மேகதாது அணை கட்டவிருப்பதாக கருநாடக அரசு கூறுவது சட்ட விரோதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 21, 2024

மேகதாது அணை கட்டவிருப்பதாக கருநாடக அரசு கூறுவது சட்ட விரோதம்!

featured image

காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் இல்லாமல்
அணை கட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை

“காவிரி மேலாண்மை ஆணையத்தில் ஒப்புதல் பெறாமலேயே மேகதாது அணையைக் கட்ட கருநாடக மாநில அரசு முடிவெடுப்பது சட்ட விரோதம். – ஒன்றிய பிஜேபி அரசும் இதுபற்றிக் கருத்துக் கூறாதது ஏன்?” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கருநாடக மாநில சட்டப்பேரவையில் கடந்த 12ஆம் தேதி நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் சித்தராமையா, “தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்காக ஒரு தனி மண்டலக் குழுவும், இரண்டு துணை மண்டலக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. மேகதாது அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு மற்றும் வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது” என்று கூறியிருந்தார்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 1984இல் ரங்கநாதன் தொடுத்த வழக்கு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது

காவிரி மேலாண்மை ஆணையத்தின்
ஒப்புதல் பெற வேண்டாமா?
தமிழ்நாடு அல்லது கருநாடகா என எந்த மாநிலம் அணை கட்டுவதாக இருந்தாலும், அதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் தேவை. அந்த ஆணையத்தில் தென்மாநிலங்களின் உறுப்பினர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடத்தி உச்சநீதிமன்றத்தில் நாம் பெற்ற தீர்ப்பால்தான் காவிரி நதிநீரை முறையான வகையில் பங்கிட்டுத்தர வேண்டும் என்ற நடைமுறை வந்துள்ளது. மேலும் காவிரி நதி தொடர்பில் எந்தவிதமான கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு மாநிலங்களின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டினால், அது தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றிவிடும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து மாநிலங்களும் பின்பற்றவேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது
காவிரி நதிநீர் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்குத் தண்ணீர் இன்றி பாலைவனமாகும்.

சட்ட ரீதியாகப் போராடும் தமிழ்நாடு அரசு
காவிரி நதி நீர் பங்கீடு நான்கு மாநிலங்கள் – கருநாடகம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி – தொடர்புடைய பிரச்சினையாகும்.
1974-ஆம் ஆண்டு முதல் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு சட்ட ரீதியாகவும், நேரடியாகவும் போராடி வருகின்றது. காவிரி நதி நீர் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பையும், இதன் மீதான மேல் முறையீடுகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி உத்தரவையும் மதித்து நடக்க வேண்டிய கருநாடக மாநில அரசு, பெங்களூரு நகரக் குடிநீர் கோரிக்கையை ஆயுதமாக்கி. தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை அடியோடு பறித்து விடும் திசை வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேகதாது அணை விவகாரத்தில் கருநாடகம் பிடிவாதம் காட்டுவது சரியல்ல!

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை
இதில் கட்சி வேறுபாடு இல்லாமல் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதன் மீது ஒன்றிய அரசும் தலையிட மறுத்து, தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணை தொடர்பான பிரச்சினையை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் என்ற கருநாடகத்தின் முன்மொழிவுக்கு தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கருநாடக முதலமைச்சரின் அறிவிப்பு மாநிலங்களிடையே நிலவும் நல்லுறவுக்கு வலுச் சேர்க்காது என்பதுடன் கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிரானது என்பதை கருநாடக மாநில அரசும், அந்த மக்களும் உணர வேண்டும்.
உலகில் எந்தப் பாகத்திலும் மேற்பகுதியில் (upper riparian rights) உள்ள நதிகளில் அணை கட்டுவது உள்பட எந்தச் செயற்பாட்டிற்கும் கீழ்ப்பகுதியில் உள்ள அரசின், மக்களின் கருத்தினைப் பெற வேண்டும் என்பது உலக நியதி! இதனைப் புறக்கணிப்பது எந்த வகையில் நீதியும் – நியாயமுமாகும்?
இவ்வளவுக்கும் கருநாடக மாநிலத்தில் தொடர்ச்சியாக தேசிய கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கின்றன. தேசிய நீரோட்டத்தில் நதி நீர் ஓட்டம் கலக்காதா? கலக்க வேண்டாமா?
தேவையில்லாமல் தேர்தல் கூட்டணியை இதற்குள் கொண்டு வந்து முட்ட விடக் கூடாது! அது “அரசியல்” நடத்தும் கேவலம் ஆகும்!
மழை நீர் எல்லோருக்கும் பொது என்பதுபோல – இந்தப் பிரச்சினையிலும் அணுகுமுறை மேற்கொள்வதுதான் மனிதநேயமும் உரிமையும் ஆகும்.
ஒன்றியத்தில் இருக்கும் ஆட்சி – நமக்கு எதிரான கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் நன்றாக மோதிக் கொள்ளட்டும் என்று நயவஞ்சகமாகச் சிரிப்பது நயத்தக்க நாகரிகம் அல்ல என்பது மட்டுமல்ல – இந்திய ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கக் கூடியதாகும். எச்சரிக்கை!

 

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
21.2.2024

No comments:

Post a Comment