கால்டுவெல், அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் மனம் போன போக்கில் பேசுவதா? தலைவர்கள் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 6, 2024

கால்டுவெல், அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் மனம் போன போக்கில் பேசுவதா? தலைவர்கள் கண்டனம்

சென்னை, மார்ச் 6 கால்டுவெல், அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அய்யா வைகுண்டரின் 192-ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அய்யா வைகுண்டர் பற்றியும், கால்டுவெல் குறித்தும் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

கால்டுவெல் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் தமிழரின் வரலாற்றோடு கலந்து இருக்கிறார்.
வடமொழியை புறந்தள்ளிய கால்டுவெல் குறித்து ஸநாதனவாசிகள் தொடர்ந்து பரப்பி வரும் அவதூறு களை ஆளுநர் ஆர்.என்.ரவி தன் பங்குக்கு தூக்கிக் கொண்டு திரிகிறார். ஜாதி சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்திய, சனாதனத்தின் எதிரியாக திகழ்ந்த அய்யா வைகுண்டரை ஸநாதனத்தின் காவலர் என்றும் கூறியிருக்கிறார்.

இந்துத்துவ கோட்பாட்டுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் போல ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத் தின் கலை இலக்கிய பாரம் பரிய மரபுகளுக்கு எதி ராகவும், தமிழ் பண் பாட்டையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்.
தற்போது வர்ணாசிரம அநீதிகளுக்கு எதிராகவும், பாலின சமத்துவத்துக்கு பெரும் குரலெடுத்து பேசிய அய்யா வைகுண்டரை ஸநாதனவாதி என்று கூறத் துணிந்துள்ளார். இவ்வாறாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழுநேர பிரச்சார கராகவே ஆர்.என்.ரவி மாறியுள்ளார். ஜாதி, சமய வேறுபாடுகள் கூடாது. மனிதர்கள் அனைவரும் சமம் என்று கூறிய வைகுண்டரை, ஸநாதனவாதி என்று கூறுவது அப்பட்டமான வரலாற்று திரிபு ஆகும். ஆர்.என்.ரவி வரலாற்றை தொடர்ந்து கொச்சைப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment