காரைக்குடி - பெரியார் சிலைக்கு வயது 50 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 14, 2024

காரைக்குடி - பெரியார் சிலைக்கு வயது 50

featured image

– வி.சி.வில்வம்

காரைக்குடியில் ‘பெரியார் சிலை’ ஒரு அடையாளம் என்பதை விட, பெரியார் சிலை தான் காரைக்குடியின் மய்யப்புள்ளி என்று சொல்லலாம்! எங்கும் நிறைந்தவர் பெரியார்! பேருந்து நிலையம் எப்படிப் போகணும்? அந்தப் பெரியார் சிலை இருக்கில்ல…. அய்யப்பா துணிக்கடைக்கு எப்படிப் போகணும்? அந்தப் பெரியார் சிலை இருக்கில்ல… முத்து மாரியம்மன் கோயிலுக்கு எப்படிப் போகணும்? அந்த பெரியார் சிலை இருக்கில்ல…. ஆக சுற்றிலும் நிறைந்தவராக இருக்கிறார் பெரியார்! “பெரியார் சிலை” என்கிற சொல்லை ஒரு அடையாளமாக, காரைக்குடி மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்! அப்பேற்பட்ட பெரியார் சிலை அமைத்து 50 ஆண்டுகள் ஆகிறது!

சிலைகளின் பயன்பாடு!

கடவுளைக் கண்டுபிடித்த மனிதர்கள், அதற்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதன் வடிவமே சிலையாக உருவானது. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு உருவம் வந்தது. உலகில் எந்த மனிதரும் இதுவரை கடவுளைப் பார்த்ததில்லை. “பேயைப் பார்த்தேன் என்றால் கூட நம்புவார்கள்; கடவுளைப் பார்த்தேன் என்றால் பக்திமான்கள் கூட நம்பமாட்டார்கள்”, என்றார் எம்.ஆர்.இராதா. ஆக கடவுளை மனிதர்களே படைத்த காரணத்தால் தங்களிடம் இருக்கும் கண், மூக்கு, வாய், தலை என மனித உருவத்தை வைத்தே செதுக்கிவிட்டார்கள். தவிர கடவுளுக்கும் குடும்பம், குழந்தைகள், சகோதரர்கள், பலதார திருமணங்கள், கொலைகள், வன்முறைகள் என அத்தனையும் மனித நடவடிக்கைகளே! கண் முன்னாலே மாட்டுச் சாணியை உருட்டி சாமி என்பார்கள். இரும்புக் கம்பியை வெட்டி, அதை ஒட்டி, நெருப்பிலே காட்டி, நெட்டக் குத்தலாய் பதித்து, முனியாண்டி சாமி என்பார்கள்! ஆக கடவுள் சிலைகளை விதவிதமாய் செய்து, அதை வணங்கி மகிழும் வேடிக்கை மனிதர்கள் இவர்கள்!

அடையாளச் சின்னங்கள்!

இப்படியான சூழலில் தான் மனிதர்களுக்கும் சிலை வைக்கும் வழக்கம் வந்தது! குறிப்பாக நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் சிலைகள் உலகம் முழுவதும் தோன்றியது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் வந்த பிறகு இந்தச் சிலைகள் அடையாளச் சின்னங்களாக மாறின. கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும், பெரும் செல்வந்தர்களுக்குக் கூட இங்கு யாரும் சிலை வைப்பதில்லை.

மாறாக இந்தச் சமூகத்திற்கு உழைப்பை, அர்ப்பணிப்பை, தத்துவங்களை இட்டுச் சென்றவர்களாக இருக்க வேண்டும்! அப்படி பார்க்கிற போது சிலருக்கு, சில காரணங்களுக்காக இங்கே சிலைகள் வைக்கப்பட்டன. ஆனால் பெரியாருக்கு வைக்கப்பட்ட சிலை என்பது உயிரோட்டமானது!
பெரியார் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என எதிரிகள் நினைக்கிறார்களே… அவ்வளவு வலிமையானது! பெரியார் சிலையைக் கண்டாலே அலறி துடிக்கிறார்களே… அவ்வளவு வீரியமானது! சிலையல்ல; சித்தாந்தம் முக்கியம்!

பெரியாருக்குச் சிலை எதற்கு? மாலை, மரியாதை எதற்கு? எனச் சிலர் கேட்கிறார்கள். பெரியாருக்கும்கூட சிலை வைப்பதில் உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம்.
எனினும் காலத்திற்கும், அதாவது இறந்த பின்னாலும் பிரச்சாரம் செய்திட எனக்குச் சிலை இருக்கட்டும் என அவர் நினைத்திருக்கலாம். ஒரு இடத்தில் சொல்கிறார், என் சிலைக்குக் கீழே மிக முக்கியமாகக் கடவுள் இல்லை என்பதை எழுதுங்கள், என் வாசகங்களை மக்கள் படித்துக் கொண்டே இருக்கட்டும். சிலை என்னைப் போலவே அச்சு அசலாக இல்லாமல் கூட இருக்கட்டும்; ஆனால் என் கொள்கைகள் நான் சொன்னபடி அப்படியே இருக்க வேண்டும் என்றார்!
நாம் கூட டிசம்பர் 24, 1973 இல் பெரியார் மறைந்து விட்டார் என்று சொல்கிறோம். ஆனால் ஜாதி, மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் நமது எதிரிகள் அதை நம்ப மறுக்கிறார்கள், காரணம் அந்தச் சிலை அவர்களைப் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது!

கொண்டாடி மகிழ்ந்த தோழர்கள்!

அப்படியான ஒரு சிலைக்கு 50 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறார்கள் என்றால் எவ்வளவு வியப்பான செய்தி பாருங்கள்!
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளைக் கடந்தும் சிலைகள் இருக்கின்றன. எனினும் அனைத்துக் கட்சியினர், சமூக அமைப்பினர், பொது மக்களை அழைத்து, எங்கள் பெரியாருக்குச் சிலை வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது, வாருங்கள்! வாருங்கள்! கொண்டாடுவோம்! மகிழ்ந்திடுவோம்! என மரியாதை செய்து, முழக்கமிட்டு, இனிப்பு வழங்கி உற்சாகம் பெற்றுள்ளனர் காரைக்குடி கழகத் தோழர்கள்!

சிலை வரலாறு!

ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்தவர் அய்யா என்.ஆர்.சாமி அவர்கள்! காரைக்குடியில் பெரியார் சிலை வைக்க வேண்டும் என விரும்பி, இப்போதைய திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் கூற இடம் தேர்வு செய்யப்பட்டது. அப்போதைய நகர்மன்றத் தலைவராக இருந்த சிவ.சிதம்பரம் அவர்கள் நகராட்சியில் தீர்மானமாகக் கொண்டு வந்து, அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார். இந்நிலையில் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களுக்கு, ஆசிரியர் தகவல் கூற, உடன் பணிகள் வேகமெடுத்தன! மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு, வரைபடம் ஒன்றையும் அங்கேயே தயார் செய்தார். இவ்வளவிற்கும் அந்த ஆட்சியரின் பெயர் வெங்கட சுப்பிரமணியம், அவர் ஒரு பார்ப்பனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் வாரியம், காவல்துறை ஆகியன அனைத்தையும் ஆய்வு செய்து தடையில்லா சான்றிதழ் வழங்கின. கோப்புகள் தலைமையகம் சென்று, அனுமதியும் முறைப்படி வந்தது!

இப்போதும், எப்போதும் ஆசிரியரே!

சிலை செய்ய வேண்டும் என்கிற போது தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ஆலோசனைக் கேட்க, ஆசிரியரும் உடன் ஏற்பாடு செய்துள்ளார். ஒன்றைப் பத்தாய் பெருக்குவதில் ஆசிரியருக்கு இணை ஆசிரியர் தானே! எனினும் 1975 ஆம் ஆண்டே ஆசிரியர் செய்த அதிரடியை இங்கே காண்போம்! காரைக்குடிக்குப் பெரியார் சிலை வேண்டும் என்றவுடன், அப்போது சென்னை அண்ணா சாலையில் இருந்த எம்.என்.ஜெயராம் சிற்பியிடம் ஆசிரியர் பேசி இருக்கிறார். சிலையின் விலை மிக அதிகமாக இருந்துள்ளது. உடனே ஆசிரியர் அவர்கள், “ஒரு சிலை என்பதால் தானே இந்த விலை, எங்களுக்கு 10 சிலைகள் வேண்டும், என்ன விலை?”, எனக் கேட்க சிலையின் விலை வெகுவாகக் குறைந்துவிட்டது. அந்தச் சிலைகள் தருமபுரி திண்டுக்கல், மதுரை, காரைக்குடி, தஞ்சாவூர், கடலூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டது. இந்தச் சிலைகள் அனைத்தும் ஒரே கால கட்டத்தில் செய்ததால், ஒரே வடிவத்தில் இருக்கும்!

சென்னை அண்ணா மேம்பாலம்!

இந்நிலையில் காரைக்குடிக்குத் தயார் செய்யப்பட்ட சிலையை, எம்ஜிஆர் அவர்கள், தங்களுக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆசிரியர் அவர்களும் சரியென்று கொடுக்கச் சொல்லி, மீண்டும் புதிய சிலையைக் காரைக்குடிக்குத் தயார் செய்துவிட்டார்கள். எம்ஜிஆர் வாங்கிய அந்த சிலைதான் சென்னை, அண்ணா மேம்பாலம் அருகில் இருப்பதாகும்! அதாவது காரைக்குடிக்கு வர வேண்டிய சிலை, அண்ணா மேம்பாலத்தில் காட்சி அளிக்கிறது! இதில் குறிப்பிட வேண்டிய ஒரு செய்தியும் இருக்கிறது! தமிழ்நாட்டிலேயே முதன் முதலாகப் பெரியாருக்கு வைக்கப்பட்ட சிலை என்பது திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் இருப்பது தான்! அதுவே எம்.என்.ஜெயராம் சிற்பிக்கும் அவர் செய்த முதல் பெரியார் சிலை! (பெரியாரே போஸ் கொடுத்து சரி செய்யப்பட்டது)

திறப்பு விழா!

இந்நிலையில் சிலை தயாராகி, கட்டமைப்புப் பணிகள் தொடங்கின. புலவர் ந.இராமநாதன் அவர்கள் அதுசமயம் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியில் இருந்துள்ளார். சிலை அமைப்பைப் பார்வை இடுவதுடன், இளைஞர்கள் பலரையும் அழைத்து வந்து, கட்டுமானப் பணிகளுக்கும் உறுதுணை செய்துள்ளார். பழம்பெரும் செய்திகளைத் தேதி, ஆண்டு வாரியாக நினைவில் வைத்திருக்கும் சாமி.திராவிடமணி அவர்கள், இந்த 50 ஆண்டு கால வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டினார்கள்! ஆக பெரியார் சிலை அமைக்கப்பட்டு, சுற்றிலும் அழகிய வேலைப்பாடுடன் கிரில்கள் பொருத்தப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் இருந்துள்ளன. விழா தேதியாக 13.03.1975 முடிவு செய்யப்பட்டது.

இந்தச் சிலை அமைப்புக் குழுவின் தலைவர் மற்றும் பொருளாளராக என்.ஆர் சாமி அவர்களும், செயலாளர்களாக மரக்கடை ஆர்.சுப்பிரமணியம், சாமி.சமதர்மம் அவர்களும், புரவலர்களாக ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் இரா.சண்முகநாதன், சுப.வீரபாண்டியன் அவர்களின் தந்தை இராம.சுப்பையா அவர்களும் இருந்துள்ளனர்.
அன்றைய கால கட்டத்திலே ரூ.1000 மற்றும் ரூ.500 கொடுத்தவர்கள் பெயர்கள் சிலை பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மீதத் தொகை ரூ 15 ஆயிரம்! பெரும் வரவேற்பை, எதிர்பார்ப்பை உண்டாக்கிய காரைக்குடி பெரியார் சிலை, 13.03.1975 ஆம் நாளன்று திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார், பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு அன்பில்.தர்மலிங்கம், செட்டிநாட்டரசர் எம்.ஏ.முத்தையா (செட்டியார்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற் றனர்! சிலை அமைப்பிற்கான மொத்தச் செலவு போக, ரூ 15 ஆயிரம் மீதம் இருப்பதாக அறிவித்து, அதை அன்னை மணியம்மையார் அவர்களிடம் மேடையில் கொடுத்துள்ளார் என்.ஆர்.சாமி அவர்கள்.
அன்னை மணியம்மையார் அவர்களோ, அந்தத் தொகையை இயக்கப் பணிக்கு வைத்துக் கொள் ளுங்கள் எனத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

50 ஆம் ஆண்டில் பெரியார்!

மறுநாள் காலையில் கனரா வங்கியில் அது வைப்புத் தொகையாகச் சேமிக்கப்பட்டது. அதற்கான ரசீதும் அன்னை மணியம்மையார் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. நாளடைவில் அந்தத் தொகை பெருகி, அதைக் கொண்டு காரைக்குடி புறநகர்ப் பகுதியில் ஒரு இடம் வாங்கப்பட்டது. அந்த இடத்திற்கு “என்.ஆர்.சாமி நினைவு மன்றம்” என ஆசிரியர் பெயர் சூட்டினார். பின்னாளில் அந்த இடம் விற்பனை செய்யப்பட்டு, காரைக்குடி நகரின் மத்தியிலேயே ஒரு இடம் வாங்கப்பட்டு, கட்டடமும் எழுப்பப்பட்டது. அதன் மதிப்பு ரூ.30 இலட்சம் எனக் கணிக்கப்படுகிறது. ஆக ரூ.15 ஆயிரம், ரூ.30 இலட்சமாக ஆகியிருக்கிறது என்றால் இயக்கத்தின் வளர்ச்சி, அதன் மூலம் கொள்கைப் பரவல் என இயக்கம் உயிரோட்டமாக இருப்பதற்கான சான்று அது! அப்படியான வரலாறு படைத்த பெரியார் சிலைக்குத் தான் 50 ஆம் ஆண்டு தொடக்கத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள்! அடுத்து 50 ஆம் ஆண்டு நிறைவையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து பெரும் நிகழ்ச்சியாகச் செய்திட காரைக்குடி மாவட்டக் கழகம் தயார் நிலையில் இருக்கிறது! 1973 இல் உடலால் மறைந்தார் பெரியார்! ஆனால் இன்று வரை சிலையாய் இயங்கி வருகிறார்! நம்மையும் இயக்கி வருகிறார்!!

No comments:

Post a Comment