பா.ஜ.க. ஆளும் கருநாடகத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள் 263 பேர் படுகொலை :  அதிர்ச்சித் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 7, 2020

பா.ஜ.க. ஆளும் கருநாடகத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள் 263 பேர் படுகொலை :  அதிர்ச்சித் தகவல்

பெங்களூரு,அக்.7, உத்தரப்பிரதேச மாநி லம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண், சமீபத்தில் 4 பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கருநாடகத் தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த 263 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து கருநாடக மாநில காவல் துறையினர் தரப்பில் கூறியிருப்பதாவது:- கருநாடகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி வரை இரண்டரை ஆண்டுகள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்களுக்கு எதிராக 4,162 குற்றங்கள் நடந்து உள்ளன. 2018ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக மாநிலத்தில் 130 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது. 2019ஆம் ஆண்டு 210 காவல்நிலை யங்களில் வழக்குகள் பதிவானது. மேலும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு 1,219 பேர் மீதும், 2019ஆம் ஆண்டு 1,187 பேர் மீதும், 2020ஆம் ஆண்டு 899பேர் மீதும் வழக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி வரை மாநிலத்தில் 428 தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.


இதில் 2018ஆம் ஆண்டு 130 பேரும், 2019ஆம் ஆண்டு 210 பேரும், 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை 88 பேரும் கற்பழிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த இரண்டரை ஆண்டுகளில் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள் 263 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2018ஆம் ஆண்டு 113 பேரும், 2019ஆம் ஆண்டு 105 பேரும், 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை 45 பேரும் கொல்லப்பட் டுள்ளனர். இவ்வாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment