மிக மிக நேர்த்தி! திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமிழ்நாடு - புதுச்சேரி - மகாராட்டிரம் (மும்பை) மாநிலங்களில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 3, 2024

மிக மிக நேர்த்தி! திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமிழ்நாடு - புதுச்சேரி - மகாராட்டிரம் (மும்பை) மாநிலங்களில்...

featured image

மே 13-ஆம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி தமிழர் தலைவர் கழகத்தலைவர் ஆணைப்படி பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி – தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராட்டிரம் (மும்பை) ஆகிய மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியினை முறைப்படுத்தி மாவட்டந்தோறும் நடத்திடும் பணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக, கழக மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தமிழர் தலைவரால் நியமிக்கப்பட்டு, முதல் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 27.05.2023 அன்று திராவிடர் கழக மகளிரணியின் சார்பில் சென்னை பெரியார் திடலில் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் அவர்களும் – பெரியாரியல் பேராசிரியப் பெருமக்களும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தனர்.
27.05.2023 அன்று சென்னையில் பெரியார் திடலில் தொடங்கி 31.12.2023 அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் 36ஆவது நிகழ்ச்சி நடைபெற்று முதல் நான்குசுற்றுகள் நிறைவு பெற்றுள்ளன.
முதல் நான்கு சுற்றில் நடந்தேறிய 36 நிகழ்ச்சிகளின் பட்டியல் முழுமையான தகவல்களுடன் தனியாக அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் சராசரியாக நிகழ்ச்சி ஒன்றுக்கு 75 மாணவர்களுக்குக் குறைவின்றி கலந்து கொண்டார்கள். மாவட்ட வாரியாக முதல் பயிற்சிப் பட்டறை நிகழ்வை அறந்தாங்கி கழக மாவட்டம் நடத்தி சிறப்பு பெற்றது.

இதுவரை நடைபெற்ற பயிற்சிப் பட்டறைகளில் பட்டுக் கோட்டை கழக மாவட்டம் 186 மாணவர்களை கலந்து கொள்ளச் செய்து முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தொடக்கவிழா மற்றும் நிறைவு விழாக்களில் அமைச்சர் பெருமக்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். தமிழர் தலைவரைத் தவிர வேறு யாரும் இப்படி ஒரு பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்த முடியாது என்று பாராட்டிப் பேசினார்கள்.

இதுவரை நடைபெற்றுள்ள 36 பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் திரண்ட மாணவர்களின் எழுச்சி, திறம்பட திட்டமிட்டு உரிய ஏற்பாடுகளை குறைவின்றி செய்திட்ட கழகப்பொறுப்பாளர்களின் பொறுப்புணர்ச்சி, பெரியாரியல் பேராசிரியப் பெருமக்கள் தங்களின் கற்பித்தல் பணிக்கு வலுவூட்டும், சிறப்பான தரவுகளை திரட்டி – கால எல்லைக்குள் தலைப்பிற்குள் நின்று கருத்துகளை எடுத்துச்சொன்ன பாங்கு பாராட்டுக்குரியது.

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சிகளை இராணுவ அணிவகுப்பு திட்டமிட்டு நடைபெறுவதைப் போல, உரிய கால இடைவெளியில் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்தி – காலை 8.00 மணிக்கே பயிற்சிப் பட்டறை அரங்கில் பணியாற்றிடும் கழகத் தோழர் களுடன் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் இணைந்து ஆற்றியப் பணி வெகு சிறப்புக்குரியது. உரிய நேரத்தில் தொடங்கி உரிய நேரத்தில் நிறைவடைய திட்டமிட்ட இப்பணியே பெரும் காரணமாக அமைந்தது.
பயிற்சிப் பட்டறை நடைபெறும் நாளன்று மாணவச் செல்வங்கள் மடைதிறந்த வெள்ளமென எழுச்சியோடு திரண்டு வந்த காட்சி நம்மை வியக்கவும் – இன்னும் விரைவாக பணியாற்றவும் தூண்டியது என்றால் அதுமிகையில்லை.

மாணவச் செல்வங்களுடன், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியப் பெருமக்கள், தலைமை ஆசிரியர்கள், சில இடங்களில் பள்ளிகளின் தாளாளர்கள் என பலரும் வருகை தந்து நிகழ்ச்சியை இறுதி வரை இருந்து கண்டு – கேட்டு மகிழ்ந்தனர் – பாராட்டினர்.

மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பேட்டில் – பயிற்சிப் பட்டறையில் கற்பிக்கப்படும் முக்கிய கருத்துகளை குறிப்பபெடுத்தப் பாங்கு வெகு சிறப்பாக இருந்தது. மாணவர்களின் குறிப்பேடுகளை இறுதியில் திரட்டி அவர்களில் சிறப்பாக குறிப்பெழுதிய முதல் 5 மாணவர்களுக்கு பரிசுகள் இயக்க நூல்களாக வழங்கப் பட்டன. பல நிகழ்வுகளில் முதல் 5 பேர்களை வரிசைப்படுத்தி அறிவிக்க பொறுப்பேற்கும் பேராசிரியர்களைத் திண றடிக்கும் வண்ணம் மாணவர்களின் குறிப்பெழுதும் திறன் அமைந்திருந்தது.
வகுப்பு நடைபெறும்போது இடையிடையே பேராசிரி யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் கூறிய விடை மற்றவர்கள் வியக்கும் வண்ணம் அமைந்திருந்தது. கலந்து கொண்ட மொத்த மாணவர்களில் 80 விழுக்காட்டினர் முற்றிலும் இயக்கத்திற்கு புதிய அறிமுகம் என்பது இப் பயிற்சிப் பட்டறையின் மிகப்பெரும் வெற்றியாகும்.
தமிழர் தலைவர் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் நிகழ்வு அமைத்திட வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை, ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தமிழர் தலைவரிடம் வேண்டுகோளாக வைத்ததும், உடன் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் பல்வேறு பணிச்சுமை – உடல்நிலை இவைகளுக்கிடையே மாணவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி காணொலி மூலம் உரை யாற்றி மாணவச்செல்வங்களை மகிழ்வித்தது மிகுந்த சிறப்புக்கும், மகிழ்ச்சிக்கும் உரியதாய் அமைந்தது.

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிகழ்வினை நடத்திடும் மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒன்றியப் பொறுப்பாளர்கள், நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள், பெரியாரியல் பற்றாளர்கள் அனைவரும் தங்களின் இல்லத்து விழாவை விட, அதிசிரத்தையுடன் ஆற்றிய பணி காண்போரை நெகிழச்செய்தது. பள்ளி – கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களை திரட்டிய பொறுப்பாளர்களின் அளப்பரியப் பணியைப் பாராட்ட வார்த்தையேயில்லை எனலாம்.

பங்கேற்க வரும் மாணவச் செல்வங்களுக்கு குறிப்பேடு – எழுதுகோல் – தேநீர் – பிஸ்கெட் – சுவையான புலால் உணவு – வசதிமிக்க அரங்கம், லிணிஞி வசதி கொண்ட மேடைஅமைப்பு – கேட்போரின் கவனத்தை ஈர்க்கும் ஒலி – ஒளி அமைப்பு சிறப்பாக குறிப்பெழுதிய 5 மாணவர்களுக்குரிய பரிசுத்தொகை வழங்கல், உடல்நலம் காக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இன்னோரன்ன பணிகள் அனைத்தையும் எக்குறையுமின்றி, இன்முகத்தோடு செய்து இலட்சியப் பணி சிறக்க கழகத்தோழர்கள் ஆற்றிய தொண்டு எந்த இயக்கத்திலும், அமைப்பிலும் காணக் கிடைக்காத ஒப்பு உவமை சொல்ல முடியாத பணியாகும்.

நடந்தேறிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளின் பயனை கண்ணுற்ற கழகப்பொறுப்பாளர்கள் பலர் தங்கள் மாவட்டத்திற்கு பெரியாரியல் பயிற்சிப்பட்டறை நடத்திட மேலும் ஒரு வாய்ப்பினை வழங்குமாறு ஒருங்கிணைப் பாளரிடம் கோரியது இந்நிகழ்ச்சியின் உச்சககட்ட வெற்றி யாகும்.
நடந்து முடிந்த பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிகழ்வுகளில் தமிழர் தலைவர் தலைமையில் பெரியாரியல் கற்பித்த பேராசிரியப் பெருமக்களின் பட்டியல் தனியாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

கழக மாவட்டங்களின் எண்ணிக்கையில் பாதி அளவிற்கு பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில்; புத்தாண்டு 2024 ஜனவரியில் தொடங்கி நடைபெற திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல் தனியாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 36 பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிகழ்வுகளில் கலந்து கொண்டு பயன்பெற்ற மொத்த மாணவர்கள் 2700 பேர், விற்பனை செய்யப்பட்ட இயக்க நூல்கள் மொத்தம் ரூ. 1,86,284.

பெரியாரியல் பயிற்சிப்பட்டறை சிறக்க பங்கேற்று பயன் விளைத்த தோழர்கள் அனைவருக்கும் நன்றிப்பெருக்கை உரித்தாக்கி, விரைவில் தொடங்கவுள்ள பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிகழ்வில் சந்திப்போம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

– முனைவர் க.அன்பழகன்
மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர், திராவிடர்கழகம்

திராவிடர் கழகம் நடத்தும்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் வகுப்பு எடுப்பவர்கள் பட்டியல்

1. தமிழர் தலைவர் ஆசிரியர்
2. கவிஞர் கலி.பூங்குன்றன்
3. சு.அறிவுக்கரசு
4. வீ.குமரேசன்
5. வீ.அன்புராஜ்
6. முனைவர் துரை.சந்திரசேகரன்
7. வழக்குரைஞர் அ.அருள்மொழி
8. வழக்குரைஞர் ச.பிரின்சுஎன்னாரெசுபெரியார்
9. முனைவர் ப.காளிமுத்து
10. கோ.கருணாநிதி
11. முனைவர் நம்.சீனிவாசன்
12. முனைவர் வ.நேரு
13. முனைவர் க.அன்பழகன்
14. முனைவர் எழில்
15. பேராசிரியர் மு.சு.கண்மணி
16. முனைவர் ஆ.திருநீலகண்டன்
17. மருத்துவர் இரா.கவுதமன்
18. வழக்குரைஞர் சு.குமாரதேவன்
19. வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
20. வழக்குரைஞர் பூவை.புலிகேசி
21. ஆசிரியர் மா.அழகிரிசாமி
22. எழுத்தாளர் மஞ்சை வசந்தன்
23. எழுத்தாளர் வி.சி.வில்வம்
24. முனைவர் காஞ்சி பா.கதிரவன்
25. உளவியல் நிபுணர் மதுரை.ஜெ.வெண்ணிலா

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
– முதல் சுற்று (2023 மே – டிசம்பர்)
மே – 27 முதல் டிசம்பர் – 31 வரை – 36 மாவட்டங்கள்

1. பங்குபெற்ற மொத்த மாணவர்கள் – 2700
2. பங்குபெற்ற மாணவர்களில் ஆண்கள் – 1563
3. பங்குபெற்ற மாணவர்களில் பெண்கள் – 1137
4. பங்குபெற்ற பட்டப்படிப்பு மாணவர்கள் – 931
5. பங்குபெற்ற பள்ளி மாணவர்கள் – 1769
6. புத்தக விற்பனை ரூ. – 1,86,284

அன்புடன்,
இரா.ஜெயக்குமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment