிலையான நாத்திகன்!”

31.12.1933 சென்னை ஒயிட்ஸ் மண்டபத்தில் .சிங்கார வேலர் நடத்திய நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வருகைப் பதிவேட்டில்நான் ஒரு நிலையான நாத்திகன்என்று எழுதி கையொப்பமிட்டார்.

Comments