தமிழ் வைத்தியமும் சம்ஸ்கிருத வைத்தியமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 29, 2020

தமிழ் வைத்தியமும் சம்ஸ்கிருத வைத்தியமும்

- ஆனந்தம் பண்டிதர்


தமிழ் வைத்தியத்தை நாம் சித்த வைத்தியமெனக் கூறுகின்றோம். சித்த வைத்தியத்தை அரசாங்கத்தார் ஒத்துக்கொண்டு அதற்குப் பாடசாலை, மருத்துவசாலை அமைத்தபின்னர் அதைப்பற்றிச் சிலர் தங்கள் கருத்தை வெளியிடுகிறார்கள். சித்தவைத்தியம் ஒன்று தனியே இருக்கிறதா என்றும், சமஸ்கிருத வைத்தியம் ஒன்றுதானே இந்தியாவிலுள்ளதென்றும், சித்தவைத்தியமென்றால் சித்தர்களுடைய வைத்தியமென்றும், அவ்வகைச் சித்தர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களில் மட்டுந்தானா இருந்தார்கள், வேறுமொழி பேசுகிற மக்களில் சித்தர்கள் இருந்திருக்கக்கூடாதா? ஆதலால் ஏனைய சம்ஸ்கிருத வைத்தியமும் சித்தவைத்தியமாகாதா? எனவும், ஆயுர்வேத மருந்துகளும், சித்தமருந்துகளும் பலவகையில் ஒன்றாகத்தானே இருக்கிறது, அப்படியிருந்தும் ஏன் சித்தவைத்தியத்தை தனியாக வைத்து தமிழில் நடத்தவேண்டுமெனவும், பாஷைவாரியாக வைத்தியத்தைப் பிரிப்பதானால் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பாஷைக்கும் ஒவ்வொரு வைத்தியமிருக்கிறதா எனவும், சித்தவைத்தியத்திற்கு ஒழுங்கான முறையில் வைத்திய நூல்கள் தமிழில் இல்லை, ஆதலால் அஃது எப்படி ஒழுங்கான (சாஸ்திரீய) வைத்தியமாகும்? பாடபுத்தகங்கள் (டெக்ஸ் புக்கு) அதற்குச் சரியாயிருந்தால் அரசாங்கத்தார் இப்பொழுது அதற்கு ஒரு கழகம் வைத்து பாடபுத்தகங்கள் ஏற்படுத்துவானேன் என்று கூறுபவர் பலர். அவற்றைப்பற்றி ஆராய்வோம்.


....  இவ்வளவு அறிவுள்ள தமிழ் மக்கள் தங்களுக்குண்டாகும் நோய்களுக்கு மட்டும் மருந்து தெரிந்துகொள்ளாமல் இருந்திருப்பார்களா?


தற்காலம் உலகத்தை ஆளுவது கண்கூடாகக் காணப்படுவதும், சத்தியமாகியதுமான விக்ஞான சாஸ்திர மென்னும் சயன்ஸே அல்லாது, சமஸ்கிருத வேத சாஸ்திர புராண இதிகாசங்களன்று. மேல்நாட்டார் சாஸ்திர ஆராய்ச்சியினாலும் அவர்களுடைய இடைவிடா உழைப்பினாலும், நாள்தோறும் நவநவமாகக் கண்டுபிடித்து, உலகுக்களித்து வரும் அறிவின் பயனை எல்லாம் நம்மவர்கள் கண்டு வியந்து அனுபவித்துக் கொண்டு கடைசியாக இவை எல்லாம் நம்முடைய சமஸ்கிருத வேத சாஸ்திரங்களை வெள்ளை யர்கள் அள்ளிக் கொண்டுபோய் அந்நூல்களிலிருந்தே ஏரோபிளேன், வயர்லெஸ் டெலிகிராம் முதலிய எல்லா தொழில்களையும் செய்கின்றார்கள் என்று பெருமையாக சோம்பேறி வேதாந்தம் பேசுபவர்கள் சிலர்.


சமஸ்கிருத ஆயுர்வேதக்காரர் சொல்லுகிறபடி சமஸ்கிருத ஆயுர்வேத சாஸ்திரம் மிக ஒழுங்காக இருக்கின்றது. அதைப் படித்து பெரும் பட்டங்கள் பெற்ற பண்டிதர்கள் மிகுதியாக இருக்கின்றார்கள். அச் சாஸ்திரத்தில் காணும் ஔஷதிகள் எல்லாம் அப்பண்டிதர்களுடன் பாரத பூமியில் பயிராகி, ஔஷதங்களாகின்றன. அறுவை வைத்தியமும், அதற்குரிய ஆயுதங்களும் சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் மகாத்மா காந்திக்கு வந்த குடல் கிளையின் நோய்க்கும், கோகலே, சி.ஆர். தாஸ், சுரேந்திரநாத் பானர்ஜியின் நோய்க்கும், சம்ஸ்கிருதத்தில் மகா பண்டிதரா யிருந்து இந்திய வைத்தியத்துக்கு புத்துயிரளித்த பனகால் அரசர் முதலியவர்களுக்கும் இன்னும் பல இந்திய அரசர் களுக்கும் தேசத் தலைவர்கட்கும் ஏன் அந்த சம்ஸ்கிருத வைத்தியத்தில் நம்பிக்கை இல்லாமல், அலோபதி என்னும் மேல்நாட்டு வைத்தியத்தையே நம்பினார்கள்.


ஆயர்வேதத்தில் சாரீரம் என்னும் உடற்கூறும், உடற்றொழிலும் சல்லிய சாலாக்கியமெனும் அறுவை வைத்தியமாகிய இரணவைத்தியமும் அதற்கு வேண்டிய ஆயுதங்களும், மர்மஸ்தான அமைப்புகளும், பாலரோக பரிகாரங்களும், ரோகநிதானங்களும், ஔஷதப் பிராயோகங் களும் ஒழுங்காகக் கூறப்பட்டிருக்கின்றன. அதைப்போல் தமிழ் சித்தர் நூல்களில் காணப்படவில்லை யெனவும் சிலர் கூறுகின்றார்கள். அப்படி ஒழுங்காக சம்ஸ்கிருத வைத்திய சாஸ்திரமிருக்கிறபோது இந்தியன் மெடிகல் ஸ்கூலில், உடற்கூறு, உடற்சோதனைக்கு (அனாட்டமி, பிஸியாலஜி) சம்ஸ்கிருத ஆயுர்வேதக்காரர் மேல்நாட்டு ஆங்கிலமுறையில் கற்கவேண்டியதில்லை. சம்ஸ்கிருத நூலின் வழியாகவே கற்கலாம். அறுவை வைத்தியமாகிய சர்ஜரிக்கும், சம்ஸ்கிருதத் திலுள்ள சல்லிய தந்திரத்தைப் பார்த்தே செய்யலாம்; குளோரோபாம் கொடுத்து மேல்நாட்டு ஆப்ரேஷன் செய்யக் கற்றுக்கொள்ளுவானேன்? பிள்ளைபேறு பார்க்கும் முறையை சம்ஸ்கிருதத்தில் படியாமல் மேல்நாட்டாரின் மிட் ஒய்பரியை ஆங்கிலத்தில் படிப்பானேன்?


சம்ஸ்கிருத ஆயுர்வேத நூல்களைப் படித்த அளவிலே நோயின் தன்மைகளையும், நோய்வந்த காரணங்களையும், அதைப்போக்கும், மருந்துகளையும், அம்மருந்துகளை முடிக்கும் முறைகளையும், அதற்குப் பத்தியத்தையும் ஆசிரியன் உதவியின்றித் தாமே செய்யவல்லராய் எவரேனும் இருக்கின்றனரா? பெயரளவிலே அந்நூல்கள் இருக்கின்றன. ஓவியத்திற்கும், இசைக்கும், அடிசிற்றொழிலுக்கும் நூல்கள் இருப்பினும் அவைகள் ஆசிரியனின்றி பயன்படுகின்றனவா? அதுபோல ஆசிரியன் காலங்கருதி கற்றுக்கொடுத்தபின்னர் அன்றோ மேற்சொன்ன மாணவர்கள் மருத்துவர்களா கின்றார்கள். ஆசிரியன் உதவியின்றி இவ்வாயுர்வேத நூல்கள் மாணவர்களை மருத்துவர்களாக்குமேல் அவைகளுக்கு ஏற்றங்கூறலாம்.


திருமூலர் திருமந்திரம் அவ்வைக் குறள் போன்ற சிலநூல்கள் தமிழில் இருக்கின்றன. அவை சித்தர் நூல்கள். அந்நூல்களை சிலர் படிக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் சிவயோக சாதனையில் வல்லவர்களாகிவிட்டார்களா? அப்பழக்கமுடைய பெரியோர்களைத்தேடி அவர்களை யடுத்துப் பல்லாண்டு பழகினவர்களன்றோ அவ்வின்பத்தை அடையவியலும்?


அச்சுநூல்களும், ஆங்கில மருத்துவசாலைகளும் தோன்றுவதற்கு முன் தமிழ்நாட்டில் வீட்டுக் கிழவிகளுக்குத் தெரிந்திருந்த மருத்துவப் புலமையும் இக்காலத்துப் பெரும் பட்டங்கள் புனைந்து வெளிவந்துள்ள வைத்திய நிபுணர் கட்கும் தெரியாதென்றே சொல்லலாம். இம்மருத்துவக்கல்வி உலகிலுள்ள எக் கல்வியிலும் சிறந்தது. உடம்பிற்கும், உயிருக்கும் உள்ள நட்பை உணர்த்தி, அந்நட்பை நீடிக்கச் செய்ய வல்லது. ஆதலால் இவ்வரிய மருத்துவக் கல்வி ஏட்டுப் படிப்பளவில் நின்றுவிட்டால் கணக்கற்ற நோய்களும், இளமையில் இறத்தலும் மலிந்துவிடும் என்பதை உணர்ந்து, நமது முன்னோர்கள் ஏடுகளை மட்டும் பெருக்காமல் தங்கள் மாணவர்கட்கு நேரே கற்றுக் கொடுத்துக் கொண்டு வந்தார்கள். ஆகையினால் தற்கால மருத்துவப் பள்ளிக் கூடத்து மாணவர்களுக்குத் தக்கபடி நூல்கள் தமிழ் உ¬ நடையில் இல்லாமையினாலேயே சித்த வைத்திய மென்று ஒன்று இல்லை என்று சொல்வது என் பாட்டனுக்குப் பாட்டன் பெயர் எனக்குத் தெரியாமையினால் அவன் பிறக்கவே இல்லை என்று சொல்லுவதுபோல் இருக்கின்றது.


