பிரதமர் மோடிக்கு இரு பக்கமும் இடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 22, 2024

பிரதமர் மோடிக்கு இரு பக்கமும் இடி!

இந்தியாவில் மொழி, மதம், ஜாதி அடிப்படை யிலான பலதரப்பட்ட பிரிவுகள் உள்ளன. எனினும், ஒட்டுமொத்த சமூகத்தையும் மனு தர்மமும், ஸநாதனமும் பிறப்பின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றன.

பார்ப்பனர்கள், எவரை விடவும் மேலானவர்கள் எனவும், பார்ப்பனர் அல்லாத அனைவரையும் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் கருதுகின்றனர். இன்றைக்கு வெளிப்படையாக விளிக்காவிட்டாலும் வேடங்கள் தாங்கி, ஆதிக்கப் பார்ப்பனர்கள் தங்கள் நிலையை உறுதிப்படுத்தியே வருகின்றனர்.
அரசியல் தேவைகளுக்காக, திரவுபதி முர்மு என்ற பழங்குடி இனத்தவரை இந்தியக் குடியரசுத் தலைவர் ஆக்கிய பா.ஜ.க., புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவின்போது அழைப்பு விடுக்காமல் அவரைப் புறக்கணித்தது. இந்தியாவின் முதற் குடிமகள் என்ற பொறுப்பில் உள்ள ஒருவரை, புறம்தள்ளி நடைபெற்ற திறப்பு விழா கடும் சர்ச்சைக்குள்ளானது. முதற்குடிமகள் மட்டுமல்ல, இந்திய மக்கள்தொகையின் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பிரிவையும் புறக்கணித்து அவமதிக்கும் வரலாறு கொண்டதே ஹிந்துத்துவ அரசியல்!

இந்தியா, மதச்சார்பின்மை கொண்ட நாடு என்கிற இஸ்லாமியரின் நம்பிக்கையை தகர்த்து ராமன் கோவில் கட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் ஏற்கெனவே பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. ஆனால் அவை எதையும் பொருட்படுத்தாமல், ராமன் கோவில் திறப்பு விழாவை நோக்கி ஹிந்துத்துவம் தன் அரசியலை வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது.
சர்ச்சைகளிலேயே பிறந்து சர்ச்சைகளிலேயே வளர்ந்து வரும் பா.ஜ.க. தற்போது அறிவித்திருக்கும் ராமன் கோவில் திறப்பு விழாவிலும் சர்ச்சை இல்லாமலில்லை.
இன்று (22.1.2024) நடக்கின்ற ராமன் கோவில் திறப்பு ‘மத ஆதிக்க நிகழ்வு’ மற்றும் ‘அரசியல் நிகழ்வு’ என பல அரசியல் தலைவர்களும், பொது மக்களும் கண்டனம் தெரிவித்து, நிகழ்வில் கலந்து கொள்ள மறுத்து வருகின்றனர். அவ்வரிசையில் ஹிந்துத்துவத்தின் ஆணி வேராகக் கருதப்படும் சங்கராச்சாரியார்களும் இவ்விழா வில் கலந்து கொள்ள மறுத்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

சங்கராச்சாரியார்களின் கோபத்துக்குக் காரணம், ராமன் கோவில் திறப்பாளராக பார்ப்பனரல்லாத மோடி இருப்பதே என்றும் கருத்துகள் பரவி வருகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவர் என்றாலும் திரவுபதி முர்மு பழங்குடி இனத் தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டதைப் போல், ஹிந்துத்துவ கருத்துகளை முழுவதும் உள் வாங்கியிருக்கும் ஆனானப் பட்ட மோடியே என்றாலும், பார்ப்பனரில்லை என்பதால் அவர் கோவிலைத் திறக்கக் கூடாது எனக் கோபம் கொள்கிறது ஹிந்துத்துவம். ஆக, ஒருவர் கருத்தியல் அளவில், பார்ப்பனீயத்தைத் தூக்கிச் சுமந்தாலும், அவர் பிறப்பால் வேறு என்றால் இந்த அவமானத்தைத் தூக்கி சுமந்துதான் தீர வேண்டும்.

பா.ஜ.க. சங்பரிவாரில் உள்ள பார்ப்பனர் அல்லாதார் இதுபற்றி உரக்க சிந்திக்க வேண்டும் – ராமன் கோயிலைத் திறக்கும் பிரதமர் நரேந்திரமோடி யாரை ஏமாற்றுகிறார்? சங்கராச்சாரியார்களும், ஹிந்து ஆன்மிகவாதிகளும் கிளப்புகின்ற சர்ச்சையான ராமன் சிலையை பார்ப்பனரல் லாதாரான மோடி எப்படித் தொடலாம் – திறக்கலாம் – கர்ப்பக் கிரகத்தில் எப்படி நுழையலாம்? அவை ஆகம, சாஸ்திர விதிகளுக்கு முரணானவை அல்லவா என்ற கேள்விகளுக்குப் பிரதமர் மோடி தரப்பில் பதில் என்ன?

இதுதான் ஹிந்துத்துவம் என்பதை உள்ளுக்குள் ஒரு பக்கம் உறைக்குமா மோடிஜிக்கு? தந்தை பெரியாரை ஒரு கணம் எண்ணிப் பார்ப்பாரா?
எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றிவிட முடியாது.

ராமன் கோயில் திறப்பு விழா என்ற மூடு திரையில் இப்பொழுதே மோசடிகள் ஆரம்பமாகிவிட்டன. திறப்பு விழா முடிவதற்குள்ளும் சரி, அதற்குப் பிறகும் சரி ஏமாற்றுதல், மோசடி செய்தல் என்ற ‘திருவிளையாடல் களுக்கு’ப் பஞ்சம் இருக்காது – இருக்கவே இருக்காது!
பார்க்கத்தானே போகிறோம்!

No comments:

Post a Comment