ஆசிரியரிடம் பாடம் படிப்போம்!


ஆ.வந்தியத்தேவன்
அமைப்புச் செயலாளர், ம.தி.மு.க.


கடலூர் வீரமணியாக, சிறுவன் வீரமணியாக, 10 வயதில் மேடை யேறி முழக்கமிட்டு, தந்தை பெரியார் அவர்களின் பேரன்பினையும் நம்பிக்கை யையும் பெருநிதியாகப் பெற்று தமிழர் தளபதியாக தமிழகத்தையும், திராவிட இயக்கத்தையும் காத்து, தமிழர் தலைவராக தலைநிமிர்ந்து நின்று தமிழகத்தின் மூத்த தலைவராக நம்மை வழி நடத்திடும், ஆசிரியர் அய்யா மானமிகு கி.வீரமணி அவர்கள் 88ஆம் அகவையில் அடி எடுத்து வைக்கிறார்!


1943ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா வின் திராவிட நாடு இதழுக்கு 112 ரூபாய் பணமுடிப்பு வழங்கும் பொதுக்கூட்டம் கடலூர் முதுநகர் செட்டிக்கோயில் மைதா னத்தில் நடைபெற்றது. நிதியைப் பெற்றுச் செல்ல அண்ணா காஞ்சியிலிருந்து வந் திருந்தார். போட்மெயில் என்று புகழப்பட்ட பூவாளூர் பொன்னம்பலனார், காஞ்சி டி.பி.எஸ்.பொன்னப்பா ஆகிய தலைவர் கள் உரையாற்றிய அக்கூட்டத்தில் சிறு வனாக நம் ஆசிரியர் சிறப்பாகப் பேசி கைதட்டல்களைப் பரிசாகப் பெற்றார்.இதன் பின்னர் 29.7.1944 அன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற தென் னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த அய்யா பெரியார் அவர்களை, நம் ஆசிரியரின் ஆசிரியர் திராவிடமணி அவர்களும், டார்ப்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர் களும் அறிமுகம் செய்து வைத்தார்கள். பெரியார், அண்ணா, விருதுநகர் வி.வி. இராமசாமி ஆகியோர் கலந்துகொண்ட மாநாட்டிலும் சிறுவன் வீரமணியின் இனமுழக்கம் ஓங்கி ஒலித்தது. பெரியாரின் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தன் என்று ஆசிரியரின் உரைகேட்ட அண்ணா அகம் மகிழ்ந்து புகழாரம் சூட்டினார்! அய்யா பெரியாரும் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்!!


அப்பொழுது ஒலித்த நம் ஆசிரியரின் குரல், கழக மேடைகளில் மட்டுமல்ல, கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் என உலக முழுவதிலும் கம்பீரமாக, ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பெரியாரை உலக மயமாக்கிடும் அவரின் தொண்டறம் இன்னமும் அதே முறுக்குடன் தொடர்ந்து  கொண்டே இருக்கிறது.


என்னுடைய பிள்ளைப் பருவம், பள்ளிப் பருவம் முதல் என அறிவு ஆசான் அய்யாதான்! அவர் மட்டும்தான்! காரணம், எதையும் உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்; எவர் சொன்னாலும் பரவாயில்லை என்ற கருத்துச் சுதந்திரத்தை வழங்கிய சோர்வறியாச் சொக்கத்தங்கம் என்று நம் ஆசான் பெரியாரின் சிறப்பைப் படம் பிடித்துக் காட்டியவர், அய்யாவிடம் தாம் கற்றதை, நாமும் கற்று பெரியார் தொண்ட னாய்த் தேர்ச்சி பெற வேண்டும் என்று பாடம் நடத்துகிறார், நம் ஆசிரியர் அய்யா வீரமணி!


சமுதாயப் புரட்சிப் பணி என்னும் இராணுவப் பணிக்கு வந்த பிறகு - சிந்தித்துச் சேர்ந்த பிறகு - கண்ணை மூடிக்கொண்டு கடமையாற்று!


தன்னலத்தை தள்ளி விடு! பொதுநலம் பேணுவதை உயிர் மூச்சாகக் கொள்!


தன்மானம் உன்மானம் எனினும், இன மானம் என்று வரும்போது, உன் தன்மா னத்தையும் இழந்து, அவமானத்தையும் உன் கொள்கைப் பயிருக்கு உரமாக்கிக் கொள்!


மானம் பாராது தொண்டு செய்வது மட்டுமல்ல; நன்றி பாராட்டாது பணி புரி வதே சமுதாயத் தொண்டர்களின் இலக் கணமாக இருக்க வேண்டும்!


நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று; அப்படி எதிர்பார்ப்பது சிறுமைக்குணம்!


இத்தகைய அய்யாவின் அரிச்சுவடியை நமக்கு போதித்த நம் ஆசிரியரின் இலட் சியப் பயணமும், அய்யாவின் அடிச்சுவட் டில் அதே வழியில், அணுவளவும் பிறழா மல் தொடர்கிறது என்பது அகிலம் அறிந்த ஒன்று அன்றோ!


 தடைக்கற்களை படிக்கற்களாக்கி, எதிர் நீச்சல் போட்டு, மெல்ல மெல்ல கல்லூரிப் படிப்பைக் கடந்து வரும் நிலையில், அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சி பச்சையப்பன் கல்லூரியில் கல்வியைத் தொடர உறுதி அளித்ததை, நாகரிகமாக ஏற்க மறுத்து, அண்ணாவின் உதவி பெற்று விட்டு, பிறகு அவருக்கு எதிராக நான் கட்சியில் பேசுவதற்கு எனது மனசாட்சி குறுக்கே நிற்காதா? நான் பெரியார் கட்சிக் காரன்தான். கடைசிவரை நான் இதில் பிடி வாதமாக இருப்பேன். நானே தொடர்ந்து படித்துக் காட்டுகிறேனா இல்லையா பாருங் கள் என்று தாயாய் - தந்தையாய தம்மை கவனித்துக் கொண்ட மூத்த அண்ணனான (கடலூர் நகர தி.மு.க. செயலாளர்) கி. கோவிந்தராசன் அவர்களிடம் உறுதியுடன் பேசிய தன்மான வேழம் இவர் அல்லவா?


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் தேர்வில், முதல் மாணவராக தேர்வு, சிதம்பரம் நடராசர் தங்க மெடல் பெறல், விருப்பப் பாடமான விவசாய பொருளாதாரத்தில் அதிக மதிப்பெண் பெற்று தனிப்பிரிவு பெறல் என முத்தான மூன்று சாதனைகளைப் பெற்ற நிலையிலும், அரசியல் காரணங்களால் நேர்ந்த கொடு மையைத் தாங்கிக்கொள்ள இயலாத நிலை யில், இவர் பிரிட்டன் அல்லது அமெரிக்கா வில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத் திலாவது சேர்ந்து ஆய்வுப் பட்டம் மேற்கொண்டு வெற்றி அடைய வேண்டும் என்று மிகவும் பலமாகப் பரிந்துரை செய்கிறேன் என்று அவரின் பேராசிரியர் எஸ்.வி.அய்யர் அளித்த நற்சான்றிதழைக் கூட ஏற்க மறுத்து அய்.நா.மாமன்றத்தின் ஒரு பிரிவில் பொருளாதார ஆய்வுத் திட்டம் மேற்கொள்ளும் பொருளாதார விசாரணை உதவியாளராக பணியில் சேர்ந்தார் என்றால், இவரின் தன்மான உணர்வை எப்படி பாராட்டுவது!


அண்ணாமலை பல்கலைக்கழகத்தின முதலாண்டில் சேர்ந்து நின்ற சமயத்தில் ஆசிரியரின் அண்ணன், கி.தண்டபாணி அவர்கள் கடலூரில் இருந்த ஏ.ஆர்.தாமோதரன் அவர்களின் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கப்பல் கம்பெனிக்கு வேலையில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றார். அந்த நிறுவனத்தின் தலைமை நிருவாகியான ஆறுமுக (முதலியார்), இவர் அண்ணனிடம்,


தண்டபாணி, உன் தம்பி வீரமணி பொது வாழ்வில் துளிர்விட்டுக் கொண்டிருப்பவன். நன்றாக, மேடை களில் பேசுகிறான். சிறப்பாகப் படிக்கிறான். நானே பலமுறை என் பிள்ளைகளோடு வீட்டிற்கு வந்து பழகும்போது பார்த்துள்ளேன். பெரியார் அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி அவ ரது கட்சிக்கார இளைஞராக இருக்கிறான். அவனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அப்படிப்பட்ட ஓர் இளைஞரை எதற்காக படிப்பைப் தொடராமல் நிறுத்தி, இப்படி ஓர் வேலையில் வைப்பது? எனக்கு அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை. வேலையைப் பொறுத்தவரை, அதை வாங்கிக் கொடுப் பதும், எனக்கு கடினம் அல்ல. அதை அந்தப் பிள்ளை பார்ப்பதும் பிரச்சினையாக இருக்காது. என்றாலும், இப்படியொரு காரி யத்தைச் செய்து அவனைத் திசைதிருப்பு வது நியாயமல்ல என்றே எனக்குப் படுகிறது என்று பேசியதைக் கேட்டு அண்ணன் தண்டபாணியும் மனம் மாறினார். வேலை கிடைக்கவில்லையே என்று வருத்தப் படுகிற சராசரி இளைஞராக இல்லாமல், இதை ஒரு திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அலையில் இருந்து நான் தப்பினேன் என்று ஆசிரியர் வீரமணி குறிப் பிட்டார் என்றால், பெரியாரின் தொண்டறம் தொடர்வதில் அவருக்கு இருந்த பேரவா நம்மை வியக்க வைக்கிறது!


இதனைத் தொடர்ந்து திராவிடர் கழக பிரச்சாரகராக வழக்கம் போல பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர் வீரமணி அவர்களை, தந்தி கொடுத்து திருச்சிக்கு அழைத்தார் பெரியார்! அய்யாவும், அம்மா வும், ஆசிரியரின் திருமண ஏற்பாடு குறித்து பேசியபோது, அய்யாவின் ஆணை எது வானாலும் நான் கட்டுப்பட வேண்டிய வன்தான். அது தனி வாழ்க்கையானாலும் சரி, பொது வாழ்க்கையானாலும் சரி என்று சொல்லிவிட்டு அதனை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, நீ அந்த மணமகளைப் பார்த் துள்ளாயா? என்று அய்யா கேட்டபோதும், இல்லை, அய்யா - அம்மா முடிவு செய்து அதுவும் இயக்கத்திற்கு அதனால் நலன் விளையும் என்று சொல்லும்போது நான் எதையும் சொல்ல என்ன இருக்கிறது? என்று பதில் அளித்ததில் உள்ள கட்டுப்பாடு உணர்ச்சியை சாதாரணமாக நாம் எடை போட்டுவிட முடியாது!


தந்தை பெரியார் அவர்களது நம்பிக்கை - அவரால் துவக்கப் பெற்ற இந்த இயக்கத்திற்கு எனது திருமணத்தின் மூலம் பயன் விளைய வேண்டும் என்ற விருப் பத்தின் அடிப்படையில் அவர் வைத்த நம்பிக்கைதான் என்னை வேறு எந்த திசை திருப்பலுக்கும் ஆளாக்காமல் ஒரே சீரிய இலட்சியப் பாதையில் நடத்திச் செல்லும் ஒப்பற்ற ஒளியாக இன்னமும் திகழ்ந்து வருகிறது என்று பெருமையுடன் நினைவு கூரும் நம் ஆசிரியர் அவர்கள், தன் மணவாழ்வில் நன்றியுரையாற்றும்போது, காபுலிவாலா என்கிற சிறைக்கஞ்சா பெண் ணின் கதையைச் சொல்லி, அதுபோல் நான் மாமியார் வீட்டுக்குச் செல்வேன் என்றால், தந்தை பெரியார் அவர்கள் ஆணைப்படி, அவர்கள் அடுத்து அறிவித்திருக்கும் சுதந் திரத் தமிழ்நாடு போராட்டக் கிளர்ச்சியில் ஈடுபட்டு அந்த மாமியார் வீட்டுக்குச் செல் வதையே பெருவாய்ப்பாகக கருதுகிறேன் என்று மகிழ்ச்சியுடன் முழங்கினார். எங்கள் தேனிலவு தந்தை பெரியார் அவர்களுடன் தான்! அவர்களுடைய சுற்றுப் பயணத்தில் தான் நாங்கள் தொடர்ந்து சென்றோம். எனது துணைவியார் மோகனாவின் தன் னல மறுப்பினை - அதுபற்றி இன்னமும் நான் பெருமிதம் அடைகிறேன் என்ற ஆசிரியரின் கூற்று, அவர்கள் புரட்சிகர மணமக்கள் - வாழ்விணையர்கள் என்பதை நிரூபிக்கின்றது அல்லவா?


தந்தை பெரியார் அவர்கள், முழு நேரத் தொண்டு செய்து விடுதலை ஆசிரியர் பொறுப்பைக் கவனிக்க, வழக்கறிஞராகப் பணி செய்து கொண்டே இயக்கப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நம் ஆசிரியரை அழைத்தார். இயக்கத்திடம்,  இதற்காக சம்பளம் பெறுவது என்பது எனது சுயமரி யாதைக்கு  இழுக்கு என்று சொன்னபோது சம்பளமாக அல்ல, ஆனரேரியமாக (பிஷீஸீஷீக்ஷீணீக்ஷீவீuனீ) ஒரு தொகை தருகிறேனே என்றார் அய்யா! அய்யா! மன்னிக்க வேண்டும். பெயர் வேறு என்றாலும் சங்கதி ஒன்றுதானே அய்யா என்று அடக்கத்துடன் பதில் சொன்னார் ஆசிரியா. இதனைக் கேட்டு குழந்தை போல் அய்யா உரக்கச் சிரித்தார்.


மனைவி குழந்தைகுட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத்தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால், மனைவி, குழந்தை குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும், நாளைக்கும் இவர் (வீரமணி) ஒப்புக் கொள் வதினால் வி.கி.,ஙி.லி., என்பதனாலும், பரீட் சையில் உயர்ந்த மார்க்கு வாங்கி இருக்கும் தகுதியாலும்) மாதம் 1க்கு ரூ.250க்கு குறை யாத மாதச் சம்பளம் உள்ள அரசாங்க அல் லது ஆசிரிய பதவி அவருக்குக் காத்திருந்த போதும், ஆசை காட்டிக் கொண்டிருந்த போதும், அவைகளைப் பற்றிய கவலை யில்லாமல், முழுநேரப் பொதுத் தொண்டில் இறங்குவதென்றால், இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விஷயமாகும் என்று தந்தை பெரியார் அவர்களே வியந்து புகழாரம் சூட்டுகிற அளவுக்கு ஆசிரியரின் பண்பு நலன் பத்தரை மாற்றுத் தங்கமாய் ஒளி வீசுகிறது என்பதுதானே உண்மை!


எதிர்ப்பு, ஏளனம், கண்டனம், கலவரம் ஆகிய இவையெல்லாம் எனது பொதுவாழ் வின் பால பாடங்களாகவும் பரிசோதனை வகுப்புகளாகவும் கடலூரில் அன்றாட அனுபவமாகப் பெற  முடிந்தது; அஞ்சாத நெஞ்சுரத்தையே அவை தந்தன என்ற ஆசிரியரின் வாக்குமூலம் நூற்றுக்கு நூற் றைம்பது உண்மை அல்லவா?


கடலூரைத் தொடர்ந்து சேலம் தம்மம் பட்டி, திருச்சி, மம்சாபுரம், விருத்தாசலம் முதலான ஊர்களில் கொலை முயற்சிகளை சந்தித்த போதும், குடும்ப உறவுகள்மீது அவதூறுகளை அள்ளி வீசியபோதும்  அவைகளை சகித்துக் கொண்டு பெரியாரின் தொடரோட்டத்தில் முன்னிலும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்நாள் சாதனை யாளர் நம் அய்யா, ஆசிரியர் அல்லவா?


பெரியார் திடலில் துரோகிகளின் கலவ ரத்தை எதிர்கொண்ட அந்த நிலையிலும், நம்மைப் பொறுத்த வரையில் எந்தச் சூழ் நிலையிலும் மனதைத் தளரவிடாமல், பின் னால் திரும்பாது லட்சியப் போர்க்களத்தில் முன்னே செல்லும் பெரியார் பெரும்படை யின் ஒரு சாதாரண போர்வீரனாக தொடர்ந்து பணியாற்றிடுவேன் என்று அவர் உதிர்த்த மணிவாசகங்கள் நம் மனதை நெகிழச் செய்ய வைக்கிறது!


சிறுவன் வீரமணியிடம் தொற்றிக் கொண்ட இப்பண்புநலன்கள் தமிழர் தலை வராய் இன்று முதிர்ச்சி பெற்ற நிலையிலும் முன்னிலும் பலப்பலவாய்க் கிளைத்து, விரிந்து, அதே சீரிளமைத் திறன்மின் காணப்படுவதைக் கண்டு, நாம் வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்!


தன்னை வென்றவன் தரணியை வெல் வான் என்ற அண்ணாவின் அறிவுமொழி என்னை ஈர்த்த மொழியாகும்! எனது வாழ்வில் இலட்சியம் பூத்துக் குலுங்கி, காய்த்துக் கனிந்து சுவையூட்டும் கனியாகச் சுவைக்கக் கிட்டுவதைவிட சுகமான பல னுக்கு ஈடேது! இணையேது? என்ற நம் ஆசிரியரின் கருத்துகள் நமக்கு அரிய பாடங்கள் அல்லவா?


அய்யாவின் அடிச்சுவட்டில்... அடி பிறழாமல் வீறுநடை போட்டு வரும் நம் ஆசிரியருக்கு, இந்நாளில் வாழ்த்து கூறி - அவரிடம் பாடம் கேட்போம்; கற்போம்!


ஆயிரம் பிறை கண்ட நம் அய்யாவின் வாரிசாய் நூறாண்டு காணட்டும் நம் ஆசிரியர் என விழையும் கொள்கை உறவு களாய் அவரை வாழ்த்தி மகிழ்வோம்! இலட்சித் தலைவர் வைகோ தலைமையில் இயங்கிடும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் தாய்க் கழகத் தலைவரை, நெஞ்சினிக்க வாழ்த்தி வணங்குகிறது!


Comments