பீகார் மாநில தேர்தல் முடிவுகள் கற்பிக்கும் பாடங்கள்!

பொது எதிரியை வீழ்த்திட எதிர்ப்பு வாக்குகளை சிதறவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்!


உழைப்பு மட்டும் போதாது - வியூகங்களும் தேவை!


மக்கள் சக்தியில் நம்பிக்கை வைத்து உழைத்தால் வெற்றி தானாகவே வந்து கதவைத் தட்டும்!பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் கற்பிக்கும் பாடங்கள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், பொது எதிரியை வீழ்த்தும்போது - எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்; உழைப்பு மட்டும் போதாது; வியூகங்களும் தேவை என்று  கூறியுள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


பீகார் தேர்தல் முடிவுகள்-  வாக்கு எண் ணிக்கை வழக்கமான கால நேரத்தைவிட, அதிகமான அளவு நேரத்தை எடுத்துக் கொண்டு வெளியாகின! கரோனா தொற்று பரவிடும் நிலையில், எச்சரிக்கையாக மேலும் கூடுதலாக 60 வாக்குச் சாவடிகளுக்குமேல் அமைக்கப்பட்டதாலும், எண்ணிக்கை மிகவும் மெதுவாக நடைபெற்றது என்று தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டன!


பல தொகுதிகளில் குறிப்பாக சுமார் 19, 20 தொகுதிகளுக்குமேல் இழுபறி, எண்ணிக்கை முடிவு அறிக்கப்பட்டபிறகு, மறு அறிவிப்பு, வாக்கு வித்தியாசம் மிக மிகக் குறைவு - (எடுத்துக்காட்டாக அய்க்கிய ஜனதா தள வேட்பாளர் 12 வாக்கு வித்தியாசத்தில் மறு எண்ணிக்கையில் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்) (Thin Majority - Razor Edge Majority) என்று ஆங்கில நாளேடுகள் குறிப்பிடும் அளவுக்கு இதன் முடிவுகள் வெளியாகியுள்ளன!


வெற்றி பெற்ற நிதிஷ்குமாருக்குக் காத்திருக்கும் அழுத்தம்!


எதிர்க்கட்சி - மகாபந்தன் கூட்டணிக்கு முக்கிய தலைமை  தாங்கும் கட்சியான ராஷ் டிரிய ஜனதா தளம் 75 இடங்களைப் பெற்று - இந்தக் கடினமான சூழ்நிலையிலும்கூட, அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது; பாராட்டத்தக்கது.


பா.ஜ.க. 74, அய்க்கிய ஜனதா தளம் 43, எச்.ஏ.எம். 4, விக்கசீல் இன்சான் 4 - அதனால், தேசிய ஜனநாயக முன்னணி (NDA) என்ற கூட்டணியில் 125 இடங்களைப் பெறக் கூடிய வாய்ப்பும், அதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் கிட்டியுள்ளன!


அதிக இடங்களைப் பெற்ற பா.ஜ.க.வினர் - 74 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், அவர்கள் தயவோடுதான் என்றும் ஆளவேண்டிய நிர்ப்பந்தம் - நிதிஷ்குமார் அவர்களுக்கு நிரந்தர அழுத்தமாக இருந்தே தீரும்!


நடைமுறையில் பீகாரில் பா.ஜ.க. ஆட்சி நிதிஷ்குமார் தலைமையில் என்ற நிலை - ஒரு இக்கட்டான அரசியலை உருவாக்கியுள்ளது. இவரது நாற்காலியை எப்பொழுது வேண்டு மானாலும் ஆட்டி அசைக்கும் வாய்ப்பு பா.ஜ.க.விற்கு இருப்பதும், ஆடும் நாற்காலி நாயகராகத்தான் நிதிஷ்குமார் இருக்க முடியும். ஒரு நிலையான ஆட்சி பீகாருக்குத் தொடருமா 5 ஆண்டுகளுக்கு என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்!


பா.ஜ.க. ‘வித்தைகள்' பல ரூபங்களில்!பா.ஜ.க. ‘வித்தைகள்' பல ரூபம் எடுக்கக் கூடும்; மத்தியில் அமைச்சரவை விரிவாக்கத்தில் இதற்குமுன் பங்கெடுக்காத அய்க்கிய ஜனதா தளம் - இப்போது சிறிது காலம் விட்டு - அதனை இழுத்துப் போட்டு பகிரங்கமாக பா.ஜ.க. ஆட்சியை நடத்தும் வாய்ப்பும் ஏற்படக் கூடும் என்ற வாதம் புறந்தள்ளக் கூடியதல்ல!


என்றாலும், ‘லகான் ஓரிடத்தில், குதிரை வண்டிக்கு முன்பாக அமர்ந்திருப்பவர் இன்னொருவர் என்ற விசித்திர இரட்டை நிலை' உண்மையிலேயே மாறி  மாறி ஒரு என்ஜினை இரண்டு பேர் பிடித்து இழுக்கும் நிலை வேடிக்கையானதாகும்!


31 வயது இளைஞர் தேஜஸ்வியின்


வளரும் தலைமை!


31 வயதுள்ள பீகாரின் நம்பிக்கை நட்சத் திரமாகியுள்ள இளைஞர் தேஜஸ்வி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வளரும் தலைவராகி, இந்தத் தேர்தல் களத்தில் மிகச் சிறப்பாக உழைத்தார். அவருடைய உழைப்பும், கணிப்பும் தவற வில்லை. பா.ஜ.க. - அய்க்கிய ஜனதா தளம் பெற்ற வெற்றி - தோல்விக்கு சமமான வெற்றி (Pyrrhic Victory) என்ற அளவில், தேஜஸ்வியின் உழைப்பும், அவருக்கு பீகார் அடித்தள மக்கள் தந்த ஆதரவும் உள்ளன!


மதச்சார்பற்ற கட்சிகள் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்த தவறை வழமைபோல அங்கும் செய்தன!


காங்கிரஸ் போன்ற கட்சிகள் தாங்கள் பெற்ற இடங்களில் பெரும்பாலான இடங்களில் தோற்றன. காரணம், கட்சியை முன்பே பல மாகக் கட்டவில்லை என்பதே!


இது பீகாருக்கு மட்டுமல்ல; மற்ற மாநிலங் களில் வரும் தேர்தலுக்கும்கூட பாடம் ஆகும். வாயில் மென்று விழுங்குவதைவிட அதிகமாக உணவு எடுத்துக்கொண்டால், அது சரியானதாகாது. எனவே, அதிக இடங்களை கூட்டணி கட்சிகள் கேட்டுப் பெறுவதைவிட, வெற்றி வாய்ப்பும் - அதைவிட முக்கியம் அரசியல் எதிரியைத் தோற்கடிக்கவேண்டும் என்ற திடமான உறுதியையும் முன்னிறுத்தியே தங்கள் கட்சிக்குரிய இடங்களைக் கேட்டுப் பெற்றால், அனைவரது வெற்றியும் அனை வருக்கும் கிட்டும் - அரசியல் எதிரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் - இலக்குகளை அடைய முடியும் என்ற பாடம், பீகார் தேர்தல்மூலம் இனி தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், குறிப்பாக எதிரிணிகள் கடைபிடிப்பது நல்லது!


பீகாரின் ஆட்சி - அரசியல் இயந் திரம் எப்படியெல்லாம் அங்கே முடுக்கிவிடப் பட்டதோ, அதேபோல, வரும் தேர்தல்களிலும் முடுக்கிவிடக் கூடும்; மத்திய - மாநில ஆட்சிகளால் இழுபறி நீடித்த ‘இரகசியங்களை' அறிந்து, அதையே  மற்றவர்கள் பாடமாகக் கொள்ளவேண்டும்!


தேவை - பொது எதிரியின்மீது குறி!


பொது எதிரியை - குறி வைக்காமல் தங்களைத் தங்கள் கட்சியை மட்டும் பிரதானப் படுத்திக் கொண்ட, கூட்டணிகளின் வெற்றி பல நேரங்களில் ‘சிதறு தேங்காயாகி'விடக் கூடிய பேராபத்து உண்டு.


மக்களை ஆயத்தப்படுத்துவதோடு, விழிப் புணர்வுடன் - அனைத்துப் பக்கங்களிலும் பார்வைகள் செயல்படத் தவறக்கூடாது  என்பதை ஜனநாயகத்தைக் காக்கப் போராடும் கட்சிகள் உணரவேண்டும் என்பதும் பீகார் தேர்தல் தரும் பாடம்!


உழைப்பு மட்டும் போதாது; போதிய வியூகமும், வினைத் திட்பமும் தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியம்; குறிப்பாக, கருத்துக் கணிப்பு என்ற ‘மாயமான்' வேட்டையாலும், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பிறகு ஏமாந்து கைபிசைகிறவர்களாகி விடக் கூடாது என்பதும் புரிய வேண்டிய பாடம்!


மக்கள் சக்தியில் நம்பிக்கை தேவை!


என்றாலும், மக்கள் சக்தி மகத்தானது; அதன் பலத்தில் நம்பிக்கை வைத்து உழைத்தால் வெற்றி தானே வந்து கதவைத் தட்டும்!


‘வித்தைகள்' சில காலம் பலிக்கும்; எல்லாக் காலத்திலும் பலிக்காது!


வெற்றி பெற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துகள் - ஜனநாயக மரபிற்கேற்ப!


 


கி.வீரமணி,


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


12.11.2020


Comments