‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்'' என்று சொல்கிறார்களே, அதற்கு அர்த்தம் என்னவென்றால், இதுதான் கடைசியாக நடக்கக்கூடிய ஒரே தேர்தல்- இனிமேல் தேர்தல் என்பதையே பார்க்க முடியாது என்பதற்காகத்தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 25, 2024

‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்'' என்று சொல்கிறார்களே, அதற்கு அர்த்தம் என்னவென்றால், இதுதான் கடைசியாக நடக்கக்கூடிய ஒரே தேர்தல்- இனிமேல் தேர்தல் என்பதையே பார்க்க முடியாது என்பதற்காகத்தான்!

featured image

நாமும் அதே மொழியில் அவர்களுக்குப் பதில் சொல்கிறோம்,
‘‘உங்களுக்கும் இதுதான் ஒரே தேர்தல்;
இதற்குமேல் உங்களுக்குத் தேர்தல் கிடையாது!”
‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்!’’ சிறப்புக் கூட்டத்தில்தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, ஜன.25 ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்கிறார்களே, அதற்கு அர்த்தம் என்னவென்றால், இதுதான் கடைசியாக நடக்கக்கூடிய ஒரே தேர்தல். இனிமேல் தேர்தல் என்பதையே பார்க்க முடியாது என் பதற்காகத்தான். நாமும் அதே மொழியில் அவர்களுக்குப் பதில் சொல்கிறோம், ‘‘உங்களுக்கும் இதுதான் ஒரே தேர்தல்; இதற்குமேல் உங்களுக்குத் தேர்தல் கிடையாது’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்’’ சிறப்புக் கூட்டம்!
கடந்த 22.1.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் ‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
23-1-2024 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:
WE, THE PEOPLE OF INDIA having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC

பிரதமர் முதல்
பஞ்சாயத்துத் தலைவர் வரை….
அய்ந்து அம்சம். இதன்மீதுதானே பதவிப் பிரமாணம் எடுத்தார். குடியரசுத் தலைவரிலிருந்து பிரதமர் முதல், அமைச்சர்கள், முதலமைச்சர், ஆளுநர், பஞ்சாயத்துத் தலைவர் வரை உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதித்திருக்கிறார்களா? என்பதை தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
அதேபோன்று,
JUSTICE, social, economic and political
சமூகநீதியை மதித்திருக்கிறார்களா? இந்தக் கேள் வியை மக்கள் கேட்கவேண்டும்; இளைஞர்களிடம் கொண்டு போகவேண்டும்.
சமூகநீதி என்றால் என்ன?
அதற்குரிய பதிலுக்காக கஷ்டப்படவேண்டிய அவசியமில்லை.

திருக்குறளில் கூட ஏழு வார்த்தைகள் இருக்கின்றன- தந்தை பெரியார்
இரண்டே வார்த்தையில் விளக்கினார்!
அந்தக் காலத்திலேயே பெரியார் அவர்கள், ‘‘சுயமரி யாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?” என்பதற்கு ஒருவரியில் விளக்கம் சொன்னார். திருக்குறளில் கூட ஏழு வார்த்தைகள் இருக்கின்றன. தந்தை பெரியார் இரண்டே வார்த்தையில் விளக்கினார் – ‘‘அனைவருக்கும் அனைத்தும்!” என்று.
ஒரு மக்களாட்சி என்றால் என்ன?
ஒரு சமதர்ம ஆட்சி என்றால் என்ன?
அனைவருக்கும் அனைத்தும் என்றால், யாருக்கும் சங்கடம் இருக்காதே!
ஆனால், இன்றைக்கு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கிறதா? என்றால், இல்லையே!
எல்லா மக்களும் ஒன்று என்று சொன்னால், ஆற்றில் படகு கவிழ்ந்து மனித உயிர்கள் பலியானால், அது குஜராத் மாநிலமாக இருந்தாலும், வேறு எந்த மாநிலமாக இருந்தாலும், அங்கே இருக்கின்றவர்களும் நம்முடைய சகோதரர்கள்தான், மனிதர்கள்தான். அதில் மாறுபட்ட கருத்து எங்களுக்குக் கிடையாது. அதனால்தான் ‘இந்தியா’ கூட்டணி என்று சொல்கிறோம்.
இந்தியாவையே காப்பாற்றுவதற்காகத்தான் இந்த முயற்சி; வெறும் தமிழ்நாட்டை மட்டும் காப்பாற்று வதற்கான முயற்சிகள் அல்ல!

