ரஷ்ய நாட்டைச் சார்ந்தவரும், தமிழ் மொழியினைக் கற்று, தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்தும், மாஸ்கோ பல்கலைக் கழகம் மற்றும் பல்வேறு கல்வி நிலையங்களில் தமிழைக் கற்பித்தும் வந்த அறிஞர் பேராசிரியர் அலெக் ஸாண்டர் துபியான்ஸ்கி (Alexander Dubyanskiy) நவம்பர் 18ஆம் நாள் ரஷ்யாவில் காலமானார்.
மறைந்த அலெக்ஸாண்டர் துபியான்ஸ்கியின் நினைவினைப் போற்றி, ரஷ்ய கலாச்சார மற்றும் அறிவியல் மய்யமும் இந்திய ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில் சபையும் இணைந்து நினைவேந்தல் நிகழ்ச் சியை இணைய வழியில் நடத்தின. டிசம்பர் 17ஆம் நாள் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவன நிகர் நிலை பல்கலைக் கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மறைந்த பேராசிரியர் அலெக்ஸாண்டர் துபியான்ஸ்கியின் நினைவுகளைப் பகிர்ந்தும், போற்றியும் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சென்னை ரஷ்ய தூதரக அதிகாரி அலெக் அவ்டீவ், ரஷ்ய துணைத் தூதரும் ரஷ்ய கலாச்சார அறிவியல் மய்யத்தின் இயக்குநருமான கென்னடி ரோகேவியா, பிரம்மாஸ் விண்வெளி நிலை யத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஏ. சிவ தாணுப்பிள்ளை, நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக் குமார் மற்றும் பன்னாட்டு அறிஞர்கள், சான்றோர் பெரு மக்கள் பங்கேற்று அலெக்ஸாண்டர் துபியான்ஸ்கியின் நினைவைப் போற்றினர்.
தமிழர் தலைவர் ஆற்றிய நினைவேந்தல் உரை
தமிழர்தலைவர் ஆற்றிய நினைவேந்தல் உரையின் சுருக்கம்:
பேராசிரியர் அலெக்ஸாண்டர் துபியான்ஸ்கி மறைந்தது ஒரு பேரிழப்பு. தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு. தமிழ்ப் பண்பாடு, இலக்கியங்களின் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்க ளிப்பை ஆற்றியுள்ள அலெக்ஸாண்டர் துபியான்ஸ்கி பெரிதும் போற்றுதலுக்குரியவர். சங்ககால தமிழ் இலக்கியங்களின் ஆய்வில் புதியதொரு பாதையினை, வெளிச்சத்தினைக் காட்டியவர் அவர். தமிழ் இலக்கிய ஆய்வில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு பரந்துபட்ட பாதைகளை சுட்டிக் காட்டிய பெருமகனார் ஆவார். "தமிழ் எழுத்துத் தெரியும். அதன் பொருள் புரியும்; ஆனால் தமிழில் பேசிட இயலாது" எனப் பல தமிழ்மொழி ஆய்வு அறிஞர்கள், இருக்கையில், தமிழில் சரளமாக, தமிழ் மக்களோடு இயல்பாகத் தமிழில் பேசிய பேராசிரியப் பெருந்தகையாளர் துபியான்ஸ்கியாவார்.
இசை ஈடுபாட்டாளர்
அவர் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எனப் பலர் குறிப்பிட்டனர். துபியான்ஸ்கி தமிழில் உரையாடுவதைக் கேட்பதே இசையைக் கேட்பதுபோல இருக்கும். தமிழ்மொழியை, வெளிநாட்டினர் பலருக்கும் முறையாகக் கற்பிக்கும் ஆற்றல் மிக்கவராக இருந்தார். அந்த வகையில் தமிழ் பேசக் கூடிய பல வெளிநாட்டவர், குறிப்பாக ரஷ்யர்களில் பலர் துபியான்ஸ்கியின் மாணவர்களாவர்.
