சிறுவர்களை அடிமையாக்கும் பப்ஜி ஆன்லைன் விளையாட்டுக்கு முழுத் தடை

புதுடில்லி,அக்.31, இந்தியாவில் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்களின் உயிரை பலி வாங்கி வந்த பப்ஜி ஆன்லைன் விளையாட்டுக்கு நேற்று (30.11.2020) முதல் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இதன்மூலம், ஏற்கனவே இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்தவர்களும் இனி விளையாட முடியாது. வயது வித்தியாசம் இன்றி சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனக்கு அடிமையாக்கிய செல்போன் விளையாட்டுக்களில் பப்ஜி விளையாட்டும் ஒன்றாகும். பப்ஜி விளையாடக் கூடாது என்று கண்டித்ததால் பல மாணவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனிடையே பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கடந்த மாதம் சீன செயலி களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.


இதனுடன் செப்டம்பர் 2ஆம் தேதி மத்திய அரசு பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது. தடை விதிக்கப்பட்டதால் இதனை ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் தடை விதிக்கப் படுவதற்கு முன்பாக பதிவிறக்கம் செய்தவர்கள் பப்ஜியை தொடர்ந்து விளையாடி வந்தனர். இந்நிலையில், நாடு முழு வதும் பப்ஜி விளையாட்டுக்கு மத்திய அரசு முழுமையான, நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கெனவே பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தவர்களா லும், இனிமேல் பப்ஜியை விளையாட முடியாது. 


இது தொடர்பாக பப்ஜி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில், ‘இந்திய அரசின் உத்தரவின்படி, இந்தியா வில் உள்ள பயனர்களுக்கான  பப்ஜி மொபைல், பப்ஜி மொபைல் லைட் ஆகிய விளையாட்டுக்களின் அனைத்து சேவைகளும், அணுகல்களும் அக்டோபர் 30ஆம் தேதி முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.


இந்தியாவில் பப்ஜி  வெளியிடுவதற்கான உரிமைகள், அறிவுசார் சொத்து உரிமையாளருக்கு திருப்பி தரப்படும். தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தான் முதன்மையான நோக்கம். எனவே, இந்தியாவின் தகவல் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உடன்பட்டு நடக்க விரும்புகிறோம். எங்களின் சேவையை நிறுத்திக் கொள்வதற்காக வருந்துகிறோம்,’ என கூறப்பட்டுள்ளது.


Comments