பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் புத்தகம் வெளியிட, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கத் தடை சுற்றறிக்கையால் சர்ச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 8, 2024

பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் புத்தகம் வெளியிட, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கத் தடை சுற்றறிக்கையால் சர்ச்சை

சேலம்,பிப்.8- சேலம்- _ பெங்களூரு சாலையில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் முதல் கொள்முதல் வரை பல்வேறு விவகாரங்கள் சர்ச்சை கிளப்பியுள்ளது. சமீபத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.
மேலும், பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் மீது, 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பதிவாளர் தங்கவேல் தலைமறை வானார். இந்த சூழலில், பெரியார் பல்கலைக் கழகத்துக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி துணை வேந்தர் ஜெகநாதனுக்கு ஆதரவாக இருக்கும்படி துறை தலைவர்களை பகிரங்கமாக மிரட்டினார். இந்த வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், பதிவாளர் தங்கவேல் மீண்டும் பல்கலைக்கழக பக்கம் தலை காட்டினார். இதற்கிடையே, உள்ளாட்சி தணிக்கை குழுவில் நடந்த 9 நாள் ஆய்வில் ரூ.6 கோடி முறைகேடு செய்தது அம்பலமானது. மேலும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
இந்நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், அனைத்து துறைத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை 6.2.2024 அன்று அனுப்பி யுள்ளார். அதில், ‘பெரியார் பல்கலைக்கழக சாசன விதிகளில் குறிப்பிட்டுள்ள, பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணி யாளர்கள் புத்தகம் வெளியிடுதல், சமூக ஊடகங் களில் பங்குபெறும் போது முன்அனுமதி பெற வேண்டும் என்ற நடத்தை விதிகளை தெரிவித்துள்ளார். மேலும், பேராசிரியர்கள் புத்தகங்கள் ஏதேனும் வெளியிட்டிருப்பின், அதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளதா? இல்லையா? இல்லையெனில் ஏன் பெறப்படவில்லை என்ற விளக்கம், புத்தகங்களின் எண்ணிக்கை, தலைப்பு, வெளியீட்டாளர் முகவரி, காப்புரிமை விவரம், புத்தக வெளியீட்டின் வழியாக பெறப்பட்ட பணப்பலன்கள் ஆகிய விவரங்களை, வரும் 20ஆம் தேதிக்குள் வழங்க, துறைத்தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்தர உத்தரவாத மய்யத்தின் தேவைக்காக இதனை வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகை: தமிழில் மாற்ற நடவடிக்கை
சென்னை, பிப்.8 தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இடம்பெற வலியுறுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று (7.2.2024) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் இல.சுப்பிரமணியன், இயக்குநர் ந.அருள், தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த், வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ளவணிக நிறுவ னங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள்அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முதலில் தமிழில் இடம் பெற வேண்டும், தொடர்ந்து ஆங்கிலத்திலும், அவரவர் தாய்மொழிகளிலும் 5:3:2 என்ற வீதத்தில் அமையப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது.
அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்குமாறு வணிகர் சங்கங்கள் வலியுறுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்தார். வரும்ஏப்ரல் மாதத்துக்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்கள் வாயிலாக அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களுக்கு பெயர்ப் பலகைகளில் முதன்மையாக தமிழிலும் பிறகு ஆங்கிலத்திலும் பெயர் இடம்பெற வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு செயல்படுத்தி வருவதாக விக்கிரமராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் கைது
இலங்கை கடற்படை அட்டூழியம்
சென்னை,பிப்.8- தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வு மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
இந்நிலையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டி ருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 19 பேரை கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விசா ரணைக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதி காரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப் படைத்தனர். மீனவர்கள் காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீனவர்கள் 19 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது. கைது செய்யப் பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment