நமது வெளியீடுகளை படித்தாலே போதும் எங்கும் எவரையும் சந்திக்கலாம்
கழகத் துணைத் தலைவர் பேச்சு
காரைக்குடி, ஏப். 30 அறிவியல் தத்துவத்தை அடிப் படையாக கொண்டு பணியாற்றும் பேரியக்கம் திராவிடர் கழகம் அவ்வப்போது உலகில் ஏற்படும் மாற்றங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும். அந்த அடிப்படையில் தற்போது ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேண்டு மானாலும் தொடர்பு கொண்டு காணொலி மூலம் பேச முடியும் எனும் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி, சிவகங்கை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் காணொலிமூலம் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆலோ சனையில் திருவெறும்பூர் தோழர் வி.சி.வில்வம் (தேவகோட்டை) ஏற்பாடு செய்து இருந்தார். அந்த வகை யில் கழகத் துணைத்தலைவர் கவிமாமணி கலி.பூங்குன்றன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், சிவகங்கை மண்டலத் தலைவர் சாமி.திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித் தனர். காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில் மண்டலச் செயலாளர் அ.மகேந்திரராசன் சிவகங்கை மாவட்டத் தலைவர் உ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் பெ.ராஜாராம், வழக்குரைஞர் ச.இன்பலாதன், மாவட்ட அமைப்பாளர் அனந்தவேல், பொதுக்குழு உறுப்பினர் மணிமேகலை, திருப்பாச்சேத்தி அக்கினி, ஒக்கூர் தெய்வேந்திரன், சிவ கங்கை நகரத் தலைவர் இர.புகழேந்தி, காரைக்குடி மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி, மாவட்டச் செயலாளர் ம.கு.ம.வைகறை, மாவட்டத் துணைச் செயலாளர் இ.ப.பழனி வேலு, தலைமைக் கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, பேரா.மு.சு.கண்மணி, காரைக்குடி நகரத் துணைத் தலைவர் வீ.பாலு, நகரச் செயலாளர் தி.கலைமணி, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு மற்றும் தோழர்கள் பிரவீன், அபிசேக்ராஜ், பா.ராஜ்குமார், இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் எம்.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துகளை எடுத்து கூறினர்.
முன்னிலை வகித்து பேசிய கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இந்த ஊரடங்கு நேரத்தில் நாம் என்ன என்ன பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் கூறிய 21 குறிப்புகளை சுருக்க மாக எடுத்துரைத்ததுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த நேரத்தில் புதிய புதிய நூல்களை படிப் பதுடன் தந்தை பெரியார் அவர்களின் டைரிக் குறிப்புகளை தொகுத்து வருவதையும், வழக்கம்போல விடுதலை நாளி தழுக்கு அறிக்கைகள் எழுதுவதையும் வரிசைப்படுத்தினார். ஓய்வு கிடைத்திருக்கிறதே என்பதற்காக சும்மா இருக்கக் கூடாது. வழக்கம்போல அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையும் நினைவுபடுத்தினார். மேலும், விடுதலை நாளிதழ்தான் கழகத் தலைவருக்கும் நமக்கும் ஓர் இணைப்புப் பாலமாக இருந்து வருகிறது.எனவே, விடுதலை நாளிதழின் இணையதள வடிவத்தை பொறுப்பாளர்கள் மட்டுமின்றி அனைத்துத் தோழர்களும் அதிக அளவில் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கழகத் துணைத்தலைவர் கவிமாமணி கலி.பூங்குன்றன் அவர்கள் பேசும்போது இந்த நிலையிலும் தோழர்கள் அனைவரின் முகத்தை பார்த்து உரை யாடுவது மகிழ்வுக் குரியது. சமூக வலைதளங்களில் நமக்கு எதிராக வரும் கருத்துகளுக்கு தக்க முறையில் பதிலளிக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் கழக வரலாற்றில் முக்கியப் பங்காற்றி உள்ளது. சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்று தந்தை பெரியாருக்கு உற்ற துணையாக இருந்த இராமச்சந்திரனார் தொடங்கி அவரது மகன் இராம.சுப்பிரமணியம், பிறகு பழைய இராமநாதபுர மாவட்டப் பொறுப்பாளர்களாக திறம் பட பணியாற்றிய சிவகங்கை வழக்குரைஞர் சண்முக நாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி இவர்களின் இரண்டு குடும்பத்தினர்களும் தலைமுறை தலை முறையாக இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது சிறப்புக் குரியதாகும். அய்யா பெரியார் அவர்கள் சொல்வது போல் பகுத்தறிவு வாதிகள் என்பதற்கு அடையாளம் வசதி இல்லாத எந்த ஒன்றையும் வசதி மிகுந்ததாக மாற்றிக் கொள்வதுதான் என்று சொல்வார்கள். இன்றைக்கு நாம் அந்த நிலையை உருவாக்க வேண்டும். கழக வெளியீடு களான சின்ன சின்ன புத்தகங்களை வாசிக்க வேண்டும். அப்படி படித்தோம் என்றால் எந்த இடத்திலும் யாரையும் சந்தித்து விடலாம்.
நான் கூட இப்போது ‘பெரியார் இன்றும் என்றும்’ என்ற நூலை படித்து முடிந்து, இப்பொழுது பேராசிரியர் அருணன் எழுதிய ‘காலந்தோறும் பிராமணீயம்’ என்ற நூலையும் படித்து வருகிறேன். நமக்கு கிடைத்த தலைவர் போல யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்.அய்யா அவர்கள் மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள். அதற்குப்பிறகு நமது அன்னையார் மணியம்மையார் அவர்கள் நான்கு ஆண்டுகள் திறம்பட இயக்கத்தை நடத்தி இராவணலீலா என்ற மாபெரும் தத்துவ போராட்டத்தை நடத்திக் காட்டினார். அதற்கு பிறகு, தனது 87 வயதில் 77 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக் காரர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், பெரியார் போட்டுத்தந்த பாதையில் இந்த இயக் கத்தையும் நம்மையும் வழி நடத்தி வருகிறார். அவர் நமக்கு வகுத்துத் தந்த திட்டங்களை செயலாற்றுவது தான் நமது பணியாகும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சுய மரியாதை இயக்கக் காலந்தொட்டு இன்றுவரை நடந்த பல்வேறு வரலாற்றுக் கருத்துகளை நினைவு கூர்ந்தார். நிறைவாக இந்த காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம் நடத்திட தொழில்நுட்ப ரீதியாக உதவி புரிந்த தோழர் வி.சி.வில்வம் அவர்களுக்கு அனைவரின் சார்பிலும் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் நன்றி கூறியதுடன் இந்த காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய காணொலி கலந்துரையாடல் கூட்டம் இரவு 8.15 மணிக்கு நிறைவு பெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் இது புதிய அனுபவமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்! நாம் இயக்கத்தவர்கள் அல்லவா! எந்த நிலையிலும் சதா இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் கூற்றுப்படி ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் காலத்திலும் ஏதோ ஒரு வகையில் இயக்கப்பணிகள் நடந்து வருவது நமக்கும் புத்துணர்வை தருகிறது என்றால் அது மிகையல்ல.
No comments:
Post a Comment