மனுவை - ம(ணி)னுக் கணக்கில் விவாதிக்கலாம் - வாருங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

மனுவை - ம(ணி)னுக் கணக்கில் விவாதிக்கலாம் - வாருங்கள்!

- கவிஞர் கலி.பூங்குன்றன்



மனுதர்மம் பற்றிய சர்ச்சை பீறிட்டுக் கிளம்பி விட்டது.


செப்டம்பர் 25,26 நாட்களில் அய்ரோப்பிய பெரியாரிய - அம்பேத்கரிய தோழர்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த காணொலி கருத்தரங்கில் பன்னாட்டுத் தலைவர்களும் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினார்கள். முதல் நாள் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களும், மறுநாள் காணொ லியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களும் கருத்துரை வழங் கினர்.


சகோதரர் திருமாவளவன் தம் உரையில் பெண்ணடிமையை வலியுறுத்தும் மனுதர்ம சாஸ்திரம் பற்றிக் கருத்துத் தெரிவித்தார்.


ஒரு மாதம் கழிந்த நிலையில் சங்பரிவார்களும், பா.ஜ.க. வினரும், பார்ப்பனர்களும், அவர்தம் ஊடகங்களும் உண் மைக்கு முற்றிலும் மாறாக கடைந்தெடுத்த பொய்யாகத் திசை மாற்றிப் பிரச்சாரம் செய்து, அதன்வழி  தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினையாக்கி, போராட்டக்களங்கள் உருவாகும் ஒரு சூழலை உருவாக்கி விட்டனர்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சொன்னது - மனுதர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு இருப்பது குறித்து; ஆனால் அறிவு நாணயமற்ற முறையில் திருமாவளவன் பெண்களைக் கொச்சைப்படுத்தி விட்டார், இழிவுபடுத்தி விட்டார் என்று தலைகீழாகப் புரட்டி விட்டனர்.


இத்தகு புரட்டல்களும், மோசடிகளும், திசை திருப்பல் களும் திரிநூல் கூட்டத்திற்கே உரித்தான  கைவந்த கலையே!


1971இல் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூடநம் பிக்கை ஒழிப்பு மாநாடு - பேரணி - மாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்து வெளியிட்டு, ‘இந்து ஏடே’ நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரவில்லையா?


என்ன குற்றச்சாட்டு வைக்கிறார்கள்?


1) இப்பொழுது எங்கே இருக்கிறது மனுதர்மம்? ஏன் அதைக் கிளப்ப வேண்டும்?


2) மனுஸ்மிருதியை எழுதியது மனு அல்ல  - சர்.வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரால் 1794ஆம் ஆண்டு எழுதப் பட்டது. (பா.ஜ.க. செய்திதொடர்பாளர் நாராயண திருப்பதி - ‘தினமலர்’ 26.10.2020 பக்கம் 5).


3) பெண்கள், தாய்மார்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய திருமாவளவனை கைது செய்து தண்டனை தராவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும்.


- சிறீவில்லிபுத்தூர்


“சோடா’ பாட்டில் புகழ்” ஜீயர் சடகோபா ராமானுஜர் (‘தினமலர்’ 27.10.2020)



சிரிக்காதீர்கள்
மனுஸ்மிருதியை எழுதியவர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயராம்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் என்னவெல்லாம் சொன்னார்? யாரேனும் இதுவரை அறிவு நாணயத்தோடு சொன்னது உண்டா? சொல்லாதது ஏன்?


சொல்ல மாட்டார்கள், சொன்னால் ‘நுணலும் தன் வாயால் கெடும்‘ என்பதுபோல மாட்டிக் கொள்வார்கள்.


அப்படியே உண்மையைச் சொன்னாலும் மனுதர்மத்தில் பெண்களைப்பற்றி இவ்வளவுக் கேவலமாகவா சொல்ல ப்பட்டுள்ளது என்பதை - இதுவரை தெரிந்துகொள் ளாதவர்களும் தெரிந்து கொள்ளும் நிலையல்லவா ஏற்பட்டு விடும். அது ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கின் கதையாக அல்லவா முடிந்து விடும்.


மனுதர்மத்தை இந்தக் கூட்டம் காப்பாற்றப் போகி றதா? அல்லது கைவிடப் போகிறதா? “உடும்பு வேண் டாம் கை வந்தால்போதும்“ என்கிற தற்காப்பு நடவடிக் கையை மேற்கொள்ளப் போகிறதா என்பது முக்கிய வினாவாகும்.



மனுதர்மத்தை அவர்களால் கை கழுவிட முடியாது; காரணம் இதுவரை அதனைத் தூக்கிப் பிடித்தவர்கள் இவர்கள்.


திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் கூறுவது என்ன?


“திருக்குறளின் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்ததும், விலக்கியன ஒழிதலும். ஆம், அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்“ என்று கூறுகிறார் பார்ப்பனரான பரிமேலழகர்.