மக்கள் மத்தியில் பேதம்
இருக்கவேண்டிய அவசியமில்லை!
மனிதம் என்று வருகிறபொழுது, WE, THE PEOPLE OF INDIA  அதுதான் மிக முக்கியம். மக்கள் மத்தியில் பேதம் இருக்கவேண்டிய அவசியமில்லை.
ஒரு சில நாள்களுக்குமுன் குஜராத் மாநிலத்தில் படகு கவிழ்ந்து மனித உயிர்கள் பலியாயின; உடனே அதற்கு பிரதமர் மோடி அனுதாபம் தெரிவிக்கிறார். அதை தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. அது அவருடைய கடமை – மனிதத்தன்மை அதுதான்.
ஆனால், அதே உணர்வு, தமிழ்நாட்டில் தூத்துக் குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள்மீது இருக்க வேண்டாமா?
‘‘தமிள் ரொம்ப ரொம்ப நல்ல மொழிதான்; தமிளில் ரொம்ப ரொம்ப………….
பாரதி……..யார்
நீர் உயர……….. நீர் உயர………..”என்கிறார் பிரதமர் மோடி.
நீர் உயர்ந்துகொண்டே போனது; அதுதான் வெள்ளம்.

ஒரு வார்த்தை ஆறுதலாக
சொல்லியிருக்க வேண்டாமா?
தமிழ்நாட்டில், மூன்று நாள்களை செலவழித்தார் என்பது நமக்குப் பெருமைதான். இந்த மூன்று நாளில், ஒரு அரை மணிநேரம் ஹெலிகாப்டரில் சென்று, வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து, ‘‘மக்களே, உங்களுக்கு என்னாயிற்று? கவலைப்படாதீர்கள், நான் இருக்கிறேன்” என்று சொன்னால் போதுமே! நிதிகூட வேண்டாம் அய்யா, ஒரு வார்த்தை ஆறுதலாக சொல்லியிருக்க வேண்டாமா?
இதை செய்யாத உங்களுக்குத் தமிழ்நாட்டில் கால் வைக்க என்ன யோக்கியதை இருக்கிறது? ஓட்டு கேட்க என்ன உரிமை இருக்கிறது? இதை கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது, மனிதத்தன்மை அடிப்படையில்.

மனிதன் என்கிற அடிப்படையில்
முதலில், கேட்கிறோம்!
‘‘தமிழனா? திராவிடனா?” என்பது பிறகு. மனிதன் என்கிற அடிப்படையில் முதலில், கேட் கிறோம். பிறகுதான், என்னுடைய அடையாளம், என்னுடைய முகவரி என்பதெல்லாம்.
ஆகவே நண்பர்களே, இதை மறைப்பதற் காகத்தானே ராமன். இவ்வளவு அப்பாவியாகவா இருப்பான் நம்மாள்.
தமிழ்நாட்டில் அவர்களுடைய எண்ணம் பலிக்கவில்லை; வடநாட்டிலும் அவர்களுடைய எண்ணம் பலிக்கப் போவதில்லை.

மறுபடியும் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிடுவார்களாம்!
இரண்டு முறை ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்து அமர்ந்தார்கள். இப்பொழுது அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் மறுபடியும் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிடுவோம் என்கிறார்கள்.
நடைமுறையில் இப்பொழுதே எடுத்துவிட்டார்கள்.
DEMOCRATIC REPUBLIC
கடைசியில் என்ன வார்த்தைப் போட்டிருக்கிறார்கள். – செக்குலர் கிடையாது; சோசலிஸ்ட் கிடையாது.

பொதுத் துறை என்ற ஒன்றே காணாமல் போகக்கூடிய அளவிற்கு செய்துவிட்டார்கள்!
அம்பானி, அதானி எல்லாம் வந்தாயிற்று. இந்தியா வில் எந்த அளவிற்கு சோசலிசத்தைத் துடைத்து எறிந் தார்கள் என்றால், பொதுத் துறை என்ற ஒன்றே காணாமல் போகக்கூடிய அளவிற்கு செய்துவிட்டார்கள்.
என்றைக்கு பி.ஜே.பி.,க்கு ஆட்சிக்கு வந்ததோ, பொதுத் துறையை விற்பதற்காகவே ஒரு அமைச்சரை நியமித்தார்கள். அருண்ஷோரி அந்தத் துறையின் (Disinvestment Department) அமைச்சராக இருந்தார்.
இப்பொழுது அதுபோன்ற ஒரு துறை இல்லாமலேயே பொதுத் துறையை விற்கிறார்கள்.
முன்பு, ஒரு தனி மனிதர் – அமைச்சர் மட்டும் அந்த வேலையை செய்தார். இப்பொழுது நாங்கள் முழுமை யாக எல்லோரும் சேர்ந்து செய்வோம் என்று செய்கிறார்கள்.

இந்தியாவிற்கென
தனி விமான சர்வீஸ் உண்டா?
ஒரு சிறிய நாடு துபாய், எமிரேட்ஸ், குவைத், சிங்கப் பூர் போன்ற நாடுகளின் அரசுக்குத் தனித்தனி விமான சர்வீஸ் உண்டு.
ஆனால், இந்தியா என்கிற மிகப்பெரிய நாட்டிற்கு, ‘விஸ்வ குரு’விற்கு தனி விமான சர்வீஸ் உண்டா?
முன்பு இருந்தது இண்டியன் ஏர்லைன்ஸ்; இப் பொழுது எங்கே இருக்கிறது? காணாமல் போய்விட்டது.
ஏர் இண்டியா காணாமல் போய்விட்டது.
அதனால்தான், நாம் புதிய இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று வந்திருக்கின்றோம்.
ஆகவே, அவர்களைப் பொறுத்தவரையில், பெரு மளவில் விற்றுவிட்டார்கள்; அல்லது குத்தகைக்கு விட்டுவிட்டார்கள்.
ஆகவேதான், அவர்களிடம் மனிதத்தன்மை என்பது இல்லை என்கிறோம்.

கரையான் அரிப்பதுபோன்று, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி ஜனநாயகத்தை அரித்துவிட்டது!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை யில் கடைசியாக, DEMOCRATIC REPUBLIC  ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம் என்று இருக் கிறதே, கடந்த 10 ஆண்டுகாலத்தில், கரையான் அரிப்பதுபோன்று, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி ஜனநாயகத்தை அரித்துவிட்டது.
நம்முடைய பிரதமர் பக்தியில் உச்சக்கட்டம். எல்லா வற்றிலும் பக்தி. சென்ற முறை நெடுசாண் கிடையாக விழுந்தார். அங்கே விழுந்தார், இங்கே விழுந்தார் எல்லா இடங்களிலும் விழுந்தார்.
பதவியேற்கும்பொழுதே கீழே விழுந்துதான் பதவியேற்றார்.
இரண்டாவது முறை பதவியேற்கும்பொழுது, மேடை யிலிருந்து இறங்கிப்போனார்; முக்கியமான சாமியாரோ, அவருடைய குருவோ இருக்கிறார், அதனால்தான், இறங்கிப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தனர்.
அங்கே இந்திய அரசமைப்புச் சட்ட கல்வெட்டு போன்று இருந்தது; அதற்குமுன் போய் நின்று, தலையை வைத்துக் கும்பிட்டார் மோடி.
எதற்காக?
அரசமைப்புச் சட்டம் அட்டையாக இருக்கலாம்; ஆனால், நாங்கள் உள்ளே உள்ள கரையான்களாக இருப்போம் என்பதுபோல், உள்ளே இருப்பது எல்லாம் பறிபோய்விட்டது.

கடந்த 10 ஆண்டுகள் எப்படி இருந்திருக்கின்றன?
இதை நாங்கள் சொல்லவில்லை; உலகம் சொல்லக் கூடிய அளவிற்கு, உலக ரீதியாகவே கருத்தரங்கங்கள் நடத்தி, கடந்த 10 ஆண்டுகள் எப்படி இருந்திருக்கின்றன என்று சொன்னால், இன்றைக்கு ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது.
‘‘Saffron Republic Hindu Nationalism and State Power in India” – Not Democratic Republic.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜனநாயகக் குடியரசு.
ஆனால், இங்கே Saffron Republic காரணம், மனு தர்மம்தான் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் நீங்கள்.
ஆகவேதான், பொதுவாக இருக்கக்கூடியவர்களாக இருந்தாலும், எந்தக் கட்சியையும் சாராதவர்களாக இருந்தாலும், ‘‘புதிய இந்தியா” என்பது ஒரு கோணல் மரம் என்று சொல்கிறார்கள்!
அப்படி சொன்னவர்களில், மிக முக்கியமானவர். அவர் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரும் அல்ல. ஓர் அரசியல் ஆய்வாளர் அவர்.
உள்ளூரில் இருக்கின்றவர்கள் மட்டும் சொல்ல வில்லை; வெளிநாட்டில் இருக்கின்றவர்களும் சொல் கிறார்கள் என்பதற்கு அடையாளம்தான், ‘‘மோடியின் காவி இந்து தேசியவாதம் – ஜனநாயகமற்ற இந்தியா” என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த வாய்ப்புகள் வருகிறது.
நமக்கும், மனுதர்மத்திற்கும் என்ன சம்பந்தம்? என்றால், எதுவும் கிடையாது.

