சென்னையில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தைச் சேர்த்து 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சமூகநீதி, விவசாய விரோத மூன்று சட்டங்கள், இந்தி சமஸ்கிருதத் திணிப்பு, செம்மொழியாம் தமிழ்மொழியை அலட்சியப்படுத்தும் போக்கு, ஏழு பேர் விடுதலை, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் நமது கடமை. எனும் மிக முக்கியமான பிரச்சினைகள்மீது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதைத் திட்டவட்டமாக விளக்கும் ஆழமான கருத்துக்களைக் கொண்ட தீர்மானங்கள் இவை என்பதில் அய்யமில்லை.
நியாயமான மக்கள் நல அரசுகளாக மத்திய, மாநில அரசுகள் இருக்குமானால், இந்தத் தீர்மானங்கள்மீது கவனமும் கருத்தும் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு பிற்போக்கான பாசிச சித்தாந்தத்தின்மீது நிற்கும் மத்திய பிஜேபி அரசிடம் இதனை எதிர்பார்ப்பது பைத்தியக் காரத்தனமே!
குறிப்பாக சமூகநீதியை எடுத்துக் கொண்டால், பிஜேபியின் நிலைப்பாடு என்பது ஆர்.எஸ்.எஸின் கொள்கை வழி நிற்பதேயாகம்.
ஆர்.எஸ்.எஸ். என்பது பெரும்பாலும் சித்பவன் பார்ப்பனர்கள் தலைமை தாங்கும் பார்ப்பன ஆதிக்கத்தை எப்படியாவது நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு 1990ஆம் ஆண்டில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு (மண்டல் குழுப் பரிந்துரைக்கு இணங்க) வேலை வாய்ப்பில் முதற்கட்டமாக அறிவித்த நிலையில், அவ்வாட்சியை வெளியிலிருந்து ஆதரித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவான பிஜேபி, ஆதரவை விலக்கிக் கொண்டு, வி.பி.சிங் தலைமையிலான சமூக நீதி ஆட்சியைக் கவிழ்க்கவில்லையா?
அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள சமூகநீதி (Social Justice) கருத்துக்கு எதிரான - பிஜேபியின் தாய் நிறுவனத்தின் தலைவரான மோகன் பாகவத், பச்சையாக இடஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கூறவில்லையா?
நேரடியாக இடஒதுக்கீட்டை உள்ளீடாகக் கொண்ட சமூகநீதியை சட்டம் போட்டு ஒழிக்காமல், கொல்லைப்புறமாக அதன் வேரை வெட்டும்வேலையைத் தானே இன்றைய மத்திய பிஜேபி ஆட்சி ஒவ்வொரு கட்டமாகச் செய்துகொண்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கைவிடப்பட்ட 'நீட்' தேர் வுக்கு உயிரூட்டி இப்பொழுது பிஜேபி ஆட்சியில் நடைமுறைப் படுத்தவில்லையா?
உச்சநீதிமன்றத்தாலும் உயர்நீதிமன்றங்களாலும் நிராகரிக்கப்பட்ட பொருளாதார அடிப்படையில் உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு என்பதை சட்ட விரோதம், உச்சநீதிமன்ற தீர்ப்பு விரோதம் என்று மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தும், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் என்று கூறி 10 விழுக்காடு இடஒதுக்கீடு உயர்ஜாதியினருக்கு - குறிப்பாக பார்ப்பனர்களுக்கு வழங்கியது எதைக் காட்டுகிறது?
மற்ற பிரச்சினைகளில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று கூறி, கிடப்பில் போடும் பிஜேபி அரசு, பொருளாதார அடிப்படை என்னும் 10 விழுக்காட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருந்தும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல், இதற்கான சட்டத்தை குறைந்த நாட்களிலேயே நிறைவேற்றி செயல்படுத்தியது எதைக் காட்டுகிறது?
மருத்துவக் கல்வியில் மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்கி உச்சநீதிமன்றம் வழிகாட்டியும் கூட, மூர்க்கத்தனமாக எதிர்த்தது எதன் அடிப்படையில்?
60 லட்சம் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான நிதி உதவியை அறவே ரத்து செய்த தன்மைக்குப் பெயர் என்ன?
நேரடியாக இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டது என்ற சட்டம் செய்யாமலேயே இடஒதுக்கீட்டின் ஆணி வேரை வெட்டி குழி தோண்டிப் புதைக்கும் வேலையில் தானே மத்திய பிஜேபி அரசு வேக வேகமாக இறங்கிக் கொண்டு இருக்கிறது.
இதன் மூலம் மத்திய பிஜேபி அரசு பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான அரசு என்று ஆகிடவில்லையா?
இந்துக்களுக்காகப் பாடுபடும் அரசு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே - அந்த இந்துக்களான பெரும்பாலான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட் டைப் பறிப்பது எதைக் காட்டுகிறது?
பெரும்பான்மை இந்துக்களின் இரத்தத்தை உறிஞ்சி, எண்ணிக்கையில் சிறபான்மையினரான உயர்ஜாதி பார்ப்பனர் களை கொழுக்க வைக்கும் மத்திய பிஜேபி அரசின் போக்கை கடைக்கோடி மனிதர்களுக்கும் கொண்டு செல்லுவோம். கழக செயற்குழுவின் தீர்மானம் இதனை வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment