பஞ்சாப் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு  மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 30, 2020

பஞ்சாப் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு  மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்!

திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு


பஞ்சாப் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


அண்மையில் நாடாளுமன்றத்தில் அவசர கோலத்தில், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நிறை வேற்றப்பட்ட மூன்று வேளாண்மை மசோதாக்கள் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் விவசாயிகளின் நலனை அடகு வைப்பதாக உள்ளது என்பதை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து அற வழியில் ரயில் போராட்டம் முதல் தொடங்கி இப்போது ‘டில்லி சலோ' என்று டில்லியை நோக்கிய போராட்டம் -  நியாயமான போராட்டம் - வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெறும் வரையில் நீடிக்கும் என்ற திடமான முடிவோடு பல்லாயிரக் கணக்கில் திரண்டு, உணவு ஏற்பாடுகளுடன் டில்லியை முற்றுகையிட்டுள்ளனர்.


காவல்துறையினரின் தண்ணீர் வீச்சு, கண்ணீர்ப் புகை விவசாயிகளின் உறுதியைக் குலைக்காது!


மத்திய அரசு உள்ளே விட மறுத்து, பிறகு வேறு வழியின்றி அனுமதித்தது!


இப்போது எங்கோ ஒரு பகுதிக்கு தள்ளி - இடம் தருகிறோம் என்று கூறியதை விவசாயிகள் ஏற்க வில்லை.


ராம் லீலா மைதானம், ஜந்தர் மந்தர் மைதானம் ஆகிய இடங்களை கேட்கிறார்கள் போராட்டத்திற்கு.


இதை அளிப்பதில் மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டவேண்டும்?


வன்முறையின்றி, அறவழியில் போராட்டம் செய் வதை மத்திய அரசு அனுமதிப்பதுதான் ஜனநாயக வழி முறையாகும்!


அடக்குமுறைகளால் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளி - இது ஜனநாயக அரசு என்பதை மறக்கக் கூடாது.


இத்தகைய எழுச்சி நாடு தழுவியும் பரவக் கூடுமே!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


30.11.2020


No comments:

Post a Comment