தொல்லியல் துறையில் இயக்குநராகப் பணியாற்றிய நாகசாமி என்பவர் “Thirukural - an Abridgement of Shastras” எனும் நூலில் திருக்குறள் மனுதர்மம் முதலிய சமஸ்கிருத நூல்களின் பிழிவு என்று குறிப்பிட்டுள்ளார்.


மனுதர்மத்தை உயர்த்தியும், திருக்குறளைத் தாழ்த்தியும் பேசும் பார்ப்பனக் குணம் பளிச்சிடவில்லையா?


‘தீக்குறளை சென்றோதோம்‘ என்ற ஆண்டாளின் திருப் பாவை பாடலுக்கு ‘தீய திருக்குறளைச் சென்று ஓத மாட்டோம்“ என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பாட பேதம் செய்து தன் பார்ப்பனப் பற்றைப் பறைசாற்வில்லையா? (குறள் என்பதற்கு கோழ் சொல்லுதல் என்று பொருள்).


இத்தகு இனவெறிப் பிளிரும் பேர்வழிகள் ஜெகத் குருவாம் பார்ப்பனர்களின் அகராதியில். திருக்குறளும் மனு ஸ்மிருதியும் ஒன்றுதான் என்று சொன்னவர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (காஞ்சி ஓரியண்டல் பள்ளியில் (12.8.1976).


தமிழரான பேராசிரியர் மனோன் மணியம் சுந்தரனார் அவர்களோ என்ன எழுதுகிறார்?


“வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி” என்றல்லவா பாடுகிறார்.


மனுதர்மம் - பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினைக்குக் கத்தி தீட்டுகிறதே - அடையாளக் கோடாக மிளிர்கிறதே என்றவுடன் துடியாய்த் துடிக்கிறார்கள்.


மனுதர்மம் என்ற நூலே மனு என்பவர் எழுதியதில்லை, சர்.வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரால் 1794ஆம் ஆண்டு மனுஸ்மிருதி என்பது எழுதப்பட்டதாம்.


1887ஆம் ஆண்டில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மனுதர்மநூல் உண்மைக்குப் புறம்பானது என்று தீர்ப்புக் கூறியதாக திருப்பதி நாராயணன் அடுத்த கட்டத்திற்குச் செல்லுகிறார். ரொம்பதான் சிரமப்படுகிறார்கள் போலிருக் கிறது. அதுவும் உண்மையல்ல; 1932 வரை பிரிட்டிஷ் இந்தியா வில் தீர்ப்புகளில் மனுஸ்மிருதி முக்கிய இடம் பெற்றுள்ளது.


பார்த்தீர்களா, பார்த்தீர்களா! பார்ப்பனர்களுக்குப் பதற்றம் ஏற்பட்டவுடன் எப்படிப்பட்ட பம்மாத்துகள்.


“மனுதர்மம் இந்துசாத்திரப் பிரகாரம் ஆண்டவனால் நேரடியாக அனுக்கிரகமாக அருளப்பட்டு மனு என்பவரால் அருளிய வாக்கு என்பர். மனுவை ஸ்வயம்பு என்று கூறுவர். மனுதர்ம சாஸ்திரம் அனாதி காலமானது என்பர். ஆனால் அதை நோக்கும்போது அண்மைக் காலத்தது என்பது அறிஞர்கள் அறிவார்கள்.”


(Ancient Law sir Henry Maine)


“பதினெட்டு ஸ்மிருதிகளுக்குள் மனுஸ் மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காய் சொல்லியி ருந்தாலும், அது ஒப்புக் கொள்ளத்தக்கதன்று” என்று மனுதர்மசாஸ்திரத்தின் பீடிகையே கூறுகிறது. மனு என்ன சொன்னாரோ அது மருந்தாம்! இப்படி எல்லாம் எடுத்துக்காட்டி எழுதியவர்களின் தலை கிறுகிறுத்துச் சுற்று வது ஏன்?


தங்கள் கையைச் சுடுகிறது என்றவுடன் ஆண்டவனால் நேரடியாக அருளப்பட்டது என்பதை எல்லாம் கை கழுவும் சாமர்த்தியம் இவாளேயன்றி யாருக்குத்தான் கை வந்த கலை?


“ரிஷிகள் மனுவிடம் வந்து தருமம் கூறும்படி கேட்டதும், மனு அவர்களுக்குத் தம் உற்பத்தியையும், தம்மிடமிருந்து பத்துப் பிரதான ரிஷிகள் ஜீவராசிகள் இவர்கள் உற்பத்தியையும், பிரமன் தமக்குத் தருமத் தைப் போதித்ததையும், தாம் மரீசி முதலிய ரிஷிகளுக்கு அதைப் போதித்ததையும் கூறி, மற்ற ரிஷிகளுக்கு அதைக் கூறும்படி பிருகுவைப் பணிப்பதும், நிமேஷம் (இமைத் தல்) முதல் கற்பம் உள்ள ஈறாகவுள்ள கால மானமும், யுக தருமமும், பொருளடக்கமும் கூறப் பெறுகின்றன” என்று அளக்கப்பட்ட தெல்லாம் அரை நொடியில் காணாமற் போயிற்றா?


ஸ்மிருதி 1794ல் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரால்  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் திருவாளர் திருப்பதி நாராயணன் எப்படி எழுதுகிறார்? மொழி பெயர்த்தவரை மனுஸ்மிருதியை எழுதியவர் என்று எழுதுகிறார் என்றால் அடேயப்பா - இதைவிட “அக்மார்க்“ பித்தலாட்டம் ஒன்று இருக்க முடியுமா? எழுதியது என்பதும் மொழி பெயர்த்தது என்பதும் ஒன்றா?


விழித்திருக்கும் போதே விளையாடும் வெளி கண்ணா பரம்பரை இன்னும் தொடர் கிறது என்பதைத் தானே இது காட்டுகிறது.


பழைமைகளை, சாத்திரங்களை வாரி அணைத்து முத்தமிட்டுச் சீராட்டுவோர் மனுதர்மத்தை மறுதலிப்பதுஏன்?


 வெள்ளைக்காரர்கள் ஆட்சி வரை இந்து சட்டம் என்றால் ஆதார சுருதியாக இருந்தது இந்த ஸ்மிருதிகள் தானே  - அதிலும் குறிப்பாக மனு ஸ்மிருதி தானே!


இந்து சட்டம் குறித்து முல்லா எழுதியது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நூலில் முன்னுரையாக எழுபது பக்கங்கள் எழுதியுள்ளார்.


இந்து சட்டம் என்றால் தர்மத்தின் ஒரு பிரிவுதான். அதனுடைய ஆதாரங்கள் ஸ்மிரு திகள்தான். தர்மம் என்றால் என்ன என்று கூறப்பட்டுள்ளது -  வேத விற்பன்னர்கள் என்ன கூறினார்களோ, அவைதான் தர்மங் கள். மனுதர்மம் அத்தியாயம் - 11 சுலோகம் - 1 தர்மம் என்றால் கடமை என்று (Duty) கூறப்பட்டுள்ளது. ‘தர்மம் என்பது மத, சமூக, சட்ட அறநெறியின் பாற்பட்ட அவசியமான கடமைகள் என்பதாகும். ஆரியர்களுடைய வேத எண்ணங்கள், ஆடுமாடு மேய்த்தல் (Pastoral Stage) கட்டத்திலிருந்து ஆரியர்களுடைய சமுதாயக் கோட்பாடுகள் கொண்டவை ஆகும். (முல்லா பக்கம் 1 பாரா 2) என்கிறார் முல்லா.


ஆனாலும் ஒரே ஒருவர் பச்சையாக மனு ஸ்மிருதியைத் தூக்கிப் பிடித்தார் - அவர்தான் சோ ராமசாமி.


“பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக மனு போன்ற இப்படிப்பட்ட ஆழ்ந்த சிந் தனை இங்கே இருக்கிறது  - என்பதைக் கண்டு மேல்நாட்டு அறிஞர்கள் கூட வியந்து பார்க்கிறபோது, நாம்தான் மனுஸ்மிருதியை இகழ்ந்து பேசுவது பெருமை என்று நினைக்கிறோம். மனுஸ்மிருதியை இகழ முன்வருபவர்கள் அப்படிச் செய்வதற்கு முன்னால் அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் நல்லது” என்று எழுதினார் திருவாளர் சோ (‘துக்ளக்‘ 24.11.2010 பக்கம் 13).


சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம் - பிராமணன் கொலை செய்தால் சிகைச் சேதம் (மயிர் நீக்கம்) (மனு  - அத்தியாயம் 8 - சுலோகம் - 379).


பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன்; காலில் பிறந்தவன் சூத்திரன். அவன் விபச்சாரி மகன் (மனு அத்தியாயம் 8 - சுலோகம் 415) மாதர்கள் கற்பு நிலை யின்மையும் நிலையாமனமும், நண்பின்மை யும் இயற்கையாய் உடையவர்கள் (மனு அத்தியாயம் 9 - சுலோகம் 15).


இதற்கு மேலும் மனுஸ்மிருதியிலிருந்து எவற்றையெல்லாம் ‘சோ’ வகையறாக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.


மேல்நாட்டுக்காரர்கள் மனுஸ்மிருதி யைப் பாராட்டுகிறார்களாம் - அதற்கும் விடை உண்டு (தனி பெட்டிச் செய்தி). மனுவை மனுகணக்கில் விவாதிக்கலாம் - வாருங்கள்!


No comments:

Post a Comment