பெரியார் மணியம்மை
பல்கலைக் கழகத்தில் ரஷ்ய மொழி
தஞ்சை - வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் ரஷ்ய மொழியினை விருப்பப்பட்டு கற்க முன்வந்த நிலையில், பல்கலைக் கழகத்திற்கு வருகைப் பேராசிரியராக இருந்து கல்விச் சேவை ஆற்றினார். மாணவர்களுக்கு ரஷ்ய மொழி யினை தமிழ் மொழி வாயிலாக கற்பித்த வகையில் துபியான்ஸ்கியின் பங்களிப்பு மொழி கற்றலில் இலகுவாக இருந்தது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஆற்றி வரும் கல்விச் சேவையில் துபியான்ஸ்கியின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது; என்றென்றும் நன்றி பாராட்டக் கூடியது.
தமிழ் மொழியினைக் கற்று, இலக்கியங்களை ஆய்ந்து, கற்பிக்கும் நிலையில் மட்டுமல்லாமல், தமிழ் இலக்கியங்கள் கூறிடும் பண்பாட்டுத் தளங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டவர். தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்கு கிரியா ஊக்கியாக விளங்கிய மாண்பாளர் துபியான்ஸ்கியாவார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் சங்கத் தமிழ் மூதுரையை கற்க, கற்பிக்க மட்டும் பயன்படுத்தாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டினார். தமிழ்நாட்டு மக்களுடன், அவர்தம் பண்பாட்டுடன், தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களுடன் தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டவர். மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தாலும், தமிழ்நாட்டிற்கு வந்து செல்லுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தந்தை பெரியார் ரஷ்யாவில்
தந்தை பெரியார் ரஷ்யாவிற்கு 1931ஆம் ஆண்டில் சென்று அங்கு 11 மாதங்கள் தங்கி, ரஷ்ய மக்கள் வாழும் நிலை அங்கு நிலவிய அரசமைப்புச் சூழல் ஆகியவற்றை நேரில் கண்டு வந்தவர். உலகச் சிந்தனையுடன் உலக மக்களையே ஒன்றாகப் பாவித்தவர் - உண்மையில் மனிதர்களாக வாழ வேண்டும் என நினைத்துப் பாடுபட்டவர் தந்தை பெரியார். பெரியார் காலமாகி அரை நூற்றாண்டு காலம் நெருங்கி வரும் வேளையிலும், தலைமுறை இடைவெளியில்லாமல் அவருடைய சிந்தனை, கொள்கைகள் தொடர்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட பணியின் ஓர் அங்கமாகவே ரஷ்யாவில் பிறந்து தமிழ்நாட்டிற்கு வந்து கல்விச் சேவையாற்றிய துபியான்ஸ்கியைக் கருத வேண்டும். பல மொழி பேசுவோரிடம் மனிதநேயத்துடன் பழகினார். அந்த வகையில் பேராசிரியர் அலெக்ஸாண் டர் துபியான்ஸ்கி ஒரு மனிதநேயமிக்க, மனிதநேயத்தைப் போற்றிய மாண்பாளராகவே வாழ்ந்து வந்தார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் "தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" எனும் கூற்றினை மெய்ப் பிக்கும் வகையில் உடலால் துபியான்ஸ்கி மறைந்தாலும், அவர் ஆற்றிய பணியால், வாழ்ந்த வாழ்க்கையால் அவர் என்றென்றைக்கும் இலக்கியமாக வாழ்ந்து கொண்டே இருப்பார். வாழ்க அவரது மனிதநேயப் பணி! ஆற்றிய கல்விப் பணி! இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.
நினைவினைப் போற்றிய பெருமக்கள்
பேராசிரியர் அலெக்ஸாண்டர் துபியான்ஸ்கி நினைவைப் போற்றி உலகின் பல பகுதிகளிலிருந்தும் சான்றோர் பெரு மக்கள் நிகழ்வில் பங்கேற்று உரையாற் றினர். ஆசியக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான் சாமுவேல், அமெரிக்கா - பிலடெல் பியாவிலிருந்து இணைப் பேராசிரியர் லே கோமியா, (Leah Comeau) மொரிஷியஸ் நாட்டிலிருந்து முனைவர் கதிர்வேல் சொர்ணம், ரஷ்யாவிலிருந்து போரிஸ், டாக்டர் நளினி ரவீந்திரன், கனடாவிலிருந்து டாக்டர் நாராயண மூர்த்தி ஆகியோர் துபியான்ஸ்கி பற்றிய தங்களது நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
துபியான்ஸ்கியின் மகள் பங்கேற்பு
நினைவேந்தல் நிகழ்ச்சியில் அலெக்ஸாண்டர் துபியான்ஸ்கியின் மகள் டாட்டியனா துபியான்ஸ்கி (Tatiana Dubyanskiy) கலந்து கொண்டு தனது தந்தையார் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
"எனது தந்தையாரின் தமிழ்ப் பணி பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்படி ஒரு உலகளாவிய உறவை ஏற்படுத்திச் சென்றுள்ளார். எனது தந்தை துபியான்ஸ்கி பலருக்கும் தமிழ் மொழியினைக் கற்றுக் கொடுத்தார் அவர். ஆனால் நான் தமிழைக் கற்றுக் கொள்ளவில்லை. அவரது இறுதி நாட்களில்தான் தமிழ் மொழியினை கற்க ஆர்வம் கொண்டு தமிழ் எழுத்துகளைக் கற்கத் துவங்கினேன். நான் முழுமையாக தமிழ் கற்பதற்குள் எனது தந்தையார் காலமாகி விட்டார். என் தந்தையிடம் தமிழ் மொழி கற்கத் தொடங்கிவர்களில் கடைசி மாணவி நான்தான் என்பது ஒரு பெருமையாக இருக்கிறது. எனது தாய் - தந்தையுடன் தமிழ் நாட்டிற்கு வந்துள்ளேன்; தமிழ் மக்களிடம் பழகியுள்ளேன். அந்தத் தமிழ் உறவு களை மறக்க முடியாது. தொடர்ந்து தமிழ் நாட்டுன் தொடர்பில் இருப்பேன். எனது தந்தையின் நினை வினைப் போற்றி பெருமைப்படுத்திய அனைத்துப் பெருமக்களுக்கும் எனது சார்பாக, எங்களது குடும்பத் தினர் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு துபியான்ஸ்கியின் மகள் உரையாற்றினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
பேராசிரியர் அலெக்ஸாண்டர் துபியான்ஸ்கியின் நினைவேந்தல் நிகிழ்ச்சியினை இந்திய ரஷ்ய கலாச்சார நட்புறவுடக் கழகம் மற்றும் இந்திய ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் பொதுச் செயலாளர்
பி. தங்கப்பன் வெகு சிறப்பாக ஒருங்கிணைந்து நடத்தினார். தொடக்கம் முதல், ஒருவர் உரையாற்றி அடுத்தவர் பேசத் துவங்கும் இடைவேளையில், துபியான்ஸ்கி பற்றிய நிகழ்வுகளை மனதில் நிலைத்து விட்ட செய்திகளை எடுத்துரைத்தது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு உயிரோட்டமாக இருந்தது. தமிழ்நாடு மற்றும் பிற நாட்டில் வாழ்பவர்களுடன் பரவலாக தொடர்பினை கொண்டுள்ள பி. தங்கப்பனின் பணி பாராட்டுதலுக்குரியதாக இருந்தது.
பரந்துபட்ட மனப்பான்மை கொண்ட மனிதநேயர் அலெக்ஸாண்டர் துபியான்ஸ்கியின் நினைவு நிகழ்ச்சி உலகின் பரந்துபட்ட நாடுகளில் வாழும் சான்றோர் பெரு மக்களின் பங்கேற்றுதலுடன் அவர்தம் நினைவேந்த லுடன் நிறைவாக இருந்தது.
தொகுப்பு: வீ. குமரேசன்
(நினைவேந்தல் பெட்டி செய்தி 2ஆம் பக்கம் பார்க்க)

No comments:
Post a Comment