கருத்துக் கணிப்புகளைப் புறந்தள்ளும் மக்கள் கணிப்பு வெல்லப்போவது ‘இந்தியா' கூட்டணிதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 9, 2024

கருத்துக் கணிப்புகளைப் புறந்தள்ளும் மக்கள் கணிப்பு வெல்லப்போவது ‘இந்தியா' கூட்டணிதான்!

featured image

திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

திருச்சி, பிப். 9 கருத்துகளைப் புறந்தள்ளும் மக்கள் கணிப்பு- வெல்லப்போவது ‘இந்தியா’ கூட்டணிதான்! என்றார் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (8-2-2024) காலை திருச்சிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்ற பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:

கருத்துக் கணிப்புகளைத் தாண்டி
‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும்!
செய்தியாளர்: தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 35 இடங்களை மீண்டும் இந்தியா கூட்டணி- தி.மு.க. கூட்டணிதான் கைப்பற்றும் என்று ஆங்கில ஊடகம் கருத்துக் கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. பாரதீய ஜனதா கட்சி 20 சதவிகித வாக்குகளைப் பெறும்; அ.தி.மு.க. அதைவிட குறைவான சதவிகிதத்தையே பெறும் என்று சொல்லியிருக்கிறதே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: ஒரே ஒரு திருத்தம். 35 இடங்கள் வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறார்கள்; பெட்டியைத் திறந்து பார்த்தால், தமிழ்நாட்டில் 39 இடங்களும், புதுச்சேரியில் ஒரு இடமும் சேர்த்து 40 இடங்களில் இந்தியா கூட்டணி – தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இந்தியா முழுவதும் 400 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

யூகங்களையெல்லாம் தாண்டி இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஏனென்று கேட்டால், இப்பொழுது ஆளுகின்ற ஒன்றிய அரசின்மீது மக்களுடைய வேதனை அந்த அளவிற்கு இருக்கிறது. தென்னாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இந்நிலைதான்.
ஏனென்றால், மணிப்பூருக்கு ஆறுதல்கூறக் கூட வராத ஒரு பிரதமரைப் புறக்கணிக்கப் போகிறோம் என்று வடகிழக்கு மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
காஷ்மீருக்குத் தேர்தல் நடத்தாத பிரதமர் எங்களுக்குத் தேவையில்லை என்று அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்.
தென்னாட்டுப் பக்கம் பிரதமர் மோடி வரவே முடியாது. சும்மா இங்கே வந்து ‘ஷோ’ காட்டலாம். அண்ணாமலைக்கு வழியனுப்பு விழாவை நடத்துவதற்கு வரலாமே தவிர, வேறொன்றும் இருக்க முடியாது.
தி.மு.க. கூட்டணி என்பது மக்கள் கூட்டணி. அக்கூட்டணி கொள்கை அடிப்படையில் இருக்கின்ற கூட்டணியாகும்.
பதவிக்காக இருக்கின்ற கூட்டணியல்ல – இந்தக் கூட்டணியிலிருந்து யாராவது வெளியே போகிறார்கள் என்கிற பிரச்சினை வருகிறதா? அப்படி வராது.
இன்னும் சிலர் சேருவதற்குத்தான் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இடமில்லை, வரிசையில் நில்லுங்கள் என்று தலைமை சொல்லக்கூடிய நிலையில் இருக்கிறது.

இந்தியா முழுவதும் வெற்றி பெற்று, இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சியை அமைக்கும்!
ஆகவேதான், கருத்துக் கணிப்புகளைத் தாண்டி, நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி இங்கே அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவது மட்டுமல்ல – இந்தியா முழுவதும் வெற்றி பெற்று, இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சியை அமைக்கும்.
இதற்கு மாறாக ஊடகங்கள் மாற்றி மாற்றிச் சொன்னாலும், நடைமுறை எதார்த்தத்தைப் பார்க்கவேண்டும்.
கருத்துக் கணிப்பைத் தாண்டி மக்கள் கணிப்பைப் பார்க்க வேண்டும். நாங்கள் மக்களோடு பழகுகிறவர்கள்; நாள்தோறும் மக்களோடு பயணப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். அதோடு வடபுலத்தில் இருக்கக் கூடிய மக்களும் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்.
எனவே, இந்தியா கூட்டணியை விட்டு யாரும் போக மாட்டார்கள்; சில சருகுகள் உதிர்ந்திருக்கலாம்.

டி.ஆர்.பாலு கேட்டதில்,
ஜாதிப் பிரச்சினை கிடையாது!
செய்தியாளர்: சமூகநீதிப் பேசுகின்ற தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்கள், எல்.முருகனை தவறாகப் பேசிவிட்டார் என்று நாடாளுமன்றத்தில் சொல்கிறார்கள். அவருக்கு எதிராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் செய்திருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: எல்.முருகன் தமிழ்நாட்டினுடைய அமைச்சராக இருந்தால், தமிழ்நாட்டினுடைய நலத்தைக் காப்பாற்றுபவராக இருந்தால், தமிழ்நாட்டில் கோடானு கோடி மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே, ஒரு ரூபாய்கூட நிவாரண நிதியாகக் கொடுக்காமல் இருக்கிறதே ஒன்றிய அரசு – அதற்காக இவர் வாதாடி இருக்கவேண்டும்.
ஒன்றிய அமைச்சராக தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் ஒரே ஒருவன்தான் இருக்கிறேன் என்று சொல்கிறார்.

அது மகிழ்ச்சியானதுதான். ஆனால், அந்த ஒரே ஒரு அமைச்சர், பிரதமர் மோடியை அழைத்து பொங்கல் விருந்து தந்தால் மட்டும் போதாது; அப்பொழுதாவது, தமிழ்நாட்டு மக்களான – எங்களுடைய மக்களுக்கு நிவாரண நிதி வழங் குங்கள் என்று வாய்த் திறந்து கேட்டு, நாங்கள்தான் வாங்கிக் கொடுத்தோம் என்று சொல்லியிருந்தார் என்றால், அந்தப் பதவிக்கு அவர் தகுதியானவர். அப்படி அவர் செய்யாத தினால், அந்தப் பதவிக்கு அவர் தகுதியில்லை என்றுதான் பொருள்.
இது ஜாதியை வைத்து அல்ல; அவர் திறமையைப் பொறுத்தது; அவருடைய செயலின்மையைப் பொறுத்தது. செயலின்மை உடையவர்கள் எங்கே இருந்தாலும், அதனைச் சுட்டிக்காட்டுகின்ற நேரத்தில், அங்கே ஜாதியைக் கொண்டு புகுத்துவது சரியல்ல.
அப்படியென்றால், ஜாதிக் கலவரத்தை உண்டாக்கு கிறார்களா?
ஜாதி எங்கள் ஜாதி என்று ஆரம்பிப்பார்களா?
ஆகவேதான், ஜாதிக் கலவரம் செய்வதற்கு அடையாளப்படுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில், உரிமை கேட்கும்பொழுது ஜாதி கிடையாது.
டி.ஆர்.பாலு என்ன சொன்னார், ”அவர் தகுதியற்றவர், அமைச்சராக இருப்பதற்கு” என்று.
ஏன் தகுதியற்றவர்?

பேசவேண்டிய நேரத்தில், வாதாடவேண்டிய நேரத்தில், நிவாரண நிதியைப் பெற்றுத் தரவேண்டிய நேரத்தில், அவர் தன்னுடைய கடமையைச் செய்யவில்லை.
அந்தக் கடமையைச் செய்கிறவரைக்கூட பேசவிடாமல் குறுக்கிட்டு இருக்கிறார். தான்தான் செய்யவில்லையே, எதிர்க்கட்சியினராவது செயகிறார்கள் என்கிறபொழுது, இவர் சும்மா இருந்திருக்கவேண்டும்.
அப்படியில்லாமல் குறுக்கீடு செய்தபொழுதுதான்,
டி.ஆர்.பாலு அவர்கள் அப்படிச் சொன்னாரே தவிர, அவர் ஜாதியை வைத்து சொல்லவில்லை; இது சமூகநீதியைப் பொறுத்ததல்ல.
உடனே அதற்கு நேரிடையாக பதில் சொல்லாதவர்கள், ஜாதி என்ற உருவத்தில் ஒளிந்துகொள்கிறார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸினுடைய வித்தை, இதுதான் பா.ஜ.க.வினுடைய வித்தை, இதுதான் மோடி வித்தை.
கேள்வி கேட்டால், வேறு பக்கம் திசை திருப்புவார்கள்; திரிபுவாதம் செய்வார்கள். அதற்கு அடையாளம்தான் இது.
டி.ஆர்.பாலு பேசியதில், ஜாதிப் பிரச்சினையே கிடையாது. இன்னுங்கேட்டால், அதைவிட கொடுமையான அளவிற்கு மற்றவர்கள் நடத்தியிருக்கிறார்களே, அப்பொழுதெல்லாம் இவருடைய ஜாதியைச் சொன்னார்களா? ஜாதியை மற்றவர்கள் சுட்டிக்காட்டினார்களா? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஏலம் போடுகின்ற அரசியலை
கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்!
செய்தியாளர்: தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் மட்டும் எந்தக் கூட்டணியிலும் சேரவில்லையே! பா.ம.க.வும், தே.மு.தி. க.வும் – அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ”ஏலம் போடுகின்ற அரசியலை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்” என்று சொல்கிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment