தீபாவளி என்னும் முரண்பாட்டின் குத்தகை

தீபாவளி என்பது இந்துப் பண்டிகை என்று சொல்லப் படுகிறது. அப்படி என்றால் ஒவ்வொரு  மாநிலத்திலும் வெவ்வேறு வகையில் அது புனையப்படுவானேன்   - வேறு வேறு வகைகளில் சம்பிரதாயங்களும், வழிபாடு களும் முரண்படுவானேன்?


மற்ற மற்ற மதங்களைப் பற்றிப் பேச மறுக்கிறீர்களே என்று சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்; மற்ற மற்ற மதங்களில் கிருஸ்துமஸ் என்றாலோ,  ரம் ஜான் என்றாலோ இப்படி தான் ஊருக்கு ஒரு கதை கற்பிக்கிறார்களா?


அவற்றை பகுத்தறிவுவாதிகள் ஏற்பதில்லை - கொண் டாடுவதில்லை என்பது வேறு செய்தி. அதே நேரத்தில் இந்துப் பண்டிகைகள் மட்டும், ஒரு மதத்துக்குள்ளேயே அடிப்படையிலேயே முரண்படுவது ஏன்? என்ற கேள்வி முக்கியமானதே!


வடமாநிலங்களில், தீபாவளி அன்று மகாலட்சுமி தங்கள் வீடுகளில் தங்குவதாக கருதி, தீபாவளி அன்று வரும் அமாவாசை தினத்தில் பூஜை அறையில் 24 மணி நேரமும் ஒரு விளக்கை எரிய விடுவது வழக்கம். அந்த விளக்கில் இருந்து வெளியாகும் புகைக் கரியில் இருந்து கண் மை தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த கண்மையைத் தான் அவர்கள் ஆண்டு முழுதும் பயன்படுத்தி வருகிறார்கள். இதை 'மோனி தீபாவளி' என்று அழைக்கிறார்கள்.


வங்காளத்தில் சும்பன் நிசும்பனை சம்ஹாரம் செய்த மகாதுர்க்கையின் உக்கிரத்தை சிவபெருமான் தணித்த நாள் என்று சொல்லி 'தீபாவளி' என்று வழிபடுகின்றனர்.


பீகார் மாநிலத்தில் பழைய துடைப்பத்தை வீட்டு வாசலில் போட்டு தீயிட்டு எரிப்பது வழக்கம். இப்படிச் செய்வதால் வறுமை விலகி, நன்மை வந்து சேருமாம்.  "மூதேவியே போ... சிறீதேவியே வா"- என்றும் கோஷமிடு வார்கள். 


குஜராத் மக்கள் தீபாவளி தினத்தன்று புதுவருடப் பிறப்பு என்றும், வியாபாரிகள் புதுக்கணக்கை இந்நாளில் துவங்குவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.


ஆண்டு தோறும் சிங்கப்பூரில் தீபாவளி அன்று மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீபாவளியைச் சிறப்பித்து அஞ்சல் தலை வெளியிட்ட நாடும் சிங்கப்பூர்தான். 


மத்தியப்பிரதேசம், புதுடில்லி, ராஜஸ்தான் மாநிலங் களில் மகாலட்சுமி தனது கணவரான மகாவிஷ்ணுவுடன் பூலோகத்துக்கு வந்த நாள்  என்று,  அந்நாளே தீபாவளி நாள் என்று சொல்லி கொண்டாடுகிறார்கள்.


இந்தக் கட்டுக் கதைகள் அறிவுக்கு முன் வேரறுந்து விடும் என்பதில் அய்யமில்லை; என்றாலும் இந்து மதம் என்பது வரலாற்று அடிப்படையில் இல்லாத - புராணங்கள் என்று சொல்லப்படும் கற்பிதங்களின் அடிப்படையில் போலியானதாக உள்ள ஒன்றே என்பது இந்த முரண்பாடு களிலிருந்து விளங்குகிறதா இல்லையா? முதலாவதாக இந்து மதத்தில் உள்ள படித்தவர்கள் சிந்திக்கட்டும். வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்த்தால் தீபாவளி தமிழ்நாட்டில் எப்பொழுது முதல் கொண்டாடப்படுகிறது?


இதுபற்றி பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் "மதுரை நாயக்கர் வரலாறு" எனும் நூலில் (பக்கம் 433, 434) இவ்வாறு கூறுகிறார்:


"மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை, செஞ்சி நாயக்கர் களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால், பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங் களில் குறிப்பிடப்படவேயில்லை.


சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம். அண்மைக்காலம் வரை யில்  இருந்ததில்லை" என்று கூறுகிறார் வரலாற்றாளர் அ.கி. பரந்தாமனார்.


கடந்த 500ஆண்டு காலமாகத்தான் தமிழ்நாட்டில் தீபா வளி என்னும் கலாச்சாரப் படை எடுப்பு நடந்திருக்கிறது.


இதில் இன்னொன்று கவனிக்கத்தக்கது. தீபாவளி சிவனுக்கு உரியது என்கிறார் கிருபானந்தவாரியார் (நூல்: 'வாரியார் விரிவுரைவிருந்து').


மற்றபடி மகாவிஷ்ணு வராக(பன்றி) அவதாரம் எடுத்து அசுரர்களைக் கொன்ற நாள் என்று சொல்வதால் இது வைஷ்ணவர்களின் பண்டிகையாகிறது - 'குழப்பமே உன் பெயர்தான் இந்து மதமா?' என்ற கேள்விதான் எழுகிறது!


Comments