திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழாவில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நெகிழ்ச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 9, 2024

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழாவில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நெகிழ்ச்சியுரை

featured image

கல்வி வளர்ச்சிக்காக கல்வி நிறுவனங்களை வளர்த்தெடுப்பது திராவிடர் கழகம் மட்டுமே!
திருச்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கல்லூரி தேவை என்ற அடிப்படையில்
நிதி கொடுத்து ‘ஈ.வெ.ரா. கல்லூரி’யை உருவாக்கிக் கொடுத்தவர் தந்தை பெரியார்!
ஆசிரியர் அய்யா அவர்களே, நீங்கள் எங்களுக்கெல்லாம் இருக்கும் கடைசி இருப்பு!

சென்னை, பிப்.9 கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, நம் மக்கள் கல்வியில் வளர்ச்சி பெறப் பாடுபடுவது திராவிடர் கழகம் மட்டுமே! திருச்சியில் நம் ஒடுக்கப் பட்ட மக்களுக்குக் கல்வி வாய்ப்புக் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காக, நிதியைக் கொடுத்து ஒரு கல்லூரி (‘பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி’) தொடங்கப் படுவதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் என்றும், இன்றைக்கு எங்களுக்கெல்லாம் பாதுகாப்பாக – இருப்பாக இருப்பவர் நமது ஆசிரியர் அய்யா என்றார் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள்.

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்விழா ஆண்டு!
நேற்று (8-2-2024) மாலை திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன் விழா ஆண்டு விழாவில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
இவ்விழாவிற்குத் தலைமையேற்று மேடையில் அமர்ந்து, எங்களை வரவழைத்து, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களே,
வணக்கத்திற்குரிய மேயர் அன்பழகன் அவர்களே, திரு.மதிவாணன் அவர்களே, தலைமை ஆசிரியர் அவர்களே, ஆசிரியப் பெருமக்களே, மாணவ, மாண விகளே, மாணவர்களுடைய பெற்றோர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

உடனே போகவேண்டும் என்று வந்தேன்; நிகழ்ச்சிகளைப்பார்த்து வியந்து உங்களோடு இருக்கிறேன்!
ஆசிரியர் அவர்களிடம் நான் உடனடியாக செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன். நீங்கள் வந்துவிட்டுப் போங்கள் என்று சொன்னார். ஆனால், இங்கே நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து, நானும் உங்களோடு இருக்கவேண்டும் என்கிற எண் ணத்தோடு இங்கே அமர்ந்திருக்கின்றேன்.
பொதுவாக அனைத்து மாணவிகளுமே எங்கள் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இங்கே இருக்கின்றீர்கள். உங்களையெல்லாம் சந்திக் கின்ற ஒரு நல்ல வாய்ப்பை நம்முடைய ஆசிரியர் அய்யா எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.
நான் தந்தை பெரியார் அவர்களை 1968 ஆம் ஆண்டு, நான்கைந்து முறை, இதே திருச்சியில் வேனில் செல்லும்பொழுது பார்த்திருக்கிறேன்.
1967 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்துகொண்ட இறுதியான தேர்தல் பிரச்சாரம் புள்ளம் பாடியில் நடைபெற்றது. அங்கே வந்து பேசினார்; அவருடைய உரையை நான் கேட்டேன்.
முதலமைச்சராக அண்ணா அவர்கள் வந்த பிறகு, கல்லக்குடிக்கு வந்து உரையாற்றினார். அந்த உரை யையும் நான் கேட்டிருக்கிறேன்.

என்னை ஆளாக்கியவர் தலைவர் கலைஞர்!
என்னையெல்லாம் வளர்த்து ஆளாக்கி, மக்கள் மத்தியில் என்னை அறிமுகப்படுத்தி, என்னையும் அமைச்சராக, இயக்கப் பொறுப்பாளராக உருவாக்கி யவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை நான் பெருமிதத்தோடு இங்கே சொல்லவிரும்புகிறேன்.
நமது ஆசிரியர் அவர்கள், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, அவரை மருந்தியல் கல்லூரியைத் திறந்து வைப்பதற்காக அழைத்து வந்தார்கள். நான் சங்கரபுரத்திலிருந்து தலைவரோடு வந்தேன்.
இப்பொழுது எப்படி ஆசிரியர்கள் முன்னால் நின்று வரவேற்றார்களோ, அப்படி முதலமைச்சர் அவர்களை அன்று வரவேற்றார்கள்.

அன்றைக்கு முதலமைச்சர் கலைஞர் சொன்னார்!
இந்தப் பள்ளியினுடைய நுழைவாயிலில் நுழைந்தபொழுது, அன்றைக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சொன்னது, ‘‘ஏனய்யா நேரு, இந்த நிர்வாகம் மட்டும் – ஆசிரியர் அவர்களுடைய பெயரைச் சொல்லி, அவரிடம் இல்லை என்று சொன்னால், என்றைக்கோ இது அழிந்து போயிருக்கும். ஆசிரியர் அவர்கள்தான் இந்த நிர்வாகத்தைக் கட்டிக் காத்து வருகிறார்” என்று சொன்னார்கள்.
அதை நான், இரண்டு, மூன்றுமுறை ஆசிரியர் அய்யா அவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்.
எனவே, தலைவர் கலைஞர் அவர்கள் இங்கே வந்து மருந்தியல் கல்லூரியைத் திறந்து வைத்து உரையாற்றி இருக்கிறார்.
நான், பெரியார் அய்யாவைப் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்; அண்ணாவை பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். கலைஞர்தான் என்னை வாழ வைத்தவர்; என்னை உருவாக்கியவர் என்று சொல்லியிருக்கிறேன்.
நீங்கள் பார்க்கலாம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இங்கே இருக்கின்ற பெற்றோர்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திருச்சியில் எஸ்.ஆர்.சி., கல்லூரி, எஸ்.பி.எஸ். பள்ளி, நேஷனல் பள்ளி, தேசிய பள்ளி, தேசிய கல்லூரி, ஜோசப் கல்லூரி, ஹோலிகிராஸ் கல்லூரி, சமாபந்தி கல்லூரி, காஜாமைதீன் பள்ளி இவைதான் முதலில் இருந்தன.

ஈ.வெ.ரா. கல்லூரி தொடங்கப்பட்டது எதற்காக?
நான் கேள்விப்பட்டது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், பெரியவர்கள் என்னிடம் சொன்னது, ஈ.வெ.ரா. அவர்கள் பெயரில் அமைந்திருக்கின்ற கல்லூரியை, ஒரு கல்லூரியில் சேர, மாணவர் ஒருவருக்குப் பெரியார் பரிந்துரை கடிதம் கொடுத்தபொழுது, அந்த மாணவரை அக்கல்லூரி நிர்வாகத்தினர் சேர்த்துக் கொள்ளாத காரணத்தினால், நம்முடைய மாணவர்கள், நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், ஏழை மாணவர்கள் படிப்பதற்காக ஏன் நாம் ஒரு கல்லூரியைத் தொடங்கக்கூடாது என்று எண்ணி, அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களிடம் கேட்டபொழுது, பக்தவத்சலம் சொன்னதாக சொன்னார்கள்.
அய்யா அவர்களை அழைத்து, ‘‘நீங்கள் தனியாக கல்லூரி தொடங்கவேண்டும் என்றால், அதற்கு நிறைய செலவாகும். அரசு சார்பில் ஒரு கல்லூரியைத் தொடங்குகிறேன். அதற்கு உங்களுடைய பெயரை வைக்கிறேன்” என்றாராம்.
இன்றைக்குக்கூட சொன்னார்கள் ‘‘5 லட்சம் ரூபாய் பெரியார் அய்யா கல்லூரி தொடங்குவதற்காகக் கொடுத்தார்” என்று.
5 லட்சம் ரூபாயை அய்யா பெரியார் கொடுத்து, அன்று ‘ஈ.வெரா.’ கல்லூரி தொடங்கப்பட்டது. அப்படி தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே மிகப்பெரிய வேலை நிறுத்தத்தில் மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

மாணவர்கள் வேலை நிறுத்தமும் –
பெரியாரின் அறிவுரையும்!
அப்பொழுது பெரியார் அய்யா அவர்களே நேரிடையாகச் சென்று மாணவர்களைச் சந்தித்து, ‘‘நீங்கள் படிக்கவேண்டும், படித்து உயரவேண்டும் என்பதற்காக நான் தொண்டர்களிடம் வசூலித்த பணத்தைத் தந்தேன்; நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று சொன்னால், இந்தக் கல்லூரியை இழுத்து மூடவேண்டியதுதான்” என்று சொன்ன பிறகு, வேலை நிறுத்தத்தை மாணவர்கள் கைவிட்டு, கல்லூரிக்குத் திரும்பினார்கள் என்று சொல்வார்கள்.

கல்லூரியை உருவாக்கி, மாணவர்களை உருவாக்கவேண்டும் என்று எண்ணுகிற இயக்கம்- ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டும்தான்
அப்படித்தான், இந்த இடமும் 55 ஆயிரம் ரூபாய் அளவில் வாங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றைக்குப் படித்து முன்னேறி இருக்கின்றது என்று சொன்னால், அன்னை மணியம்மையார் அவர்கள் இதை உருவாக்கினார் என்று சொன்னார்கள்; இந்தியாவில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கின்றன; ஆனால், கல்லூரியை உருவாக்கி, மாணவர்களை உருவாக்கவேண்டும் என்று எண்ணுகின்ற இயக்கம் – ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டும்தான்.
பல்கலைக் கழகம், கல்லூரி, பள்ளிகள் இருக்கின்றன. அதில் பெண்களுக்கென்று தனியாக இடம் ஒதுக்கித் தந்திருக்கிறார்கள்.
அப்படி நீங்கள் எல்லாம் படித்து உயரவேண்டும் என்பதற்காக இந்தப் பள்ளியை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

நீங்கள் எங்களுக்கு இருக்கின்ற
கடைசி இருப்பு!
ஆசிரியரிடம் நான் சொல்வேன், ‘‘நீங்கள் ஏன் இவ்வளவு சுற்றுப்பயணம் செய்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு இருக்கின்ற கடைசி இருப்பு. உங்களுடைய காலத்தில்தான் இட ஒதுக்கீட்டுக்கும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும் யார் எதிர்ப்பாக நின்றாலும், அவர்களைத் துணிச்சலாக எதிர்க்கக் கூடிய ஒரே தலைவராக இன்றைக்கு நீங்கள் இருக்கிறீர்கள். எனவே, உங்கள் உடல்நலத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பலமுறை நான் சொல்லியிருக்கிறேன்.
‘‘பரவாயில்லை, நான் இருக்கின்றவரையில், சுற்றுப்பயணத்தை மேற்கொள்வேன்” என்று சொல்லி, சுற்றுப்பயணத்தை செய்துகொண்டிருக்கிறார்.
எனவே, கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர், பெரியார் அய்யா அவர்களோடு இருந்து வாழ்ந்தவர்; இந்தப் பள்ளியை சிறப்பாக நடத்தி, இன்றைக்கு பொன்விழா ஆண்டையும் சிறப்பாக நடத்தியிருக்கிறார்.

இவ்வளவு சிறப்பாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததை நான் பார்த்ததில்லை!
நானும் எத்தனையோ பள்ளி ஆண்டு விழாக்களுக்குச் சென்றிருக்கிறேன்; இவ்வளவு சிறப்பாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததை நான் பார்த்ததில்லை. மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து, ஆசிரியர்களையும் பாராட்டியிருக்கிறார்கள்; முன்பு உழைத்த தலைமை ஆசிரியர்களையும் பாராட்டி இருக்கிறார்கள்; மாணவர்கள் நூற்று நூறு மதிப்பெண் வாங்குவதற்கு உதவிய ஆசிரியர்களையும் பாராட்டி இருக்கிறார்கள்.
எனவே, அனைவரும் பாராட்டுக்குரியவர்கள், பள்ளியின் 50 ஆம் ஆண்டு பொன் விழாவில். பாராட்டவேண்டிய தலைமை பாராட்டி இருக்கிறது.
எங்களுடைய வாழ்த்துகளையும் அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களிடம் தலைவர் கலைஞர் சொல்வார், ‘‘ஒவ்வொரு தொண்டனுக்கும் சிறை செல்லவேண்டியது என்பது, அவனுடைய அரசியல் வாழ்க்கையில் முக்கியமான பங்கு இருக்கும்” என்று சொல்வார்.

எங்களையும் சிறையில் அடைத்தார்கள். நாங்கள் சிறையில் இருந்தபொழுது, எங்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் கொஞ்சம் அச்சம் இருந்தது. அது போகப் போக சரியாகிவிட்டது.
நீதிபதியின் கேள்வியும் – ஆசிரியர் அய்யாவின் ஆணித்தரமான பதிலும்!
ஆசிரியர் அய்யா அவர்கள் ஒருமுறை நீதிபதியை கடுமையாகக் கண்டித்துப் பேசியதாகவும், அப்படி பேசியதால் ஆசிரியர் அய்யா அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, விசாரணை செய்தார்கள். நீதிபதி, அய்யா ஆசிரியர் அவர்களைப் பார்த்து, ‘‘நீதிபதியை நீங்கள் விமர்சிக்கிறீர்களே, அது தவறு இல்லையா?” என்று கேட்டிருக்கிறார்.
ஆசிரியர் அய்யா அவர்கள் அதற்கு அளித்த பதில், ‘‘மன்னிக்கவேண்டும் நீதிபதி அவர்களே, நீதிபதியை மட்டுமல்ல; நீதிபதியை நியமிக்கின்ற ஜனாதிபதியையும் நான் கண்டிப்பேன்” என்று சொன்னார்.
அவருடைய அந்த பேச்சுதான் எங்களுக்குத் தைரியம். நான் சிறையிலிருந்து வெளியே வந்தபொழுது, தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார், ‘‘கவலைப்படாதே, இதெல்லாம் உனக்கு நல்ல படிப்பினை அரசியலில்” என்று.

ஓராண்டுக்கால மிசா கைதிகள்!
எங்களையெல்லாம் உருவாக்கிய எங்களுடைய முன்னோர்கள் பெரியார் அய்யா, அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களும், ஏன், ஆசிரியர் அய்யா அவர்கள் ஓராண்டு காலம் மிசா கைதியாக இருந்தவர். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஓராண்டு காலம் மிசா கைதி.
அப்படி மிசா கைதியாக இருந்து பாடுபட்ட காரணத்தினால்தான், 40 ஆண்டுகாலம் உழைத்து, உழைத்து தமிழ்நாடு எங்கும் செல்லாத கிராமமே இல்லை என்கிற அளவிற்கு, இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சர் சென்ற காரணத்தினால்தான், இவ்வளவு பெரிய இடத்திற்கு அவர்கள் வந்திருக்கிறார்.

வாரிசு அரசியல் என்பது
தளபதிக்குப் பொருந்தாது!
நேற்றுகூட, ‘இந்து’ பத்திரிகையின் செய்தியாளர் மணி அவர்கள் சொன்னார்கள், ‘‘வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள்; அது நம்முடைய தளபதி அவர்களுக்குப் பொருந்தாது; அவர் உழைத்து முன்னேறியவர்” என்று சொன்னார்.

இயக்கத்தினுடைய கொள்கைக்கும், மாணவர்களின் உயர்வுக்கும் என்றைக்கும் நாங்கள் பாடுபடுவோம்!
அப்படிப்பட்டவரது கீழே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து இந்த இயக்கத்தினுடைய கொள்கைக்கும், உங்களுக்கும், மாணவர்களாகிய உங்களுடைய உயர்வுக்கும் என்றைக்கும் நாங்கள் பாடுபடுவோம், பாடுபடுவோம் என்று சொல்லி, ஆசிரியர் அவர்களை வணங்கி அமர்கிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment