பார்ப்பனர்களுக்கு வந்திருப்பது துணிச்சலா அசட்டுத் துணிச்சலா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

பார்ப்பனர்களுக்கு வந்திருப்பது துணிச்சலா அசட்டுத் துணிச்சலா

பார்ப்பனர்களுக்கு வந்திருப்பது  துணிச்சலா? அசட்டுத் துணிச்சலா?



பாரப்பன ஏடுகளும், பார்ப்பனர்களும், தந்தை பெரியார்பற்றியும், திராவிட இயக்கத்தைப் பற்றியும் அவமதித்து எழுதுவது, சேறுவாரித் தூற்றுவது, பொய்ப் புனைவுகளை வாரி இறைப் பது, சமூக வலைதளங்களில் துர்நாற்றம் எடுக்கும் வார்த்தைகளைப் பதிவு செய்வது உள்ளிட்ட வகைகளில் செயல்படுவது பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட துணிச்சல் என்று கருத முடியாது.


அசட்டுத் துணிச்சல்!


மத்தியிலும், மாநிலத்திலும் அவர்களுக்குச் சாதகமான ஆட்சி இருக்கிறது என்ற எண் ணத்தில், தடாலடியாக நடந்துகொள்வது புரிகிறது.


இதற்குப் பெயர் துணிச்சல் அல்ல; அசட் டுத் தைரியமே! இதனால் மக்கள் மத்தியில் எண்ண அளவிலும், உணர்ச்சி அளவிலும் எதிர்வினைதான் பேருரு எடுக்கும் என்பது - தமிழ்நாட்டின் கடந்தகால வரலாற்றை உணர்ந்தவர் நன்கு அறிவர்!


எதைக் காட்டுகிறது?


தந்தை பெரியார்  சிலை அவமதிக்கப்பட்ட நிலையில், பி.ஜே.பி.யைத் தவிர அனைத்துக் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் பொங்கி எழுவது எதைக் காட்டுகிறது?


பா.ஜ.க. கண்டனம் தெரிவிக்காததிலிருந்து அது பார்ப்பன ஜனதா என்பதும் மக்களுக்குப் பச்சையாகவே புரிகிறது.


இனநலம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி, பெண்ணுரிமை என்று எடுத்துக் கொண் டாலும் சரி, மூடநம்பிக்கை எதிர்ப்பு என்று எடுத்துக்கொண்டாலும் சரி, சமூகநீதி என்று எடுத்துக்கொண்டாலும் சரி,  கட்சிகளுக்கு அப்பால், மத உணர்வுகளுக்கு அப்பால், தமிழ்நாட்டு மக்கள் தந்தை பெரியார் பக்கம் ஏன் நிற்கிறார்கள் என்று பார்ப்பனர்கள் புரிந்துகொள்ளாதவரை - புரிந்துகொண்டு அதற்கேற்ப நடக்காதவரை - பார்ப்பன வெறுப்பு என்பது மேலும் மேலும் எரிமலை யாகக் கொழுந்துவிட்டு எரிந்து அக்னிக் குழம்பினை வாரி இறைக்கும் என்பதுதான் யதார்த்த நிலை.


ஒரே காலகட்டத்தில் பொதுத் தொண் டாற்ற வந்த தந்தை பெரியார், ராஜாஜி ஆகிய இரு தலைவர்களையும் எடுத்துக் கொள் ளுங்கள்.


மக்கள் மனதில் நிற்பவர் யார்?


இருவரும் கிட்டத்தட்ட சம அளவு காலம் வாழ்ந்தவர்கள்தான் (இராஜாஜி


ஓராண்டு மூத்தவர்!). ஆனால், மக்கள் மத்தியில் மண்ணை மணந்த மணாளராக மதிக்கப்படுபவர் இருவரில் யார்? என்பதை ஒப்பிட்டுப் பார்த்தாலே  இதன் பின்னணியில் கனன்று கொண்டிருக்கும் உணர்வு எத்தகை யது என்பது எளிதிலே விளங்கும்.


ராஜாஜி என்றாலே குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து, பார்ப்பனர் அல்லாத மக் களின் கல்விக் கண்களைக் குத்தியவர் என்பதும், தந்தை பெரியார் என்றாலே, ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைத்து, பார்ப்பனர் அல்லாத மக்களுக்குக் கல்விக் கண் திறப்பதற்குக் காரணமாக இருந்தவர், வகுப்புரிமைக்காக இந்தியாவின் அரசமைப் புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்தவர், ஒடுக் கப்பட்ட மக்களின் உரிமை- வாழ்வுரிமைக்கும், பெண்களின் எழுச்சிக்கும் வித்தாகவும், தூணா  கவும் இருந்தவர் என்ற எண்ணம்தானே நாட்டு மக்களிடத்திலே நிலைபெற்று இருக் கிறது.


நாடாளுமன்றத்தில் பெரியார்...


நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுக்கும்போதுகூட, ‘பெரியார் வாழ்க!' என்ற முழக்கம் கேட்கிறதே!


பார்ப்பனர்கள் கொஞ்சம் புத்திசாலிகளாக இருந்தால் இந்தச் சூழலை எல்லாம் நுணுக்க மாகப் புரிந்துகொண்டு, காலத்தின் போக்கை யும் உணர்ந்துகொண்டு உகந்த முடிவை எடுப்பார்கள்.


ஆனால், அத்தகைய நல்ல சிந்தனையும், வழிகாட்டும் தக்க தலைமையும் இல்லாமல் பார்ப்பனர்கள் தங்களுக்கு ஏதோ குப்தர் ஆட்சிப் பொற்காலம் வந்துவிட்டதாகத் துள் ளிக் குதித்தால் - துள்ளிய மாடு பொதி சுமக்கும் என்ற நிலைக்குத்தான்  தள்ளப்படுவார்கள் - இது சுவர் எழுத்தும், கல்வெட்டுமாகும்.


எவ்வளவு நேரம் ஆகும்?


பெரியார் சிலைமீது செருப்பைத் தொங்க விட்டால், அதற்கு எதிர்வினையாக தமிழ் மக்கள் காலில் உள்ள செருப்பைக் கையில் எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்! எண்ணிப் பார்க்கவேண்டாமா? பெரியார் சிலை மீது தொங்கவிடப்பட்ட செருப்பு மாலைகள் அப்படியே இருக்கட்டும் - பல நாட்கள் நாட்டு மக்கள் பார்க்கட்டும் - அதனால் எத்தனை மடங்கு ஆவேசம்  - அக்னிப் பிழம்பாகக் கொந்தளித்து எழும்! அதற்குக் கருவியாகப் பயன்படும் அனுமார்கள் யார்? அவர்களை இயக்கும் சக்தி எது? என்பது - நாம் பிரச் சாரம்மூலம் விளக்கி உணர வைப்பதைவிட , பெரியார் சிலைமீது தொங்கும் செருப்பு மாலை பல மடங்கு உணர்ச்சியையும், ஏன் வெறியையும் உரு வாக்கி விடும் என்பது இயக்கத்தின் நிலைப் பாடு.


கடலூரில் தந்தை பெரியார் உயிரோடு இருக்கும்போதே அவர்மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில் இப்பொழுது பெரியார் சிலை கம்பீரமாக நிற்கவில்லையா?


இந்தக் காலகட்டத்தில்கூட தலைவர் வீரமணியைப் பழனியில் பார்ப்பனர் மாநாட்டு ஊர்வலத்தில் பாடை கட்டித் தூக்கவில்லையா? பதிலடி என்ன தெரியுமா? அந்தத் தலைவருக்கு எடைக்கு எடை தங்க மல்லவா கொடுத்தனர்!


செருப்பும் - சிலையும்!


எதிர்ப்புகளின் எருவில்தான் - வீசப்பட்ட கற்களின் அஸ்திவாரத்தின்மீதுதான் - உடலால் மறைந்து 47 ஆண்டுகளுக்குப் பிறகும், பெரியார் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டுள்ளார் -  அள்ளிக் கொடுத்துச் சென்றிருக்கும் உயர் எண்ணங்களின் வெளிச்சத்தை அவர்கள்  செல்லவேண்டிய பாதைக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.


குருமூர்த்தி என்ன எழுதுகிறார்?


பார்ப்பனர்களின் மனப்பான்மை எப்படி இன்று இருக்கிறது?


இதோ ‘துக்ளக்'கில் ஒரு  கேள்வி - பதில்:


கேள்வி: 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்ற தற்குக் காரணம் இராஜாஜியின் எதிர்ப்பா, ஈ.வெ.ரா.வின் ஆதரவா?


பதில்: இராஜாஜியால் மிளிர்ந்த தி.மு.க. வென்றது; ஈ.வெ.ரா.வால் நெளிந்த காங்கிரஸ் தோற்றது.


(‘துக்ளக்', 5.8.2020, பக்கம் 14)


உண்மையில் வென்றது யார்?


சரி... தி.மு.க. வென்றது - எந்தக் காரணத் துக்காக இராஜாஜி தி.மு.க.வை ஆதரித்தாரோ - அந்தக் காரணத்தில் இராஜாஜி வென்றாரா? தந்தை பெரியார் வென்றாரா?


1967 தேர்தல் முடிந்து ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. - முதலமைச்சர் அண்ணா, ‘‘இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை!'' என்று பிரகடனப்படுத்தினாரே, இதில் மிளிர்ந்தவர் யார்? நெளிந்தவர் யார்?


பார்ப்பனத் ‘துக்ளக்கே' பதில் சொல் பார்க் கலாம். (இதுவரை எதற்குப் பதில் சொல்ல முடிந்தது அவர்களால்?)


ஏன் 1967 தேர்தலோடு ‘துக்ளக்' நிறுத்தி விட்டது - 1971 பக்கம் ஏன் பார்வை செல்ல வில்லை - (அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே என்பதாலா?)


 


ஆச்சாரியாரின் திட்டமும் - அண்ணாவின் திட்பமும்!


‘‘விரைவில் மத்திய ஆட்சியில் சுதந்தரா, ஜன சங்கம், தி.மு.க. வந்துவிடும். இந்த மூன்று கட்சிகளும் நன்றாக அய்க்கியமாகிவிடும். இந்தக் கட்சிகளி டையே வேறுபாடுகள் இருப்பதாகக் கூறுவது மேலுக்குத்தான். உள்ளே மூன்று கட்சிகளும் ஒரே நோக்கமுடையவை. சுதந்தரா கட்சி தேசப் பொரு ளாதாரத்தை நன்கு உணர்ந்தது!


ஜனசங்கம் மக்களை ஊக்குவிப்பதிலும், ஒற்று மையை வளர்ப்பதிலும் அக்கறை கொண்டது.


தி.மு.க.வும் அப்படித்தான். ஆனால், தமிழ் நாட்டில் நிலைமை வேறுமாதிரியாக இருப்பதால், தி.மு.க. தமிழ்நாட்டிலேயே இருக்கட்டும்.


மத்திய ஆட்சியில் இந்த மூன்று கட்சி கூட்டாட்சி ஏற்பட்டதும், கஷ்டங்கள் குறையும், மோசங்கள் நீங்கும். அதுவரை எப்படிக் காலந்தள்ளுவது என்று கவலைப்படாதீர்கள். கடவுள் அதற்காக அருள் செய்வான்.


எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று பயந்துகொண்டு குடும்பக் கட்டுப்பாட்டில் ஈடுபட்டு மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி விடாதீர்கள். நிறைய குழந்தைகளைப் பெறுங்கள். இதுவரை கடவுள் எப்படிக் காப்பாற்றினானோ அதுபோல இனியும் காப்பாற்றுவான். வயோதிகர்கள், வியாதி யஸ்தர்களுக்குத்தான் இது சாத்தியமாகாமலிருக் கலாம். வாலிபர்களுக்குச் சொல்லத்தான் சொல்லு கிறேன். நிறைய குழந்தைகள் இருந்தால்தான் ஏதாவது  அவசர காலங்களில் வீட்டுக்கு 4, 5 ஆட்கள் அனுப்ப முடியும். இரண்டு, மூன்று குழந்தைகள் என்றிருந்தால், பிறகு அழவேண்டிய நிலைதான் வரும். நான் அண்ணாத்துரைக்காக சொல்லவில்லை; இது என் சொந்தக் கருத்து.


இந்த ஆட்சியை எப்படி கீழே இறக்குவது என்று பல ஆண்டுகளாக நான் யோசித்தேன். முன்காலத் தைப்போல ரத, கஜ, துரக, பதாதிகளை (ராணு


வத்தை)க் கொண்டே ஆட்சியை மாற்றுவார்களே, அப்படிக்கூடச் செய்யலாமா என்று யோசித்தேன். பிறகு, ஜனங்களாகவே மாற்றுவதுதான் சாத்தியம் என்று எனக்குப்பட்டது.


தேர்தல் முடிந்து சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (26.2.1967) சுதந்திரா கட்சியின் தலைவர்


 ராஜாஜி பேசிய பேச்சுதான் இது.


தி.மு.க.வை எப்படியும் ஜனசங்கத்தோடு சேர்த்துத் தன் வலைக்குள் சிக்க வைத்துவிட வேண் டும் என்று ஆச்சாரியார் முயன்றார் - முற்றிலும் தோல்வியைச் சந்தித்தார். ராஜதந்திரி என்று ஆச்சாரியாரைச் சொல்லுவார்கள். ஆனால், இந்த ‘ராஜதந்திரி' அண்ணாவின் அறிவுக்குமுன் வெறும் பூச்சியம் என்பது நிரூபணம் ஆகிவிட்டதே!


‘துக்ளக்' குருமூர்த்திகளே, தோற்றவர்கள் யார்? தோற்கப் போகிறவர்கள் யார்? காலம் பதில் சொல்லும்!


No comments:

Post a Comment