இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சாதனையோ, சாதனை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 2, 2024

இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சாதனையோ, சாதனை?

featured image

8 ஒன்றிய பி.ஜே.பி. அரசின் இடைக்கால பட்ஜெட்டின் அவலம்!
8 பட்ஜெட்டில் ”ஜாதிகளைப்”பற்றிப் பேசலாமா?
ஏழைகள் வயிற்றில் அடித்து கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைப்பதா?
மேடு மேடாகி வருகிறது – பள்ளம் பள்ளமாகிக் கொண்டே உள்ளது!
இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சாதனையோ, சாதனை?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

ஒன்றிய பி.ஜே.பி. அரசு நேற்று (1-2-2024) தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் என்பது ஏழைகளை வஞ்சித்து, கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைப்பதே! பட்ஜெட்டில் ஜாதிபற்றி எல்லாம் குறிப்பிடுவது பி.ஜே.பி.யின் வருணாசிரமக் கொள்கையைப் பிரதிபலிக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

நேற்று (1-2-2024) பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் இறுதியான (இடைக்கால) பட்ஜெட்டை அதன் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்மூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது – மக்களிடையே மாற்றம் ஏற்படுவதற்குப் பதிலாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது!

நாட்டின் பட்ஜெட் என்பது எத்தகையதாக இருக்கவேண்டும்?

நாட்டின் ‘பட்ஜெட்’ என்பது அனைத்துத் தரப்பு மக் களுக்கும் புதிய நம்பிக்கை, வளர்ச்சி, முன்னேற்றத்திற் கான பொருளாதாரத் துறையில் தொடர்ந்து முன்னேறி, பல திருப்பங்களை உருவாக்கி, மாற்றத்தை ஏற்படுத்திடும் அனைவருக்கும் அனைத்தும் தருவதாக அமைவதே, மக்கள் நல ஆட்சிக்கான சான்றாகும்.
இந்த அம்சத்தை இந்த பி.ஜே.பி. ஆட்சி பட்ஜெட்டில் பூதக்கண்ணாடி, நுண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காத நிலையில், மதச் சார்பின்மை, சமதர்மம் என்ற சோசலிசம், ஜனநாயகம் காணாமற்போகும் வகையான சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வருவதையே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.
ஆரம்பத்தில் கொடுத்த வாக்குறுதிகளை கொடுத்த வர்களே – அதுவும் பொறுப்பான அரசு முக்கிய பதவி களில் உள்ளவர்களே, ‘‘ஃஜூம்லா” என்று கூறிய ஒப்பு தல் வாக்குமூலம் இவ்வாட்சிக்கு பெருமை தருவதாகுமா?

மனச்சாட்சியோடு சிந்தித்தால், மறைத்த உண்மைகள் அவர்களுக்கே புரியும்! உண்மையாக வினையாற்று வதற்குப் பதிலாக ‘வித்தை’காட்டும் வகையிலேயே பட்ஜெட் அறிவிப்புகளில் பலவும் உள்ளன!

இது ஒரு கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி!

கார்ப்பரேட் ஆட்சி இது என்று சாதாரண மக்களுக் கும் புரியும் வகையில், பெருமுதலாளிகளுக்குப் பல சலுகைகள், சட்டத் திருத்தங்கள் உள்பட நடைபெற்று, அவர்கள் கொழுத்த திமிலங்களாகியுள்ள கதை நாடாளுமன்றத்திலே ஒலித்தது!
பல பொதுத் துறை நிறுவனங்கள் அவர்களது குத்த கைக்கோ, உடைமைகளாக (விற்பனைமூலம்) ஆக்கப் பட்டதுதான் 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் மிகப்பெரும் சாதனை!ஓர் எடுத்துக்காட்டு.

வருமான வரியில் உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்த நடுத்தர மக்களுக்கு மிஞ்சியது – ஏமாற்றமே! ஏற்கெனவே உள்ள 7 லட்சமே வரி விலக்கு இவர்களுக்கு!
அதேநேரத்தில், பெரு நிறுவனங்களுக்கான கார்ப் பரேட் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்து, அவர்களுக்கு வரிச் சலுகை!
நிதிப் பற்றாக்குறை உள்ள ஓர் அரசின் பட்ஜெட்டில் இப்படித்தான் அவர்களுக்குச் சலுகைகள் காட்ட வேண்டுமா?
அதனால் பொருளாதார ஏற்றத் தாழ்வு கடந்த 10 ஆண்டுகளில், நம் மக்களிடம் குறைவதற்குப் பதிலாக கூடிக்கொண்டே சென்றதன் விளைவு – 60 சதவிகித செல்வம், 10 சதவிகிதத்திற்கும்; குறிப்பிட்ட 10 சதவிகித முதலாளிகளுக்கு, 100 சதவிகிதம் குவிந்துள்ள வேதனை யான நிலைதான் மிச்சம்!

பட்ஜெட்டில் ஜாதியைப்பற்றிக் குறிப்பிடுவதா?

பா.ஜ.க.வின் வருணாசிரம மனப்பான்பான்மையின் வெளிப்பாடு பட்ஜெட் உரையில் நன்கு பளிச்சென்று வெளியானதை நமது தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘‘இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில், ஏழை கள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படும் என்று கூறி, இந்த நான்கு பிரிவினர்களையும், நான்கு ஜாதிகளை (Four Major Castes) என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கையில், பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூகநீதிக்குப் புறம்பானது – மிகவும் கண்டிக்கத்தக்கது.

பட்ஜெட்டில்கூட பேத உணர்வு, உள்மனப் பிரதி பலிப்பாக தெறிக்கிறது! கோல்வால்கரின் கருத்து ஜாதியைத் தூக்கிப் பிடிப்பதுதானே!
மாநிலங்களுக்கு வளர்ச்சிக்கென எந்த தனி ஒதுக்கீடும் இல்லை!

பல மாதங்கள் உருண்டோடியும் தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் அளிக்காத மாநில விரோத அரசு!

தமிழ்நாட்டின் மழை வெள்ள நிவாரண பேரி டருக்கேகூட இன்னமும் தனி நிதி ஏதும் மாதங்கள் பல உருண்டோடியும் வந்தபாடில்லையே! ஜி.எஸ்.டி. வருவாய் கூடுதல் என்று கூறுகிறார் நிதியமைச்சர்.

மாநிலங்கள் இல்லாமல் அது சாத்தியமா?

பிறகு எதற்கு இப்படி ஓரவஞ்சனை? மாற்றாந்தாய் மனப்பான்மை?
‘புதிதாக 3 லட்சம் பெண்களை லட்சாதிபதிகளாக்கப் போகிறோம்’ என்கிற நிதியமைச்சர் அறிவிப்பிற்குமுன், மகாத்மா காந்தி ஊரக 100 நாள், 150 நாள் கிராமப்புற வேலைத் திட்டத்திற்கு நிதியைத் தாராளமாக ஒதுக் குவதற்குப் பதிலாக மிகவும் குறைத்து, கிராமப்புற மக் களின் வறுமை ஒழிப்புத் திட்டத்தையே குலைத்துள்ளது மக்களுக்கு மறந்துவிடுமா?
அதுமட்டுமா?

நாட்டின் மிகப்பெரும்பான்மை மக்கள் விவசாயிகள் – உழவர்கள். அவர்களது நிலை என்ன – 10 ஆண்டுகளில் வளர்ச்சி உண்டா?

வளர்ச்சியா – வீழ்ச்சியா?

2014 இல் 4.6 சதவிகிதமாக இருந்த விவசாய வளர்ச்சி, இந்த ஆண்டு 1.8 சதவிகிதம் சரிந்துள்ளது.
இதுதான் ‘சப்கா விகாஸா?’ – வளர்ச்சியா?
முந்தைய அய்க்கிய முன்னணி (யு.பி.ஏ.,) காங்கிரஸ் தலைமையில் நடந்த ஆட்சியில் 8 சதவிகிதமாக இருந்த ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு வளர்ச்சி) இந்த 10 ஆண்டு களில் 5.6 சதவிகிதமாக

குறைந்தது எப்படி?
இதுதான் 10 ஆண்டுகால சாதனை!

உலகச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் கச்சா எண்ணெய் உள்பட குறைந்துள்ளது.
ஆனால், சமையல் எரிவாயு உருளையின் விலையோ, பெட்ரோல், டீசல் விலையோ குறைப்பு என்கிற அறிவிப்பு ஏன் வரவில்லை?
ஆனாலும், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ முறை சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்த் தப்பட்டுள்ளதே!

மேடு மேடாகி வருகிறது!
பள்ளம் பள்ளமாகிக் கொண்டே உள்ளது.

இதுதான், பி.ஜே.பி.யின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனை!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
2-2-2024 

No comments:

Post a Comment