பெண்களுக்கு தத்தெடுக்கும்
உரிமை கிடையாது!
இராமநாதபுரத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது, வெள்ளைக்காரர்கள் இருந்த காலத்தில். அந்த அம்மையாருக்கு வாரிசு இல்லை. ஒரு வாரிசை தத் தெடுத்தார்கள். தத்தெடுக்கக்கூடாது என்று எதிர்வாதம் செய்தார்கள். பெண்களுக்கு அந்த உரிமை கிடையாது என்று சொன்னார்கள்.
ஏன் என்றால், இந்து மதச் சட்டம் அப்படி சொல்கிறது என்பதால்.
இராமநாதபுரத்தில் நடந்த வழக்கு இது – ஆதாரத்தை கைகளில் வைத்திருக்கின்றோம். இப்பொழுது உச்ச நீதிமன்றம் இருப்பதுபோன்று, அந்தக் காலகட்டத்தில், பிரிவியூ கவுன்சில் என்று வெள்ளைக்காரர்கள் காலத்தில் டில்லியில் இருந்தது. ‘‘அவுஸ் ஆஃப் லார்ட்ஸ்” என்று பிரபுக்கள் சபையில் இருப்பவர்கள் அந்த அமைப்பை உருவாக்குவார்கள்.

‘இந்து லா’ என்பது மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்டது!
1868 இல் இராமநாதபுரம் ராஜா வகையறா அரண்மனையில் வாரிசைப் பற்றி வந்த வழக்கில், ராணியாக இருக்கும் பெண், ஒருவரைத் தத் தெடுக்க முடியாது. காரணம், மனுதர்மத்தில் பெண்களுக்கு அந்த உரிமை இல்லை. இந்து லாவில் கிடையாது. அது மனுதர்மத்தை அடிப் படையாகக் கொண்டது.
அப்பொழுது தெளிவாக ஒரு தீர்ப்பைக் கொடுத்தார்கள் வெள்ளைக்கார்கள். இங்கே இருந்து சென்ற வழக்குரைஞரும் அந்த வழக்கில் வாதாடி£னர்.
மனுதர்மம் என்பது இருக்கிறதே, அது ஆரியர் களுக்கு உரியதே தவிர, திராவிடர்களுக்கு உரிய தல்ல. திராவிடர்களுக்கு முழுக்க முழுக்கத் தனிச் சட்டம். திராவிடர்களுக்கு உரிய தத்துவமே வேறு.
இப்பொழுது சொல்லுங்கள், தமிழரா? திரா விடரா? என்று சொல்வதில் என்ன பிரச்சினை.

தன்மானம், இனமானம் எல்லாம்
சேர்ந்ததுதான் திராவிடம்!
திராவிடர்கள் என்று சொல்லும்பொழுதுதான் பண்பாடு. திராவிடர்கள் என்று சொல்லும்பொழுதுதான் உரிமை. திராவிடர்கள் என்று சொல்லும்பொழுதுதான் தன்மானம், இனமானம் எல்லாம் சேர்ந்தது.

ஒரே தேர்தல் என்று அவர்கள்
ஏன் சொல்கிறார்கள்?
நாளைக்கு அவர்கள் வெற்றி பெற்றால், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்கிறார்களே, அதற்கு அர்த்தம் என்னவென்றால், இதுதான் கடைசியாக நடக்கக்கூடிய ஒரே தேர்தல். இனிமேல் தேர்தல் என்பதையே பார்க்க முடியாது என்பதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நாமும் அதே மொழியில் அவர்களுக்குப் பதில் சொல்கிறோம், ‘‘உங்களுக்கும் இதுதான் ஒரே தேர்தல்; இதற்குமேல் உங்களுக்குத் தேர்தல் கிடையாது” என்று.
(தொடரும்)

No comments:

Post a Comment