நேர்காணல் எதிர் முகாம்: கூட்டணிக் கதவையே கழட்டி வச்சிட்டாங்க தமிழர் தலைவர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

நேர்காணல் எதிர் முகாம்: கூட்டணிக் கதவையே கழட்டி வச்சிட்டாங்க தமிழர் தலைவர் பேட்டி

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல், சமூகப் பாதுகாப்புக்கு ஆபத்தாகவும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத் தலாகவும் இருக்கும் மதவாத அரசியல், மக்களின் எண்ண வோட்டம், அது ஏற்படுத்தப்போகும் மாற்றம் ஆகியவை குறித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களோடு ஒரு நேர்காணல்…

கேள்வி: அய்யா வணக்கம், இப்போது நாடாளுமன்றத் திற்குள்ளேயே அயோத்தி இராமர் வந்துவிட்டாரே?
பதில்: கோயிலுக்குள் இருந்த இராமர் இப்போது நாடாளுமன்றத்திற்குள் வந்திருப்பதைப் புரிந்த மக்கள் இங்கு இருக்கிறார்கள். அவர் எதற்காக வந்தார் என்றால், வேறு மயக்க மருந்துகள் கிடைக்காததால், மற்ற சங்கதிகள் பழையதாகப் போனதால், இதைப் புதிதாகக் கொண்டு வந்து புகுத்தியிருக்கிறார்கள். ஆனால் வாக்காளர்களிலே மிகப் பெரும்பாலோர், தங்களுடைய அவதிகளை இந்த மயக்க மருந்தின் மூலமாகத் தீர்த்துக்கொள்வார்கள், ஏமாந்து விடுவார்கள் என்ற நினைப்பு தவறானது. மக்களுக்குத் தேவை இராமர் இல்லை, அவர்களுக்கு ரொட்டி தேவை, வேலை வாய்ப்பு தேவை, விலைவாசி குறைவு என்பது தேவை, முக்கியமாக நல்லாட்சி தேவை. இவைகளை எல்லாம் இராமர் கொடுக்க மாட்டார் என்பதைத் தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 1971 தேர்தலில், இராமர் அவர்களுக்குக் கைகொடுக்கவில்லை. அவர்கள் நினைத்ததற்கு மாறாக அப்போது தி.மு.க. பெற்ற இடங்கள் 184. இப்போது அகில இந்தியாவிற்கும் அதுதான் பொருந்தும்.
கேள்வி: 1971இல் கடந்த சில தேர்தல்களிலும் கூட கிருஷ்ணர், கந்தசஷ்டி கவசம், வேல் போன்றவற்றைப் பா.ஜ.க.வினர் கருவியாகக் கொண்டுவந்தனர். அதேபோல் இந்தத் தேர்தலில் அயோத்தி ராமரைத் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்தால்…?
பதில்: எழுபத்தி ஒன்றிலேயே கைகொடுக்காதவர் இப்போது எப்படி கை கொடுப்பார்? இப்போது மக்களுக்கு இருப்பதெல்லாம் ஆயிரம் மடங்கு துயரம்தான். படித்தவர்களுக்குக்கூட ஒரு மாயை இருந்தது. ‘சப்கா சாத் சப்கா விகாஸ்’ என்றார்கள், விஸ்வகுரு என்ற வார்த்தைகளை எல்லாம் போட்டு, ‘அச்சே தின்’ என்று “நல்ல காலம் பொறக்குது” என்று குடுகுடுப்பைக்காரன் மாதிரி சொல்லி, எதுவும் இந்த 10 ஆண்டுகளில் நடக்கவில்லை என்பதை அவர்களே இன்றைக்கு உணர்ந்திருக்கிறார்கள். வடபுலத் திலும் மக்கள் தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள். மோடி போனால் ஓட்டு கிடைக்கும், இராமர் கோவில் திறந்து விட்டதால் அங்கே லட்சக்கணக்கானவர்கள் போகிறார்கள், எல்லாம் வாக்குகளாக மாறும் என்று ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். சபரிமலைக்குக் கூடத்தான் லட்சக் கணக்கில் போகிறார்கள், அய்யப்பன் அங்கே பெர்மனெண் டாகக் குடியிருக்கிறான். கேரளாவில் யார் ஆட்சி நடக்கிறது? கம்யூனிஸ்ட் ஆட்சிதானே நடக்கிறது. பா.ஜ.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லையே? எனவே இவையெல்லாம் வெறும் வித்தைகள்தானே தவிர வேறொன்றும் இல்லை. வித்தைகளால் “எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது”.
