தேர்தல் ஆணையம் நெடுந்தூக்கம்: பா.ஜ.க.வை மிரட்டும் தோல்வி பயம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

தேர்தல் ஆணையம் நெடுந்தூக்கம்: பா.ஜ.க.வை மிரட்டும் தோல்வி பயம்!

வாக்குச் சாவடியில் ராமன் படங்கள்!

புதுடில்லி, மே 9- ஏழு கட்டமாக நடைபெற்று வரும் 18 ஆவது மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு கடந்த 7-5-2024 அன்று நடைபெற்றது. 10 மாநிலங் கள், 2 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற இந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 64.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதலிரண்டு கட்ட வாக்குப்பதிவில் தங்களுக்குச் சாதகமான சூழல் இல்லை என உளவுத் துறை மூலம் தெரிந்து கொண்ட பாஜக – வெறுப்புப் பேச்சு, வாக்குப்பதிவின் போது வன்முறை உள்ளிட்ட பல்வேறு தந்திர விளையாட்டுகளை அரங்கேற்றி தேர்தலில் வெற்றி பெற முயன்று வருகிறது.

குறிப்பாக, மோடி கூட தான் பிரதமர் என்பதை மறந்து இந்து – முஸ்லிம் மக்களிடையே மோதலைத் தூண்டும் வகையிலும், பாகிஸ்தான் பெயரை அடிக்கடி கூறியும், ஸநாதனத்திற்கு ஆபத்தும் என்றும், “இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் இடித்து விடுவார்கள் என்றும் அழுகை தொனியில் பிரச்சார மேடைகளில் புலம்பி வருகிறார்.
தனது புலம்பல் பேச்சை மக்கள் கண்டுகொள்ளாத நிலையில், “கோத்ரா 2002” நிகழ்வுபோல தேர்தல் கால வன்முறையை தொடங்கியுள்ளது பாஜக. ஏற்கெனவே திரிபுரா மாநிலத்தில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என தேர்தல் அதிகாரிகள் மூலம் பாஜக அடாவடி வேலையில் ஈடுபட்டது. அதுபோல, மூன்றாம் கட்டத் தேர்தலின் போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்களை வாக்குச் சாவடிக்குள் நுழைய விடாமல் ஆளும் பாஜக அரசு காவல்துறையினர் மூலம் தடுத்துள்ளது.

இஸ்லாமியப் பெண்கள் மீது தாக்குதல்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடை பெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில் 10 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சம்பல் மக்களவை தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ் மாலி, ஓவாரி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர், சோதனை என்ற பெயரில் வாக்களிக்க வந்த இஸ்லாமி யர்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளைப் பறித்து பிழை உள்ளது எனக் கூறியும், இஸ்லாமியர்களின் தாடியை பிடித்து இழுத்தும், தடியடி நடத்தியும் வாக்குச் சாவடி பகுதியில் இருந்து விரட்டி யுள்ளனர்.
இதே போல குழந்தைகளுடன் வந்த பெண்களை ஈவு இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அஸ்மாலி, ஓவாரி பகுதிகளில் மட்டுமின்றி சம்பல் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 181,182,183, 184 ஆகிய எண்களை கொண்ட வாக்குச்சாவடியில் இஸ் லாமிய மக்களின் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை களைப் பறித்த உத்தரப்பிரதேச காவல்துறையினர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

வாக்குச்சாவடியை கைப்பற்றிய பாஜகவினர்
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷின் மனைவி டிம்பிள் போட்டியிடும் மெயின்புரி (உத்தரப்பிரதேசம்) தொகுதிக்கு மூன்றாம் கட்டத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடியை கைப் பற்றி யும், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட் டணிக் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியும் அத்துமீறலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர் களுக்கு ஆதர வாக இருந்த நிலையில், இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
குஜராத் வாக்குச்சாவடிகளில்
“ராமன் படம்!”

தேர்தலில் மதம், ஜாதி உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் “இந்தியா” கூட்டணி உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கு மட்டுமே தவிர பாஜக விற்கு இல்லை என்றாகிவிட்டது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் மதம், ஜாதி, வகுப்புவாதம் மற்றும் வெறுப் புப் பேச்சுக்களை வைத்தே பிரச்சாரம் மேற்கொண்டாலும் அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. அதாவது பாஜகவின் கைப்பாவை போல இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலின் பொழுது குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ராமன் படம் கொண்ட போஸ்டர்கள் (கட் அவுட்டுகள்) வைக்கப்பட்டு இருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் – ஆம் ஆத்மி அடங்கிய “இந்தியா” கூட்டணி புகார் அளித்தாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ள வில்லை.

No comments:

Post a Comment