வழிகாட்டும் மசிகம் ஊராட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 22, 2024

வழிகாட்டும் மசிகம் ஊராட்சி

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மசிகம் ஊராட்சியை சுற்றி சுமார் 9-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தின் காப்புக்காட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அமோகமாக நடந்து வந்தது. ஆந்திர மாநில எல்லைக்கு அருகில் இருப்பதால் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் இரு மாநில காவல்துறைக்கும் போக்குக் காட்டி வந்தனர்.
இதனால் சாராயத்திற்குப் பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது. சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதால் காவல்துறையினர் அடிக்கடி இந்தக் கிராமத்திற்கு வந்து ஊரில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை கேள்வி கேட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்வது வாடிக்கையாகி விட்டது அதே போல் ஆந்திராவிலிருந்து சாராயம் குடிப்பதற்கென அறிமுகம் இல்லாத நபர்கள் அதிகளவில் வந்து, செல்வதால் அந்தப் பகுதி பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனை அடுத்து மசிகம் ஊராட்சியில் கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி மசிகம் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து காவல்துறை உதவியுடன் இந்த ஊராட்சியில் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இரண்டு மாநில காவல் துறையினரும் ஒருங்கிணைந்து சாராயம் விற்பனை செய்யும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, தொடர் குற்றவாளிகளைப் பதிவேட்டில் ஏற்றி அப்பகுதியில் கள்ளச் சாராயம் மற்றும் சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழித்தனர்.
மேலும் கிராமத்தில் முழுமையாக சாராயம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று பேருந்து நிறுத்தத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அறிவிப்புப் பலகையையும் வைத் தனர். மசிகம் ஊராட்சி உள்பட்ட சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் சாராயம் விற்பது, மது அருந்துவதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி சாராயம் விற்பவர்கள்மீது காவல்துறையினர் மூலம் கடும் நட வடிக்கை எடுக்கப்படும்; மது அருந்துபவர்கள் ஊரில் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்தப் போக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து மசிகம் ஊராட்சியில் மதுவை முற்றிலுமாக ஒழித்து சாதித்துக்காட்டியுள்ளனர்.
“மதுவை ஒழிக்க முடியாது; மதுதான் மக்களை ஒழிக்கும்” என்ற நிலைப்பாட்டை ஒரு கிராமம் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது என்பது அசாதாரணமானது – அவ் வூரிலேயே ஒரு பாராட்டு விழாவை நடத்தினால் அதன் வீச்சு மற்ற மற்ற பகுதிகளிலும் பரவக் கூடும்.
பள்ளி மாணவர்களே மது அருந்துகிறார்கள் – மது அருந்தி பள்ளிக்கு வருகிறார்கள் என்பது எல்லாம் – எவ்வளவுப் பெரிய அவலமும் அதிர்ச்சியுமாகும்.
கல்விக் கண் குத்தப்பட்ட நம் மக்களை மேலே தூக்கிவிட தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் எவ்வளவு பாடுபட்டு வந்திருக்கிறது. மனுதர்ம அரசியல் வாதிகள் ஒரு பக்கம் அதனைத் தலை கீழாகப் புரட்டியடிக்க பல தந்திரங்களை மேற்கொண்டு வருகிறார்கள் என்றால், இன்னொரு பக்கம் இந்த மதுவும் மாணவர்களை, இளைஞர்களை இழுத்துப் போட்டு மிதிக்கிறது. அன்றாடம் உழைத்து சம்பாதிப்பவர்கள், கிடைத்த கூலியில் பெரும் பகுதியைக் குடிக்கு ஒப்படைத்து விட்டு, மீதியை போனால் போகிறது என்று மனைவியிடம் கொடுத்து சமைத்துப் போடு என்கிறார்கள், வீட்டில் சதா அமைதியின்மை தலை விரித்தாடுகிறது.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் மசிகம் கிராமம் நல்வழிகாட்டுகிறது. அதன் கையைப் பிடித்து முத்தமிடுவோம். இது போன்ற ஊராட்சிகளுக்கு ஊக்கத் தொகை கொடுத்து, வளர்ச்சியைக் காட்டினால் அது மிகப் பெரிய தாக்கத்தை மற்ற பகுதிகளிலும் ஏற்படுத்தும் அல்லவா? ‘திராவிட மாடல்’ அரசால் நிச்சயம் இதனை சாதித்துக் காட்ட முடியுமே!

No comments:

Post a Comment