கோயபல்ஸ்களே பதில் சொல்லுங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 22, 2020

கோயபல்ஸ்களே பதில் சொல்லுங்கள்

"கீமாயணம் எழுதியது - நடத்தியது உண்மையா?" 


"அண்ணா எழுதிய வசனம் - ஆதாரம் எங்கே?"


*மின்சாரம்



இவ்வளவு நீட்டி முழக்கி எழுது கிறார்களே - முதலில் ஒரு கேள்வி.


‘ஹிந்து’ என்ற பெயர் வெள்ளைக்காரக் கிறிஸ்தவன் வைத்த பெயர்தானே! முதலில் இந்தப் பெயரை மாற்றுங்கள் பார்க்கலாம்.


காஞ்சி சங்கராச்சாரியாரே இதனை ஒப்புக் கொண்டுள்ளாரே!


- சந்திரசேகரேந்திர சரஸ்வதி ‘தெய்வத் தின் குரல்’ முதல் பாகம் பக்கம் 267


எப்பொழுது பெயர் மாற்ற உத்தேசம்?


ஹிந்து மதத்தைப்பற்றி உங்கள் விவேகானந்தர் என்ன சொல்கிறார்?


“ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் களுக்கு மட்டும் என்றிருந்த உரிமைகளை உடைத்ததற்காக முஸ்லிம் ஆட்சிக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்தி யாவில் ஏற்பட்ட முஸ்லிம் ஆட்சி விடுதலை வழங்கியது. எனவேதான் அய்ந் தில் ஒரு பங்கு மக்கள் முஸ்லிம்களாயினர். வாள்தான் இந்த மத மாற்றத்தை முழுதும் ஏற்படுத்தியது என்பது சரியல்ல.


வாளும், நெருப்புமே இத்தனை பேரையும் மாற்றியது என்று கூறுவது பயித்தியக்காரத்தனத்தின் உச்ச நிலை யாகும்.


20 விழுக்காடிலிருந்து 50 விழுக்காடு சென்னை மாகாண மக்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி விடுவார்கள். நீங்கள் அவர்கள் குறைகளைக் களையவில்லை யானால் நான் மலபாரில் பார்த்ததைவிட மட்டமான ஒரு விஷயத்தை உலகில் எங்கேனும் யாரேனும் பார்த்திருக்க முடியுமா? உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த வர்கள் செல்லும் தெரு வழியே ஏழைப் பறையன் செல்ல அனுமதிக்கப்படுவ தில்லை.


ஆனால் அதே ஏழைப் பறையன் ஒரு விசித்திரமான ஒரு ஆங்கில கிறிஸ்துவப் பெயரை தனக்குச் சூட்டிக் கொண்டால், பின்னர் அவன் உயர்ஜாதியினர் செல்லும் தெரு வழியே செல்ல அனுமதிக்கப்படு கிறான். இந்த நடைமுறையிலிருந்து இந்த உயர்ஜாதி மக்கள் அனைவரும் பயித்தியக் காரர்கள் என்றும், அவர்கள் இல்லங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயித்தியக்கார விடுதி என்றும் தெரியவில்லையா?”


- இவ்வளவையும் சொல்பவர் திரா விடர் கழகத் தலைவரா? கருஞ்சட்டை யினரா? அமெரிக்கா வரை சென்று உங்கள் மதத்தைப் பற்றி முழங்கி வந்தாரே - சாட்சாத் அதே விவேகானந்தர் அல்லவா!


உங்களைப் போல ஆதாரம் இல்லாமல் பேசுவதோ எழுதுவதோ எங்களிடம் கிடையாது. அதுவும் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறீராமகிருஷ்ண தபோவனம் 1933இல் வெளியிட்டுள்ள “The Man Making Message of Vivekananda for the Usage of Students” எனும் நூலி லிருந்து தான் இதனை எடுத்துத் தருகி றோம்.


தினமலராக இருக்கட்டும் - இது எடுத் துக்காட்டியுள்ள பிரபல “மன்னிப்புப் புகழ்” ராஜாக்களாகட்டும், குருமூர்த்திகளாகட்டும், அல்லது எந்த சாஸ்திரிகளாகட்டும், சங்கர மடத்தார்களாகட்டும் மறுப்பு சொல்லட் டுமே பார்க்கலாம்.


“கீமாயணம்“ எழுதியது யார்? என்ற கேள்வி வேறு!


அதையேதான் நாங்களும் கேட்கி றோம். “கீமாயணம்“ என்று எழுதியது யார்?


இப்படியொரு பொய்யை எழுதி விட்டு - நம்மைப் பார்த்து பொய்யர் என்று சொல்லுவதுதான் பொய்யிலே புழுத்த இந்தப் புரோகிதக் கூட்டத்தின் புத்தி.


மீண்டும் கேட்கிறோம். “கீமாயணம்“ எழுதியது யார்? அப்படியொரு நூல் எங்களால் எழுதப்பட்டு இருந்தால் கொண்டு வந்து காட்டுங்கள் பார்க்கலாம் - சவால்! சவால்!!


நடிகவேள் எம்.ஆர். இராதா நடத்தியது - இராமாயணமே தவிர கீமாயணம் அல்ல.


நாடகத்தின் தொடக்கத்திலேயே பல பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப் படுவதுதான் எங்களால் நடத்தப்படும் இரா மாயண நாடகம் என்று அறிவித்து விட்டுதான் நாடகத்தைத் தொடங்குவார்.


மதுரை மீனாட்சிபற்றி அண்ணா எழுதியதுகுறித்தும் மன்னிப்பு ராஜா கூறுகிறார்; உண்மைதான் புராணங்கள்பற்றி அக்குவேர் ஆணிவேராக அலசி எடுத்தவர்தான் அண்ணா. ÔஆரியமாயைÕ எழுதி, Ôஇந்து என்று சொல்லோம். இழிவைத் தேடிக் கொள்ளோம்Õ என்று எழுதியவர்தான் அண்ணா.


ஆனால், தினமலர் எடுத்துக்காட்டும் ஆசாமி சொல்லும் அந்த வரி வசனம் எங்கே எந்த இடத்தில், எந்த நூலில் சொன் னார்? அறிவு நாணயத்தோடு எடுத்துக் காட்டட்டுமே பார்க்கலாம் - இதற்கும் ஒரு சவால்!


“அடியே மீனாட்சி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி” என்ற வசனத்தை எங்கே எழுதினார். கையில் ஆதாரம் இருந்தால் எடுத்துக்காட்டட்டும் - இல்லையெனில் சலாம் போட்டு ஓடட்டும்!


இதில் டவுட் தனபால் தன் பங்குக்குக் கருத்துத்தானம் செய்துள்ளது.


ஹிந்துக்கள் தொடர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டால் எந்த கட்சித் தலைவரும் ஹிந்து மதத்திற்கு எதிராக குரல் கொடுத் திருக்க மாட்டார்களோ என்ற டவுட் வருகிறதாம்.


‘தினமலருக்கு’ இதில்கூட உறுதியில்லை - பார்த்தீர்களா? அதற்கே ‘டவுட்’ தானாம்!


ஹிந்துக்கள் எப்படி ஒன்று சேர முடியும்? பிறப்பிலேயே பேதத்தை உண்டாக்கிவிட்டு ஒருவன் கடவுள் ‘பிர்மா’ முகத்திலே பிறந்தான், இன்னொருவன் காலிலே பிறந்தான்- அதற்கும் கீழே பஞ்சமன்-அவன் தீண்டத்தகாதவன் - படிக்கக் கூடாதவன் என்பதை மதத்தில் அடிப்படை ஆதாரமாக வைத்துக் கொண்ட ஒரு மதம் எப்படி ஒன்றுபட்டு எழ முடியும்?


அடி மட்டத்துக்குப் போக வேண்டாம் சங்கராச்சாரியாரை ஜீயர் ஏற்றுக் கொள் கிறாரா?


1982இல் திருவரங்கத்தில் ரெங்கநாதர் கோயில் மொட்டைக் கோபுரம் சீர் செய்யப் பட்டது. அக்கோயில் மடத்து ஜீயரின் மேற்பார்வையில் இது நடந்தது.


அதன் குட முழுக்கு முடிந்த நிலையில் அவரைக் Ôகல்கிÕ இதழ் பேட்டி கண்டது.


கேள்வி: சைவர்கள் வைணவக் கோயிலுக்கு உதவுவதுபோல சைவ ஸ்தல பணிகளுக்கு வைணவர்கள் ஏன் உதவுவது இல்லை? நீங்கள் சிவன் கோயில் திருப் பணிகளுக்கு உதவி செய்வீர்களா?


ஜீயர் பதில்: நான் சிவன் கோயிலுக்கு உதவி செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன்தன் நாபியிலிருந்து படைத்தான். அந்தப் பிரம்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தால் சங்கரனுக்கும் (சிவ பெருமானுக்கு) நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான் தபஸ் பண்ணி அந்த பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும் அதேபோல, சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியில் தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றாருன்னும் சாஸ்திரம் இருக்கு. இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தவஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால், நாராயணன் எப்போதும் உள்ளவர் பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவர், அவரை வழிபடற நாங்களும் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாக கொண்டு வழிபட்டு, மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை  வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தர மாட்டேன்”


(‘கல்கி’ - 11.4.1982)


இவ்வளவையும் சொல்லியிருப்பவர் வைணவக் குருவான ஜீயர் - பேட்டி கண்டு வெளியிட்டதோ ‘கல்கி’ இதழ்!


தினமலரும், மன்னிப்புப் புகழ் ராஜாக்களும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?


ஹிந்து மதக் கடவுள்களுக்குள்ளேயே ‘நான் பெரியவனா? நீ பெரியவனா?’ என்ற சண்டை இருக்கு.


ஹிந்து மதக் கடவுள்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை; இந்த இலட்சணத்தில் ஹிந்துக்களை ஒன்று சேர்ப்பது எப்படி?


முதலில் இதில் முடிவு கண்டபிறகு பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகச் சொல்லிக் கொள்பவர்கள் எங்களிடம் வரட்டும்.


I. ‘கீமாயணம்‘ என்று நாங்கள் யாரும் எழுதவில்லை.


II. அண்ணா எழுதியதாகச் சொல்லும் அந்த வசனத்துக்கு ஆதாரம் எங்கே?


III. ஹிந்துக் கடவுள்களுக்குள் ளேயே ஒற்றுமை இல்லை. ஹிந்துக்கள் ஒற்றுமைப்படுவது எப்போது?


முடிந்தால் கோயபல்ஸ்கள் பதில் சொல்ல முயற்சிக்கட்டும்!


No comments:

Post a Comment