ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 9, 2024

ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

featured image

ஒன்றுபடுவோம், மோடி ஆட்சியை வீழ்த்துவோம்! பிற்போக்கு ஆட்சியை வீட்டுக்கனுப்புவோம்!
தோற்கடிப்போம், தோற்கடிப்போம், பா.ஜ.க. கூட்டணியைத் தோற்கடிப்போம்!

சென்னை, பிப்.9 ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம், மோடி ஆட்சியை வீழ்த்துவோம்! பிற்போக்கு ஆட்சியை வீட்டுக்கனுப்புவோம்! தோற்கடிப்போம், தோற்கடிப் போம், பா.ஜ.க. கூட்டணியைத் தோற்கடிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை
நேற்று (8-2-2024) காலை திருச்சிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய ஒன்றாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந் துள்ளது. இந்தியாவில் இன்றைக்கு நடைபெறுகின்ற ஒரு பாசிச ஆட்சியில், ஜனநாயக முறையை காலில் போட்டு மிதிக்கக்கூடியதொரு நிலைமை இருக்கின்றது. பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஆட்சி- பிரதமர் மோடியினுடைய தலைமையில், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறுவதில், ஒவ்வொரு முறையும் பதவிக்கு வருகிறபொழுதும், ஜனநாயகத்தை அவர்கள் எப்படி படுகொலை செய் கிறார்கள் – அரசமைப்புச் சட்டத்தை எப்படியெல்லாம் அவமதிக்கிறார்கள் – ‘‘தோலிருக்க சுளை முழுங்கி” என்று சொல்லுகின்ற நிலையில், அட்டைதான் அர சமைப்புச் சட்டத்தின்மேல் இருக்கிறதே தவிர, அதன் உள்ளே இருக்கக்கூடிய செய்திகள் ஒவ்வொரு நாளும் கபளீகரம் செய்யப்படுகின்றன.

மாநில உரிமைகளை நெரித்துக் கொண்டிருக்கிறார்கள்!
மாநில ஆளுநர்களை, எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் குறுக்கே நந்திகளாக ஆக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகள், மக்கள் நலத் திட்டங் களை நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு மிகப் பெரிய அளவிற்கு இடையூறுகளை, தொல்லைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். நிதிப் பகிர்வை அவர்கள் முறையாகத் தராமல், கழுத்தை நெரிப்பதைப்போல, மாநில உரிமைகளை நெரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டும் என்பதற்காக – இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கக் கூடிய அனைத்து இயக்கங்கள் சார்பாக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்றைக்கு நடைபெறக்கூடிய நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் – திருச்சியில் நடைபெறுகின்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கக் கூடிய சி.பி.எம். மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.ராஜா அவர்களே, சி.பி.எம். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜெயசீலன் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற திரா விட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்டச் செய லாளர் அருமைச் சகோதரர் க.வைரமணி அவர்களே,
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருக்கக் கூடிய சி.பி.அய். மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு பொறுப்பாளர் தோழர் எம்.செல்வராஜ் அவர்களே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் தனிஅமுதன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக மாநகர செயலாளர் செயல்வீரர் மதிவாணன் அவர்களே,
சி.பி.அய். மாநகர மாவட்டச் செயலாளர் தோழர் சிவா அவர்களே, மாநகர மாவட்டச் செயலாளர்களாக இருக்கக்கூடிய அனைத்து இயக்கங்களைச் சார்ந்த நண்பர்களே! மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் முகமது ராஜா அவர்களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் அபி… ரகுமான் அவர்களே, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தோழர் ஞா.ஆரோக்கியராஜ் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் பொறுப்பாளர் அகமது அவர்களே, திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநில செயலாளர் மு. சேகர் அவர்களே, மற்றும் பல் வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய அனைத்துக் கூட்டணிக் கட்சியினுடைய தோழர்களே,
திருவெறும்பூர் அருமைச் சகோதரர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்வீரர் அவர்களே,
மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக் கூடிய அனைத்துத் தாய்மார்களே, பெரியோர்களே, மக ளிரணியைச் சார்ந்தவர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காக
ஒரு பெரிய திட்டத்தை ஒன்றிய ஆட்சியாளர்கள் போட்டிருக்கிறார்கள்!
வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எப்படியாவது மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காக ஒரு பெரிய திட்டத்தை ஒன்றிய ஆட்சியாளர்கள் போட்டிருக்கிறார்கள். மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்பதற்காக – நல்ல திட்டங்களை எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் அவர்கள் செய்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு குறுக்கு வழியை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.
இதுவரையில் இருந்த ஜனநாயகத்தில் வெற்றி பெறுகிறவர்கள் ஆட்சிக்கு வருவார்கள்; தோல்வி அடைபவர்கள் எதிர்க்கட்சியாக இருப்பார்கள். இதுதான் இதுவரையில் நாம் படித்த பாடம்.

வெற்றி பெற்றாலும் எங்கள் ஆட்சிதான்; தோற்றாலும் எங்கள் ஆட்சிதான் என்கிறார்கள்!
ஆனால், இவர்கள், காவிகள் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆர்.எஸ்.எஸ். ஆட்சி வந்ததிலிருந்து கடந்த 10 ஆண்டு காலத்தில், இந்தப் பாடத்தைத் தலைகீழாக ஆக்கி யிருக்கிறார்கள்.
வெற்றி பெற்றாலும் எங்கள் ஆட்சிதான்; தோற்றாலும் எங்கள் ஆட்சிதான். வெற்றி பெற்றால், நாங்கள் நேரிடையாக ஆட்சிக்கு வருவோம்; தோல்வியுற்றால், எல்லோரையும் விலைக்கு வாங்கி, நாங்கள் அவர்கள்மீது சவாரி செய்வோம். எல்லோருக்கும் விலை உண்டு என்று நடைமுறைப்படுத்திக் காட்டுகிறார்கள்.
எனவேதான், ஜனநாயகத்தையே விலை பேசுகின்ற ஒரு கொடுமைக்காரர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள்தான் இந்தக் காவிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், அதனுடைய மிகப்பெரிய குத்தகைத் தலை வர்தான் மோடி அவர்கள்.

வாக்குப் பெட்டியையும் – அரசு அதிகாரிகளையும் அவர்கள் வசமாக்கிக் கொள்வார்களாம்!
‘‘மக்கள் ஓட்டுப் போட்டு, நீங்கள் கஷ்டப்பட்டு வெற்றி பெறலாம். அதற்கு முன்பு நாங்கள் வாக்குப் பெட் டியை எங்கள் வசப்படுத்திக் கொள்வோம். அதையும் தாண்டி நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால், அவர்களை எங்கள் வசமாக்கிக் கொள்வோம்.
வெற்றி பெற்றவர்கள் இதற்கு ஒத்துழைக்காவிட்டால், அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி, அச்சுறுத்தி அவர் களை எங்கள் வயப்படுத்திக் கொள்வோம் – பா.ஜ.க.வின் வழிமுறை!
அதற்கு உதாரணம், சற்று நேரத்திற்குமுன்பு இங்கே உரையாற்றிய தோழர் சொன்னார் அல்லவா – சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில், மொத்தம் உள்ள 36 இடங்களில், எதிர்க்கட்சியாக இருக்கின்றவர்களுக்கு ஆதரவு 16; ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருக்கு ஆதரவு 20. ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த 20 இடங்களில், 8 இடங்களை செல்லாததாக்கினார் தேர்தல் பொறுப்பாளராக வந்த அதிகாரி.
அந்த அதிகாரியை தண்டிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மூன்று நாள்களுக்கு முன்பு சொல்லியிருக் கிறது.
அதிகாரிகள் கைத்துப்பாக்கி போன்றவர்கள்; துப் பாக்கியை யாரும் தண்டிப்பதில்லை; அந்தத் துப்பாக் கியைப் பிடித்த கை யார் என்று பார்த்துத்தான் தண் டிக்கவேண்டும்.
கத்திக்குத் தண்டனை கிடையாது; கத்தியை எடுத்துக் குத்துகிறாரே, அவருக்குத்தான் தண்டனை.

பா.ஜ.க.வினுடைய கைகள் – ஆர்.எஸ்.எஸினுடைய கைகள் – அவை தண்டிக்கப்படவேணடும்
ஆனால், இன்றைக்கு அதிகாரிகள் எல்லாம் துப்பாக் கிகள், கத்திகள் – அவற்றைப் பிடிக்கின்ற கைகள்தான் மோடியினுடைய கைகள் – பா.ஜ.க.வினுடைய கைகள் – ஆர்.எஸ்.எஸினுடைய கைகள். அவை தண்டிக்கப் படவேணடும்.
தண்டிக்கப்படவேண்டும் என்றால், நாம் வன்முறை யில் இறங்கவேண்டும் என்று சொல்லவில்லை. அதற் காகத்தான் இதுபோன்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
அவர்கள் செய்யும் தந்திரங்களை மீறி வெற்றி பெற்று எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தால், ஆளுநர்களை வைத்து தனி அரசாங்கம் நடத்துகிறார்கள்.

அன்றே சொன்னார் அண்ணா!
அண்ணாதான் சொன்னார், ‘‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்குக் கவர்னரும் தேவையில்லை” என்று. அது எவ்வளவு முற்போக்கான சிந்தனை என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
இன்றைக்கு அதுபோன்ற ஆளுநர்களை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் ஒருவர், கேரளாவில் ஒருவர், பஞ்சாபில் ஒருவர் – ஆளுங்கட்சியின் கடமையைச் செய்யவிடாமல், இடையூறுகளை செய்துகொண்டிருக் கிறார்கள். உச்சநீதிமன்றம் அவர்களுடைய காதைப்பற்றி திருகினாலும், அதைப்பற்றி கவலைப்படாத அவர்கள், உணர்ச்சியற்றவர்களாக இருந்துகொண்டு, ஒரு பக்கம் பிரதமர், இன்னொரு பக்கம் அமித்ஷா என, மாநில அரசுக்குத் தொல்லை தருகிறார்கள்.
ஆளுநர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆளுகின்ற ஆட்சி, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாத அளவிற்கு, நிறைவேற்றிய சட்டங்களுக்கு கையெழுத்துப் போடாமல் நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரையில், ஆளுநர் என்பவர்கள், அந்தப் பதவியினுடைய கண்ணியத்தைக் காப்பாற்றினார்கள். ஆனால், இப்பொழுது இருக்கின்ற தமிழ்நாடு ஆளுநரும் சரி, கேரளாவில் இருக்கின்ற ஆளுநரும் சரி, நாலாந்தார ஆட்கள்கூட இவர்கள் போன்று நடந்துகொள்ளமாட் டார்கள்.
கேரளாவில் ஆளுநர் சென்று கொண்டிருக்கிறார்; திடீரென்று மாணவர்கள் அவர்களுடைய எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். ஜனநாயகத்தில் அந்த உரிமை யாருக்கும் உண்டு.

மாணவர்களைக் கைது செய்யவேண்டும்; அப்படி நீங்கள் செய்யாவிட்டால், நான் இங்கே இருந்து போக மாட்டேன் என்று சொல்லி, கீழே அமர்ந்து ‘தர்ணா’ செய்கிறார்.
இப்பொழுது ஆளுநரையே, காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிப் பாதுகாக்கவேண்டியதாக இருக்கிறது.
ஜனநாயகத்தையும் பாதுகாப்பது நம்முடைய வேலை; ஆளுநரைப் பாதுகாக்கவேண்டியது காவல் துறையினருடைய வேலை.
இதுபோன்று எந்த நாட்டிலாவது நடந்ததுண்டா?

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்!
தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆளுநர், ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் அவர். சட்டமன்றத்தில் அவரே ஒப்புக்கொண்ட உரையையேகூட படிக்கமாட்டார். பெரியார் பெயரைச் சொல்லக்கூடாது; காமராஜர் பெயரை சொல்லக்கூடாது; அம்பேத்கர் பெயரை சொல்லக்கூடாது; மார்க்ஸ் பெயரை சொல்லக்கூடாது. இப்படி எல்லாவற்றிலும் இருந்து, அவர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறார்.
இதுவரையில் எதிர்க்கட்சியினர் பொதுவாக வெளி நடப்பு செய்வார்கள் சட்டமன்றத்தில். ஆனால், ஆளுநராக இருக்கக்கூடியவர் வெளிநடப்பு செய்கிறார். இன்னும் கொஞ்ச நாள் போனால், முதலமைச்சர் வீட்டின்முன் உண்ணாநிலை இருந்தாலும் இருப்பார். அல்லது சிலரை அழைத்துக்கொண்டு, கோட்டைக்குள் நுழைந்து, நாற்காலியில் அமரப் போகிறேன் என்று சொன்னாலும், ஆச்சரியப்படுவதில்லை.
ஏனென்றால், மனநிலை வைத்தியம் செய்யவேண்டிய ஆட்கள் எல்லாம், பெரும் பெரும் பொறுப்புகளில் அங்கே இருக்கிறார்கள்.

கண்டன ஆர்ப்பாட்டத்தினுடைய நோக்கம்!
ஆகவேதான் நீங்கள், அந்த மனநிலை பாதிக்கப்பட்ட வர்களை மனநிலை மருத்துவமனைக்கு அனுப்பவேண் டாம். அதற்குப் பதிலாக, உங்கள் கைகளில் இருக்கக்கூடிய வாக்குச் சீட்டில், இந்தியா கூட்டணியின் சார்பில் யார் நிறுத்தப்படுகிறார்களோ, அவர்களுக்கு உங்கள் முத்தி ரையைப் பதியுங்கள் என்று சொல்வதுதான் ஒரே ஒரு பதில். அதுதான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தினுடைய நோக்கம்.
நீண்ட நாள்களுக்கு முன்பு திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் மாநாடு போட்டு ஒருவர், திரிசூலம் கொடுத்தார். அந்த ஆள், இப்பொழுது எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை. ஒருவகையில் மோடி அவரை ஒழித்துவிட்டார்.

திரிசூலம் போன்று
ஒன்றிய ஆட்சியினர் கைகளில் இருப்பது!
அந்தத் திரிசூலம் போன்று அவர்களுடைய கைகளில் இருப்பது –
ஒன்று, சி.பி.அய்.
இரண்டாவது, வருமான வரித் துறை
மூன்றாவது, அமலாக்கத் துறை.
அமலாக்கத் துறை எப்படி இருக்கிறது? அமலாக்கத் துறையைச் சேர்ந்த அதிகாரி லஞ்சம் வாங்கி, வெளியில் வர முடியாத நிலையில் இருக்கிறார்.
லஞ்சம் வாங்குகிறவர்களைக் கண்டுபிடிப்பதுதான் அவருடைய பணி. ஆனால், அந்த அதிகாரி வாங்கிய லஞ்சத்தைக் கண்டுபிடித்த ஆட்சிதான் தமிழ்நாட்டில் இருக்கின்ற நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி!
இப்பொழுது அந்த அமலாக்கத் துறை அதிகாரி, ‘‘எனக்கு ஜாமீன் கொடுங்கள், எனக்கு ஜாமீன் கொடுங்கள்” என்று கேட்கிறார்.
நம்முடைய அமைச்சர்கள் உள்ளே போனால், அதனை பெரிய செய்தி ஆக்குகிறார்கள். ஆனால், அமலாக்கத் துறை அதிகாரியைப்பற்றி கவலைப்படவே இல்லை.
ஆகவே, மேற்சொன்ன மூன்றைக் காட்டி மிரட்டி, அதற்காக கட்சி மாறச் சொல்கிறார்கள்.

உதிர்ந்த சருகுகளையெல்லாம் பொறுக்கி, தோரணமாகக் கட்டலாம் என்று நினைக்கிறார்கள்!
கூட்டணிக்கு ஆள் வரவில்லை என்றவுடன், அரை வேக்காடு அண்ணாமலை போன்றவர்கள், ‘‘நாங்கள் பலமூட்டுகிறோம்,. பல மூட்டுகிறோம்; எங்கள் கட்சி மிகவும் வலிமையாக இருக்கிறது” என்று சொல்கிறார். ஒவ்வொரு எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய உதிர்ந்த சருகுகளையெல்லாம் பொறுக்கிக் கொண்டு வந்து, அவற்றைத் தோரணமாகக் கட்டலாம் என்று நினைக் கிறார்கள்.
சருகுகளை யாரும் தோரணம் கட்ட மாட்டார்கள். பச்சையாக இருக்கின்ற இலையில்தான் தோரணம் கட்டுவார்கள். ஆனால், தோரணத்திற்கு ஆள் கிடைக்க வில்லை என்றால் என்ன செய்வார்கள்? எங்கெங்கே சருகுகள் இருக்கிறதோ, அந்த சருகுகளைத் தேடு கிறார்கள்.
எனவே, சருகுகளுக்கு இப்பொழுது விலை அதிகம்.
எம்.எல்.ஏ,க்களுக்கு விலை அதிகம்,
எம்.பி.,க்களுக்கு விலை அதிகம்,
அதிகாரிகளுக்கு விலை அதிகம்,
இவையெல்லாவற்றையும் வைத்துதான் ஜனநாய கத்தை அவர்கள் படுகொலை செய்துகொண்டிருக் கிறார்கள்.
அதனை எதிர்த்துத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றது.

பிச்சை கேட்கவில்லை,
உரிமையைக் கேட்கிறார்கள்!
எந்தக் காலத்திலாவது, மாநிலங்களுடைய முதல மைச்சர்கள், நாடாளுமன்றம் நடைபெறக்கூடிய அந்த அவைக்கு முன் நின்று, ‘‘எங்களுக்கு நிதி கொடுங்கள்!” என்று கேட்டதுண்டா?
அவர்கள் பிச்சை கேட்கவில்லை; அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற முறைப்படி, அவர்கள் உரிமை யோடு கேட்கிறார்கள்.
உரிமை வேறு; சலுகை வேறு.
மாநில அரசுக்குத்தான் மக்கள் இருக்கிறார்கள்; ஒன்றிய அரசுக்கு மக்கள் கிடையாது.
மக்களுக்கு இந்தத் திட்டத்தைச் செய்யுங்கள், அந்தத் திட்டத்தைச் செய்யுங்கள் என்று ஒன்றிய அரசு சொல்கிறதே, அந்தத் திட்டத்தை அவர்களால் நேரிடை யாக செய்ய முடியவில்லை. செய்ய முடியாது.

ஒன்றிய அரசுக்கு மக்கள் கிடையாது!
காரணம், ஒன்றிய அரசுக்கு மக்கள் கிடையாது. மாநில அரசு சார்ந்துதான் மக்கள் இருக்கிறார்கள். இது நீண்டகாலமான உண்மையாகும்.
பழைய காலம் போன்று, மாநிலங்கள் எல்லாம் சக்ர வர்த்திக்குக் கப்பம் கட்டுகின்ற சிற்றரசுகள் கிடையாது.
மாநிலங்கள் கொடுக்கின்ற வரிகளை வாங்கி, ஜி.எஸ்.டி.,யா? வருமான வரித் துறையா? மற்ற மற்ற மறைமுக வரிகளா? அவையெல்லாம் ஒன்றிய அரசிற்கு மாநிலங்கள் கொடுக்கின்ற பணம்தான்.
ஒரு ரூபாயை ஒன்றிய அரசுக்கு மாநிலம் கொடுத் தால், அதில் ஒன்றிய அரசு திருப்பிக் கொடுப்பது 26 காசுதான். ஏதோ பிச்சை போடுவது போன்று போடு கிறார்கள்.

ஜி.எஸ்.டி.யை என் பிணத்தின்மீதுதான் நடைமுறைப்படுத்தவேண்டும் என்றவர் மோடி!
ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்தவேண்டும் என் றால், என்னுடைய பிணத்தின்மீதுதான் நடைமுறைப் படுத்த முடியும் என்று சொன்னவர்தான் மோடி – அவர் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபொழுது.
இன்றைக்கு அவரே ஜி.எஸ்.டி.யை நடைமுறைப் படுத்தி இருக்கிறார்.
புயல், மழை, வெள்ளத்தால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். அதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியை ஒன்றிய அரசிடம் கேட்டது தமிழ்நாடு அரசு. ஆனால், 37 ரூபாயைக்கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை.
இதுதான் ஒன்றிய ஆட்சியினுடைய இலட்சணம்!
கஜானா என்ன உங்களுடையதா? நாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்கிறோம். அதைத் தர மறுக்கிறதே, ஒன்றிய அரசு.

இந்தியா கூட்டணி
வெற்றி பெறப் போவது நிச்சயம்
எனவேதான், எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறார் கள். இன்றைக்கு இந்தியா கூட்டணி வெற்றி பெறப் போவது நிச்சயம்.
ஊடகங்கள் வெளியிடும் செய்தியை வைத்து, இந்தியா கூட்டணியிலிருந்து அவர் போய்விட்டார், இவர் போய்விட்டார் என்று சொல்வதைப்பற்றி கவ லைப்படவேண்டாம்.
இந்தியா கூட்டணியிலிருந்து ஏதோ ஒரு சருகு விழுந்தால், அதனைப் பெரிதுபடுத்துகிறார்கள் பத்திரி கைக்காரர்கள்.
பா.ஜ.க. தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒழுங்காக இருக்கிறதா?
அதிலிருந்து வெளியே வந்துவிட்டதே அ.தி.மு.க. – இவர்களுடைய தோளின்மீதுதானே பா.ஜ.க. நின்றது.
‘‘உங்களுக்கு வாக்களிக்க நாங்கள் தயாராக இருக்கி றோம்; நீங்கள் திராவிட இயக்கம். ஆனால், பா.ஜ.க.விற்கு வாக்களிக்க தயாராக இல்லை” என்று சொல்கிறார்கள்.
பி.ஜே.பி. பெறுகின்ற வாக்குகளைவிட, நோட்டா அதிக வாக்குகளைப் பெறும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு என்ன நடந்துகொண்டிருக்கின்றது?

கதவு திறந்தே இருக்கிறதாம்!
ஒன்றிய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா சொல்கிறார், ‘‘கதவு திறந்தே இருக்கிறது” என்கிறார்.
அ.தி.மு.க.வில் இருக்கின்றவர் சொல்கிறார், ‘‘கதவை மூடிவிட்டோம், இங்கே வராதீர்கள்” என்று சொல்கிறார்.
திறந்த கதவு, மூடிய கதவு, தட்டிய கதவு என்று அந்தக் கூட்டணியில் இப்படிப்பட்ட நிலை.

தலைவர்களை நம்பி இந்தியா கூட்டணி இல்லை; மக்களை நம்பித்தான்!
ஆனால், இந்தியா கூட்டணி உடைந்து போயிற்று என்று ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரத்தைச் செய்கின்றன. கோயபெல்ஸ் பிரச்சாரத்தை செய்கின்றன. தலைவர் களை நம்பி இந்தியா கூட்டணி இல்லை; மக்களை நம்பிக் கொண்டிருக்கக்கூடிய கூட்டணி.
கடந்த 10 ஆண்டுகாலமாக மக்கள் பட்ட அவதியை நன்றாக உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். எல்லாவற் றிலும் ஏமாற்று வேலைதான் ஒன்றிய ஆட்சியினால். பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி விட்டோம் எங்கள் ஆட்சியில் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.
அந்தச் சட்டம் எப்பொழுது நடைமுறைக்குவரும் என்றால், தெரியாது.
ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சொல்வது போன்று, ‘‘வரும், ஆனா, வராது?” என்பதுபோல்.
ஆகவே, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன் றைக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்து – ஜனநாயகப் படுகொலை.

இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆர்ப்பாட்டம்!
எனவேதான் இந்த ஆர்ப்பாட்டம். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தோழர்கள் ஏற்பாடு செய்துள்ளது பாராட்டத்தக்கது. இவ்வார்ப்பாட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் திருச்சியை தன்னுடைய தலைநகரமாகக் கொண்டார்கள். அந்தத் தலைநகரான திருச்சியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்பதில், உங்களோடு கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த நேரத்தில் மூன்று செய்திகளை மக்கள் மத்தியில் நீங்கள் பரப்பவேண்டும். அதை உங்களுக்கு வேண்டு கோளாக வைக்கிறேன்.
ஊடகங்களையெல்லாம் அவர்கள் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகளின் வசம் அவை உள்ளன. அதேபோன்று பத்திரிகைகளும் கார்ப்பரேட் முதலாளி களின் கைகளில் இருக்கின்றன.
பத்திரிகை, ஊடகங்களில் செய்தி வந்திருக்கிறது – அது உண்மைதான் என்று நீங்கள் நம்ப வேண்டாம்.

மூன்று பிம்பங்களைக் காட்டும்
ஒன்றிய பா.ஜ.க. அரசு!
மூன்று விஷயங்களைச் சொல்கிறேன் -மூன்று பிம்பங்களை அவர்கள் பெரிதாகக் காட்டுகிறார்கள்.
அது என்னவென்றால்,
ஒன்று,
மோடிதான் மூன்றாவது முறையாக மீண்டும் பிரத மராக வருவார் என்று ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அவர் மீண்டும் வரமாட்டார்; அவர் மீண்டு வருவாரா? ஏனென்றால், மக்களுடைய உணர்வுகள் அப்படி இருக்கிறது.
இதுவரையில் அவர்கள் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றுதான் இரண்டு முறை ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். 60 சதவிகிதம் அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது.
ஏற்கெனவே தென்னாட்டில் அவர்களுக்குக் கதவு சாத்தப்பட்டு விட்டது.
வடகிழக்கிலும் அவர்களால் போக முடியாது. காஷ் மீரில் தேர்தல் நடத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. உச்சநீதிமன்றமும் கேட்டது; நடக்கும், நடக்காது என்பது தான் அவர்கள் பதில்.
நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்த லில் இந்தியா கூட்டணிதான் வெல்லப் போகிறது. ஒன்றி யத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க. தலைமையில் உள்ள மோடி அரசு மீண்டும் வராது; வர விடமாட்டார்கள் மக்கள்.

வாக்களிக்கும் மக்களுடைய
கைகளில்தான் இருக்கிறது!
தலைவர்களுடைய கைகளில் அல்ல; வாக்களிக்கும் மக்களுடைய கைகளில்தான் இருக்கிறது. அந்த மக்களு டைய உணர்வுகள் சாதாரணமானவையல்ல
இரண்டு,
மோடி பிரச்சாரத்திற்கு வந்தால், வாக்குகள் தானாக பொத், பொத்தென்று வந்து விழும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
அவர்கள் தூக்கிப் போடுகின்ற பூக்கள் வேண்டு மானால் தானாக வந்து விழுமே தவிர, ஓட்டுகள் விழாது.
இதை கருநாடக மாநில தேர்தலிலும் பார்த்தாகி விட்டது; அடுத்ததாக தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தலிலும் பார்த்தாகிவிட்டது.

பா.ஜ.க. கொடுத்த உத்தரவாதங்கள்
எல்லாம் என்னாயிற்று?
மூன்று –
இதற்குமுன் பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகளான ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் ரூபாயைப் பொத்தென்று போடுவோம்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இரட்டிப்பு மடங்கு உயர்த்துவோம், குறைந்தபட்ச ஆதார விலையைக் கொடுப்போம் என்று சொன்ன உத்தரவாதங்கள் எல்லாம் என்னாயிற்று? இவற்றைப்பற்றி ஒவ்வொருவரும் திண்ணைப் பிரச் சாரம், தெருப் பிரச்சாரம் செய்யவேண்டும்.
அப்பொழுது கொடுத்த உத்தரவாதங்கள் எல்லாம் நீர்மேல் எழுத்தாயிற்று. இப்பொழுது புதிதாக உத்தர வாதம், உத்தரவாதம் என்று மோடி சொல்கிறார்; வாதம் தான் கிடைக்குமே தவிர, அவருடைய உத்தரவாதத்தால் தங்களுக்குப் பயனில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் எங்களுடைய வேலை!
மக்களை ஏமாற்றுகிறார்கள், ஏமாறாமல் இருங்கள் என்று சொல்லுகின்ற பிரச்சாரத்தை செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் எங்களுடைய வேலை.
சரியான நேரத்தில், சரியான காரணங்களை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா முழுவதும் இதை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது.

அனைத்துக் கட்சியினரும் கருப்புச் சட்டையை தைத்து வைத்திருக்கிறார்கள்!
இன்றைக்கு டில்லி தலைநகரில் கருப்புச் சட்டை அணிந்துகொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதுவரையில் கருப்புச் சட்டை எங்களிடம் மட்டும்தான் இருந்தது; இப்பொழுது எல்லா கட்சிக்காரர்களும், காங்கிரஸ், அ.தி.மு.க. உள்பட கருப்புச் சட்டையை தைத்து வைத்திருக்கிறார்கள்.
கருப்புச் சட்டை என்றால் என்ன அர்த்தம் என்றால், அது சிகிச்சை போன்றது. சமூகநீதி வேண்டுமா? கருப்புச் சட்டைதான் தேவை. ஆகவே, கருப்புச் சட்டை இல்லாத கட்சியே கிடையாது.
ஒன்றிய ஆட்சியினால் மக்களின் அன்றாட வாழ்வு மிகப்பெரிய அளவிற்குப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோலிய கச்சாப் பொருளின் விலை உலகச் சந்தையில் குறைந்திருக்கிறது. ஆனால், இங்கே பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலையை இதுவரை குறைக்கவில்லை. மக்களின் வாழ்வாதாரத் தைப்பற்றி ஒன்றிய அரசு கவலைப்படுவதே கிடையாது.

தமிழ்நாட்டு மக்களிடம்
வாக்குக் கேட்பதற்கு உரிமை உண்டா?
புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கக் கூட மனமில்லாத பிரதமர் மோடி, இராமேசு வரத்திற்கும், தனுஷ்கோடிக்கும் சென்று நாள் முழுவதும் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் தெரிவிக்காத மோடி, தமிழ்நாட்டு மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு உரிமை உண்டா? என்று கேட்டு, அவரை திருப்பி அனுப்பு வார்கள்.
தென்னாட்டில்தான் பா.ஜ.க.வுக்கு இந்நிலை என்றால், வடநாட்டில் ஏதாவது செய்து ஏமாற்றலாமா? என்று நினைத்தார்கள்.
அதற்காக மயக்க பிஸ்கெட்டை தயார் செய்தார்கள்; அந்த மயக்க பிஸ்கெட்தான் ராமன் கோவில்.
ராமா, ராமா என்றார், ஹரே ராம், ஹே ராம், ராம், ராம் என்றார்.
கடைசியில் அவருக்கு ‘ராம், ராம்’தான்.

‘நாமம்‘ போடுவது என்றால்
ஏமாற்றுவது என்பதுதானே!
ஒருவர் கடன் வாங்கிவிட்டு, அதைச் செலுத்தவில்லை என்றால், கடன் கொடுத்தவர் என்ன சொல்வார், ‘‘ஏன்யா, எனக்கு நாமம் போடலாம் என்று நினைக்கிறாயா?” என்று கேட்பார்.
அப்படியென்றால், ‘நாமம்’ போடுவது என்றால் என்ன அர்த்தம்?
ஏமாற்றுவது என்பதுதானே!
இதை நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை.
நாமம் போட்டான் என்றால், ஏமாற்றினான் என்பதுதானே. அதையேதான் பி.ஜே.பி. ‘ராமன், ராமன்’ என்று சொல்லி, எல்லோருடைய நெற்றியிலும் நாமம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்; நாம் நெற்றியைக் காட்டுகின்ற ஆள் கிடையாது; புத்தியைக் காட்டுகின்ற ஆள் என்று எல்லோருக்கும் சொல்லுவதற்குத்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஒன்றுபடுவோம், மோடி ஆட்சியை வீழ்த்துவோம்!
பிற்போக்கு ஆட்சியை வீட்டுக்கனுப்புவோம்!
தோற்கடிப்போம், தோற்கடிப்போம்,
பா.ஜ.க. கூட்டணியைத்
தோற்கடிப்போம், தோற்கடிப்போம் என்ற உணர் வோடு முழங்குவோம்!
இதுதான் அவர்களுக்கு ஜனநாயக ரீதியான தண்டனையாகும். நாம் எப்பொழுதும் வன்முறையில் இறங்கமாட்டோம்; வேட்டு முறை நம்மிடம் கிடையாது; ஓட்டு முறைதான்.
ஓட்டின்மூலமாக ஒரு பெரிய வாய்ப்பு இருக்கிறது; அதைப் பெறுவதற்கு வீடு வீடாகச் செல்லுங்கள்.

நன்றி – பாராட்டு!
சரியான காலகட்டத்தில் இந்தக் கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து, வாய்ப்பளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், அனைத்துக் கட்சியைச் சார்ந்த, கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த தோழர்களுக்கும் எங்களுடைய அன்பான நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டு விடைபெறு கிறேன்.
வாழ்க பெரியார்!
வெல்லுவோம், ஜனநாயகத்தைக் காப்போம்!
ஜனநாயகத்தை அழிக்கின்ற சக்திகளை வீழ்த்து வோம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment