"சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை மன்னர் கலைவாணர்!"

காணொலியில் தமிழர் தலைவர்


* கலி. பூங்குன்றன் நகைச்சுவை மன்னர் கலைவாணர் 112ஆம் ஆண்டு பிறந்த நாள் நவம்பர் 29 (1908-1957)


49 ஆண்டுகளே வாழ்ந்தாலும் காலத்தைத் தாண்டி வாழ்ந்த கலையுலகக்  கதிர் ஒளி.


திராவிடர் கழகத்தின் சார்பில் காணொலி மூலம் நடந்தப்பட்ட நிகழ்ச்சியில் (29.11.2020 மாலை 6.30) திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அறிமுகவுரையாற்றினார். மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரையாற்றினார்.திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நல்லதம்பி திரைப்படத்தில் கலைவாணர் நடத்திய கிந்தனார் காலட்சேபமும், உத்தமப்புத்திரன் திரைப்படத்தில் பார்ப்பனரான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த புல்லுக்கட்டுக்காரப் பெண்ணை (தன் மனைவியை அப்பா வீட்டுக்கு அனுப்பி) கொல்லைப்புறம் வழியாக வரச் சொன்னதும், இந்தத் தகவலைத் தெரிந்து கொண்ட அய்யரின் மனைவி கொல்லைப்புறத்தில் புல்லுக்கட்டுக்காரப் பெண் போல் தலையில் முக்காடு போட்டு வந்ததும் - இருவருக்கும் இடையே நடந்த உரையாடலும் தூள் தூள்தான்!


பார்ப்பனரின் அனுஷ்டானமும், பிரபந்தப் பாடலுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. பார்ப்பனக் கபடப் புத்தி தோலுரித்துக் காட்டப்பட்டது.


தமிழில் முதலில் வெளிவந்த திரைப்படம் 1931இல். 1936இல் வெளிவந்த "சதி லீலாவதி" திரைப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார் என்.எஸ். கிருஷ்ணன். முதல் படத்திலேயே தான் யார் என்ற முத்திரையைப் பொறித்தார். ஆதிபிராமணனாக வேடம் ஏற்ற இவர் கோழி முட்டையும், சாராயமும் கந்தர்வபான உணவு என்று கூறி மூக்குப் பிடிக்க வெட்டுவார்.


வசந்தசேனா படத்தில் டி.ஏ. மதுரத்துடன் இணைந்து  நடிக்க - அது இருவரையும் வாழ்க்கையிலும் இணைத்தது.


அந்தப் படத்திலிருந்து இந்த ஜோடி திரையுலகத்தை ஒரு கலக்குக் கலக்கியது.


திரைப்படத்துக்குச் சம்பந்தமேயில்லாமல் கலைவாணரை மய்யப்படுத்தி தனி (Track) பிரிவாக ஓடிக் கொண்டே இருக்கும். பெரும்பாலான படங்கள் கலைவாணர் - டி.ஏ. மதுரம் இணை காட்சிகளுக்கா கவும் கருத்துக்களுக்காகவுமே வெற்றிக் கொடியை நாட்டியது என்பதே யதார்த்தமான உண்மை.ஒரு திரைப்படத்தில் வேலைக்காரனாக நடிப்பார் கலைவாணர்.


தாழ்த்தப்பட்ட தோழர் பாத்திரத்தைக் கொண்டு வந்து வைப்பார். அதை வேலைக்காரன் எடுக்கப் போகும் போது முதலாளி "ஏய் தண்ணீர்த் தெளித்து எடுடா!" என்பார். மறுநாள் அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து வைப்பார். வேலைக்காரனான கலைவாணர் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அந்த ரூபாய் நோட்டின்மீது கொட்டுவார். முதலாளி திட்டுவார்.


"நீங்கதானே எஜமான் தாழ்த்தப்பட்டவன் பொருளைக் கொண்டு வந்தால் தண்ணீர் ஊற்றி எடுக்க வேண்டும் என்று நேற்று சொன்னீங்க" என்பாரே பார்க்கலாம்.


திரையரங்கே அதிரும் வகையில் கைத்தட்டல் கேட்கும்.


டாக்டர் சாவித்திரி திரைப்படத்தில் ஒரு பாட்டு!


"காசிக்குப்போனா கருவுண்டாகுமென்ற


காலம் மாறிப் போச்சு - இப்ப


ஊசியைப் போட்டா உண்டாகுமென்ற


உண்மை தெரிஞ்சு போச்சு"


என்று பாடுவார் கலைவாணர்.


திருநீலகண்டர் திரைப்படம் - 1939இல் வந்த படம் அது. எம்.கே. தியாகராஜபாகவதரும், கலை வாணனும் நடித்திருந்தனர். அதுவோ ஆத்திக திரைப்படம்! அதிலும்கூட தன் பகுத்தறிவுக் கொள் கையைப் பொறித்தவர் கலைவாணர்.


ஒரு லாவணிப் பாடல் - சொக்கனாக கலைவாணர். மருதையாக டி.எஸ். துரைராஜ். 'மன்மதன் எரிந்தானா இல்லையா' என்ற லாவணி.


கல்விக்கரசி தமிழ்ச் செல்வி என்றொரு பெண் ணைக்


கை தொழுதீரே அந்த மண்ணுலக மங்கை


மறையவள் நாவினில் உறைவது நிஜமானால்


மலஜலம் கழிப்பது எங்கே, எங்கே!


என்பதுதான் அந்தப் பாடல்!


திரைப்படத்திலே இயக்கப் பிரச்சாரம் எப்படி? இதைப் பற்றியும் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டினார்.


"தீனா - மூனா - கானா - எங்கே


தீனா - மூனா - கானா


அறிவினைப் பெருக்கிடும்


உறவினை வளர்த்திடும்


திருக்குறள் முன்னணிக் கழகம்!


பகுத்தறிவோடு நாட்டினர் வாழ


திருக்குறள் தந்தார் பெரியார்


வள்ளுவர் பெரியார்!"


 திமுகவையும் பெரியாரையும் ஒரு திரைப்படத்திலே எப்படி சன்னமாக நுழைந்துள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும். சென்சாரில்தான் என்ன செய்ய முடியும்? அத்தகைய யுக்திகளைக் கையாண்டவர் கலைவாணர்.


 


1956ஆம் ஆண்டுத் திருச்சியிலே - திமுக மாநில மாநாடு. அதில் கலைவாணரின் புத்தர் கதை வில்லுப் பாட்டு.


அனைத்து மக்களும் அன்பு வழியில் செல்ல வேண்டும். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடும் இருக்க வேண்டும்.


ஜாதி மதமற்ற சமரச நெறியிலும் நடக்க வேண்டும் என்பதுதான் புத்தரின் ஆசை என்று கூறிக் கொண்டே வந்த கலைவாணர் - அடுத்துப் பாடியதுதான் உச்சக் கட்டம்.


அந்தப் புத்தப் பெருமானின் ஆசை நிறைவேற வேண்டுமென்றால்...  "அய்யாவும் அண்ணாவும் ஒன்றா னால் - புத்தர் ஆசை நிறைவேறும்! என்று பாடினாரே" பார்க்கலாம், பந்தலே அதிரும் வகையில் கர ஒலி! கர ஒலி!!


"தந்தை பெரியார் வாழ்க!"


அறிஞர் அண்ணா வாழ்க!"


என்ற வாழ்த்தொலி விண்ணை முட்டியது.


வானொலியில் நடைபெற்ற ஒரு நிகழ்வையும் எடுத்துக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர்.


1947, ஆகஸ்ட் 15 - முதல் சுதந்திர நாள் கொண்டாட் டத்தையொட்டி கலைவாணர் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு. நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள வரைவை (ஸ்கிரிப்டை) முன்னதாகவே வானொலி இயக்குநருக்கு எழுதியும் கொடுத்து விட்டார். சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியா ரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் கலைவாணர்.


குறிப்பிட்ட ஒலிபரப்பு நாளில் வானொலி நிலையத்திற்கும் சென்று விட்டார் கலைவாணர்.


கலைவாணர் எழுதிக் கொடுத்திருந்ததில் இருந்த பெரியார் பெயர் மட்டும் நீக்கப்பட்டு இருப்பதாகவும், நீங்கள் பேசும்போது தயவு செய்து பெரியார் பெயரை குறிப்பிட வேண்டாம் என்றும் கூறப்பட்டது. கலைவாண ருக்கோ பெரும் அதிர்ச்சி! ஏன் பெரியார் பெயர் நீக்கப் பட்டது? பெரியார் சுதந்திரத்துக்காகப் பாடுபடவில்லையா? என்று நேருக்கு நேர் கேட்டு விட்டார். அதிகாரிகள் ஏதோதோ சொன்னார்கள் கலைவாணர் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் பெயர் இடம் பெறவில்லையென்றால் என்னுடைய நிகழ்ச்சியும் வானொலியில் இடம் பெறாது என்று உறுதியாகக் கூறி விட்டார். வேறு வழியின்றி நிலையத்தாரும் ஏற்றுக் கொள்ள, கலைவாணர் நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்பட்டது.