தமிழ்நாட்டுச் சித்தர்கள் வழிவந்த மருத்துவர்கள் நூல்களை வேண்டாமலே தலைமுறை தலைமுறையாய் நாடி முதலிய எண்வகை சோதனைகளால் நோய்களை உணரவும். அந்நோய்களை நாடிதாரணையால், வாயுதாரணையால். முழுக்காட்டலால், உணவால், நினைப்பால், மொழியால், செயலால், மருந்தால் போக்கவும் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இவைகளையே தங்கள் மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டு வந்தார்கள். அச்சு நூல்கள் வெளிவந்த பின்னர் அன்றோ இக்காலத்தில் எல்லார் கையிலும் மருத்துவ நூல்கள் இருக்கின்றன; எல்லாரும் மருத்துவர்களாகின்றார்கள்.


கரிசலாங்கண்ணி என்னும் கையாந்தகரை, வேம்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், கற்றாழை, நன்னாறி, பிரண்டை, சீந்தில் முதலியவைகளை முறையே ப்ருங்கரஜா, நிம்பா, சுந்தி, மரிசம், பிப்பிலி, அரிதஹி, குமரி, சாரிபா, வஜ்ரவல்லி, அமிர்தவல்லி என்னும் சம்ஸ்கிருத பெயர்களைச் சொல்லிக்கேட்டால் எந்த வில்லியர், வேடர், காட்டிலிருந்து பறித்துக் கொணர்வர்? எந்தக கடைக்காரர்கள் அவைகளை உணர்ந்து கொடுப்பார்கள்! இப்பெயர்களை வேண்டுமானால் சம்ஸ்கிருத ஏட்டுக்கல்வியால் பெறலாம்.


வடமொழிச் சொற்கள் சில தமிழில் கலந்ததனாலேயே, தமிழ் வடமொழியினின்றும் வந்ததென ஆராய்ச்சியற்றார் சிலர் உரைப்பது போல், காய்ச்சலெனும் வெப்புநோய், ஈளைநோய், வளிநோய் முதலியவைகளை முறையே ஜ்வரமென்றும், க்ஷபமென்றும், வாதமென்றும் சாதாரணமாய் வழங்கப் பெறுவதனாலேயே சித்தவைத்தியம் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்ததெனச் சொல்லுவது நியாயமா?


பழமையாய் அனுபவித்துவரும் மெய்யானதும் உயர்ந்ததும் இனிமையானதுமான பொருள்களைப் பார்க்கினும் சாதாரண புதிய பொருள்களைக் காண்பதிலும், புதிய சொற்களையும் ஓசையையும் ஏற்றுக் கொள்வதிலும், புதிய இன்பங்களை நுகர்வதிலும் மக்களின் மனஞ்செல்வது இயற்கை. ஆதலால் புதிதாகவந்த சம்ஸ்கிருத சொற்களைத் தமிழர், வடுகர் முதலியவர்கள் தமது மொழிகளில் சேர்த்துக் கொண்டதனால் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழ வந்ததென்பது எப்படிப் பொருந்தும்?


சம்ஸ்கிருதமொழி எந்தநாட்டிலும், எந்தக் காலத்திலும் மக்களால் பேசப்பட்டுவந்த தேஷபாஷைகளில் ஒன்றன்று. அம்மொழி மக்கள் பேச்சுவழக்கில் இல்லாமையால் சிலர் அதனை தேவமொழி எனக் கூறியது உபசார வழக்காகும்.


மக்களின் கருத்தை ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொள்வதற்காக மொழிகள் தோன்றியது. மொழிகள் மக்களின் மனதிலிருந்து கை, வாய், கண் முதலிய உறுப்புகளின் சமிக்கை (ஜாடை)களில் வந்து பிறகு வாய் ஓசையில் வெளிப்பட்டு அந்தந்த நாட்டு வெப்பதட்பத்துக்கும், உணவுக்கும் செயலுக்கும் தக்கபடி வாய்மொழியாகிய ஒலிவடிவம் திருத்தமடைந்தது. பிறகு நெடுநாள் கழித்து ஒவ்வொரு நாட்டாருடைய வாய்மொழிக்கும் வரி வடிவம் (எழுத்துக்கள்) ஏற்பட்டது.


அதன்பிறகு பனை ஓலைகளிலும், செப்பேடுகளிலும், கல்லிலும் எழுதத் தலைப்பட்டார்கள். தமிழ், தெலுங்கு முதலிய எல்லா மொழிகளுக்கும் சம்ஸ்கிருதம் முதல் மொழியாயிருந்திருப்பின் அம்மொழிக்குச் சொந்தமான எழுத்து இன்றுவரை இல்லாமல் இருப்பானேன். வடநாட்டார் இந்தி அல்லது நாகர எழுத்தையும், தென்னாட்டார் சம்ஸ்கிருதத்துக்காக கிரந்த எழுத்தென்று ஒரு எழுத்தையும் செய்து கொள்வானேன். கிரந்த எழுத்தென்றால் நூல்கள் எழுதுவதற்கென்றே ஏற்படுத்தப்பட்டது என்று பொருளாகின்றது.


சம்ஸ்கிருத வேதங்களை நெடுநாள் எழுத்தில்லாமல் ‘செவியாரலாக (கர்ணபரம்பரையாக) சொல்லிவந்தார்கள். ஆதலால் சம்ஸ்கிருத வேதத்திற்கு எழுதாக்கிளவி என்றும் பெயரிருக்கிறது.


இந்தியாவில் சுமார் பன்னிரெண்டு மொழிகள் வரையிருப்பதனால் வேதம், உபநிஷத், ஆகமம், யோகம், ஞானம், ஜோதிஷம், மாந்திரீகம், வைத்தியம் முதலிய நூல்களையும், அர்த்த சாஸ்திரம், யுத்தசாஸ்திரம், காந்தருவ முதலிய சாஸ்திரங்களையும் எல்லோரும் அறியும்படியான நாட்டுமொழிகளில் எழுதினால் அதற்குப் பெருமையிராதெனவோ, அல்லது இரு பல மொழிகளிலும் நூல்களை எழுதுதல் இயலாதெனவோ கண்ட முற்காலத்தினர் இந்தியாவில் நூல்களை (கிரந்தங்களை) எழுதுவதற்காக சம்ஸ்கிருத பாஷையை நடுவில் செய்து கொண்டார்கள். சம்ஸ்கிருதம், சம் = செம்மையாக, கிருதம்=செய்யப்பட்டது என்ற பொருளும் பெறுகின்றது. ஆதலால் பிற்காலத்தில் தேசபாஷைகளில் எழுதிய நூல்களை எழுதிய நூல்களை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் எழுதினார்கள். பின்னர் புதிதாக எழுதும் நூல்களை எல்லாம் அம்மொழியிலேயே எழுதத் தலைபட்டார்கள். சம்ஸ்கிருதம் படிப்போர் சிலராதலாலும் படியாதவர் பலராதலாலும் சம்ஸ்கிருதத்திற்கு ஏற்றமுண்டாயிற்று. சம்ஸ்கிருதத்திற்கு தேசபாஷைகள் மூலபாஷையே தவிர, தேசபாஷைகளுக்கு சம்ஸ்கிருதம் மூலபாஷையல்ல. சம்ஸ்கிருதம் ஒரு நாட்டாருக்கோ, ஒரு வகுப்பினருக்கோ சொந்த மொழியல்ல; நூல்கள் எழுதுவதற்காக ஏற்பட்ட பொதுமொழியாகும். பிற்காலத்தில் இதனை ஒருவகுப்பினர், தாங்கள் மக்களில் உயர்ந்தவர்கள், பூசரர்கள், தேவர்கள், மற்றவர்களெல்லாம் சூத்திரர்கள், அவர்கள் பேசும் மொழி சூத்திரமொழி, தங்கள் மொழி தேவமொழியாகிய சம்ஸ்கிருதம், அம்மொழியிலிருந்துதான் உலகிலுள்ள எம்மொழிகளும் தோன்றியதெனவும் கூறி, மேற்சொன்ன அந்த ஒரே வகுப்பினர் மட்டும் சம்ஸ்கிருதத்தைப் படித்து அதிலுள்ள நூல்களையும் படிக்க வேண்டும்; மற்றவர்கள் படித்தால் நாவை அறுத்தல், அம்மொழியைக் காதால் கேட்டால் காதில் ஈயத்தை உருக்கிவிடுதல் முதலிய கொடுமைகளை ஏற்படுத்தி பொதுமக்களுக்குக் கல்வி அறிவைத் தடுத்து, மிருகங்களைப் போல் நடத்தி தமிழ் மொழியையும் கேவலப்படுத்தினார்கள். இதனைக் கண்ட அறிவுடையவர்கள் தேசபாஷைகளை வளர்க்கவும், அதிலுள்ள நூல்கள் அழிந்துபோக எஞ்சிநின்ற மருத்துவம் முதலிய நூல்களை பள்ளி மாணவர்களுக்குத் தக்கபடி திரட்டி புத்தகங்களாக்கவும் தலைப்பட்டு அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொண்டார்கள். அரசாங்கத்தாரும் உதவி செய்து வருகின்றார்கள். இதனால் பொறாமை கொண்ட சிலர் தமிழ் மொழியையும், தமிழிலுள்ள மருத்துவம் முதலிய நூல்களையும், தமிழ் மருந்துகளையும் சம்ஸ்கிருத மொழியில் பெயர்த்தெழுதிக் கொண்டு தமிழில் என்ன இருக்கிறதென்று கூறுகின்றார்கள்.


சம்ஸ்கிருதத்திலுள்ள வேதம் உபநிஷத்து முதலியவைகளையும் தமிழிலுள்ள திருக்குறள், நாலடியார், சிலஞானபோதம், சித்தியார் முதலிய சாஸ்திரங்களையும் உலகில் எந்தநாட்டினரும் படித்துணரும்படியாக மாக்ஸ்முல்லர், ரெவரெண்டு போப்பு முதலியவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதனால் சம்ஸ்கிருதம், தமிழ் படியாதவர் பலர் உலகப் பொதுப் பாஷையாகிய ஆங்கிலத்தில் எளிதாகப் படித்து அறிந்து கொள்ளுகின்றார்கள். இதனால் ஆங்கில மொழியினின்றுதான் இருக்காதி வேதங்களும், திருக்குறள், திருவாசகம், சித்தாந்த சாஸ்திரங்களும் வந்த தெனில் எப்படிப் பொருந்தும்? அதுபோல் தமிழ் மருத்துவ நூல்களிலுள்ள பொருள் களை சம்ஸ்கிருத நூல்களில் எழுதிக் கொண்டு இப்போது எல்லாம் சம்ஸ்கிருதத் திலிருக்கிறதென்றால் அது எப்படி பொருந்தும்? தமிழைவிட சம்ஸ்கிருதத்தில் மருத்துவ நூல்கள் ஒரு ஒழுங்காக எழுதப் பட்டிருக்கிறதெனில் ஒரு பாஷையிலிருந்து மற்றொரு பாஷையில் மொழி பெயர்க்கும்போது திரட்டி முறையாக எழுதப்பட்டி ருக்கிறது. ஆதலால் சம்ஸ்கிருத வைத்திய நூல் ஒரு ஒழுங்காக இருக்கிறதெனக் கூறுவது உண்மைதான்; அந்த ஒழுங்கும் என்ன என்பதை பின்னர் கூறுவோம். தமிழில் பல சித்தர்கள் பல்லாயிரக்கணக்கான மருத்துவ, யோக, ஞான நூல்களை இலட்சக் கணக்கான செய்யுள்களில் பாடினார்கள். அவைகளெல்லாம் தற்காலமுள்ள பள்ளி மாணவர்கட்குப் பயன்படுமா? ஒருக்காலும் பயன்படாது. ஆதலால் அவைகளினின்று திரட்டித் தான் எழுத வேண்டும். அப்படி எழுதுங்காலத்தில் சம்ஸ்கிருத வைத்திய நூல்களில் இவையெல்லாம் இருக்கின்றன, அதைத்தான் தமிழில் இவர்கள் எழுதிக் கொண்டார்கள் என்றும் சிலர் கூறுவர். அதைப்பற்றி நமக்கும் ஒன்றும் குறைவில்லை .


சம்ஸ்கிருத மொழியைத் தங்களுடைய மொழி என்று ஒரு வகுப்பார் சொல்லிக் கொண்டு தமிழ் மொழியை சூத்திரர் மொழி என்று சொல்லி, தாம் பிறந்தது முதல் இறக்கும் வரையில் தாய்மொழியாகிய தமிழையே பேசிக்கொண்டு, தமிழிலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களைப் பற்றி நாம் ஆச்சரியப்படவில்லை . தமிழர்களும் மற்றவர்களும் நூல்கள் எழுதி வைக்கப்பட்ட பொது மொழியாகிய சம்ஸ்கிருதத்தை ஒரு சிறு வகுப்பினர் தங்கள் மொழியென்றும் தெய்வமொழி என்றும் சொல்லுவதை ஒத்துக் கொண்டு காலங்கழிக்கக்கூடிய நிலையில் ஒரு பெரும்பகுதி மக்கள் இருந்திருக்கிறதை நினைத்தால் மிக ஆச்சரியமாயிருக்கிறது.


சிலர் தற்காலம் சம்ஸ்கிருத ஆயுர்வேதத்திற்குத் தன்வந்தரியை முதல்வராகக் கூறுகின்றனர். தன்வந்திரி விஷ்ணுவின் அம்சு மென்றும், அவர் கைகளில் சங்கு சக்கரமும், அமுதகலசமுந்தாங்கி நெற்றியில் நாமமும் இட்டிருப்பவராக படமும் எழுதுகின்றார்கள். தன்வந்திரி பூசையும் செய்து வருகின்றார்கள். தன்வந்திரியைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். தேவர்கள் நோயினாலும் மூப்பினாலும் பகைவர்களாகிய அசுரர்களாலும் சாவாதிருப்பதற்காகப் பாற்கடலைக் கடைந்து அதில் தோன்றும் அமிர்தத்தை அருந்துவதற்கு, மத்தாக மேரு மலையைப் பிடுங்கி பாற்கடலில் நட்டுக் கயிற்றுக்குப் பதில் பூமியை ஒரு தலையில் தாங்கிக் கொண்டிருக்கும் ஆயிரந்தலையையுடைய முதல் பாம்பைப் (ஆதிசேஷனை) பிடித்து அம்மேருமலையைச் சுற்றி, தேவர்கள் ஒருபக்கம் அசுரர்கள் ஒருபக்கம் நின்று, பாம்பின் வாலையும் தலையையும் பிடித்திழுக்கும்போது  அப் பாம்பு உடல்வலி பொறுக்கவியலாமல் ஆயிரம் வாயினாலும் தனது நஞ்சைக்கக்கினது. அந்த நஞ்சுக்கு அருகிலிருக்க ஆற்றாமல் பாம்பைப் பற்றியிருந்த விஷ்ணு முதல் எல்லோரும் ஓடிவிட்டார்களென்று புராணம் கூறுகின்றது. இது ஒரு பெரியகதை. அதனைவிடுத்து நாம் எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றிச் செல்வோம். எப்படியோ நஞ்சின் கொடுமை நீங்கி, பிறகு எல்லோரும் திரும்பிவந்து பாற்கடலைக் கடைந்தார்கள். அப்பாற்கடலில் மூதேவி, சீதேவி, சந்திரன், வெள்ளை யானை குதிரை, கல்பதரு, காமதேனு (பசு) முதலிய பதிமூன்று பொருள்கள் தோன்றின. அதனுடன் விஷ்ணுவாகிய தன்வந்திரி அமிர்தம் நிறைந்த கலசத்தைப் பற்றின கைகளோடு பிறந்தாரெனவும். அத் தன்வந்திரிதான் ஆயுர்வேதத்துக்குத் தலைவர் என்றும் தற்கால ஆயுர்வேதக்காரர்கள் கூறுகின்றார்கள்.


கயிலையில் பரமேசுவரன் பார்வதிக்கும், பார்வதி நந்தி முதலிய சிவகணங்கட்கும், அசுவினி (தேவமருத்துவர்)கட்கும், அந் நந்திகளால் தன்வந்திரி அகத்தியர் முதலிய ருஷிகளுக்கும் ஆயுர்வேதம் உபதேச முறையில் வந்ததாக ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. அதில் இந்த தன்வந்திரி, யார் என்பது விளங்கவில்லை.


தமிழ்நாட்டில் தஞ்சை ஜில்லாவில் சீர்காழிக்கு அருகிலுள்ள வைத்தியநாதன், அல்லது வைத்தீசுவரன் கோயிலென்று வழங்கும் ஈசுவரன் கோயிலிலுள்ள கடவுள் வடிவத்தைத் தன்வந்திரி பூசித்து அவ்வூரிலேயே முத்தி அடைத்தார் எனக் கூறுகிற புராணமிருக்கிறது. இதனால் இத்தன்வந்தரி சைவராகின்றார்.


காசிராசன் சபையிலிருந்த மருத்துவப் புலவர்களில் தன்வந்தரி ஒருவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இக்கதைகளில் எந்த தன்வந்தரி ஆயுர்வேதத்துக்குத் தலைவர் என்பது விளங்கவில்லை. பொதுவாக ஆயுர்வேத சம்ஸ்கிருத நூல்களை செய்தவர்களில் பலர் சைவ சமயத்தினராகவும், சிலர் புத்த சமயத்தினராகம் அந்நூல்களால் புலப்படுகிறது. அவர்களுடைய நூல்களில் சிவனையும், பார்வதியையும், பிர்மாவையும், தட்சனையும், இந்திரனையும், அக்னிவேசரையுமே முக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இக்காலத்தில் வைணவ மதப் பற்றுள்ள சிலர் பாற்கடல் கடைந்த காலத்தில் வெளிப்பட்டதாகக் கூறும் தன்வந்தரிக்குச் சீரங்கத்துக் கோயிலில் ஓர் உருவம் இருப்பதாகக் கூறி,. விஷ்ணுவாகிய தன்வந்தரியே ஆயுர்வேதத்திற்கு முதல்வர் என்று கூறிக்கொண்டு வருகின்றார்கள்.


சம்ஸ்கிருத மருத்துவ நூல்களைத் தற்காலம் மொழிபெயர்ப்பவர்களும், அதைப் படிப்பவர்களும், அதை வளர்ப்பவர்களும் ஒரு சமயப் பற்றும், சாதிப் பற்றுமில்லாது கவனிக்க வேண்டும். இவர்கள் அந்நூல்களையும் அந்நூலாசிரியர்களையும் தனது மதத்தினராக்க மிகப் பாடுபடுகின்றார்கள். தன்வந்தரிக்கும் மூவிலைச் சூலம்போல் நெற்றியில் நாமம்போட்டு விளம்பரப் படுத்துகின்றார்கள். 700 ஆண்டுகளுக்கு முன் இராமாநுஜாச்சாரியார் காலத்தில் ஏற்பட்ட மதச் சின்னமாகிய நாமம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றினவர்களின் உருவங்களிலும், கடவுளரில் ஒருவராகிய விஷ்ணுவினுடைய நெற்றியிலும்கூட ஏறிவிட்டது வருந்தத்தக்கதாகும். பொதுவாக மருத்துவ நூல்களை மதத்தில் பொருத்தாமலும், அந்நூல்கள் கடவுளால் ஏற்பட்ட தென்று கூறாமலும் இருந்தால் நமது நாட்டு மருத்துவ நூல்கள் நல்ல நிலைமையை அடைந்திருக்கும்.


ஆயுர்வேதம் பிர்மா, தட்சப்பிரஜாபதி, இந்திரன் முதலிய தேவர்களால் செய்யப்பட்டதாகவும், பிறகு நாம் வசிக்கும் நில உலகத்திற்கு வந்ததாகவும், மற்றோரிடத்தில் ஆயுர்வேதத்திற்கு முதல் நூலாகிய சரகம் அக்னிவேச முனிவரால் எழுதிப் பிறகு சரகரால் ஒழுங்குபடுத்தப்பட்டு, திரடபலன் என்பவரால் விரித்துக் கூறப்பட்டு, வங்க நாட்டில் மருத்துவ குலத்தினராகிய சக்கரபாணிதத்தரால் விரிவுரை செய்யப்பட்டதெனவும் கூறப்பட்டிருக்கிறது.


அசுவினிகள் அல்லது தேவ மருத்துவர்


சூரியனிடம் தோன்றிய அசுவினி தேவர்கள் என்னும் தேவ மருத்துவர் இருவர் தெய்வலோகத்திலுள்ள தேவர்களும் மற்றவர்களும் சில பிராணிகளும் நோய்வாய்ப் பட்டு வருந்தும் போது மருத்துவம் செய்து அந்நோய்களை நீக்கினதைப் பற்றிப் புகழ்ந்து இருக்கு வேதத்தில் பல இடங்களில் பாடல்கள் காணப்படுகின்றன. சிவனை மதியாது தக்கன் செய்த வேள்விக்கு சென்ற தேவர்களில் ஒருவனாகிய சூரியனுக்கு வீரபத்திரரால் பல் தகர்க்கப்பட்ட காலத்தில் இத்தேவமருத்துவர் வேறு பல் உண்டு பண்ணியதாகவும், சந்திரனுக்கு ஏற்பட்ட குறை (க்ஷய) நோய்க்கு மருந்து கொடுத்து அவன் உடலை வளர்க்க இந்திரனுக்கு அங்கமெலாந்தோன்றிய ஆயிரம் பெண்குறியை, ஆயிரம் கண்ணாக மாற்றினதாகவும், குபேரனுக்கு ஒரு கண் குருடானதற்குக் கண் வைத்தி யம் செய்ததாகவும், எல்லா உயிர்களையும் ஆட்டி வைக்கும் சனீசுவரனுக்கு இருப்புப் பொய்க்கால் வைத்துச் சேர்த்ததாகவும் இன்னும் பலகதைகள் கூறப்பட்டிருக்கின்றன.


