விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக "அரசியல்சாசன ஒழுங்கமைவுக் குழு"வின் திறந்த கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 18, 2020

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக "அரசியல்சாசன ஒழுங்கமைவுக் குழு"வின் திறந்த கடிதம்

இந்திய ஆட்சிப் பணித்துறை என்றழைக்கப் படும், அய்..எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்., அய்.எப்.எஸ்., உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்னாள் அதிகாரிகள் கூட்டமைப்பான "அரசியல் சாசன ஒழுங்கமைவுக் குழு"வின், 78 பேர் கையெ ழுத்திட்டு அரசுக்கு ஒரு திறந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்கள், நாடு முழுவதும் பல்வேறு அமைப் புகளும், சங்கங்களும் விவசாயிகளின் போராட்டத் துக்கு ஆதரவாகத் திரளும் சூழலில் இந்தக் கடிதம் வெளியாகி இருக்கிறது. கடிதத்தின் தமிழாக்கம்:

"விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக "அரசியல்சாசன ஒழுங்கமைவுக் குழு"வின் திறந்த கடிதம்."

நாங்கள் மத்திய, மாநில அரசுகளின் வெவ்வேறு பணிகளில் இருந்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரிகளின் குழுவாக இயங்குகி றோம், நாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியின் சார் பாகவும் இயங்கவில்லை, நடுநிலையோடும், பக்கச் சார்புகள் இன்றியும் இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம்.

இந்தியாவில் ஒரு பெருந்திரளான விவசாயி களின் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருப் பதை நாம் அறிவோம், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் தொடர்ந்து சில மாதங்களாக நடந்து வருகிறது.

பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து துவங்கிய இந்தப் போராட் டத்துக்குப் பல்வேறு அமைப்புகள் ஆதரவளிக் கின்றன, தொழிலாளர் சங்கங்கள், மாணவர் அமைப் புகள், பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் என்று பல்வேறு அமைப் புகள் இந்தப் போராட்டத்தை ஆதரிக் கின்றன.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி, விவசாயிகள் கூட்டமைப்புகளுக்கும், இந்திய அரசுக்கும் இடையி லான பல கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந் ததைத் தொடர்ந்து நாடுதழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாங்கள் இந்த மூன்று சட்டங்களில் இருக்கும் நன்மை தீமைகளை பற்றிப் பேச விரும்பவில்லை, மாறாக அரசியல் சாசனத்துக்கு எதிரான மத்திய அரசின் போக்கையும், ஜனநாயக விதி மீறல்களையும் குறித்து அதிகம் கவலை கொள்கிறோம்.

இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும், இந்திய அரசமைப்பு வழங்கும் வெவ்வேறு மாநில உரிமைகள் வழியாகப் பார்க்கிற போது, "விவசாயம்" என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழா வது அட்டவணையில், இரண்டாவது பட்டியலில், 14 ஆவது இடத்தில் வருகிறது. இந்தப் பட்டியலில் இடம் பெறுகிற பொருள் அனைத்தும் குறிப்பிட்ட மாநிலங்களின் சட்ட எல்லைகளுக்குள் வருபவை, ஆகவே இப்போது மத்திய அரசால் நிறைவேற்றப் பட்டிருக்கும் மூன்று சட்டங்களும் அரசியல் சாசன அமைப்புக்கு எதிரானவை.

அரசியல் சாசனத்துக்கு எதிரானது மட்டுமில்லா மல், இந்தியக் அரசியல் சாசனம் முன்வைக்கிற கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைக்கிற வகையிலானவை. இந்த சட்டங்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகின்றன என்று சில சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்த மூன்று சட்டங்களும், சட்டத்தை ஏமாற்றுகிற வகையில் நிறைவேறி இருக்கிறது, நீதிமன்றங்களில் இந்த சட்டங்களைக் கேள்விக்குள்ளாக்க முடியும்.   

இந்த சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன் னதாக விவசாயிகளின் பிரதிநிதிகள் கலந்தாலோசிக் கப்படவில்லை, நாடாளுமன்றம் சரிவர இயங்காத நிலையில் ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் இந்தச் சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டது, செப் டம்பர் 2020 இல் நாடாளுமன்றத்தில் இந்த மசோ தாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இந்த மசோதாக்கள் அனுப்பப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

முன்னதாக அதே செப்டம்பர் 2020 இல் செய்தித் தாளில் வெளியான ஒரு அறிக்கை, அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றைத் தருகிறது, முதலாவது அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் (14 ஆவது மக்களவை) ஆட்சியில் அரசால் முன்மொழியப்பட்ட சட்ட முன்வரைவுகளில் 60 %, நாடாளுமன்ற தேர்வுக் குழு வுக்கு அனுப்பப்பட்டன, அடுத்து வந்த இரண்டாவது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்த சதவிகிதம் உயர்ந்த பட்சமாக 71 % ஆக அதிகரித்தது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (16ஆவது மக்களவையில்) இந்த விழுக்காடு 25% ஆக சரிந்தது. இப்போது நடைபெற்றுக் கொண்டி ருக்கிற ஆட்சியில் மிக அரிதாகவே சட்ட முன் வரைவுகள்    நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப் பப்படுகிற அவலம் நிகழ்கிறது.

விவாதிக்கப்படுவதற்கு கால அவகாசம் கொடுக் கப்படாமல் இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கடந்தன, மக்களவையில் இதற்காக வைக்கப்பட்ட கோரிக்கைகள் மறுக்கப் பட்டுப் பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையில் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது, அரசின் இந்த நடவடிக்கைகள் பெரும் சந்தேகத்தைத் தோற்று வித்தன. அதே வேளையில், சில தொழிலாளர் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன, எதிர்க்கட்சிகள் இந்த சட்டங்களை எதிர்த்து வெளிநடப்பு செய்தன. பெருந்தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கிற காரணத்தால் திட்டமிட்ட போராட்டங்களை யாரும் நடத்தவியலாது என்பதை வாய்ப்பாகப் பயன்படுத்தியே இத்தகைய நடவடிக் கைகளில் அரசு ஈடுபடுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் இத்தகைய பல்வேறு நடவடிக்கைகள் இந்த அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, காஷ்மீ ருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கும் வகையில் ஆர்ட்டிக்கிள் 370 நீக்கப்பட்டது, எந்த முன்னறிவிப் பும், தயாரிப்பும் இல்லாத நிலையில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, குடிமக்கள் பதி வேட்டுத் திருத்த நடவடிக்கை போன்றவற்றால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பெருந் தொற்றுக் காலத்தில் முன்னறிவிப்பின்றி செய்யப் பட்ட முழு அடைப்பு காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொல்லொணாத துயரங்களை சந்தித்தார்கள்.

பொதுமக்களைக் கலந்தாலோசிக்காமல், தொடர் புடையவர்களோடு எந்த விதமான பேச்சுவார்த்தை முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் மேற்கண்ட அனைத்தும் அரசால் நிகழ்த்தப்பட்டது, இத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்கும் அனைவரையும் தேச விரோதிகள் என்றும், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும், நக்சலைட்டுகள் என்றும், தீவிரவாதக் குழுக் கள் என்றும் முத்திரை குத்தும் வேலையை இந்த அரசு செய்ததே தவிர, ஜனநாயகத்தின் அடிப்படை யான பேச்சுவார்த்தைக்கோ, விவாதங்களுக்கோ இந்த அரசு ஒருபோதும் தயாராக இருக்கவில்லை.

லட்சக்கணக்கான விவசாயிகள் கடுங்குளிரையும், கோவிட் 19 பாதிப்புகளையும் பற்றிக் கவலை கொள் ளாமல், அமைதியான முறையில் போராடுகிறார்கள், போராட்டம் என்பது அரசியல் சாசனம் அவர் களுக்கு வழங்கி இருக்கிற உரிமை, ஆனால், அவர் கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுப் பிரயோகமும், தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டும் நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டன.

அவர்கள் டில்லியை நோக்கி முன்னேறிச் செல்கிற சாலைகளில் பெரிய குழிகள் வெட்டப்பட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்கள். விவசாயிகளின் இந் தப் போராட்டத்தை அரசியல் காரணங்களுக்காகத் எதிர்க் கட்சிகள் இவர்களைத் தூண்டி விடுகிறார்கள் என்றும், காலிஸ்தான் தீவிரவாதிகள் தான் இவர்க ளுக்குப் பின்னால் இருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. விவசாயிகளின் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த பஞ்சாபின் முன்னாள் முதல்வரே தனக்குக் கொடுக்கப் பட்ட பத்ம விபூஷண் விருதைத் திருப்பி அளித் திருக்கிறார். 

விவசாயிகளின் இந்தப் போராட்டம் பல்வேறு மாநிலங்களில் பரவி இருக்கிறது, பல்வேறு அமைப் புகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தி ருக்கின்றன, ஆனால், ஊடகங்கள் இந்தப் போராட் டத்தின் வீரியத்தைப் பெரிய அளவில் ஒளிபரப்ப மறுக்கின்றன. இந்திய அரசியல் சாசனத்திற்காக முன்னாள் இந்திய ஆட்சிப் பணியாற்றியவர்கள் என்கிற முறையில், விவசாயிகளும், ஏனைய அமைப்பினரும் அமைதியான முறையில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது ஜனநாயக உரிமை என்பதாலும் எங்கள் மனப்பூர்வமான ஆதரவை போராடுபவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

போராடும் மக்களின் குரலைக் காது கொடுத்துக் கேட்பது ஆளும் அரசின் கடமை, விவசாயிகளின் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்வதும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் மிக அவசியமானது, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஆளும் அரசு அத்தகைய ஜனநாயக நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.  

சத்யமேவ ஜெயதே.

- இவ்வாறு திறந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment