அறிவின் ஆளுமை அய்யா அறிவுக்கரசு அவர்களின் வாழ்க்கைப் பயணச் சுவடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 3, 2024

அறிவின் ஆளுமை அய்யா அறிவுக்கரசு அவர்களின் வாழ்க்கைப் பயணச் சுவடுகள்

featured image

தந்தை பெரியாரின் தொடக்ககால (1926) அணுக்கத் தொண்டரான சுயமரியாதைச் சுடரொளி கடலூர் மணிப்பிள்ளை (எ) வ.சுப்பிரமணியன்-தையல்நாயகி ஆகியோருக்கு மகனாக 01.11.1940-இல் கடலூரில் பிறந்தவர். இவரது தந்தை பகுத்தறிவு சங்க செயலாளராக இருந்தார். 16.08.1936 இல் தந்தை பெரியாரை அழைத்து சுயமரியாதை படிப்பகம் திறக்க வைத்தார்.

கடலூர் துறைமுகம் தூய தாவீது உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியை முடித்தவர். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை (M.A.) பட்டமும். ஆய்வு நிறைஞர் (M.Phil) பட்டமும் பெற்றவர்.
தமிழ்நாடு அரசுப் பணியில் எழுத்தராக தொடங்கி பல்நிலைப் பதவிகளில் பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து, மாவட்ட வருவாய் அதிகாரியாக திறம்பட (41 ஆண்டு காலம்) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஆற்றல்மிகு தலைவர் மானமிகு சிவ.இளங்கோ அவர்களுடன் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டு. அரசு அலுவலர்களின் உரிமைக்காகப் போராடி பலகாலம் மாவட்டத் தலைவர், பொதுச் செயலாளர், மாநிலத் தலைவர் பொறுப்பு வகித்தவர்.
84 ஆண்டுகளாக ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே இயக்கம், ஒரே கொடி என நடைபோட்டு, பகுத்தறிவாளர் கழகத்தின் தொடக்கம் முதல் (1970) மாவட்டச் செயலாளர், மாநில இணைச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர், மாநிலத் தலைவர், தேசிய FIRA  அமைப்பின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்தவர்.

அரசுப் பணி நிறைவுக்குப் பின் திராவிடர் கழகத்தில் துணைப் பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளில் சமுதாயப் பணியாற்றி, திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவராக பொறுப்பு வகித்தவர்.
பிரச்சாரக் கூட்டங்கள் தொடங்கி பல்கலைக் கழக அரங்குகள் வரை உரையாற்றிவரும் தலைசிறந்த சிந்தனைச் சுரங்கச் சொற்பெருக்காளர். எந்த தகவலைக் கேட்டாலும், பதில் கூறும் ஆற்றல் படைத்த நடமாடும் தகவல் களஞ்சியம். நாடறிந்த பகுத்தறிவு எழுத்தாளர். 38 நூல்களை எழுதிய சீர்மிகு எழுத்தாளர்.
இவரது கதம்பக் கட்டுரைகளும் அறிவைத் தூண்டும் ஆய்வுச் செய்திகளும், ‘அரசு ஊழியன்’, ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளன. அரசு, அறிவு, சார்வாகன், மதிமன்னன், கட்டியக்காரன், பாடினி, செங்கோ, ஆதிரை, அனிச்சம், விக்கிரமன் போன்ற புனைப் பெயர்களிலும் இவரது எழுத்துகள் வெளிவந்துள்ளன.

இதுவரை 15-க்கும் மேற்பட்ட அயல் நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங், துபாய், அய்க்கிய அரபு எமிரேட், ஜிம்பாப்வே. இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஃபிரான்ஸ், ஃபின்லாந்து, நேபாளம், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
இவருடன் பிறந்தோர் 6 சகோதரர்கள், 1 சகோதரி. அனைவரும் பகுத்தறிவுக் கொள்கை நெறியொட்டிய குடும்பங்கள் என்பது சிறப்புக்குரிய ஒன்று. இவரது வாழ்விணையர் நினைவில் வாழும் சுயமரியாதைச் சுடரொளி அ.இரஞ்சிதம். இவருக்கு ஒரு மகன் இர.அ.மணிநிலவன் (பொறியாளராக நியூசிலாந்தில் பணி யாற்றுகிறார்). மூன்றுமகள்கள் இர.அ.பொன்எழில், இர.அ.அருளரசி, இர.அ.இளவேனில் ஆகியோர் உள்ளனர்.

எல்லோருக்கும், எல்லாமும் எனும் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை பரப்பும் தூதுவராக, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணியின் தலைமையின் கீழ் தொடர்ந்து தொண்டறப் பணியாற்றி, 22.1.2024 அன்று மறைவுற்ற ‘சுயமரியாதைச் சுடரொளி’ சு.அறிவுக்கரசு அவர்களின் தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

No comments:

Post a Comment