கேள்வி: அயோத்தியில், இராமர் கோயில் திறந்ததற்குப் பிறகு, பா.ஜ.க. நிர்வாகிகளின் பேச்சுத் தொனி மாறியிருப்பதைப் போலத் தெரிகிறதே?
பதில்: அது நல்லது. ஏனென்றால், நாங்கள்தான் ஜெயிப்போம் என்று நினைப்பது சிறந்த போர் முறை கிடையாது.
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல துவே படை
– என்று பகுத்தறிந்து சொல்லியிருக்கிறார் நம்முடைய திருவள்ளுவர். நம்முடைய மரபில் இதைத் தெரிந்து வைத்திருக்கிறோம். அதைவிடுத்து, “இங்கே நாங்கள்தான் எல்லாம், யாருக்கும் இடமே கிடையாது. நாங்கள்தான் ஜெயிப்போம்” என்று நினைத்துக் கொண்டே வந்தால், வரட்டும், அதனால் எதிரில் நிற்கும் நமக்குத்தான் வெற்றி. நம்முடைய ஆசையைச் சொல்லவில்லை. இதுவரை அவர்கள் வாங்கிய வாக்கு சதவீதத்தைப் பார்த்தாலே தெரியும். பா.ஜ.க. ஒரு ‘ஜனநாயக ஃபார்முலா’ வை வைத்திருக்கிறது. “தோற்றாலும் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம், ஜெயித்தாலும் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் காரணம்.சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இருக்கிறது, கார்ப்பரேட்டுகள் இருக்கிறார்கள். திரிசூலம் போன்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.அய். இருக்கிறது” என்கிறார்கள். ஒன்று அச்சுறுத்தல், அடுத்தது ஆசைகாட்டல் அல்லது விலைக்கு வாங்குதல். இதை இன்றைக்கு நாட்டினர் நன்றாகப் புரிந்து கொண்டார் கள். எப்படி கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் விடியல் வேண்டும் என மக்கள் காத்திருந்தார்களோ, அது இன்றைக்கு அகில இந்திய அளவில் விரிவாகி இருக்கிறது.
கேள்வி: மக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றாலும், இப்போது பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு எதிர்க் கட்சிகள் முன்பைவிடக் கூடுதல் பலத்தோடு ஒன்றிணை வதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அன்றைக்கு இருந்த அதே பா.ஜ.க.தானே இன்றைக்கும் இருக்கிறது?
பதில்: ஒரு சின்ன திருத்தம். அன்றைக்கு இருந்த பா.ஜ.க. தோற்றத்தில் வளர்ச்சி, உள்ளே நோய். புற்றுநோய் வெளியில் தெரியாது. இப்போது அவர்களிடம் பண பலம் பெருகியிருக்கிறது, அதிகார பலம் பெருகியிருக்கிறது. ஆனால் மக்கள் பலம் இல்லை. உதாரணம், மோடி வந்தால் வாக்கு மழை கொட்டும் என்ற பிம்பம், கருநாடகாவிலும், ஆந்திராவிலும் உடைந்திருக்கிறது. வட மாநிலங்களிலும் பலவற்றில் செல்வாக்கு இல்லை. பாரத மாதாவின் தலைப் பகுதி என்று அவர்கள் சொல்லும் காஷ்மீரில் தேர்தல் எப் போது என்று போராட்டம் தொடங்கியிருக்கிறது, வட கிழக்கில் சொல்லவே வேண்டாம், மோடி அங்கு போகவே அச்சப்படுகிறார். இருக்கின்ற சில மாநிலங்களிலும் விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்திருக்கிறார்கள். பிறகு இப்போது எங்கு பார்த்தாலும் மோடியின் படம், நாங்கள்தான் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆக இப்படிப் பட்ட வித்தைகள் எத்தனை காலத்திற்குப் பலிக்கும்? படிக்காத பாமர வாக்காளர்கள் கூட பகுத்தறிவுடன் அரசியலைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு அம்பானி யார், அதானி யார், டாடா பிர்லா யார் என்பது தெரிந்திருக்கிறது. எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார சிக்கல்களைக் கூட அவர்கள் அறிந்திருக் கிறார்கள். மோடி கொடுத்த வாக்குறுதிப்படி பார்த்தால், இது வரை 20 லட்சம் பேருக்கு அதைவிட வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் வேலை கொடுத்திருக்கலாம். ஒன்றும் நடக்கவில்லை, இளைஞர்கள் மோடி மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இத்தனைக்குப் பிறகும், நாங்கள்தான் வருவோம் என்று பேசுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? தாங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயத்திரை, மக்களின் கண்களை மறைத்துவிடும் என நினைக்கிறார்கள். மோடி எனும் மாயபிம்பம் நொறுங்கி விழுந்துவிட்டது.
கேள்வி: ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை, விசாரணை, கைது எல்லாம் அவசரகதியில் நடப்பதைப் பார்க்கும்போது, உள வியல் தாக்குதலை பா.ஜ.க. திட்டமிடுகிறதா?
பதில்: இதெல்லாம் ஓரளவிற்குத்தான் நிற்குமே தவிர, குட்டு வெளிப்பட்டு விடும். பாமர மக்களை வேண்டுமானால் உளவியல் ரீதியாக ஏமாற்றலாம் என்று ஒரு காலத்தில் நிலை இருந்தது. ஆனால் இப்போது, பரக்கலா பிரபாகர் போன்றவர்கள் எழுதிய புத்தகங்கள், விவாதங்கள் சாதாரண மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அனுபவத்தின் மூலமாகவும் தெளிவடைந்து விட்டார்கள். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், “நான் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது” என்றார் மோடி. ஆனால் இப்போதுதான் முன்பைவிட நிலைமை மோசமாகி இருக்கிறது என்னும் அனுபவ உண்மை மீனவர்களுக்குத் தெரிந்துவிட்டது. இந்த உண்மைகளை மக்களுக்குப் புரிய வைக்கும் வேலையை ‘இந்தியா’ கூட்டணி ஒழுங்காகவும், கட்டுப்பாட்டுடனும் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அதாவது, பாஜகவிடம் இருந்து அதிமுக விலகிவிட்டது எனவே இந்தப்பக்கம் இருக்கும் கட்சிகள் அந்தப் பக்கம் வரக்கூடும் என்பதாக ஊடகங்கள் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான நிலை என்ன தெரியுமா? கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று சொல்வதைத் தாண்டி, கதவுகளையே கழட்டி வைத்துவிட்டோம் என்று பா.ஜ.க. சொன்னால் கூட போவதற்கு ஆள் இல்லை. அதே சமயம், அவரவரின் தனித்தன்மையை விட்டுக் கொடுக் காமல், வலுவான திட்டத்தோடு ‘இந்தியா’ கூட்டணி ஒன்று பட்டு நிற்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் பாது காப்புக்காக அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் பாடுபடுகிறார், பெரியாரின் பிம்பமாக அடையாளமாக இருக்கும் அமைச்சர் உதயநிதியும் இங்கே இருக்கிறார். எல்லோருக்கும் பொது வான தத்துவம் திராவிடத்தைக் காப்போம் என்பதுதான். இப்படி ஒரு பொதுக் கொள்கை அடிப்படையில் வடக்கிலும் கூட்டணி அமையும்போது இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
கேள்வி: அய்யா, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பிரச்சாரம் என்று வரும்போது, இந்த நாடாளு மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அயோத்தி இராமர் கோயிலைக் கையிலெடுப்பதுதான் பா.ஜ.க.வின் திட்டம் எனத் தெரிகிறது. மக்களின் உணர்வோடு நம்பிக்கையோடு தொடர்புடைய மதத்தை வைத்து பா.ஜ.க. பிரச்சாரம் செய்யும்போது, அது ‘இந்தியா’ கூட்டணியின் பிரச்சாரத்திற்குச் சவாலாக இருக்கும்தானே?
பதில்: உங்களுடைய கேள்வி மிகவும் நியாயமான கேள்வி. ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், தொடக்கத்திலேயே எதிர்க்கட்சிகள் இந்த விசயத்தில் ஒரு நல்ல நிலைப்பாட்டை எடுத்து விட்டார்கள். “எங்களை அழைப்பது பக்திக்காக அன்று; தேர்தல் கருவியாக இராமரைப் பயன்படுத்துவதற்காகக் கட்டி முடிக்கப்படாத கோயிலைத் திறக்கிறீர்கள் எனவே, இதை நாங்கள் புறக்கணிக்கிறோம்” என்று தெளிவாகக் கூறிவிட்டனர். தேர்தலுக்காகத்தான் பா.ஜ.க. இதைச் செய்கிறது என்பதை இப்போது மக்களும் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் அந்த மயக்க மருந்தைப் பயன்படுத் தவே செய்வார்கள். அதைப்பற்றிப் பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லை. ஏற்கெனவே அயோத்தியி லேயே பா.ஜ.க. தோற்ற வரலாறு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இதில் துணிச்சலோடு தங்கள் கடமையைச் செய்தார்கள். அதிலும் காங்கிரசில் ராகுல்காந்தி, பிரியங்கா இருவரும் பெரியாரை மேற்கோள் காட்டி, திராவிடத்தை, தமிழ் நாட்டைப் பற்றிக்கொண்டு மிகத் தெளிவோடு பயணிக் கின்றனர். எல்லாவற்றையும்விட தேர்தலுக்கு மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டமே உள்ளது.
கேள்வி: அய்யா, ஒன்றிய பா.ஜ.க. அரசு பாரத் அரிசி என்ற பெயரில் மானிய விலை அரிசியை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இது தேர்தலுக்காகவா, இல்லை…?
பதில்: (சிரிப்பு) அப்படி என்றால் இத்தனை நாளும் மக்களை பட்டினி போட்டிருக்கிறோம் என்பதை பா.ஜ.க. ஒப்புக்கொள்கிறது. அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி போட்டு, அரிசி வாங்கக்கூட முடியாமல் மக்களை பட்டினி போட்டுவிட்டு, இப்போது தேர்தல் நேரத்தில் சலுகை காட்ட வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று மக்களிடம் எடுத்துச்சொல்ல பாரத் அரிசியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். “பாரத் அரிசியை 29 ரூபாய்க்குக் கொடுக்கிறீர்கள், நீங்கள் போடும் தடைகளைத் தாண்டி, திராவிட அரிசியை நாங்கள் இலவசமாகவே கொடுத்து வருகிறோம்” என்று தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தக்க பதிலடி தரப்பட்டு வருகின்றது. ‘பாரதத்தில்’ அதிகமாக இருப்பது கோதுமைதானே, இருந்தும் அரிசி கொடுக் கிறார்கள் என்றால், அரிசி உணவு உண்பவர்களை ஏமாற்றும் திட்டமே “பாரத் அரிசி”.
(முழுமையான நேர்காணலைத்
“திராவிடம் 100” வலையொளியில் காணலாம்).

No comments:

Post a Comment