யார் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள் என்கிற முழு விவரப் பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 10, 2024

யார் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள் என்கிற முழு விவரப் பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவேண்டும்!

featured image
  • தேர்தல் ஆணைய இணைய தளத்தில் அனைத்து வாக்காளர்களும் பார்க்கும்படி அப்பட்டியலை வெளியிடவேண்டும்!
  • வங்கியில் செலுத்தப்படாத அனைத்துத் தேர்தல் பத்திரங்களும் ரத்து செய்யப்பட்டு, யார் பணம் கொடுத்தார்களோ, அவர்களுக்குப் போய்ச் சேரும்!
  • தேர்தல் பத்திரத் திட்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்!
  • சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறை தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.விடுதலை சிறப்புரை 

சென்னை, மார்ச் 10 யார் யார் எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள் என்கிற முழு விவரப் பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவேண்டும். தேர்தல் ஆணை யம் 13.3.2024 ஆம் தேதி, அதனுடைய இணைய தளத்தில் அனைத்து வாக்காளர்களும் பார்க்கும்படி வெளியிடவேண்டும்; இதுவரையில் வங்கியில் செலுத் தப்படாத அனைத்துத் தேர்தல் பத்திரங்களும் ரத்து செய்யப்பட்டு, அது உரியவரிடம், யார் பணம் கொடுத் தார்களோ, அவர்களுக்குப் போய்ச் சேரும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றார் தி.மு.க சட்டத்துறை தலைவரும், மூத்த வழக்குரை ஞருமான இரா.விடுதலை அவர்கள்.

‘‘தேர்தல் பத்திரமும் -உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!’’
கடந்த 4.3.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தி.மு.க சட்டத்துறை தலைவரும், மூத்த வழக்குரைஞரு மான இரா.விடுதலை அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நட்டம் அடையும் நிறுவனங்கள்கூட ஏதோ ஒரு புரிதலை எதிர்பார்த்து ஒரு கோடி ரூபாய் அல்ல, நூறு கோடி ரூபாய் அல்ல – வரம்பு மீறி நன்கொடைகளைக் கொடுக்கலாம்.
நட்டம் அடையும் நிறுவனம் கொடுக்கலாம்; லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அளவில்லாமல் கொடுக்கலாம். 7.5 சதவிகிதம் என்பது ஓரளவுதான்.
எனவே, கம்பெனி சட்டத்தில் 152(1) என்கின்ற பிரிவை நீக்கம் செய்துவிட்டு, 152(3) என்கிற ஒரு பிரிவைக் கொண்டு வருகிறார்கள். இது முதல் திருத்தம்.
இரண்டாவதாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், இவ்வளவுதான் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக் கலாம் என்று இருக்கிறது. அதை மாற்றி, 29-சி என்கின்ற பிரிவில், அதற்கு ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள்.
இதுமட்டுமா!
வருமான வரி சட்டம் 1961 இல் 13-ஏ என்கின்ற பிரிவில், இதை எதையும் நீங்கள் வருமானத்தில் காட்ட வேண்டியதில்லை. கம்பெனியைப் பொறுத்தவரையில் மொத்தத் தொகையை மட்டும் காட்டினால்போதும், யாருக்குக் கொடுத்தோம் என்பதைக் காட்டவேண்டிய தில்லை. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், அதையும் காட்டவேண்டியதில்லை என்று திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது.

யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் கொடுக்கலாம்
ரிசர்வ் வங்கிச் சட்டத்தைப் பொறுத்தவரையில், ரிசர்வ் வங்கி மட்டுமே பத்திரம் வெளியிட முடியும் என்கின்ற நிலையை மாற்றி, எந்த கமர்ஷியல் பேங்க்கும் பத்திரங்கள் வெளியிடலாம்; நான் முன்பே சொன்னபடி, ஃபேரர் பேங்க் என்பது கிட்டத்தட்ட கரன்சிக்கு, நம் கைகளில் இருக்கும் பணத்திற்குச் சமமானது. யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதுவும் நீங்கள் கொண்டு போய், பணத்தைப் போட்டு, அதைப் பணமாக்கிக் கொள்ளலாம்.
இந்தத் தேர்தல் பத்திரம் திட்டத்தின் இன்னொரு அம்சம் என்னவென்றால், 15 நாள்களுக்குள் அதை உங்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும். அப்படி 15 நாள்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தவில்லையென்றால், அது பிரதமர் நிவாரண நிதிக்குச் சென்றுவிடும். இது ஒரு பக்கம்.

அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக…
இவ்வாறு, வருமான வரிச் சட்டம், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம், கம்பெனி சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் ஆகிய நான்கு சட்டங்களிலும் திருத்தம் கொண்டு வந்து, அதை நிதி மசோதா என்று சொல்லி, அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக, மக்களவையில் நிறைவேற்றி, இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
எனக்கு முன் உரையாற்றிய நண்பர் இங்கே சொல்லி யதைப்போல, இதில் பாரதீய ஜனதா கட்சி மட்டும் தேர்தல் பத்திரத் திட்டத்தின்மூலம் 6 ஆயிரத்து 566 கோடி ரூபாயைப் பெற்றிருக்கின்றது கடந்த ஏழாண்டு களில்.
காங்கிரசைப் பொறுத்தவரையில் 1,100 கோடி ரூபாய். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் 437 கோடி ரூபாய் என்று சொன்னார்கள்

அசோசியேசன் ஃபார் டெமாக்ரட்டிக் ரீ-பார்ம்ஸ்!
இந்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. எனவேதான், அசோசியேசன் ஃபார் டெமாக்ரட்டிக் ரீ-பார்ம்ஸ் என்கின்ற ஒரு நிறுவனம் – உச்சநீதிமன்றத்தை நாடியது.
உச்சநீதிமன்றத்தில் பிரிவு 32 என்று சொல்வார்கள் – நேரிடையாக ரிட் மனு தாக்கல் செய்யலாம். நீங்கள் உயர்நீதிமன்றம் போகவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.
எப்பொழுது தாக்கல் செய்யலாம் என்றால், ஒரு தனி மனிதனுடைய அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்ற பொழுது, நேரிடையாக உச்சநீதிமன்றத்தை அணுகி நீதி கேட்கலாம்.

உச்சநீதிமன்றத்தை அணுகுவதே அடிப்படை உரிமை!
ஏனென்றால், அதுவே ஓர் அடிப்படை உரிமையாகும். உச்சநீதிமன்றத்தை அணுகுவதே அடிப்படை உரிமை என்று பிரிவு 32 இல் கண்டுள்ளது.
இந்த வழக்கைத் தாக்கல் செய்து, பிரசாந்த் பூஷணும், கபில் சிபலும் வாதாடினார்கள்.

நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் 75 லட்சம் ரூபாயிலிருந்து 95 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் செலவு செய்யலாம்!
அவர்கள் என்ன சொன்னார்கள், மக்கள் பிரதிநிதித் துவச் சட்டத்தில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் ஒரு வேட்பாளர், 75 லட்சம் ரூபாயிலிருந்து 95 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் செலவு செய்யலாம்.
75 லட்சம் ரூபாய் என்பது சிறிய மாநிலங்களைப் பொறுத்து; 95 லட்சம் ரூபாய் என்பது பெரிய மாநிலங்களைப் பொறுத்து. மாநிலங்களுக்கு மாநிலம் இந்த வரையறை வேறுபடும்.
நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரைப் பொறுத்த வரையில் 75 லட்சம் ரூபாயிலிருந்து 95 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் செலவு செய்யலாம்.

சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் 28 லட்சம் ரூபாயிலிருந்து 45 லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்யலாம்!
சட்டமன்றத் தொகுதி வேட்பாளரைப் பொறுத்த வரையில், ஒருவர் 28 லட்சம் ரூபாயிலிருந்து 45 லட்சம் ரூபாய்வரையில் செலவு செய்யலாம்.
நான் இப்பொழுது என்ன கேட்கிறேன் என்றால், இந்தியாவில் மொத்தமாக இருப்பது 4,123 சட்டமன்றத் தொகுதிகள். ஒரு தொகுதிக்கு 50 லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொண்டால்கூட, 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படாது.
இந்தியாவில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் 543. ஓர் அரசியல் கட்சி 543 தொகுதிகளிலும் போட்டி யிடுகிறது என்று வைத்துக்கொண்டாலும்கூட, ஒரு தொகுதி ஒரு கோடி ரூபாய் என்று வைத்தாலும், 543 கோடி ரூபாய்க்குமேல் தேவைப்படாது.

6 ஆயிரத்து 566 கோடி ரூபாயை எதற்காக வசூலிக்கவேண்டும்?
இது வேட்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வரம்பு. நான் என்ன சொல்லுகிறேன் என்றால், வேட்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரம்பு ஒருபுறம் இருக்கட்டும்; அரசியல் கட்சியைப் பொறுத்தவரையில் வரம்பு கிடையாது. ஆனால், 6 ஆயிரத்து 566 கோடி ரூபாயை எதற்காக வசூலிக்கவேண்டும்? இதை நான் கேட்கவில்லை, உச்சநீதிமன்றம் கேட்கிறது.
ஓர் அரசியல் கட்சிக்கு ஒருவர் நன்கொடை கொடுக் கிறார் என்றால், நன்கொடை என்பது அழகான தமிழ்ச் சொல். நல்லெண்ணத்தில் கொடுக்கப்படும் கொடை நன்கொடை.
ஆனால், அரசியல் கட்சிக்கு ஒருவர் அபரிதமாக நன்கொடை கொடுக்கிறார் என்றால், இரண்டு காரணங் கள்தான் இருக்க முடியும்.
ஒன்று, இந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்; இதற்கு நான் முழு ஆதரவு கொடுப்பேன்.
நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவன், என் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், நான் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை கொடுப் பேன், எனது சக்திக்கு உள்பட்டு. இது ஒரு காரணம் – உச்சநீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.
இரண்டாவது, அளவிற்கு மீறி நான் நன்கொடை கொடுக்கிறேன் என்றால், ‘‘நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், பிரதிபலன் ஏதோ எதிர்பார்க்கிறேன்” என்று அர்த்தம்.
வள்ளுவர்தான் சொன்னார்,
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
மழை மட்டும்தான் எந்தவித எதிர்பார்ப்பையும் எதிர் பார்க்காமல், நமக்குப் பொழிந்து சிறப்புகளைக் கொடுக் கிறது; பயிர்களை வளர்க்கிறது. ஆனால், மனிதன் அவ்வாறு செய்வதில்லை.
எனவே, உச்சநீதிமன்றம் கேட்டது; ஒன்று, அவர் உங்களுடைய ஆதரவாளராக இருக்கவேண்டும்; அல்லது உங்களிடம் ஏதோ பெரிதாக எதிர்பார்த்து, ஒரு பெரிய தொகையைக் கொடுத்திருக்கவேண்டும். இதை நீங்கள் வாக்காளர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டாமா?
எனவே, உச்சநீதிமன்றத்தின்முன் இருந்த பிரச்சினை என்னவென்றால், தேர்தல் பத்திரத் திட்டம் மூலமாகக் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தங்கள் சட்டப்படி செல்லுமா?
அரசியல் கட்சிகளுக்கிடையே பேதங்களை உண்டாக்குக்கின்ற, சில அரசியல் கட்சிகள், ஆளும் கட்சியாக வரும் என்றால், அதிக நன்கொடைகளைப் பெறுகின்றன. சில அரசியல் கட்சிகள், சிறிய அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் சிரமம் இருக்கிறது.
அரசியல் கட்சிகளுக்கிடையே வேறுபாட்டை உண்டாக்கும் இந்தத் திட்டம், அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின்கீழ் செல்லுபடியாகுமா? செல்லுபடி யாகாதா?
செல்லுபடியாகாதல்லவா என்று ஒரு வாதம் வைக்கப்பட்டது.

ஒவ்வொரு வாக்காளருக்கும் தெரியவேண்டிய தகவல்!
இரண்டாவதாக, ஒவ்வொரு வாக்காளரும், தன்னு டைய தொகுதியில் நிற்கின்ற வேட்பாளர் எப்படிப்பட் டவர்? எவ்வளவு கற்றவர்? அவருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது? அவருடைய குடும்பத்தார் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்கள்? அவர்மீது இருக்கின்ற குற்றப் பின்னணி என்ன? அவர்மீது குற்ற வழக்கு இருக்கிறதா? ஏற்கெனவே அவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு இருக்கிறாரா? என்பனவெல்லாம் கட் டாயம் அறிந்துகொள்ள வேண்டிய உரிமை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 19(1) ஏ பிரிவின்கீழ் உள்ளதை உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.
எனவே, உச்சநீதிமன்றத்தின்முன் வைக்கப்பட்ட வாதம் என்னவென்றால், அரசியல் கட்சிகளிடையே ஏற்றத் தாழ்வை உருவாக்கும் இந்தத் திட்டம் சட்டப்படி செல்லுமா? அல்லது அரசமைப்புச் சட்டப் பிரிவு இதனால் பாதிக்கப்படுகிறதா? இது ஒன்று.
இரண்டாவது விஷயம், இந்த சட்டத் திருத்தங்களை யெல்லாம் கொண்டு வருகிறார்களே, இதில் எல்லாமே மூடுமந்திரமாக இருக்கிறதே, எல்லாமே மந்தகமாக இருக்கிறதே – எதிலுமே வெளிப்படைத்தன்மை இல்லை. மக்களாட்சியின் மாண்பே வெளிப்படைத்தன்மையும் – மக்களுக்கு அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ கடமைப்பட்டு இருக்கின்றன. எதையும் சொல்ல வேண்டியது கடமை.
Transparency and accountability are the two great hallmark of any democracy. Stands Transparency; Stands Accountability it is not democracy.
எனவே, இது இல்லை என்கின்றபொழுது, இந்தத் திட்டம் செல்லுமா? என்கிற வாதம் வைக்கப்பட்டது.

மூத்த வழக்குரைஞர் கபில்சிபல்!
கபில்சிபல் அவர்கள் என்ன சொன்னார், ‘‘அப்படி ஒரு திட்டத்தை நீங்கள் கொண்டுவந்தீர்கள் என்றால், அனைத்து நன்கொடைகளையும் தேர்தல் ஆணை யத்திற்குக் கொடுக்கச் சொல்லுங்கள். தேர்தல் ஆணை யம் அனைத்து நன்கொடைகளையும் பெறட்டும். தேர்தல் ஆணையம், கட்சி வாரியாக, கட்சியினுடைய சக்தி வாரியாக, அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்கள் வாரியாக தேர்தல் ஆணையம் அந்தப் பணத்தை விநியோகிக்கட்டும். அது வெளிப்படைத்தன்மை. யார் கொடுக்கிறார்கள், யாருக்குக் கொடுக்கிறார்கள், எவ் வளவு கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல, மக்களாட்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைத் தத்துவம் என்கின்றபொழுது, அது அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பானது” என்று வாதிட்டார்.
ஆனால், அரசாங்கம் என்ன சொன்னது?
இது பொருளாதாரக் கொள்கை முடிவு. பொருளாதார முடிவுகளில் தலையிடும் உரிமை நீதிமன்றத்திற்குக் கிடையாது. அங்கு அரசு என்ன சொல்லுகிறதோ, அதுதான் இறுதி முடிவு என்று சொன்னார்கள்.

அய்ந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு!
அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சஞ்ஜீவ்கன்னா, பி.ஆர்.கவாய், மனோஜ் மிஸ்ரா, ஜே.பி.பர்திவாலா என்கின்ற அய்ந்து நீதிபதிகள். இதில் டி.ஒய்.சந்திரசூட் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கிறார். கவாய் மற்றும் சஞ்ஜீவ் கன்னா ஆகியோர் அடுத்தடுத்து தலைமை நீதிபதி யாக வரக்கூடிய நிலையில் இருப்பவர்கள். எனவே, அனைவரும் சட்டம் தெரிந்தவர்கள்.
எனக்குத் தெரிந்து, அண்மையில் அய்ந்த நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு, ஏக மனதாக ஒரு சட்டத் தையோ, ஒரு பொருளாதார திட்டத்தையோ செல்லாது என்று அறிவித்தது, உண்மையிலேயே வரவேற்க வேண்டியதாகும்.

இது எப்படி பொருளாதாரத் திட்டமாகும்?
அவர்கள் சொன்னார்கள், இதனைப் பொருளாதாரத் திட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. தேர்தல் சீர்திருத்தம் என்கின்ற அடிப்படையில், அருண்ஜேட்லி அவர்கள், நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். இது எப்படி பொருளாதாரத் திட்டமாகும்? இது என்ன நாட்டின் வரவு- செலவு அறிக்கையைப் பொறுத்ததா? இல்லை என்று சொல்லி, அதனை ஏற்க மறுத்தார்கள்.