பிரபல எழுத்தாளர் முருகு சுப்பிரமணியம் 'பொன்னி' பொங்கல் மலருக்காக (1952) கலைவாணரிடம் பேட்டி கண்டார்.


கேள்வி: உங்கள் கொள்கை என்ன?


கலைவாணர்: ஆதி முதல் 'குடிஅரசு', கிருஷ்ணசாமி பாவலர் நடத்திய 'தேசபந்து' இரண்டு பத்திரிகைகளையும் நான் படித்து வந்தேன். அப்போது நான் சிறுவன் - நாடகக் கம்பெனியில் வேலை; பக்தி மார்க்கத்திற்கும், நாத்திகத்திற் கும் உள்ள வேறுபாடுகளை நான் அப்போது நன்றாகத் தெரிந்து கொண்டேன். படித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தேன்.


கேள்வி: உங்கள் முடிவு என்ன?


கலைவாணர்: சுயமரியாதைக் கொள்கை நம் நாட்டுக்குத் தேவை என்பதுதான் அந்த முடிவு - என்று தெளிவுபடுத்தினார்.


இன்னொரு இடத்தில் கலைவாணர் கூறுவது என்ன?


"நான் பள்ளியில் பாடங்கள் படித்து அறிவு பெற்றவன் அல்லன். நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இடையிடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் 'குடிஅரசு' பத்திரிகைகளை வைத்துக் கொண்டு எழுத்துக் கூட்டிப் படிப்பேன். அதன் மூலம் நான் கருத்துக்களைச் சிந்தித்து அறிந்து கொள்ள  முடிந்தது.


எனவே பச்சை அட்டை 'குடிஅரசு' பத்திரிகைதான் என் குரு என்று சொன்னால் அது தவறாகாது" என்று குறிப்பிட்டுள்ளார்.


தந்தை பெரியார் கலைவாணர் பற்றி என்ன கணிக் கிறார் என்பதும் முக்கியமே.


"இன்று என்.எஸ். கிருஷ்ணன் செத்தாலும் சரி, "அன்னக் காவடி கிருஷ்ணன்" ஆனாலும் சரி, நாடக புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால் அச்சரித்திரத்தின் அட்டைப் படத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால் அச்சரித்திரமே தீண்டப்படாததாகிவிடும்" என்கிறார் தந்தை பெரியார்.


('குடிஅரசு' 11.11.1944)


நகைச்சுவை மன்னர் கலைவாணர்பற்றி பல்வேறு தகவல்களையும் வாரி வழங்கிய திராவிடர் கழகத் தலைவர் நகைச்சுவை மன்னர் கலைவாணரைப்பற்றி வரைந்த சித்திரம்.


கலையைக் கருத்துப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத் தியவர்  - ஒப்பற்ற நகைச்சுவை நடிகர் - சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்தவர்.


அரை நூற்றாண்டுக் காலத்திற்கு முன் மறைந்தாலும் அழியாத பல முத்திரைகளைப் பதித்துச் சென்றவர்.


எவன் ஒருவன் சுயநலமில்லாமல் தொண்டாற்று கிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பர். அது நமது கலைவாணருக்கு மிகவும் பொருந்துகிறது. கலைவாணர் ஒரு புரட்சி வீரர் என்பதில் அய்யமில்லை.


எந்த ஒரு மனிதனுக்கும் நகைச்சுவை உணர்வு அவசியம் தேவை.


வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது அறிவு மொழி. உளவியல் ரீதியாக நகைச்சுவை நல்ல பலனை அளிக்கக் கூடியதே!


வாய்விட்டுச் சிரித்தால் மன அழுத்தம் - இறுக்கம் விடை பெறும்.


நகைச்சுவை மூலம் மூடநம்பிக்கையை, பெண்ணடி மையை, ஜாதியை, ஏற்றத் தாழ்வுகளைச் சாடிய   - தந்தை பெரியாரின் சீடர் கலைவாணரை நினைவு கூர்வோம் - போற்றுவோம் - அவரின் நகைச்சுவையில் நடுநாயகமாக விருந்த பகுத்தறிவு - சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்புவோம்!


வாழ்க கலைவாணர்!


வாழ்க பெரியார்!


வளர்க பகுத்தறிவு என்றுரைத்தார் தமிழர்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


 


Comments