வெள்ளப் பேரிடரால் அல்லல்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யாததோடு -  ஆறுதல் வார்த்தைகளைக்கூடக் கூறாதவர் பிரதமர் நரேந்திர மோடி! - தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 6, 2024

வெள்ளப் பேரிடரால் அல்லல்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யாததோடு -  ஆறுதல் வார்த்தைகளைக்கூடக் கூறாதவர் பிரதமர் நரேந்திர மோடி! - தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி

featured image
♦ வெள்ளப் பேரிடரால் அல்லல்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யாததோடு – 
ஆறுதல் வார்த்தைகளைக்கூடக் கூறாதவர் பிரதமர் நரேந்திர மோடி!
♦ நிதானமின்றியும், உண்மைக் கலப்பில்லாத பேச்சாலும் 
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை நாளும் இழக்கிறார் பிரதமர்!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘திராவிட மாடல்’ அரசு மேற்கொண்ட உதவிகளை மக்கள் அறிவார்கள்!
தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூடச் சொல்ல மனம் வராத பிரதமர் மோடி, நிதானமற்ற, உண்மைக் கலப்பில்லாத வார்த்தைகளைக் கொட்டுகிறார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசு செய்த உதவிகளை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பிரதமரின் பேச்சால் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை நாளும் இழந்து வருகிறார் பிரதமர் மோடி என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.  அவரது அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு அடிக்கடி ‘‘விஜயம்” செய்கிறார்! வானளாவிய முழக்கத்தைச் செய்கிறார்!! பரவாயில்லை, பல மாதங்களாக பற்றி எரியும் வடகிழக்கு மணிப்பூர் கொடுமைத் தீயை – பழங்குடி மகளிரை நிர்வாணப்படுத்தி பொது சாலையில் ஓடவிட்டு நடத்தப்பட்ட வன்கொடுமையைக் கண்டித்து அந்த மக்களுக்கு ஆறுதலோ, தேறுதலோ கூறாத மோடி,
இப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதல்லவா?
எப்படியாவது திராவிட கற்பாறையான தமிழ் நாட்டில் தாமரை முளைக்காதா என்று எதிர்பார்ப்பில் – அதீத நம்பிக்கையில் வந்து செல்வதையும் – அதில் சம்பிரதாயமாக தமிழைப்பற்றி சில சொல்லாடல்களை இணைப்பதையும் தனது உரையின் ஒரு முக்கிய பகுதியாக ஆக்கியிருப்பதைக் கண்டு தமிழ் மண்ணில் உள்ளவர்கள் நன்கு புரிந்து சிரிக்கிறார்கள்!
பேரிடர் பாதிப்பு – நிதி உதவி வேண்டாம் – ஆறுதல்வார்த்தை கூட  கூறவில்லையே பிரதமர்!
தமிழ்நாட்டில் மழை, வெள்ளம், புயல் பாதித்த நேரங்களில் வராத பிரதமர் மோடி, திரும்பத் திரும்ப, ‘‘இந்தப் பேரிடரிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற போதிய நிதி உதவி செய்யுங்கள்” என்று தமிழ்நாட்டு முதலமைச்சரும், மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.,க்களும் அவரை வேண்டி வேண்டிக் கேட்டும் இதுவரை அவரது காதுகள் கேளாக் காதுகள்; தர மறுக்கும் கைகள் உள்ள பிரதமர் மோடி, இப்போது முழக்கமிடுகிறார்!
உதவிகூட பிறகு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓர் ஆறுதல் வார்த்தை, விசாரிப்பு உண்டா? அவர் அமைச் சரவையில், அவருக்கு அடுத்தபடி உள்ள இராணுவ அமைச்சர், அவரால் இதற்கென்றே அனுப்பப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிதியமைச்சர், இவர்களுடன் புயல், மழை, வெள்ள நிவாரணப் பேரிடர் சேதாரப் பாதிப்பைப் பார்வையிட அனுப்பப்பட்ட இருபெரும் நிபுணர் குழு என்ற காட்சிகளுக்குப் பிறகும், தமிழ்நாடு அரசு கோரிய 37,000 கோடி ரூபாயில் ஒரு ரூபாய்கூட தரவில்லை என்பதை உலகறியும்.
அவரது ‘மனதின் குரல்’ (மங்கி-பாத்) ஏனோ இதைக் கூறவில்லை – காரணம், இதை தனது காவிமயமாக்க எத்தனை கஜகர்ணம் போட்டாலும், மாற்ற முடியாது என்பதைப் புரிந்ததால்தான், இந்த ஓரவஞ்சணையா? என்ற மக்களின் கொந்தளிப்பை மாற்றுவதற்குப் பதிலாக, நிதிப் பற்றாக்குறை – நெருக்கடியிலும் உதவும் கரங்களை நீட்டும் தி.மு.க. ஆட்சிமீதும், முதலமைச் சர்மீதும் தீராப் பழியும், உண்மைக் கலப்பற்ற சுடுசொற் களையும் தனது அஸ்திரங்களாக வீசுகிறார்!
இரை தேடி ஏமாந்த நிலை பி.ஜே.பி.,க்கு!
தமிழ்நாட்டில் அவரது பா.ஜ.க.வை சீந்தும் கட்சி களும் இல்லை – இன்று அவருடைய கூட்டணியில் – அதன் கதவைத் திறந்து வைத்தும் சேரத் தயாராக யாரும் இல்லை; அதைவிட அவரது ஆத்திரத்திற்கு முக்கியக் காரணம், புதிதாக யாரும் அவரது கூட்டணி நோக்கி வராததும் மட்டுமல்ல; ஏற்கெனவே அவரு டைய கட்சியோடு முன்பு இருந்த கூட்டணியினரும் அதைக் கைவிட்டு வெளியேறி விட்டனர்.
‘‘இரை தேடி ஏமாந்த கழுகு”போல, இருந்த கட்சிகளும் வெளியேறிய வேதனையில் வெந்து நொந்து பேசுகிறார்.
பிரதமர் மோடி, ‘‘140 கோடி மக்களும் தன் குடும்பம்” என்று மார்பினைத் தட்டுபவர், அந்த மக்களிடையே நிதி வழங்குவதில் அவர்களுக்குரிய நீதி வழங்குவதில் பாகுபாடு – வேறுபாடு காட்டலாமா?
வெந்த புண்ணில் வேல்!
குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பேரிடர் நிகழ்ந்தபோது, உதவிய நிதியையும், தமிழ் நாட்டில் இயற்கையின் சீற்றத்தால் சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 146 ஆண்டுகளில் பெய்யாத பெருமழை அடுத்தடுத்துப் பெய்து, மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் வேதனையை அனுபவித்த நிலையில், அவர் உதவாதது மட்டுமல்ல, எப்படி நம் மக்களிடையே ‘‘வெந்த புண் ணில் வேலைச் சொருகுகிறார்” என்பது சென்னையில் அவர் பேச்சினைக் கேட்ட எவருக்கும் தெரியும்(!)
காமாலைக் கண்ணர்களுக்கு…
‘‘வீட்டுக்கு வந்தது வெள்ளமா, பாலாறா? தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள், வெள்ளம், மேலாண்மை செய்ய வில்லை; மாறாக, ஊடக மேலாண்மையை செய்கின் றனர்.
வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துவிட்டது. பாலும், தேனும் ஓடுவதாக ஊடகங்களில் கூறுகின்றனர்.”
– இப்படி ஆட்சியை மட்டுமல்ல, அதன் ஓடோடி உதவி, உற்றுழி செய்யும் பாங்கைக் கூறும் ஊடகங் கள்மீது குற்றப்பத்திரிகை படிக்கிறார், தி.மு.க. ஆட்சிமீது!
‘‘காமாலைக் கண்ணருக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக”த்தானே தெரியும்?
மக்கள் நலம் காக்கும் ஒரு பிரதமராக இருந்தால், இப்படிப் பேசத் துணிச்சல் வருமா? இரக்கமற்ற பேச்சுகள்!
உள்ளம் இருக்கவேண்டிய இடத்தில், இப்படி பள்ளமும், இரக்கமற்ற கொடுமையும் கோலோச்சலமா?
140 கோடி மக்களை தனது குடும்பமாக உண்மை யாகவே கருதினால், இப்படிப்பட்ட ஈரமற்ற, காரமுள்ள வார்த்தைகள் வருமா, பிரதமரிடமிருந்து?
ஈர நெஞ்சமுள்ள முதலமைச்சர் இங்கே!
‘‘தி.மு.க., அரசுக்கு மக்களின் துயரம் குறித்து அக்கறை இல்லையாம்” சொல்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓர் ஆறுதல் வார்த்தைகூடச் சொல்லாது, இராமேசுவரம் தியானம்; தனுஷ்கோடியில் தங்கி கடலின் அழகை ரசித்து ஊடகங்களில் பரப்பி பரவசப்பட்டவர்தான் இந்தப் பிரதமர்!
இந்த சூழ்நிலையில், இடுப்பளவு வெள்ளத்திலும் இறங்கி மக்களுக்கு ஆதரவு கூறி, தேற்றி, அமைச்சர் குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி போன்றவர்கள் உதவிய பொதுநலப் பணி, தொண்டறத் தோழர்கள் பணியும், 6000 ரூபாய் அத்துணை பேருக்கும் வீடு தேடி தந்தது – பழுதான வீடுகளுக்கும் நிதி உதவி என விரைந்து வினையாற்றிய ஈரநெஞ்சுள்ள முதலமைச்சர் – தமிழ்நாடு தி.மு.க. அரசுபற்றி பலனடைந்த மக்கள் அறிவார்களே!
ஆத்திரம் அறிவுக்குப் பகைவன்!
‘‘ஆத்திரம் அறிவுக்கு எப்போதும் பகைவன்” என்பது – எல்லாம் தெரிந்த பிரதமர் மோடிக்குத் தெரியாதா என்ன?
போதை மருந்தினை இறக்குமதி செய்து, இந்தியா முழுவதும் விநியோகிக்கப்படும் மாநிலம் எது?
குஜராத் அல்லவா – அவர் பேசுகிறார்!
(நாளை ஆதாரங்களுடன் பதில் தொடரும்)
கி.வீரமணி 
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6-3-2024

No comments:

Post a Comment