ஆளுங்கட்சிக்கு ஆதரவான தேர்தல் ஆணையரை நியமனம் செய்த பிஜேபி ஒன்றிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

ஆளுங்கட்சிக்கு ஆதரவான தேர்தல் ஆணையரை நியமனம் செய்த பிஜேபி ஒன்றிய அரசு

புதுடில்லி, பிப் 25 ஒவ்வொரு தேர்தலின் போதும், ஆள்பவர்களின் எந்த ஒரு குறுக் கீடும் இல்லாமல் நேர்மையான முறையில் தேர்தல் நடப்பதை உறுதிப்படுத்தவே அதிகாரம் படைத்த அமைப்பாக உருவாக் கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

அப்படி ஒரு அமைப்பின் தலைவராக தேர்தல் ஆணையர் இருந்தும் கூட, ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பொறுத்த வரை, தேர்தல் ஆணையர்களை எவ்வாறு நியமனம் செய்வது என்பதற்கான வழிமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை. இருப்பினும், அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 324 (2)இன் படி, தேர்தல் ஆணையர் களைத் தேர்வு செய்து நியமிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற் றப்பட வேண்டும். அதுவரை, தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் பொறுப்பை குடியரசுத்தலைவர் மேற்கொள்ள வேண்டும் என விளக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும், அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட, இன்னமும் குடியரசுத் தலைவர் மூலம்தான் தேர்தல் ஆணையர் நியமனம் நடந்து வந்திருக்கிறது. இதிலும் ஆளும் அரசு கைகாட்டுபவரே தேர்தல் ஆணையராக வருவதற்கு வாய்ப்புகள் உள் ளது என்றாலும், ஆளும் அரசின் அப்பட் டமான தலையீடு இந்த நியமனத்தில் இருந்ததில்லை.

ஆனால், 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ கூட்டணி அரசு ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு, முந்தைய ஆண்டுகளில் கடைப் பிடிக்கப்பட்ட நடைமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டதா என்று அச்சப்படும் அளவுக்கு அப்பட்டமான மீறல்கள் காணப்பட்டதை யாராலும் மறுத்து விட முடியாது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, புதிய தேர்தல் ஆணையராக நியமிக்க அருண் கோயலின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதே நாளில் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் தந்து விட்டார். இப்படி பரிந்துரைக்கப்படுவதற்கு முந்தைய நாளில்தான், அருண் கோயல் தனது முந்தைய பதவியில் இருந்து விருப்ப ஓய்வை அறிவித்திருந்தார். அப்படியா னால், இவர்தான் இந்த பதவிக்கு அமர்த் தப்பட வேண்டும் என முன்கூட்டியே முடிவு செய்து பதவி விலக வைத்துள்ளனர் என விமர்சிக்கப்பட்டது. இது ஒன்றிய அரசின் மிக அப்பட்டமான எதேச் சதிகாரப் போக்கு என்பதை யாரும் மறுக்கவில்லை. முந்தைய பதவியிலிருந்து விலகி விருப்ப ஓய்வு பெற்ற மறு நாளே அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட வழக்குரை ஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து ‘பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய தேர்வுக்குழுவானது தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் ஆணை யர்களை தேர்வு செய்யும்’ என தீர்ப்புக் கூறியது. இதன் அடிப்படையில்தான், தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அவசர கதியில் ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது ஒன் றிய அரசு. மசோதா தாக்கல் செய்யும் போதே கடும் எதிர்ப்புகள், விமர்சனங்கள் எழுந்தபோதிலும், அனைத்தையும் நிராகரித்து விட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் தங்களுக்கு உள்ள உறுப்பினர்களின் பலத்தால் நிறைவேற்றி, சட்டமாக்கியுள்ளது. இதன்படி தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான குழுவில் பிரதமர் மற்றும் அவரால் பரிந்துரை செய்யப்படும் ஒன்றிய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர்தான் குழுவில் இடம் பெறுவர்.
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்தான் பெரும்பான்மை உறுப்பினர்களாக இருப் பார்கள். இவர்கள் தான் தேர்தல் ஆணையராக யாரை நியமனம் செய்ய வேண்டும் என 5 பெயர்களைப் பரிந்துரைப் பார்கள். ஆகவே, ஆளும் அரசு தேர்வு செய்யும் நபர்தான் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவது நூறு சதவீதம் உறுதியாகி விடுகிறது.

முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரையின் பேரில் குழு உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். தற்போது தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரே குழுவை பரிந்துரைப்பார் என்பது சிறிதும் ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகள் விமர்சித் துள்ளன. இப்படி தேர்வு செய்தால் அது இந்திய தேர்தல் ஆணையமாக அல்லாமல் மோடியின் தேர்தல் ஆணையமாகவே இருக்கும் என கடுமையாக சாடுகின்றனர். கட்சி சார்பின்றி செயல்பட வேண்டிய, உச்ச பட்ச அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையத்தின் தலைவர், ஆளும் அரசின் தலைவரால், அதாவது, பிரதமராலேயே தேர்வு செய்யப்படுவது என்பது ஜனநாயக முறைப்படி, பாரபட்சமின்றி தேர்தல் நடக்கிறது என்பதற்கு சாத்தியமில்லாத நிலையை ஏற்படுத்திவிடக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment