பெட்ரோல், டீசலுக்கான ‘வாட்' வரியை தமிழக அரசு கைவிடுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 4, 2020

பெட்ரோல், டீசலுக்கான ‘வாட்' வரியை தமிழக அரசு கைவிடுக!

சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள்  ரயிலில் பயணம் செய்ய கட்டணம் வசூலிப்பதா?



 பெட்ரோல், டீசலுக்கான ‘வாட்' வரியை தமிழக அரசு கைவிடவேண்டும்; சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் ரயிலில் பயணம் செய்ய கட்டணம் வசூலிப்பதா? என்று   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்  கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


மனிதாபிமானத்துடன் விவசாயிகள் வாழ்வாதாரப் பிரச்சினையை அணுகவேண்டும்!


கரோனா தொற்றின் வேகம் நம் நாட்டிலும் இன்னும் குறைந்தபாடில்லை. மத்திய, மாநில அரசுகளின் முயற்சி களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் பொது மக்கள் பெரிதும் ஒத்துழைப்புத் தந்து துணை நிற்கிறார்கள்.


இந்த நிலையில், மத்திய அரசு மிகுந்த மனிதாபிமானத்துடன், ஏழை, எளிய தொழிலாளர்கள், விவசாயிகள் வாழ் வாதாரப் பிரச்சினைகளை அணுக வேண்டும்.


ஏற்படும் நட்டத்தை


மத்திய அரசே ஏற்கவேண்டும்!


அந்தந்த மாநிலங்களிலிருந்து வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் அவரவர்கள் விரும்பி னால் சொந்த மாநிலத்திற்குத் திரும்பலாம். அதற்கு ரயில் ஏற்பாடு செய்யப்படும் என்பது வரவேற்கத்தக்க ஒரு நல்ல அறிவிப்பாக அமைந்தது. ஆனால்,  அந்த மகிழ்ச்சியையும், பதிவு செய்து காத்திருக்கும் அந்தத் தொழிலாளியிடமிருந்து பறிப்பது போல, அவரவர்கள் உரிய ரயில் கட்டணம் தரவேண்டும்; கூடுதலாக ரூ.50 ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தரவேண்டும் என்று அறிவிப்புச் செய்துள்ளது வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதாக உள்ளது; அதை மறுபரிசீலனை செய்து மத்திய அரசே இம்மாதிரி திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவசப் பயணத்தை ஏற்பாடு செய்து, அதனால் ஏற்படும் நட்டத்தை மத்திய அரசே தாங்க வேண்டுவது அவசர அவசியம்.


வெளிமாநிலங்களுக்குச் செல்லும் அந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு, அவர்கள் இருந்த மாநிலங்களில்கூட வேலைக்கு அழைத்த பல அமைப்புகள் சரிவர உதவ வில்லை; பல நாள் பட்டினியாக இருக் கிறோம் என்று கண்ணீர் மல்க அவர்கள் கூறும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வருவதை மத்திய அரசின் துறைகள் அறிந்திருக்கும் நிலையில், இப்படி ஒரு ‘தண்டனை' தருவதுபோல, அவர்களே டிக்கெட் கட்டணத்தை ஏற்கவேண்டும் என்று கூறுவதைக் கைவிட்டு, அவர்களது இந்தப் பயணத்தை மட்டும் இலவசப் பயண மாக்கிட வேண்டும். பயணத்தில் அவர்களது உணவுக்குச் செலவழிக்கவேண்டிய சுமை யும் அவர்களுக்கு உண்டு.


வேண்டுமானால், சுற்றுலாப் பயணி களும் பயணம் செய்யலாம் என்று அறி வித்துள்ள நிலையில், அவர்களை வேண் டுமானால்  டிக்கெட் எடுக்க வற்புறுத்தலாம்.


பெட்ரோல், டீசல் விலையேற்றம் தேவைதானா?


அதுபோலவே, தமிழ்நாடு அரசு பெட் ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மதிப்புக்கூட்டு வரி (வாட்) கணக்கு மறு சீராய்வு என்று ஏதோ விளக்கம் கூறி, அவற்றிற்கு லிட்டர் விலையை ஏற்றி இருப்பது இந்த நேரத்தில் தேவைதானா?


உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை மிகவும் கீழே போய், ‘அடி மாட்டு விலைக்கு'க் குறைந்துவிட்ட நிலையில், நியாயமாக மத்திய அரசே முன்வந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து அறிவித்திருக்க வேண்டும். அப்படி ஏதும் நடக்காததே மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஆகும் - நகை முரண் ஆகும்.


ஜி.எஸ்.டி., மற்றும் நிலுவையில் உள்ள பாக்கிகளை உடனே மத்திய அரசு கொடுக்கவேண்டும்!


இந்த நிலையில், மதிப்புக் கூட்டு வரியைப் போட்டு, விலையை உயர்த்தி இருப்பதைத் திரும்பப் பெறவேண்டும்.


மத்திய அரசு மாநிலத்திற்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி., மற்றும் நிலுவையில் உள்ள பாக்கிகளை அதனிடமிருந்து வசூலிக்க ஏற்பாடு செய்தால், இந்த சூழலில் மாநிலத்தின் சுமை சற்று குறையக்கூடும். உரிமையை வலியுறுத்திட ஏன் தயக்கம் - புரியவில்லை. மத்திய அரசு மாநிலங் களுக்கான பாக்கி களைத் தருவது இந்தக் கட்டத்தில் அவர் களுக்குப் பேருதவியாக வும் அமையக் கூடும்.


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


4.5.2020


No comments:

Post a Comment