தளபதி மு.க.ஸ்டாலின் பேச்சு எதிரொலி - பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது சோனியா உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு

புதுடில்லி,ஏப்.1- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா நேற்று (31.3.2021) கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், அரசமைப்புச் சட்டத்தின்மீதும் பாஜக பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அல்லாத கட்சிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதுடன், ஜன நாயகக் கடமைகளை ஆற்ற விடாமலும் அவை தடுக்கப்படுகின்றன. சிபிஅய், அமலாக்கத்துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் எதிர்க் கட்சிகள் மிரட்டப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்படவிடாமல் பாஜக தலைமையிலான மத்திய அரசு தடுக்கிறது. ஒரே கட்சியின் ஆட்சிதான் இந்தியாவில் இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது.

இது, ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். பாஜக அல்லாத மாநில அரசுகளை கவிழ்ப்ப தற்காக சட்டமன்ற உறுப்பினர் களை பணம் கொடுத்து வாங்குவது; தேசிய சொத்துகளை தனியார்மயமாக்குவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

இதுபோன்று இந்தியாவின் ஜனநாய கத்தின்மீதும், அரசமைப்புச் சட்டத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வரும் பாஜகவுக்கு எதிராக ஒத்தக் கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளுவதற்கான தருணம் வந்துவிட்டதாக நம்புகிறேன். பாஜவுக்கு எதிரான இந்தப் போரில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் மம்தா கூறியுள்ளார்.

Comments