செய்தியும், சிந்தனையும்....!

வெங்கையா வாய் திறக்கிறார்!


நீதிமன்ற தீர்ப்புகள் சில நேரங்களில் எல்லையை மீறுகின்றன: - வெங்கையா நாயுடு, துணைக் குடியரசுத் தலைவர்.


இப்பொழுதல்ல - வெகுகாலத்துக்கு முன்பே தந்தை பெரியார் கூறியதுதான். நில உச்ச வரம்பு சட்டத்திற்கு எதிராக தீர்ப்புக் கூறியபோது நாடெங்கும் கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்தி உரையாற்றினார் தந்தை பெரியார். (கழகப் பொதுச்செயலாளர் வீரமணி அவர்களும் அத்தகைய கூட்டங்களில் உரையாற்றியது உண்டு).


இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடும்பாவிகளைக் கூட திராவிடர் கழகம் எரித்ததுண்டே!


எந்த இலட்சணத்தில்?


இடைத்தேர்தலை மனதிற்கொண்டு வீர சைவ லிங்காயத் சமூக வாரியங்களை அமைக்கிறார் கருநாடக முதலமைச்சர்: -டி.கே.சிவகுமார், மாநில காங்கிரஸ் தலைவர்.


இந்த லட்சணத்தில் ஜாதியை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் நடைபெறுகிறது என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!


யார் பிரிவினைவாதிகள்?


அய்தராபாத் மாநகராட்சியில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், இங்குள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கும் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்' நடைபெறும்: - உ.பி. பா.ஜ.க. தலைவர் சஞ்சய் குமார்.


மக்களைப் பிளவுபடுத்தும் உண்மையான பிரிவினைவாதிகள் யார்? இவர்களுக்கு என்ன தண்டனையாம்?


கடவுளும் அப்படித்தானா?


ஒருவர் ஸ்வாமி விவேகானந்தரிடம் ‘இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறது உண்மை என்றால், இத்தனை கோவில்கள் ஏன்?' என்று கேட்டார்.


அதற்கு விவேகானந்தர் ‘‘காற்று எல்லா இடத்திலும்தான் இருக்கு. மின் விசிறி தேவைப்படுகிறதே'' என்றார்.


கேட்டவர் அமைதியாகி விட்டார். - ‘குமுதம்' 2.12.2020.


புயற்காற்று வீசும்போது யார் மின் விசிறியைத் தேடப் போகிறார்கள்? மின் விசிறி தேவைப்படும் காலமும் உண்டு, தேவைப்படாத காலமும் உண்டு - கடவுளும் அப்படித்தானா?


Comments