இதனால் சொர்க்க லோகத்திலுள்ள தேவர்கட்கும் பல ஆபத்துகளும் பகையும், பலநோய்களும் இருக்கின்றனவென்றும் அவைகட்கு பாற்கடல் கடைந்தெடுத்த அமிர்தமோ, அப்பாற்கடலில் தோன்றிய விஷ்ணுவாகிய தன்வந்தரியின் கை அமிர்தமோ பயன்படாமல் தேவர்களும் பலர் நோய்வாய்ப்பட்டு வருந்தினார்களென்றும் ஆங்கு அசுவினிகளே மருத்துவர்களாயிருந்து மருத்துவம் செய்தார்களெனவும் கூறுகின்றது. இவ்வகையான பொய்க்கதைகள் தமிழ்ச் சித்தர் நூல்களில் காணக்கிடையா. வடமொழி ஆயுர்வேதக்கில் ஓரிடத்தில் மருத்துவ சாலைகளைப் பற்றிக் கூறிப் பெண்கள் கருவுயிர்க்கும் அறையைப் பற்றிக் கூறும்போது பிராமணப்பெண் கருவுயிர்க்கும் அறையின் உட்புறம் சுவர் வெள்ளை நிறம் பூசப் பட்டதாகவும், க்ஷத்திரியப் பெண் கருவுயிர்க்கும் அறை மஞ்சள் நிறமாகவும், வைசியப் பெண் கருவுயிர்க்கும் அறை சிவப்பு  நிறமாகவும், சூத்திரப்பெண் கருவுயிர்க்கும் அறை சிவப்பும் கறுப்பும் கலந்த நிறமாகவும் இருத்தல் வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது. சூத்திரர்களுக்குங் கீழ்ப்பஞ்சமர் என்ற வகுப்புப் பெண்கள் கருவுயிர்க்கும் அறைக்கு முழுக்கறுப்பு பூசப்படல் வேண்டுமென்று கூறப்படாமலிருப்பதால் பஞ்சமர் முதலிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு வைத்தியசாலையில் இடமில்லையெனத் தெரிகிறது. இப்படி மருத்துவத்திலும் வருணவேற்றுமை (சாதிவேற்றுமை) தமிழ்ச் சித்தர் நூல்களில் காணக்கிடையாது.


ஆனால் பல மருத்துவர்களுடைய பரம்பரை அனுபவ மருந்து முறைகளைப் பிற்காலத்தில் இருந்த மருத்துவர் பலர் தங்கள் படிப்புக்குத் தக்கபடி பாடல்களாகத் தாங்கள் பாடி, அந்நூல் பெருமையடைவதற்காகச் சித்தர்களின் பெயரை அந்நூலுக்கு வைத்துள்ளார்கள். கடவுளர்களும், தேவர்களும் சம்ஸ்கிருத ஆயுர்வேதத்தை எழுதினார்களென்று பெருமை கூறப்பட்டிருப்பதைக்கண்ட பிற்காலத் தமிழ் மருத்துவர்கள் சிலர் தமது தமிழ் மருத்துவ நூலுக்கும், பெருமை வேண்டுமெனக் கருதி, தமிழிலும் பரமசிவன் பார்வதிக்கும் பார்வதி முருகனுக்கும், நந்தி கணங்களுக்கும் மருத்துவ நூலைச் சொல்ல நந்திகள் மற்றச் சித்தர்களுக்கு உபதேசித்ததாகவும், இலட்சக்கணக்கான பாடல்களைச் சிவனார் முதலியவர்கள் தமிழில் பாடினார்களென்று தமிழ் மருத்துவ நூலிலும் பொய்யும் புனைந்துரைகளும் சேர்க்கத் தலைப்பட்டார்கள். இவ்வகைத் தமிழ் வைத்தியப் பாடல்கள் யாருடையாதாயிருப்பினும், சமீபகாலத்தில் இருந்த அலங்காரக் கவியாகிய தேரையர் என்பவரின் பாடலைப்போல் சொல்லலங் காரம் இல்லையாயினும், அப்பாட்டில் சொல்லப் படுகிற மருந்து முறைகள் சித்தர் களுடையதென்பதே பலர் கொள்கை. ஏனெனில் பாடல் இலக்கணமாயிராவிடினும் மருந்து முறைகள் நல்லதாகவே காணப்படுகின்றன. தமிழர்களுடையே நூல்களிலுள்ள பல விஷயங்களையும், மருந்து முறைகளையும் சம்ஸ்கிருதத்தில் எழுதிக் கொள்ளப்பட்டதென முன்னரே கூறினோம். தமிழ்நாட்டில் சம்ஸ்கிருத மொழிக்கு ஏற்றமுண்டான காலத்தில், தமிழில் பனை ஓலையிலுள்ள பல பழைய மருத்துவ நூல்களைப் பிழை திருத்தி அச்சிடுவதற்கு முன்வந்த சிலர் தமது தமிழ் மருத்துவநூல் விலையாகவேண்டுமென்னும் நோக்கத் தால் தமது நூல் தேவமொழியாகிய சம்ஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்து எழுதப்பட்டதென்று கூறினார்கள்.


பண்டைக் காலத்தில் மனிதர்களுக்குண்டாகும் பசிநோய்க்கு எந்தெந்த நிலங்களில் என்னென்ன உணவுகள் கிடைக்கின்றதோ அதை உண்டு வாழ்ந்தார்கள். அதேபோல் அந்தந்த நிலத்தின் வெப்ப தட்ப வேற்றுமைகளாலும் உணவு செயல்களின் வேற்றுமை களாலும், பருவகால வேற்றுமைகளாலும், நோய்கள் வருங்காலத்திலெல்லாம் அந்நோய்க்கு அவர்களுக்கு அருகில் அநுபவத்தில் கண்ட மூலிகைகளையும், மற்றப் பொருள்களையும் அருந்தி மருந்துகளாகக் கண்டார்கள். உணவின் பக்குவங்களாலும் நோய்களைப் போக்கிக் கொண்டார்கள். இவ்வனுபவங்களைத்தான் மருத்துவம் என்று கூறுவது. இவ்வனுபவங்களை மக்கள் எழுதி வைத்ததையே மருத்துவ நூலெனப் படுகிறது.


இந்தியாவில் சம்ஸ்கிருத மொழியில் பல புத்தகங்கள் எழுத நேர்ந்தபோது வட நாட்டில் மக்கள் அனுபவித்த மருத்து மூலிகைகளைப் பற்றியும், தென்னாட்டு மருந்து முறைகளைப் பற்றியும், தேஷபாஷைகளில் உள்ள வைத்திய விஷயங்களையும் அவ்வப்போது ஒவ்வொருவரும் எழுதித் தொகுத்துக் கொண்டே வந்தார்கள். இதுதான் ஆயுர்வேதமாகும். இதனை விடுத்து சம்ஸ்கிருதத்திலுள்ள ஆயுர்வேதம் விண்ணுலகி லுள்ள கடவுளர்களும், தேவர்களும் எழுதி அனுப்பினார்கள் என்பது இக்காலத்திற்குச் சிறிதும் பொருந்தாததாகும். இதுவன்றிச் சம்ஸ்கிருத ஆயுர்வேதத்திலிருந்துதான் தமிழ்வைத்தியம் வந்ததென்றும் சொல்லிக்கொள்ளுவதாலும் பயனில்லை. தமிழ் நாட்டில் மக்கள் நோய் வந்தகாலத்தில் செய்துவந்த மருந்து முறைகளும், நோய்வராமல் தடுத்துக் கொள்ளும் சுக வழிகளும், தங்கள் அனுபவத்தில் நல்லதென்று கண்டவை களையெல்லாம் தமிழ்மொழியில் எழுதிவைத்தார்கள். அந்நூல்கள் பல இறந்து பட்டன. எஞ்சி நிற்பனவற்றையாயினும் அழியவிடாமல் பொதுஜனங்கள் அதன் பயனை அடைந்து, நோய்களின் துன்பம் குறையும்படி செய்வதுதான் நமது வேலையாகும். பொய்யைச் சொல்லியும் உள்ளதை மறைத்தும் இனி நாம் வாழமுடியாது.


மேல் நாட்டு மக்களால் நாள்தோறும் கண்டுபிடித்து எழுதப்படும் மருத்துவ நூல்களையும், மற்ற நூல்களையும் உலகத்தார் படித்து மகிழவில்லையா? அவர்கள் செய்கிற நூல்களை எந்த கடவுளாவது செய்தார் என்று அவர்கள் சொல்லவில்லை.


எல்லா அண்டகோடிகளையும், எண்ணிறந்த உயிர்வகைகளையும் இவைகட்கு ஆதாரமாகிய ஐம்பெரும் பொருள்களையும் கடவுள் படைத்தார் என்பதை ஆஸ்திக புத்தியுள்ள எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள். ஆனால் குறிப்பிட்ட ஒரு மொழியையோ ஒரு சுவடியையோ மட்டும் கடவுள் செய்தார் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆதலால் இந்த விஷயத்தை இனி வளர்த்தாமல் நாம் முடித்துக் கொள்ளுகின்றோம். தமிழ் அல்லது சித்த வைத்தியமென்பதில் உள்ள தனிப்பெருமை என்னவென்றால், நாடி முதலிய எண்வகை சோதனைகளால் நோய்களை அறிதலும், இயற்கை வைத்தியமாகிய மணி, மந்திர, யோகமுறைகளும், அயம், வெள்ளி, பொன் முதலிய உலோக வகைகளையும், இரச, கெந்தக, பாஷாணாதி களையும், சிந்தூரம் பஸ்பங்களாகச் செய்து மக்கள் நோய்களைப் போக்கி வருவதே யாகும். இதுதான் தமிழரின் சொந்த முறை என்று கூறுகின்றோம். தமிழிலுள்ள சில விஷயங்களும் சம்ஸ்கிருதத்தில் இருக்கிறதெனில், அது பிற்காலத்தில் சம்ஸ்கிருதத்தில் எழுதிக்கொண்டதென்பதற்குப் பல ஆதாரங்கள் காணக்கிடக்கின்றன. ஆதலால் தமிழ் மொழியோ, தமிழிலுள்ள மருத்துவம் முதலிய நூல்களோ சம்ஸ்கிருதத்திலிருந்துதான் வந்தன என்பது சிறிதும் பொருந்தாததாகும்.


மருத்துவன், 1928, ஜனவரி, பக். 91-96, பிப்ரவரி, பக். 121-123, மார்ச் பக். 137-142


No comments:

Post a Comment