இயக்கத்தையும் - நாட்டையும் இலட்சியப் பாதையில் மிகச்சரியாக வழி நடத்துவார் தளபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 9, 2020

இயக்கத்தையும் - நாட்டையும் இலட்சியப் பாதையில் மிகச்சரியாக வழி நடத்துவார் தளபதி

தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் மறைந்த நிலையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்ட தளபதி மு.க.ஸ்டாலின் இயக்கத்தையும், நாட்டையும் இலட்சியப் பாதையில் சிறப்பாக வழிநடத்துவார் - அவருக்குத் தாய்க்கழக்தின் ஆதரவும், வாழ்த்தும் உண்டு என்று   திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:


திராவிடர் இயக்கத்தின் மூத்த தலை முறையின் நாயகராகவும், கொள்கைத் தெளிவும், பண்பாட்டின் செறிவும் ஒருங்கே அமைந்த நமது இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களது இறுதிப் பயணம் அனைத்துத் தரப்பினரின் கண்ணீர் அலை களுக்கிடையே ஒரு வரலாறு படைத்ததாகி விட்டது.


80 ஆண்டு பொதுவாழ்க்கை கண்ட இனமானப் பேராசிரியர்


எதையும் பெரிதாக எதிர்பார்க்காது, ‘‘தம்கடன் பணி செய்து, தொண்டாற்றுவதே'' என்பதையே தனது 80 ஆண்டுகால பொதுவாழ்வின் இலக்கணமாக அவரே வகுத்துக் கொண்டு, அதன்படி நடந்து காட்டிய இலக்கியமாகவே என்றும் வர லாற்றில் இடம்பெற்றுவிட்டார் - எமது திராவிடம் காத்த தீரர் நம் பேராசிரியர்!


முதுமை வாட்டியபோதும், முதிர்ச்சியால் திளைத்தவர்; நடமாட்டம் குறைந்தும், கொள்கை உணர்வு குன்றாத மாபெரும் லட்சிய வீரர் அவர்.


இயக்கக் கப்பலை சரியாக வழி நடத்தியவர்


இளைஞர்களுக்கு அவர் தந்த அறிவுரை காலமெல்லாம் வெளிச்சம் காட்டி, இயக்கக் கப்பல் எந்தப் பாறைமீதும் மோதிடாது, இலக்குக்கும், அதை அடையும் வழிமுறைக்கும் உள்ள வேறுபாட்டைப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தவர்; தாம் பங்கேற்ற மேடைகளில் வீசிய மெல்லியப் பூங்காற்று நம் இனமானப் பேராசிரியர்.


ஆட்சி என்பது வழிமுறை - அவ்வளவுதான் - கொள்கை - லட்சியம் என்பதே நம் நிரந்தர இலக்கு!


அறிஞர் அண்ணா சொன்னார்: ‘‘கொள்கை என்பது வேட்டி - பதவி என்பது மேல்துண்டு.'' இதன் உண்மைப் பொருளை மேடைதோறும் முழங்கியவர் பேராசிரியர்.


இன்றைய தலைமுறை இதைப் புரிந்து செயல்பட்டால், நம் திராவிடர் இனம் மீட்சி பெறும் - ஆட்சியும், பதவியும் அதற்கான பொறுப்புக்களே என்று பாடம் எடுத்தவர் பேராசிரியர்.


அந்தப் பாடத்தை நன்கு படித்த அடுத்த தலைமுறையின் மாசு மருவற்ற அணிகலன்தான் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய தலைவர் நம் இனமானத் தளபதி சகோதரர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.


யார் இந்தத் தளபதி தெரியுமா?தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ‘மானமிகு சுயமரியாதைக்காரன்' என்று ஒரு வரி சுயவிமர்சனம் தந்த கலைஞர் - எங்கும் இனமானக் குரல் எழுப்பிய ஏந்தல் பேரா சிரியர் இவர்களின் லட்சிய முழக்கங்களை 50 ஆண்டுகளாக முற்றோதி முழங்கி, அதனடிப்படையில் தி.மு.க. என்ற அரசியல் கட்சியான திராவிடர் இயக்கத்தின் அரசி யல் பிரிவாக கொள்கை எதிரிகளும், அதிர்ச் சியூட்டக் கூடிய வகையில், ஆற்றலோடு வழிநடத்தி - இந்தியத் துணைக் கண்டத் தையே திரும்பிப் பார்க்க வைத்து, திக் கெட்டும் பாயும் கொள்கை வேங்கையாய் செயல்பட்டு வருகிறார் தளபதி மு.க.ஸ்டாலின்.


தமிழ்நாட்டின் திராவிடத்தின் எழுச்சி கண்டு நாடே வியக்கிறது!


கொள்கை லட்சியங்களைப்பற்றிய முதல் குரல் - அநீதிகளை எதிர்க்கும் முதல் அறப்போர்க் குரல் தமிழ்நாட்டிலிருந்துதான் கிளம்புகிறது. அதன் கொள்கைச் சூரியக் கதிர்கள் இருட்டை அகற்றி, ஒளியைப் பரப்புவதும், மதச்சார்பின்மையானாலும், சமூகநீதியானாலும், மனித உரிமைக் காப்பு முதல், மாநில உரிமைவரை எல்லாவற் றிற்கும் எழுச்சி முழக்கம் இங்கே இருந்து தான் முதலில் ஒலிக்கிறது. இத்தகு இந்தத் தலைமையின் மாண்பும், மரியாதையும், செயதக்க செயலாற்றும் செதுக்கப்பட்ட உண்மைகளாக வரலாற்றின் பொன்னேட் டில் பதிவாகின்றன - நாள்தோறும்!


இனமானப் பேராசிரியருக்கு செய்த இறுதி மரியாதை!


தனது இயக்கத்தின் மூத்த தலைவரின் மறைவிற்குமுன் அவரது உடலைப் பெறு வதில் தொடங்கி, அடக்க நிகழ்ச்சிவரை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதியின் ஈடு இணையற்ற செயல்திறன் அபரீதமானது!


கலைஞர், பேராசிரியரால் அடையாளம் காட்டப்பட்டவர்


திராவிடர் இயக்கம் எப்படிப்பட்ட ஒரு கொள்கைக் குடும்பம் - எமது கொள்கை உறவு - குருதி உறவைவிட ஆழமானது, அகலமானது, அகலாத வரலாறு என்பதை தளபதியின் செயல்திறன் கலைஞர் மறை வின்போதும் சரி, பேராசிரியரின் மறை விலும்கூட, இழப்பில்கூட பாடம் கற்க வேண்டியவர்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கிறது!


கலைஞர், பேராசிரியர் ஆகியோரால் வாழும்போதே அடையாளம் காட்டப் பட்டவர்தான் நம் தளபதி!


நம்மிடையே கொள்கை உறவுகளுக்கு ஜாதியில்லை - மதம் இல்லை - லட்சியப் பார்வை மட்டும் உண்டு என்பதை அகிலம் கண்டு வியக்கும் நிகழ்ச்சி.


அடுத்தகட்டம் என்ன?


அடுத்தகட்டம் என்ன என்று பல்வேறு செய்திகளைப் பரவவிட்டு, பலவீனப்படுத் தலாம் இவ்வியக்கத்தை என்று மனப்பால் குடிக்கிறார்கள் - யூகங்கள் என்ற பெயரால் குழப்பங்களை ஏற்படுத்த முனைகிறார்கள் -  ஒரு பார்ப்பன நாளேடு இன்றே சிண்டு முடியும் தன் பூணூல் கொடுக்கை நீட்டிவிட்டது. குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள் அவர்கள். ஆசையை நிராசையாக்கும் ஆற்றலும், அனுபவமும் நம் தளபதிக்கு உண்டு - எதிரிகள் இடிந்து வீழ்வார்கள் என்பதில் அய்யமில்லை. ‘ஆரிய மாயை' நூலை எழுதிய அண்ணாவை வழிகாட்டியாகக் கொண்டது தி.மு.க. கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு இம்மூன்றில் கட்டுப்பாடே முக்கியம் என்று அழுத்திச் சொன்ன தந்தை பெரியாரை தத்துவத் தலைமையாகக் கொண்டது தி.மு.க. கொள்கையால் பதப் பட்ட தலைமை இன்றைய தி.மு. கழகத்தின் தலைமை. தளபதி எதிலும், எல்லாக் கோணத்திலும் சிந்தித்து இயக்கம் - கொள்கை - இது ஆயிரங்காலத்துப் பயிர்; இதனை எண்ணற்ற தியாகிகளும், தொண் டறச் செம்மல்களும் கட்டியது - திராவிடர் இயக்கம் பாறையால் கட்டப்பட்ட பாசறைக் கோட்டை; பதவிக்காகச் சரியும்  மணல் வீடல்ல என்பதை இனிவரும் காலத்தில் நிரூபித்துக் காட்டுவார்.


புதிய சகாப்தத்தின் பொன்னேடு!


ஒரு புதிய சகாப்தத்தின் பொன்னேடு துவங்குகிறது; அதன் தகத்தகாய ஒளி தரணியெங்கும் வீசும் - ‘பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும்' அண்டாத பெரு நெருப்பு எமது இயக்கம் என்பதை இச்சந் தர்ப்பத்தில் நிறுவி, தலைமையின் தனித் தன்மையை நிரூபித்துக் காட்டுவார்.


தன்மான உணர்வு பொங்க தாய்க்கழகம் வாழ்த்துகிறது.


தளபதி அவர்களின் கண்ணீரைத் துடைத்துக் கடமையாற்ற சூளுரைத்துக் கிளம்புங்கள் தோழர்களே!


கொள்கையின் சொக்கத்தங்கங்கள் தள பதிக்குப் பின்னால் மட்டுமல்ல, பக்கத்திலும் கரம் கோர்த்து கொள்கைச் சிரம் காக்க வலிமையுடன் இருக்கிறது.  பயணங்கள் வெற்றிப் பயணங்களாக அமைந்திட  தாய்க்கழகம் தன்மான உணர்வு பொங்க வாழ்த்துகிறது.


தாய்க் கழகத்தின் துணையுண்டு -


தக்க சான்றோர்தம் ஆசியுண்டு -


தொடங்கட்டும் புதிய அத்தியாயம் -


முடங்கட்டும் கொள்கைப் பகைகள்!


சவால்கள் பல அதிகாரப் பலத்தோடு தோள்தட்டும் நேரம் இது! அவற்றை திராவிட இயக்கம் தளபதி தலைமையில் முறியடிக்கும்! பலமுடன் பயணம் தொடங்கும் - பகைக்கூட்டம் முடங்கும்!


வெற்றி நமதே!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!


 


கி.வீரமணி,


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


9.3.2020

No comments:

Post a Comment