வெற்றிக்குப் புது வியூகம் காணும் முறைகளைக் கையாளுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

வெற்றிக்குப் புது வியூகம் காணும் முறைகளைக் கையாளுங்கள்!

* கரோனா கொடூரம்: நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!


* மாற்றத்தினை யோசித்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்!


* மக்களின் பசிப் பிணி போக்குவதற்கு முன்னுரிமை தாருங்கள்!பிரதமரும், முதல்வரும் அவசரச் சட்டங் களைப்பற்றி யோசிக்கும் நிலையில், எளிய மக்களின் பசி, வேலையின்மை, விவசாயி களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு, இது வரை கையாண்ட உத்திகளால் கிடைத் திருக்கிறதா என்று விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்து, போர்த் தளபதிகள் அவ்வப் போது வியூகத்தை மாற்றிச் செயல்படுவது போல, வெற்றிக்குப் புது வியூகம் காணும் முறைகளைக் கையாளுங்கள் என்பதே நமது வேண்டுகோள். இது அரசியல் கண் ணோட்டமல்ல - சமூகநலப் பார்வைதான்  என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத் துள்ளார்.


அவரது  முக்கிய அறிக்கை வருமாறு:


கரோனா தொற்று நாளும் மேலும் வீரியத் துடன் பெருகுவது மக்கள் மத்தியில் பெருங் கவலையையும், அச்சத்தையும், ஒருவகை மன இறுக்கத்தையும் தோற்றுவித்த வண்ணம் உள்ளது.


அவற்றைப் புறந்தள்ளி துணிவுடன் எதிர் கொண்டு, அதன் தாக்குதலுக்கு ஆளாகாமலும், அதேநேரத்தில் அப்படியே மீறி பாதிப்புக்கு உள்ளானாலும்கூட, மரணம்தான் என்ற முடி வுக்கு எகிறிக் குதித்துவிட வேண்டியதில்லை.


தன்னம்பிக்கையை தளரவிடவோ,


இழக்கவோ கூடாது!


நோய் என்று வந்துவிட்டால், எந்த நோயாக இருந்தாலும், அதிலிருந்து முழுமையாகக் குணம் ஆகும்வரை உயிர் அபாய பயம் அனைத்து மனிதர்களுக்கும் இருப்பது இயல்பு தான். நம்பிக்கை - தன்னம்பிக்கையை ஒரு போதும் தளரவிடவோ, இழக்கவோ கூடாது, கூடவே கூடாது!


உலகம் முழுவதும் இன்றுள்ள நிலவரப்படி,


கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் - 1,01,47,570.


குணமடைந்தோர் -   54,99,768


பலியானவர்கள்     -    5,48,485


இந்தியா 4 ஆவது இடத்திற்கு வந்திருப்பது கெட்ட வாய்ப்பானதாகும்.


பாதிக்கப்பட்டவர்கள்     -    5,48,316


குணமானவர்கள்   -    3,09,316


பலியானவர்கள்     -    16,475


தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின்


எண்ணிக்கை   -    82,275


குணமடைந்தோர் -   45,537


பலியானவர்கள்   -   1079


இதில் கவலையளிக்கும் அம்சம் பலியா னோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக் கும் துன்பம் -  துயரமாகும்.


மாற்றத்தினை யோசித்தாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!


கடந்த மார்ச் மாதத்திலிருந்து இன்றுவரை 5 முறை ஊரடங்குகளை அரசுகள் அறிவித்து, மக்கள் கடைப்பிடித்தாலும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை என்பதை மறைக்காமல், மறக் காமல் மத்திய - மாநில அரசுகளும், பிரதமரும், முதலமைச்சரும் ஒப்புக்கொண்டு, அதற்கான மூலகாரணம் - அணுகுமுறை மாற்றத்தினை யோசித்தாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!


தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், மற்ற எதிர்க் கட்சிகளும் அரசுடன் ஒத்துழைக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, கருத்தறிந்து களப் பணிகளை முடுக்கிவிடும் வேண்டுகோளை பலமுறை முதலமைச்சருக்கு விடுத்தும், அதனை ஏற்க நேற்றுவரை மறுத்ததோடு, அது வெறும் மருத்துவர்கள் மட்டுமே யோசனை கூறவேண்டியது என்பது போன்று ஒரே பதிலை கிளிப்பிள்ளை பாடம் போல கூறி வருவதும், தனது அமைச்சர்களை விட்டு எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்துப் பதிலடியில் காலத்தை ஓட்டச் செய்வதும் நல்ல அணுகுமுறைகள் அல்ல.


எதிர்க்கட்சித் தலைவராக இருந்த


அண்ணா என்ன பேசினார்?


நடைபெறுவது மக்களாட்சி. எதிர்க்கட்சித் தலைவரின் பணி குற்றங்குறைகளைச் சுட்டிக் காட்டுவதுதான். அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும்போது என்ன பேசினார் சட்டமன்றத்தில் என்பது இன்றுள்ள அமைச்சர்கள் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது நமக்குத் தெரியாது.


‘‘எதிர்க்கட்சியில் இருக்கும் எங்களை மக்கள் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு ‘லாலி' பாடுவதற்கு அல்ல; மோட்டார்காருக்குப் ‘பிரேக்' எப்படி பயன்படுகிறதோ அதுபோன்றது!'' என்று குறிப்பிட்டார்.


இந்தத் தத்துவத்தை அண்ணா பெயரில் கட்சி - ஆட்சி நடத்தும் முதல்வரோ, அமைச் சர்களோ புரிந்துகொள்ளாமல் இருக்கக் கூடாது. எதிர்க்கட்சித் தலைவரின் ‘பருந்துப் பார்வை' பாராட்டப்பட வேண்டிய ஒன்றே தவிர, குற்றம் சுமத்தப்பட வேண்டியதில்லை.


எதிர்க்கட்சித் தலைவரின் இன்றியமையாக் கடமையல்லவா?


தமிழ்நாட்டில் இந்த நேரத்தில் ஊழல் செய் யலாமா? ஊழல்  நடைபெற்றுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டுவது அவரது இன்றியமையாக் கடமையல்லவா?


மருத்துவர்கள் 3 மாத தற்காலிகப் பணி நிய மனம் என்பதை ஒரு விசித்திரமான தனியார் கம்பெனிக்கு விட்டுவிட்டு, அவர்கள் அதில் ஒரு மாத சம்பளத்தை லஞ்சமாகக் கேட்பது போன்ற செய்திகள் பல ஊடகங்களில்  வந்தன; பிறகு அது கைவிடப்பட்டு, மாற்றப்பட்டதை மறுக்க முடியுமா?


அதுபோலவே கிராமப்புறங்களில், பஞ்சாயத் துகளில் தொலைத்தொடர்பு இணைப்புகளில் பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் கம்பி இணைப்புக் கான ‘பாரத் நெட் ஓர்க்' என்ற கம்பெனியின் ஊழல் சம்பந்தமாகச் சுட்டிக்காட்டியதை, மறுத் தார்கள்.


மத்திய அரசு கூறிய பின், அந்த ஒப்பந் தத்தைக் கைவிட்டுள்ளனர்.


இதில் எதிர்க்கட்சித் தலைவர் - தி.மு.க.  தலைவர் செய்தது எப்படித் தவறாகும்? இந்தக் கரோனா காலத்திலும் இப்படிப்பட்ட கொள் ளைக் கொடுமைகளா? என்று கேட்பது எதிர்க் கட்சித் தலைவரின் பணிகளில் முக்கியமான தல்லவா?


சுகாதாரத் துறை -


உயரதிகாரிகளின் கருத்து!


இன்று காலை வந்த ஒரு நாளேட்டில்,


‘‘இதனிடையே சுகாதாரத் துறை உயரதிகாரி கள் சிலர் கூறும்போது, ஊரடங்கால் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியாது. இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள், பரிசோத னைகளை அதிகரித்து, நோயாளிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தவேண்டும் என பலமுறை சொல்லிவிட்டோம். தற்போதுள்ள ஊரடங்கு அறிவிப்புக்குமுன் நடந்த ஆலோ சனையில்கூட ஊரடங்கு தேவையில்லை என தெரிவித்தோம். அமைச்சர்கள் சொல்வதை மட்டும் கேட்காமல், அதிகாரிகள் சொல்வதையும் கேட்டு, முடிவெடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர். அது மட்டுமா?


மேலும், ‘‘ஊரடங்கு என்றால், MSME சிறு குறு தொழில் அமைப்புகள் மேலும் நசிந்து, பொருளாதார வேலை வாய்ப்பு, எளிய தொழி லாளர்கள் - நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்று அந்த அமைப் பின் தலைவர் -எங்கள் வாழ்விற்கு சாவு மணி அடித்துவிடும்'' என்று கண்ணீர் விடாத குறையாக கூறியிருக்கிறாரே!


ஊரடங்கு அறிவித்த முறைகள் - அதனால் ஏற்பட்ட விளைவுகள் - அதில் என் னென்ன குறைபாடுகள் - இவற்றை அனைத்துக் கட்சிக் கூட்டம் போன்றவற்றில் வெளிப்படையாகக் கூறும் வாய்ப்பு உண்டு. வெறும் அமைச்சர்கள், குறிப்பிட்ட அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் கலந்தாலோசித்தால், தலையாட்டிடும், ‘ஆமாம், சாமி' போக்குதானே மிஞ்சும்?


மனிதர்களின் சுயக்கட்டுப்பாடுதான்!


ஓர் அடிப்படை உண்மை மக்களுக்குத் தெளிவாக்கப்படவேண்டும். ‘கரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கிடையாது; ஒரே மருந்து மனிதர்களின் சுயக்கட்டுப்பாடுதான்' என்பதை மீண்டும் மீண்டும் அனைவர்மூலமும் உணர்த்திட அரசுகள் ஆவன செய்தல் வேண்டும்.


அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கரோனா சிறப்புப் பணிக் குழு நிபுணரும், முன்னணி தொற்று நோய்த் தடுப்பு மருத்துவ வல்லுநருமான டாக்டர் அந்தோணிபாசி கூறு வது, நாம் அனைவரும் யோசித்துக் கடைப் பிடிக்க வேண்டியது மட்டுமல்ல; பின்பற்றவும், மற்றவர்களுக்குப் பரப்பவும் முன்வரவேண்டும்.


‘‘கரோனா வைரஸ் தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவரும் சமூகப் பொறுப்பு ஒவ்வொரு நபரின் கையிலும் இருக்கிறது.


கரோனா பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டால், அதை அவர் மற்றவர்களுக்குப் பரப்பும் பரிதாப நிலை உள்ளது. அது நம் குடும்பத்தவர், நம் நண்பர்கள், நம் உதவியாளர்கள் - உற்றார்கள் ஆக இருக்கலாம். ஆகவே, பொறுப்பை உணர்ந்து, கட்டுப்பாடுடன், முகக்கவசம் அணி வதுமுதல் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக் கைகளையும் கடைப்பிடிக்கவேண்டும்.''


மக்களின் பசிப் பிணி போக்குவதற்கு


முன்னுரிமை தாருங்கள்!


எனவே, முந்தைய முறைகளை - ஊரடங்கு உள்பட பலவற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, மக்களின் பசிப் பிணி போக்குவதற்கு முன் னுரிமை தாருங்கள்.


‘கரோனாவில் செத்துப் போவதைவிட,  நாங்கள் பசியில் செத்துப் போவோமோ' என்று ஏழை, எளிய, நடுத்தர உழைக்கும் அடித்தட்டு மக்கள் உள்ளத்தில் கேள்விகள் வெடிக்காத அளவுக்கு செய்யுங்கள்.


இது வெறும் மருத்துவர்கள் பிரச்சினை மட்டுமல்ல என்பதை உணர்ந்து, மக்கள் தொடர்புள்ள மக்களின் பிரதிநிதிகளுக்குரிய முக்கியத்துவத்தை மக்களாட்சி தராமல் வேறு எந்த ஆட்சி தரும்?


அரசியல் கண்ணோட்டமல்ல -


சமூகநலப் பார்வைதான்!


பிரதமரும், முதல்வரும் அவசரச் சட்டங் களைப்பற்றி யோசிக்கும் நிலையில், இந்தப் பணிகள், எளிய மக்களின் பசி, வேலையின்மை, விவசாயிகளின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு, இதுவரை கையாண்ட உத்திகளால் கிடைத் திருக்கிறதா என்று விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்து, போர்த் தளபதிகள் அவ்வப் போது வியூகத்தை மாற்றிச் செயல்படுவதுபோல, வெற்றிக்குப் புது வியூகம் காணும் முறைகளைக் கையாளுங்கள் என்பதே நமது வேண்டுகோள். இது அரசியல் கண்ணோட்டமல்ல - சமூகநலப் பார்வைதான் இதில் அகலமாக உள்ளது என்பதை அறிவீர்களாக!


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


29.6.2020


No comments:

Post a Comment