‘‘ரைட் பிரைவசி புட்டாசாமி’’
இரண்டாவதாக, அதைவிட முக்கியமான ஒரு வாதம். ‘‘ரைட் பிரைவசி புட்டாசாமி” என்கின்ற ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்னது – 9 நீதிபதிகள் அமர்வு.
Right privacy is a fundamental rights available to every citizen and another person under 19-1a, 21.
அப்பொழுது, அரசியல் கட்சிக்கு நிதி கொடுக்கும் ஒருவர், அவருக்கு அந்த நம்பகத்தன்மை வேண்டும். இல்லையென்றால், அவர் நிதி கொடுத்த கட்சி அல்லாத மாற்று கட்சி ஆட்சிக்கு வரும்பொழுது, அவர் தண்டிக்கப் படுவார், பழிவாங்கப்படுவார்; அந்த நிறுவனங்கள் முழுமையாகப் பாதிக்கப்படும்.

இரண்டு அடிப்படை உரிமைகள் – ஒரே பிரிவின்கீழ் வருகிறது
எனவேதான், Right Privacy is supreme dame right to information of the voters என்ற வாதம் முன்வைக்கப் பட்டது.
இரண்டு அடிப்படை உரிமைகள் – இரண்டுமே ஒரே பிரிவின்கீழ் வருகிறது. Right information ஆக இருக் கட்டும்; அது ஆர்டிகல் 19-1ஏ என்கிற பிரிவின்கீழ்தான் வருகிறது. Right privacy எங்கிருந்து வருகிறது? அதுவும் ஆர்டிகல் 19-1ஏ என்கிற பிரிவின்கீழ்தான் வருகிறது. இரண்டு உரிமைகளையும் எப்படி நாம் சமநிலைப் படுத்துவது?
இது மிகவும் கடினமானதாகும் என்று.
அப்பொழுது தலைமை நீதிபதி சந்திரசூட் சொல்லு கிறார், இது மிகவும் சுலபமானதாகும். ஏனென்றால், இரண்டு அடிப்படை உரிமைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்பொழுது, எந்த அடிப்படை உரிமை களை நாங்கள் சரி என்று சொல்வது?

‘‘மக்களுக்கு எது உகந்தது என்று பார்க்கவேண்டும்!’’
அப்பொழுது சொல்கிறார், ‘‘மக்களுக்கு எது உகந்தது என்று பார்க்கவேண்டும்” என்று சொல்லி அவருடைய தீர்ப்பைக் கொடுத்தார்.
இவ்வாறு தீர்ப்பளித்து, ஒரு நல்லதொரு முடிவைக் கொடுத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரையில், இந்த சட்ட நுணுக்கங்களை உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன்.
தீரப்பின் இறுதி வாசகத்தில், நாளை மறுநாள் 6.3.2024 -க்குள் பாரத ஸ்டேட் வங்கி, யார் யார் எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள் என்கிற முழு விவரப் பட்டியலை தேர்தல் ஆணையத் திற்கு அனுப்பவேண்டும். தேர்தல் ஆணையம் 13.3.2024 ஆம் தேதி, அதனுடைய இணைய தளத்தில் அனைத்து வாக்காளர்களும் பார்க்கும்படி வெளியிடவேண்டும் என்று சொல்லி, இதுவரையில் வங்கியில் செலுத்தப்படாத அனைத்து தேர்தல் பத்திரங்களும் ரத்து செய்யப்பட்டு, அது உரியவரிடம், யார் பணம் கொடுத்தார்களோ, அவர் களுக்குப் போய்ச் சேரும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது நாம் அனைவரும் வரவேற்க வேண்டிய தீர்ப்பாகும்!
ஒரு வழக்குரைஞரான எனக்கு என்ன வருத்தம் என்றால், ஒரு தவறு நடந்திருக்கிறது, ஒரு திட்டம் சரியில்லை என்று சொன்னால் என்ன செய்யவேண்டும்? வாங்கிய பணம் அனைத்தையும் திருப்பி செலுத்த வேண்டும் என்றுதானே சொல்லவேண்டும். அதைப்பற்றி எந்தவிதத் தீர்ப்பும் இல்லை. அவர்கள் சொல்கிறார்கள், இதுவரை வாங்கிவிட்டீர்களா, பரவாயில்லை. இனிமேல் வாங்காதீர்கள். இந்தத் திட்டம் செல்லாது என்று சொன்ன ஒன்றுதான் என்னுடைய வருத்தமே தவிர, மற்றபடி இந்தத் தீர்ப்பு என்பது நாம் அனைவரும் வரவேற்க வேண்டிய தீர்ப்பாகும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தி.மு.க சட்டத்துறை தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.விடுதலை அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment